ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம்

வீட்டை விட்டு இறங்கி பாதி வழி வந்ததும் காற்றும் கூடவே துரத்த மழை வருமோ என்று வானம் பார்க்கிறார் கல்யாண ராமன். எதற்கும் இருக்கட்டும் என்று கையோடு  கொண்டு வந்த குடை….”நானிருக்கேன் …கவலைப் படாதே .! என்றது. இந்தக் காற்றையெல்லாம் உன்னால தாக்குப் பிடிக்க முடியாது …..நீ பேருக்குத் தான் குடை…உன்னை  அது  இழுக்கும் ஒரே இழுப்பிலே  நீ என்னை விட்டு பறந்து போய்டுவே…உன்னை பற்றி நேக்குத் தெரியாதா..? எத்தனை குடைகள் உன்ன மாதிரி என்கிட்டே சொல்லிட்டு காற்றோடு விடை பெற்று ஓடிப் போயிருக்கும்.

அதற்குள் சட சட வென்று மழை கொட்ட ஆரம்பித்தது….குடையை விரித்ததும்…அசுரக் காற்று குடையை மேலிழுத்துக்  கொண்டது. குடையின் கைப்பிடியை கெட்டியாகப் பிடித்துகொண்டு தொங்கிய கல்யாண ராமன் குடையோடு சேர்ந்து தானும் பறந்து விடாமல் இருக்கணுமே என்ற பயத்தில் சற்று இறுக்கமாக கீழ் நோக்கி இழுக்கிறார். இடுப்பு வேஷ்டி…’இதோ அவிழ்ந்து விடுவேன் ‘ என்று பயமுறுத்த ‘மானமா..?..குடையா….?என்று மனசு பட்டிமன்றம் எதுவும் நடத்தாமல் தொலைஞ்சு போ என்று கைப்பிடியைத் தளர்த்த குடை  சுதந்திரமாகப் பாடிப் பறந்து சென்றது.

கைகள் இரண்டும் விருட்டென அவிழத் துடிக்கும் வேஷ்டியை இறுக்கிப் பிடிக்க..காற்றும் மழையும் கண்ணா மூச்சி விளையாடியது.
குடை போச்சே…..என்று வருத்தப் பட்ட கல்யாண சுந்தரம் அருகில் இருந்த ஒரு பஸ்சுக்காக இருந்த  நிழற் குடையின் உள்ளே தஞ்சம் புகுந்தார். மழை நின்ன பிறகு  போனால் போதும். உட்கார இடம் இருக்குமா ? என்று திரும்பிப் பார்த்தவர்  முகம் சுளித்தார். ஏதோ ஒரு மட்டரக சினிமா போஸ்டர் வரிசையாக விளம்பரப் படுத்த ஒட்டியிருந்தது. ஓரங்களில் எல்லாம் வெத்தலையை மென்று துப்பிய கரை…..மனசுக்குப் பிடிக்காத குடலைப் பிரட்டும் நாற்றம் வேறு. வேற வழியே இல்லாமல் சுற்றுப்புறத்தை சகித்துக் கொண்டு நின்றிருந்தார் கல்யாண ராமன்.

அடுத்த சில நொடிகளில் ஒரு பெண் ஓடி வந்து அந்த சிறிய இடத்துக்குள் நுழைந்து கொண்டாள் . ஸ்கூலில் இருந்து நேரே வந்ததற்கான அடையாளமாய் யூனிஃபாரமில் இருந்தாள்.  ரெட்டைச் சடை மடித்துக்  கட்டி அதன் வழியே வாடிய  மல்லிகைப்பூ சரம் தொங்கிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு வித பயம் முகத்தை மேக் அப் போட்டு விட்டிருந்தது.  அவளது முகத்தின் வியர்வையை மழை நீர் துடைத்து துடைத்து தோற்றுப் போனது. கையில் பெயருக்கு  ரெண்டு  நோட்டுக்கள் . முதுகில் கவசமாக புத்தகப்பை வேறு. அவளது கண்கள் ஒரே திக்கை பார்த்த வண்ணம் இருந்தது. அதில் யாரையோ  எதிர்பார்த்து தூரத்தில் தேடிக் கொண்டிருந்த தவிப்பும் தெரிந்தது.

கல்யாண ராமன் அவளையே பார்த்த வண்ணம் நிற்கிறார். சின்னப் பெண்..மிஞ்சி மிஞ்சிப் போனால்..என்ன வயதிருக்கும்..? ஒரு பதினாறோ பதினேழோ தான்  இவளுக்கு. பெரிய பிரமாதமான அழகின்னு சொல்ல முடியாது..ஆனாலும் அந்த வயதுக்கு உண்டான கவர்ச்சி, கண்களில் மருட்சி, யாராவது பார்த்து விட்டார்களோ என்ற உணர்வோடு ஒரு பருவத்தின் அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு என்று நான்கும்  எட்டி எட்டிப் பார்த்தது.

இதற்குள் ஓரக் கண்ணால் இவர் தன்னைப் பார்க்கிறாரா என்று பார்த்து விட்டு தன துப்பட்டாவை எடுத்து முகத்தை, தலையைத் துடைத்துக் கொள்கிறாள் .  திடீரென ஒரு பாடல் ஓசை…செல் போனில் !

தீயே தீயே ராதீயே இனி தீயே….!.
தீண்ட தீண்ட தீர்ந்தியே.
தீயே தீயே ராதீயே இரு தீயே…!.
தீர தீர சேர்ந்தியே…

அவளது புத்தகப் பைக்குள் இருந்து வந்து கொண்டிருந்ததை கைபேசியை வெளியே எடுத்து சட்டென அதன் வாயை மூடினாள் .
.

அதன் பின்பு அவள் குசு குசு வென்று தனக்கும் கேட்காமல் எதையோ பேசிவிட்டு மீண்டும் புத்தகப் பைக்குள் போட்டு விட்டு மீண்டும் ஓரக் கண்ணால் கல்யாண ராமனை ஒரு பார்வை. அதன் பின்பு அலட்சியமாக ஒரு திரும்பல்.

அதற்குள்….

வேகமாக ஒரு பைக் வந்து ஓரமாக நிறுத்தி அதிலிருந்து ஒய்யாரமாக ஒரு காலேஜ் ஸ்டுடென்ட்  இறங்கி வருகிறான்…

அவன் உள்ளே நுழையவும் அங்கிருந்த பெண்ணின்  முகத்தில் ஆயிரம் வாட்ஸ்  பல்பு எரிகிறது. ஊரெல்லாம் பவர் கட் இருந்தாலும் இந்த பெண்கள் முகத்தில் மட்டும் எப்போதும் மின்சாரம் தடையில்லாத சப்ளை இருக்கும் போல…என்று எண்ணிக் கொண்டவர் மெல்ல அங்கே நடக்கப் போகும் நாடகத்தை தன ஓரக் கண்ணால் பார்க்க முடிவு செய்தவராக கண்ணையும் காதையும் தீட்டிக் கொண்டு வேறு பக்கமாகத் திரும்பி  நின்றார்.

இப்படி மழை வரும்னு நான் எதிர்பார்க்கலை…நீ ஸ்கூலேர்ந்து கிளம்பி இருக்க மாட்டேன்னு நினைச்சேன். நீ ஏன் இந்த  மழைல புறப்பட்டு வந்தே…? .இப்போ பாரு நாம இங்க வந்து மாட்டிக்கிட்டோம்.

மதியம் இப்போ மூணு பீரியட் அதுல ரெண்டு பீரியட் மாத்ஸ்…கட் பண்ணிட்டேன். நான் பாதி நடந்து வந்தபின்னாடி தான் இப்படி மழை பிடிக்க ஆரம்பிச்சது. என்னால நீயும் இப்படி மழையில் நனைஞ்சுட்டியே….என் கிட்ட சொல்லியிருக்கலாம் இல்ல…நான் இப்ப வரலைன்னு…அவள் தனது துப்பட்டாவை இழுத்து அவன் முகத்தையும் தலையையும் துடைக்கிறாள்…’சாரிடா  அபி ‘ என்கிறாள்.

இட்ஸ் ஆல் ரைட் …விடு… என்று விலகிக் கொண்டவன்…இதெல்லாம் எனக்கு ஜுஜிபி……நீ தனியா இங்க நிற்கறேன்னு சொன்னதும் தான் நான் கிளம்பி வந்துட்டேன்.

அதற்குள் அந்தப் பையனின் கண்கள் அந்த சினிமா போஸ்டரை பல தடவைகள் பார்த்து பார்த்து, பின்பு அங்கேயே ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்தான்……….! ஒரே குளிர்…நீ கூப்பிடும் போது  நான் நெட் சென்டரில் தான் இருந்தேன். நான் இன்னைக்கு காலேஜுக்கே போகலை…. எப்படியும் நம்ம ப்ளான் படி மதியம் வெளில போகணும்..அதான் இங்கயே பக்கத்தில் இருக்கலாம்னு சும்மா வெட்டியா சாட் பண்ணிட்டு இருந்தேன்.  அவன் ஸ்டைலாக புகை விட்டுக் கொண்டிருந்தான். அவள் அதைப் பார்த்து ரசித்து கொண்டு அருகில் அவனிருக்க வானுலகில் மிதந்து  கொண்டிருந்தான்.

இத்தனை நாளா பெய்யாமல் இன்னிக்குன்னு பார்த்து சேர்த்து வெச்சு கொட்டுது இந்த மழை இப்போ நிற்கும்னு எனக்குத் தோணலை….அடுத்து என்ன செய்யலாம்..? அவள் மெல்லக் கேட்கிறாள்.

வரியா…எங்காவது சினிமாத் தியேட்டரில் போய் உட்காரலாம்.”காதல் ஜோடி” ன்னு புதுப்படம் நமக்காகவே  தயாரிக்கப்பட்டது போல எடுத்திருக்காராம்…அதுக்கு வேணாப் போகலாமா? .

அய்யயோ….நான் வரலை அபி….யாராவது பார்த்தா வம்பாயிடும். இப்பவே பயம்மா இருக்கு….மெல்ல அவன் முதுகுப்பக்கமா தலையை மறைத்துக் கொள்கிறாள்.

அங்கிருந்த ஒரு கம்பி மேல் இருவரும் எம்பிக்  குதித்து  அருகருகில் உட்கார்ந்து கொள்கிறார்கள். தனிமையும்,, உடற் கணப்பும், தைரியமும்  நெருக்கமும் இருவருக்கும் ஒரு தைரியத்தைக் கொடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது.

சந்தியா நீ என்ன சாப்பிட்டே..?

இன்னும் ஒன்னும் சாப்பிடலை….அப்படியே கொண்டு வந்துட்டேன்…உனக்குப் பிடிக்குமே…..மிளகாய்ப் பொடி  தடவின இட்லி. என்று ஸ்கூல் பையிலிருந்து டிபன் பாக்சை வெளியே எடுக்கிறாள்.

அவன் தன விரல்களுக்கிடை இருந்த சிகரெட்டுக்கு விடை கொடுத்து கையை மழை நீரால் அலம்பிக் கொண்டு எடு..எடு….என்று சொல்லி ஒரு இட்லியை பிய்ச்சு ‘இந்தா என்று அவளது வாயருகே கொண்டு செல்லவும்’

முதல்ல நீ சாப்பிடு என்று அவள் முகத்தைப் பின்னுக்குத் தள்ளிக் கொள்கிறாள்.

பார்த்து…பார்த்து…எங்கியாவது விழுந்து வைக்கப் போறே…! அவனது பதட்டம் குரலில்…

இருவரும் சிரிக்கிறார்கள், குசு குசுவென்று மொபைலுக்குள் தலையை விட்டுக் குனிந்து கொண்டு ரகசியம் பேசிக் கொள்கிறார்கள்.அப்பப்போ தலையை நிமிர்த்தி இவரையும் ஒரு பார்வை பார்த்துக் கொள்கிறார்கள்.

காசு கொடுக்காமல், இந்தக் காதல் நாடகத்தைப்  பார்த்து ரசித்துக் கொண்டிருந்த கல்யாண ராமனுக்கு சிரிப்பு வந்தது பைத்தியக்காரத் தனமாக கூடத் தெரிந்தது . அதே சமயம் பொறாமையாகக் கூட இருந்தது.

அவர்களின் அன்பின் பரிமாற்றம் கல்யாண ராமனின்  மனதிற்குள் என்னவோ செய்தது…ஒரு பெண் செலுத்தும் அன்பு சுகமானது…அலாதியானது தான்

ஆனால் அவரது அனுபவத்தில் அந்தப் பையனைப் பார்க்கும் போது  அவருக்குப் பிடிக்கவே இல்லை. இவன் நிச்சயமா இவளை ஏமாத்திடுவான் என்றே தோன்றியது. உடற் கவர்ச்சியில் உண்டான காதலுக்கு ஆயுள் அறுபது நாட்கள் தானே..?

மழை இன்னும் விட்டபாடில்லை. மின்வெட்டு ஆகி வானம் கருத்து வெளிச்சம் மங்கிய பொழுதாக அந்தப் பகல் பொழுது இருண்டு கிடந்தது.

திடீரென கல்யாண ராமனுக்கு ஒரு யோசனை தோன்றியது….நேராக அந்த இருவர் இருக்கும் பக்கம் சென்று….அந்தப் பெண்ணின்  அருகில் சிறிது தள்ளி அமர்ந்து கொள்கிறார்.

பயந்து போன  இருவரும்…டக்கென கம்பியிலிருந்து கீழே குதித்து…’சந்தியா..வா போயிறலாம்…இங்க இன்னும் நாம நிக்க வேணாம்…அவன் சொல்கிறான்.

வேண்டாம் அபி..இந்தக் கொட்டற மழையில எங்க போறது…? இன்னும் ஜஸ்ட் அஞ்சு நிமிஷம் பார்க்கலாம்…இது அவள்.

கல்யாண ராமன் தொண்டையைக் கனைத்துக் கொண்ட படி…சொல்கிறார்…” காலம் கெட்டுக் கிடக்கு, இப்படி தனியா வராதேம்மா..யாரை நம்பியும்…..கிளாஸ் கட் பண்ணிட்டு இப்படி வந்து பொழுதைப் போக்கற  விஷயம் உங்க டீச்சருக்கோ, உங்க பேரெண்ட்ஸுக்குத்  தெரிஞ்சால் அவ்ளோதான்… முதல்ல .படிப்பு…!  அதுதான் முக்கியம் ! ..!

இவர் பேசப் பேச அந்த பையனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது….’இதைச் சொல்ல நீ யாரு? ‘ அவன் கண்கள் கேள்வி கேட்டது. கண்களாலேயே இவரது கன்னத்தில் அறைவது போலப் பார்த்தான்…அவன்.

வருத்தமோடு கல்யாண் ராமன் வானைப் பார்த்துப் பேசினார்

போன வாரம் நடந்த எங்க சோகக் கதையைக் கேளுங்க….என் மகளுக்கு   ,உன் வயசு தான் இருக்கும் அவளுக்கும்,. ஸ்கூலுக்குப் போற நேரத்தில் கிளாசைக்  கட் பண்ணிட்டு எங்கியோ அவளோடு பாய்  ஃப்ரெண்டோட ஊர் சுத்தப் போயிருக்கா…இது வீட்டுக்குத தெரியாது. ஆனால் திடீர்னு ஏதோ விரோதம்…முன்பகை காரணமா அந்தப் பையனை  நாலு பேர் சேர்ந்து கட்டிப் போட்டு என் மகளைச் சீரழித்து  கத்தியால குத்தி …இரத்த வெள்ளத்தில் போட்டுட்டு போய்ட்டாங்க ஸ்கூலுக்குப் போனவள் இன்னும்  இவ்வளவு லேட்டாகியும் வரலையேன்னு  தேடிப்  போனா…. வெளில என்னவெல்லாமோ நடந்து போச்சு. போலீஸ்  ஸ்டேஷனுக்கும்… ஹாஸ்பிடலுக்கும் நடையா நடக்கிறேன்…இப்போ கூட அங்கே  தான் போறேன்….என் மகளைப் பார்க்க. உன்னைப் பார்த்ததும் எனக்கு அவள் ஞாபகம் தான் வந்தது. கூடா நட்பு வேதனை தரும்னு சும்மாவா சொல்லியிருக்கு. அதான் சொல்றேன்….இன்னும் என் மகள் ஆஸ்பத்திரியில் தான் இருக்காள் நா தழுவி தழுக்க சொல்லும்போதே…அந்தப் பையனின் கைபேசி பாடி அழைத்தது.

எடுத்துப் பார்த்தவன்…கைபேசியை அணைத்து  விட்டு தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் உள்ளே நுழைந்து கொண்டான். அவன் முகத்தில் கலவரம் தெரிந்தது. அவனுக்குள் ஒரு அமைதியின்மை…அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும் என்ற துடிப்பும் தெரிந்தது.

யார்ட்ட இருந்து போன் அபி? அவள் கேட்கிறாள். அவன் பதில் சொல்லாமல்…..அவரைப் பார்த்து…இப்ப உங்க டாட்டர் எப்படி இருக்காங்க..? அவன் இவரைப் பார்த்து அசால்டாகக்  கேட்கிறான்.அவன் மனசுக்குள் போன வாரம் தனது சிநேகிதன் ராகுல் ஒருத்தியை கத்தியால் குத்திவிட்டு இப்போது ஜெயிலில் இருப்பது நினைவுக்கு வந்தது. ஒருவேளை அந்தக் கேஸு  இவரது மகளோ என்னவோ..?

குத்தியது யாரு சார்..?.கேட்க நினைத்தவன்..வாயை மூடிக் கொண்டான்…காரணம் மீண்டும் இவனது கைபேசி பாடி அழைத்தது.

கல்யாண ராமன் அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார். “அதனால தான்மா சொல்றேன்…யாரையும் நம்பாதே…படிக்க வேண்டிய வயசில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்க….வாழ்க்கை  நீண்டது….உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தும் உங்கள் வாழ்வில் தானே கிடைத்து விடும்..அதற்காக அவசரப் படக் கூடாது. ஆண்கள் எளிதாக மனதை மாற்றிக் கொள்வார்கள். ஆனால் நீங்கள் இளம் வயதில் பாதை தவறிப் போய்  திக்குத் தெரியாமல் வாழ்நாள் முழுதும் அதை நினைத்து மனசுக்குள் புழுங்குவீங்க…இதுல அந்தக் காலம் இந்தக் காலம் என்றெல்லாம் ஒன்றுமே இல்லை. அடிப்படை  உணர்வுக்கு காலமோ, விஞ்ஞான வளர்ச்சியோ தடையாக இருக்காது. முதலில் நன்கு படி.  நன்னாக் கை நிறைய சம்பாதி ,சொந்தக் காலில் நின்ன பிறகு தான் காதலும், கல்யாணமும்….என்று தீர்மானமாகச் சொன்னவர் உங்கள் வீட்டிலும் இதெல்லாம் சொல்வார்கள் தானே. அம்மா அப்பா பேச்சைக் கேட்டு பிறகு மனசு பேசறதைக் கேட்கலாம்.பெற்று வளர்த்தவர்களையும் கொஞ்சம் யோசிக்கணும். அவர்களை ஏமாற்றாதீங்க. ஏமாற்றினால் பாதிப்பு பெண்ணுக்குத் தான்…  !  பசங்களுக்கென்ன….நீ இல்லையின்னா இன்னொருத்தின்னு தேடிட்டு போய் கிட்டே இருப்பாங்க..ஆனால் உன்னால அப்படிச் செய்ய முடியுமா? யோசித்துப் பாரு…  உன் கனவுகள் எல்லாம் பாழாய்ப் போகும்.பிறகு காலம் பூரா கண்ணைக் கசக்கிக் கொண்டு நிக்க வேண்டியது தான்.

அவள் கேட்பது போல முகத்தை அவர் பக்கம் திரும்பி வைத்துக் கொண்டிருந்தாலும் காது அவன் போனில் என்ன பேசுகிறான்? என்றே கேட்டுக் கொண்டிருந்தது.

அதிலிருந்து வந்த பெண் குரல்…இவன் பேசும் அமைதியான தொனி …இரண்டும்..அவளுக்கு கற்பனையை வளர்த்தது. யாராயிருக்கும் அந்தப்  பெண்?

கேள்விக் குறி இவளது மனதில் விஸ்வரூபமெடுத்தது.

கொட்டித் தீர்த்த வானம்….பூமியை நீர்காடாக ஓடவிட்டு வானம் நிர்மலமாக பளிச்சென்று இருந்தது.

சரி…கிளம்பு…கிளம்பு….நீ கிளாசுக்குப்  போ…எனக்கு வேற வேலை இருக்கு நாளைக்குப் பார்க்கலாம்..சாரி….நான் பிறகு ஃபோன்  பண்றேன்…இப்போ அவசரமாப் போறேன்….என்று இங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற தோரணையில் அவளை ‘அம்போன்னு ‘  விட்டுவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து இவளைப் பார்க்காமலே, பை சொல்லாமலே விட்டு  பறக்கிறான்.

அபி தன மனதுக்குள் ” இந்த சந்தியா சப்ப மேட்டர்…! ஒரு நாள் பஸ் ஸ்டான்டில்  பார்த்து சிரித்துவிட்டு மொபைல் இருக்கான்னு கேட்டதுமே..நம்பரைத் தூக்கிக் கொடுத்த பார்ட்டி. எப்ப வேணா வந்து சாரி சொன்னா சரின்னு தலையாட்டிடும்..ஃ போனே செய்ததும் போகலைன்னா அந்தப் அனுஷா வெய்ட் பண்ணாமல் ஓடிடுவா….காஜல் மாதிரி
ஃபிகரை   அங்க காக்க வெச்சுட்டு இந்தக் குள்ளக் கத்திரிக்காய்  கிட்ட வந்து நல்லா மாட்டிகிட்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டேன்…இப்ப இவளை கழட்டி விட்டுட்டு ஓடிடலாம்….

இவள் நில் போகாதே.. .என்று சொன்னதையோ….நானும் வரேன் என்று சொன்னதையோ….அவன் சிறிதும் காதில் வாங்காதது போல பறந்து சென்றது  அவளுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. கோபம் குமுறிக் கொப்பளித்தது.

இதை கவனித்த கல்யாணராமன், “காதல் நாடகம் முடிந்தது பாப்பா .. நீ ஒரு ஆட்டோ பிடிச்சு ஸ்கூலுக்குப் போம்மா..”  என்றவர்…..உன்னைப் பெற்றவர்களை நம்பு…..உனக்கு வேண்டியதை அவர்கள் தான் செய்வார்கள்….”இவனை எல்லாம் நம்பாதே …காவாலிப் பயல்…நானும் பார்த்துக்கிட்டே தானே இருந்தேன்…எப்படி ஓடறான் பார்… ” என்று ஒரு சந்தேக விதையை அவளது இதயத்தில் ஊன்றி வைத்து விட்டு…..நிம்மதியாக அந்த இடத்தை விட்டு இறங்கி நடக்கிறார்.

அவர் மனத்தில்….”யாரு பெத்த பெண்ணோ…..ஒரு வஞ்சகனிடம் இருந்து காப்பாற்றியாச்சு…..மழையே உனக்குகே கோடி நமஸ்காரம்…என்று கைகூப்பியபடி வானத்தைப்  பார்க்கிறார்….உள்ளிருந்து மனசாட்சி கேட்டது…உனக்குத் தான் கல்யாணமே ஆகலையே கல்யாண ராமா..? பின்ன எப்படி ஒரு கத்திக் குத்து கதை விட்டே…? என்று கேலி செய்து சிரித்தது.

நல்லதுக்குப் பொய் சொல்லலாம்.  இல்லையா ?  ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்துன்னு சொல்லிருக்கா…..நான் சமயோஜிதமா ஒரே ஒரு  பொய் சொன்னேன்…அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் ஆகணும்னு. அந்த இளம் பெண்ணுக்கு  புத்தி மாறினாச் சரி.

அவளின்  பிஞ்சு மனத்தில் கனன்று கொண்டிருந்த தணலில்  சந்தேக  விதை விழுந்து கொழுந்து விட்டு ஏரிய அவள் இதயத்தின் காதல் அப்போதே தகனம் ஆகிப் புகையாகி ஆவியாகிறது.. அவள் மனசு ஐயோ அடுத்த பீரியர்டுக்குள்ள கிளாசுக்குள் போய்டணுமே என்று படபடத்தது.

எதிர்பாராமல் தனக்கெனவே மழை பெய்து  அந்த கிருஷ்ண பரமாத்மாவே மழைக்கு ஒதுங்கி கீதை ஓதியதாக எண்ணி  வணக்கம் செய்தாள் .சந்தியா.. !

============================================================

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “காதல் கீதை …!

  1. இந்த காலத்திற்குத் தேவையான கதை. விடலைப் பருவத்தில் ஏற்படுகின்ற இனக்கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாறும் பதின்ம வயதினர் படிக்க வேண்டிய கதை. ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    -மேகலா

  2. மிக நல்ல கதை. இளவயதினர் படிக்க வேண்டிய கதை இது. படிக்கிற வயதில் மனம் போன போக்கில் போனால் வாழ்க்கை என்ன ஆகும்?. அதுவும் இன்றைக்கு பெண்களுக்கிருக்கும் மிகுந்த அபத்திரமான சூழலில்? என்ற கேள்விகளை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கும்  அருமையான கதை.

    கல்யாணராமன் போல் அடுத்தவர்மேல் அக்கறை கொள்வோர் மிகக் குறைவு. அற்புதமான பாத்திரப்படைப்பு.  நன்றி ஜெயஸ்ரீ அவர்களே!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.