இவள் பாரதியின் ‘நீ மிதமாக நான் மிகையாக’
(நூல் மதிப்புரை)
நிலா தமிழன்
இவள் பாரதியின் படைப்பில் விஸ்வ சேது பதிப்பக வெளியீட்டில் ‘நீ மிதமாக நான் மிகையாக’ என்ற கவிதை நூல் அண்மையில் வெளிவந்துள்ளது.
அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் புத்தகத்தில் என்று பார்த்தால், ஆதாம் – ஏவாள் காலம் தொடங்கி அணு அணுவாய் இந்த மனித இனம் ரசித்து, திளைத்து, அழுது புலம்பி, ஏங்கித் தவித்து, கனவு கண்டு, கற்பனையில் சிறகடித்து, தானாய்ப் பேசி, தனக்குள் விவாதித்து, ஆளில்லாமல் சிரித்து, பாமரனையும் கவிஞனாக்கிய அழியாக் காதல் தான்…
இவள் பாரதியின் இந்தக் கவிதை நூலில் உள்ள கவிதைகளில் காதல் வலியினூடே காதலின் வலிமையும் இழைந்தோடுகிறது.. காதலிப்பவர்களின் கையேடாக இவரின் சில கவிதைகள் அமைந்துள்ளதை மறுக்க முடியாது… சதவீத அடிப்படையில் காதல் தோற்பது அதிகமான அளவில் உள்ளதெனினும் காதலிப்போரின் சதவீதம் குறைந்தபாடில்லை.. ஏனெனில் காதல் மனிதனின் அடையாளம்… அது இளமைத் திருவிழா… இது இனம் புரியாத, விவரிக்க இயலாத மெல்லிசை.. நிறுத்தப்படாத பேச்சுத் தொகுப்பு, சலிக்காத உணர்வு யுத்தம். அதைத் தான் இவள் பாரதியின் கவிதைகள் சுமந்து நிற்கின்றன…
கவிதை என்றாலே அழகு தான்.. அதில் காதல் கவிதை என்றால் பேரழகு… இந்தப் பேரழகை இவள் பாரதியின் ‘நீ மிதமாக நான் மிகையாக’ தொகுப்பில் இன்னும் அழகுபடுத்தி அதன் வடிவமைப்பு மெருகேற்றியுள்ளமைக்கு ஒரு கூடை ரோஜா மலர்களைத் தாராளமாகப் பரிசாக்கலாம்..
இந்தக் கவிதை ஏட்டை வடிவமைத்ததும் இவள் பாரதி என்பதை அறிந்த போது, பன்முகத் திறமையைப் பாரதி பரம்பரையில் வந்த இந்தப் பெண் கவியிடம் காண முடிகிறது..
பிறந்த பிஞ்சுக் குழந்தையை மெல்லிய சருகாய் வருடுவது போல, இவள் பாரதியின் ‘நீ மிதமாக நான் மிகையாக’ கவிதை தொகுப்பை வாசிக்கத் தொடங்கினேன்… ஆங்காங்கே காதல் துளிர்த்தது.. காதல் சிரித்தது.. காதல் மிளிர்ந்தது.. காதல் வெட்கப்பட்டது.. காதல் அழுதது.. காதல் காத்திருந்தது.. காதல் இயலாமையில் அரற்றியது.. காதல் ஏக்கப்பட்டது.. காதல் கனவு கண்டது…காதலைக் கெளரவப்படுத்தியது.. காதல் மேல் கோபத்தையும் உண்டு பண்ணியது..
நீ
கொடுக்கும்
அனைத்தையும்
நேசிக்கிறேன்
வலியையும்
இவள் பாரதியின் இக்கவிதையைப் படித்தேன்- சிந்தித்தேன்… வலியையும் நேசிக்கும் வாழ்க்கைப் பாடத்தைக் காதல்தான் கற்றுத் தருமோ??? காதல் கூட தத்துவம் போதிக்கும் ஆசான் என்பதை உணர வைத்தது…
உன் மீதான
நேசத்தை
எங்கே ஒளித்து வைப்பதெனத்
தெரியாமல்
தற்காலிகமாக
கவிதைகளில் ஒளித்து
வைத்திருக்கிறேன்..
அதை
நீ கண்டுபிடிக்கும்
பொழுதுகளில்
அது சிறகடிக்கும்
காதலின் வெளியில்…
காதலில் கண்ணாமூச்சு விளையாடும் இவள் பாரதியின் இக்கவிதையைப் படிக்கும் போது அதோ அங்கே கண்ணீரை வடித்து அழுகின்ற ஒரு அழகிய காதல் இதயம், ‘காரணகர்த்தாவே காதல் கொள். காதலை கொல்லாதே’ என நம்மை அறியாமல் கூற வைக்கிறது…
எனது
தூக்கத்தை
உனது நினைவுகளுக்கு
இரவல் கொடுத்துவிட்டு
விழித்திருக்கிறேன்
இரவுக்குத் துணையாய்…
தன்னைப் போலவே இரவும் யாரையோ காதலித்து, கருப்பு போர்த்தி உள்ளதால், அதற்குத் துணையாய் விழித்திருக்கும் இந்தக் காதல் இதயம், நுண்ணிய உணர்வில் மெல்லிசை இசைப்பதைக் காண முடிகிறது.
காதல்
என்னை
காதலிக்கச் சொல்லிக்
கட்டளையிட்டால்
தெரிவு செய்வேன்
உன்னை
முதலும் முடிவுமாய்
இரு இதயங்களையும் ஒருவரை ஒருவர் காதலிக்கச் சொல்லி காதல் கட்டளையிட்டு விட்டால் இருவருக்குமே அதுவே முதல் காதல், முடிவு வரை அதுவே காதல்.. காதலுக்குக் கட்டுப்படுதல் மனித இயல்பே எனக் கவிஞர் உணர்த்துவது அருமை..
என் தவறுக்கு
என்ன தண்டனை
வேண்டுமானாலும் கொடு
மெளனத்தைத் தவிர.
நீ மெளனித்திற்கும்
நொடிகளில்
மரணித்து விடுகிறேன்…
மெளனம் – கத்தியின்றி ரத்தமின்றி நம்மைக் கொல்லும் ஆயுதம். மெளனத்தை விட காதலில் வேறு வலி தரும் தண்டனை இல்லை எனக் கூறும் கவிஞரின் கூற்று, உலகக் காதலர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
திறந்தேதான் இருக்கிறது
கவிதையோடு என் மனமும்
நீ வாசிப்பதற்கும்
வசிப்பதற்கும்
கவிதையை நேசிக்கும் அம்மனம், இம்மனத்தையும் நேசித்து அதில் வசிக்க வர வேண்டும் என இக்கவிதை விடுக்கும் அழைப்பு ஏக்கம் சுமந்த தூது.
அடிக்கடி
விளக்கம் சொல்ல
காதலொன்றும்
மறைபொருளல்ல.
உணரத்தான் கூடும்
அதன் பிசுபிசுப்பையும்
வழவழப்பையும்
காதல் – உணர்வுத் தீயால் எழுப்பப்படும் உன்னத உறவு, அது விளங்காப் பொருளல்ல, மனம் உணரும் மகிழம்பூ வாசம். உணர்ந்து கொள், விளக்கம் கேட்காதே எனக் காதலின் எளிமையை விளக்கும் கவிதையில் உண்மை ஊஞ்சலாடுகிறது.
இப்படி இந்தத் தொகுப்பில் கவிதைப் பூக்களைத் தூவி, காதலை நுணுக்கமாக வடித்திருக்கும் இவள் பாரதியின் கவிதைகள் ஒவ்வொன்றும் காதல் ரசம் சொட்டும் கவித்தேன் எனலாம்…
காதலிப்பவர்களின் எண்ண ஓட்டமாக இந்தக் கவிதைத் தொகுப்பு இருப்பது ஒரு புறம் இருக்க, காதலிக்காதவர்களையும் காதல் மேல் ஒரு ஈர்ப்பை அவர்கள் அறியாமல் உருவாக்கக் கூடிய வேதியியல் மாற்றத்தை இந்தத் தொகுப்பு உருவாக்குகிறது எனலாம்..
விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியீட்டில் வந்துள்ள ‘நீ மிதமாக நான் மிகையாக’ என்ற இந்தப் படைப்பு, காதல் தாஜ்மகால் என்றால் மிகையில்லை. நறுக்கென்று கவிதைகள் இதயத்தில் அனுமதி கோராமல் அமர்ந்து விசிறுவது ஒரு புறம் இருக்க, பக்கத்திற்குப் பக்கம் வடிவமைப்பும் படங்களும் நம்முடன் புன்னகையோடு கைகுலுக்குகின்றன.
இவள் பாரதி, மேலும் பல களங்களை மையப்படுத்திக் கவிதைகள் வடிக்க வேண்டும், அத்திறமைக்கு உறவினர் தான் அவர் என்பதில் எள்ளளவும், எள்ளின் நுனியளவும், அந்நுனியின் முனையளவும் ஐயமில்லை.
============================
விஸ்வசேது இலக்கிய பாலம்,
8, வேலாயுதம் காலனி முதல் தெரு,
சாலிகிராமம், சென்னை – 93
மின்னஞ்சல்: visvasethu@gmail.com, devathaibharathi@gmail.com