உடையுதிர் காலம்
முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்காவில் கால நிலையில் நான்கு பருவங்கள் உண்டு. ஒவ்வொரு பருவத்திலும் இயற்கையில் சில மாறுதல்கள் ஏற்படும். அதற்கேற்றவாறு அமெரிக்கர்கள் உடை அணிவார்கள். செப்டம்பர் 21ஆம் தேதி இலையுதிர் காலம் ஆரம்பிக்கும். அப்போது மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்க்க ஆரம்பிக்கும். அப்படி உதிர்க்க ஆரம்பிக்கும் முன், இலைகள் பழுத்துத் தங்கள் வண்ணங்களைப் பல விதமாக மாற்றிக்கொள்ளும். பல வண்ணங்களில் பல மரங்களின் இலைகள் மிகவும் அழகாகக் காட்சியளிக்கும். இம்மாதிரி இலைகள் வண்ணங்ளை மாற்றிக்கொள்ளுவது மற்றப் பகுதிகளை விட வடகிழக்குப் பகுதி மாநிலங்களில் மிகவும் அழகாக இருக்கும். இந்த அழகை ரசிப்பதற்கென்றே மற்ற மாநிலங்களிலிருந்து பலர் காரில் இந்தப் பகுதிகளுக்கு வந்து இந்த அழகைப் பார்த்துவிட்டு ஒரே நாளில் திரும்பிவிடுவார்கள். நவம்பர் மாத மத்தியில் இந்த மரங்கள் முழுவதுமாக இலைகளை உதிர்த்துவிடும். இதை இலையுதிர் காலம் என்பார்கள்.
இலையுதிர் காலம் முடிந்த பிறகு வருவது, குளிர்காலம். இப்போது மிகவும் குளிரும். நிறையப் பனியும் விழும். வெளியே போகும்போது நிறையக் கம்பளி உடைகளை அணிந்துகொள்ள வேண்டும். இப்படி அணிந்துகொள்வதால் உள்ளே என்ன உடை உடுத்தியிருக்கிறார்கள் என்று பார்க்க முடியாது. கடைகளுக்குப் போனால் கம்பளிக் கோட்டுகளைக் கழற்ற மாட்டர்கள். வேலைக்குப் போனால் மட்டுமே அங்கு அவற்றிற்குரிய இடங்களில் கோட்டுகளைத் தொங்கவிடுவார்கள். இந்தப் பருவத்தில் குளிரால் அமெரிக்கர்கள் வெளியில் அதிக நேரம் செலவழிக்க முடியாது. அதனால் கட்டடங்களுக்கு உள்ளேயே பொழுதுபோக்குச் சாதனங்கள் கொண்ட விளையாட்டு அரங்கங்கள் இருக்கின்றன.
இதையடுத்து வருவது இளவேனில் காலம். இந்தக் காலத்தின்போது குளிர் குறைய ஆரம்பிக்கும். ஜனங்கள் வெளியே வருவது அதிகரிக்கும். இந்தக் காலத்தின் முடிவில் – அதாவது மே மாத இறுதியில் – வெப்ப நிலை கூடிக்கொண்டே போகும். அப்போது ஜனங்களின் உடை குறைந்துகொண்டே போகும். இலையுதிர் காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்ப்பது போல், மனிதர்கள் உடைகளை உதிர்த்துக்கொண்டே போவார்கள். மனிதர்கள், அதிலும் பெண்கள் தங்கள் உடைகளைக் குறைத்துக்கொண்டே போவார்கள்.
அடுத்து வரும் கோடைக் காலத்தில் அமெரிக்காவில் ஆண்களும் பெண்களும் பாதி உடைதான் அணிவார்கள். பழைய ஃப்ராக், கவுண் போன்ற உடைகளை இப்போது பெண்கள் அதிகமாக அணிவதில்லை. ஆண்கள் அணிவதுபோல் பேன்ட்ஸ் அணிய ஆரம்பித்திருக்கிறார்கள். வெயில் காலத்தில் மிகவும் குட்டையான பேன்ட்ஸ்களைப் போட்டுக்கொள்கிறார்கள். தொடையும் கால்களும் அப்படியே பிறர் பார்வைக்குப் படும். கீழே இப்படி என்றால் மேலே போட்டுக்கொள்ளும் உடையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எவ்வளவு குறைந்த அளவு உடம்பை மூட முடியுமோ அவ்வளவு மட்டுமே மூடியிருப்பார்கள். உடம்பை எவ்வளவு தூரம் சூரிய வெளிச்சத்தில் காட்ட முடியுமோ, அவ்வளவு தூரம் காட்டி, உடம்பைக் கொஞ்சம் பழுப்பு நிறம் ஆக்கிக்கொள்ள வேண்டுமாம். கடற்கரைக்குப் போனால் வெறும் நீச்சல் உடையில் பெண்கள் மணலில் படுத்திருப்பதைப் பார்க்கலாம்.
இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு என் பெரியம்மா, எப்படிப் பெண்கள் புடவை கட்ட வேண்டும் என்று சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. நம் சேலையே உடம்பை நன்றாக மறைக்கும். அப்படியிருந்தும் முந்தானையை நீளமாகப் போட்டு அதை முன்னால் இழுத்துச் செருகி ஆசனப் பகுதியை முழுவதுமாக மறைக்க வேண்டும் என்பார்.
அமெரிக்கப் பெண்கள் ஆசனப் பகுதியை எவ்வளவு இறுக்கமான உடைகளால் வெளியே தெரியும்படி காட்ட முடியுமோ, அவ்வளவு இறுக்கமான உடைகளைப் போட்டுக் காட்டுகிறார்கள். அமெரிக்காவிலும் சுமார் முப்பது வருஷங்களுக்கு முன்னால் இந்த நாகரிகம் இருக்கவில்லை. ஆனால் இப்போது உடம்பை அதிகமாகக் காட்டும் அளவிற்கு உடை நாகரிகம் வளர்ந்திருக்கிறது.
இந்த சமயத்தில் இன்னொன்று ஞாபகத்திற்கு வருகிறது. காலத்திற்குத் தகுந்த மாதிரி உடைகளை மாற்றுவதோடு உடைகளின் வண்ணங்களையும் மாற்றிக்கொள்கிறார்கள். குளிர்காலத்தில் கருப்பு அல்லது மற்ற வண்ணங்களில் அடர்த்தியான வண்ணங்கள் உள்ள உடைகளையே அணிகிறார்கள். ஒரு பெண், காலத்திற்குத் தகுந்த மாதிரியான வண்ணத்தில் தான் உடை அணியவில்லை என்றால் தன் தாய் தன்னை மகள் என்று ஒத்துக்கொள்ள மாட்டாள் என்றாள்! இந்த அளவிற்கு அமெரிக்கர்களின் ஃபேஷன் வளர்ந்திருக்கிறது. மகள்கள் எவ்வளவு தூரம் தங்கள் உடம்பைக் காட்டுகிறார்கள் என்பதைப் பற்றி இந்தத் தாய்மார்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
=============================================
படங்களுக்கு நன்றி: http://skeetonmischa.blogspot.com, http://www.thecitrusreport.com, http://my2-i.blogspot.com, http://www.flickr.com/photos/bootsman