இசைக்கவி ரமணன்

isaikavi ramanan

(என் அம்மாவுக்கு 2011 மே 4 அன்று, 82 வயதாகிறது. நான் சந்தித்த எல்லா அம்மாக்களுக்கும் சேர்த்து அவளுக்கு ஒரு சின்னக் கவிதை!)

என்னை நன்றாய் அறிந்தாலும், என்னில்
எத்தனை குறைகள் இருந்தாலும்
தன்னுயி ருக்கும் மேலாக, என்னைத்
தாய்போல் எவரே நேசிப்பார்?

ஊரை ஊட்டி வளர்த்தவள்தான், என்
உதட்டில் கனக முலைவைத்தாள், என்
பேரைக் கூவும் போதெல்லாம்
பீறிடும் நெஞ்சில் ஒருவெள்ளம்!

மனமோ மழலைப் பூங்கொத்து
மடியில் வானும் சிறுவாடு! அவள்
கனவே கட்டளை என்றேற்றுக்
கடவுள் கடமை செய்கின்றான்!

ஞானியர் வணங்கும் தேவியவள்
நலம்யா வைக்கும் ஆவியவள்
மானிடர் தேவர் யாவர்க்கும்
மாற்றில்லா உயிர் சுவாசமவள்!

மடியாய் விரிந்த பூமியவள்
மனம்மிக வறிந்த சாமியவள்
விடியல் தென்றல் விரிகடலெல்லாம்
வியந்து போற்றும் சக்தியவள்!

அன்னை ஒருத்தி தானுண்டு
அவளுக் காயிரம் முகமுண்டு
தன்னைத் தருவதில் சுகமுண்டென்று
தரைக்கு வந்த நிலாத்துண்டு!

இறைவன் தாயை இறக்கிவைத்தான்
இறங்கி ஒருநாள் இளைப்பாற
கறைகள் களையும் கங்கையவள்
கலியை விரட்டும் சிங்கமவள்!

இறைவன் என்பதும் அரிதாரம்
இவளே இவளே அவதாரம்!
மறைவில் சுடரும் மாதரசே! என்
மனமெல்லாம் உன் பாதமடி!

அண்டத் தினிலே அன்னைபோல்
அதிசயம் வேறே இல்லையடா!
கண்ணுக் கினிய தெய்வமடா! எந்தக்
கடவுளும் அவள்முன் பிள்ளையடா!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *