சக்திசக்திதாசன்

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன்.

இன்று நான் இக்கடிதத்தை வரைந்து கொண்டிருக்கும் நாள் காதலர் வாழ்வினில் ஒரு இனிய நாளாகிறது. ஆமாம் பெப்பிரவரி 14ம் திகதி ஆங்கிலத்தில் ” Valantines day ” என்று அழைக்கப்படும் காதலர் தினமாகும்.

இதை நான் வாழும் இவ்விங்கிலாந்து தேசத்திலே மிகவும் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் லண்டனில் காலடி வைத்தேன். அதைத் தொட‌ர்ந்து வந்த அந்த பெப்பிரவரி மாதம் 14ம் திகதி தொலைக்காட்சிப் பெட்டியிலும், வானொலிப் பெட்டியிலும் இத்தினத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை எண்ணி வியந்தேன்.

காதலர்க்கு என்று ஒரு தினமா? என்னடா இது விசித்திரமாகவிருக்கிறதே ! என்று எண்ணினேன். நாம் வாழும் பின்புல நாடுகளிலே காதலை நெஞ்சங்களுக்குள் புதைத்து வைத்து ஏதோ தவறு செய்கிறவர்கள் போல ஒளிவிலும் மறைவிலும்  நடப்பதே காதல் என்று எண்ணியிருந்தவனுக்கு காதலர்களுக்கு ஒரு தினத்தையே ஒதுக்கியிருப்பதைக் கண்டதும் வியப்பேற்படுவதில் வினோதமொன்றுமில்லையே !

இதன் பின்பு பல வருடங்கள் உருளும் உலகோடு உருண்டு செல்வது போல இத்தினமும் தன்பாட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தது.

அதன் பின்பு நானும் காதலித்தேன், காதலியை மணமுடித்தேன் அப்போது கூட இத்தினத்தின் தாத்பரியத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஒருமுறை என்னோடு வேலை செய்யும் ஒரு ஆங்கில சக ஊழியருடன் இதைப்பற்றி ஆழமாக உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.

காதலுக்கு என்று ஒரு தனித்தினம் தேவைதானா? எனும் கேள்விக்கு மிகவும் ஆணித்தரமாக எதிர்த்தரப்பு வாதங்களை நான் முன் வைப்பதை மிகவும் அமைதியாக செவி மடுத்த அந்நண்பர் முறுவலித்தபடியே ” நீ நாளை உயிருடன் இருப்பாய் என்பதற்கு என்ன உத்தரவாதம் ? ” என்றார் என்னால் பதில் கூறமுடியவில்லை. தொடர்ந்த அவர் ” ஒவ்வொரு வருடமும் உன் மனைவியின் மீதுள்ள அன்பை போற்றிப் புகழும் ஒரு திருநாளாக இதை ஏன் உபயோகிக்கக் கூடாது?” என்று கேட்டு விட்டு, மிகவும் இளமையிலே காலமாகி விட்ட தனது தந்தை அவர் மறையும் வரை ஒவ்வொரு காதலர் தினத்திற்கும் தனது மனைவிக்குக் கொடுத்த பரிசுப்பொருட்களை அவரின் அன்னை மிகவும் பாதுகாப்பாகப் பேணி ஒவ்வொரு வருடமும் அதைப்பார்த்து பூரிப்படைவதாகவும் கூறினார்.

அந்நாளின் முக்கியத்துவம் சிறிதளவில் எனக்குப் புரிந்தது.

அதன் ஆரம்பத்தைச் சற்றுப் புரட்டிப் பார்த்தேன்.

இத்தினக் கொண்டாட்டத்தின் ஆரம்பம் கிறித்துவ முனிவர்களான வ”வலென்டைன்ஸ் ( Valentinus)” என்பவர்களின் வழி ஆரம்பமாகியது என்று கூறுகிறார்கள்.

சரி அப்படியானால் இத்தினத்திற்கும் இவ்  Valentinus என்பவருக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் ? உங்கள் குழப்பம் புரிகிறது.

புராதான ரோம ஆதிக்கத்தின் கீழ் திருமண்ம் செய்யக்கூடாதென த்டைவிதிக்கப்பட்டிருந்த சிப்பாய்களுக்கும், தண்டிக்கப்பட்டவர்களுக்கும் திருமணம் செய்து வைத்தமைக்காக இவர் சிறை வைக்கப்பட்டதே இவருக்கும் காதலுக்குமான தொடர்பு என்கிறார்கள்.

அத்துடன் அவர் சிறையிடப்பட்டபோது அவரைக் காவல் செய்த சிறையதிகாரியின் மகளின் நோயை இவர் குணப்படுத்தியதாகவும், இவர் தூக்கிலிடப்பட்ட போது ஒரு மட்டையில் ” உன்னுடைய வலென்டையினிடமிருந்து (From your Valentine)” என்று எழுதியனுப்பயதாகவும் கூறப்படுகிறது.

அந்த அடிப்படியில் ஆரம்பிக்கப்பட்ட இக்காதலர் தின விழாவானது பல வடிவங்களில், பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தினத்தில் பலர் தமது காதலை தாம் விரும்புகிறவர்களிடத்தில் வெளிப்படுத்துவார்கள், மற்றும் சிலர் தமது திருமண விருப்பத்தைத் தெரிவிப்பார்கள்.

பல வண்ணத்திலான காதலர் தின வாழ்த்து அட்டைகள், பலவகையான பரிசுப்பொருட்கள் என்பன காதலர்களிடம் கைமாறப்படும்.

அது மட்டுமின்றி இரகசியக் காதலர்களிடம் இருந்து குறிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் பரிசுகள் என்பன கொடுக்கப்படும். இதைத் தமக்கு யார் கொடுத்திருப்பார்கள் என்று அறிவதில் பெரிய முனைப்பைக் காட்டுவார்கள் அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள்.

எது எப்படியாயினும் காதலுக்கு மொழி, இனம், மதம், நிறம் இல்லையே ! அனைவர்க்கும் பொதுவான இக்காதல் கூட அனைவர்க்கும் பொதுவான இறையின் ஒரு அம்சமோ ?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்தி தாசன்
இலண்டன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *