தொல்லை காட்சி- ஆடலாம் பாய்ஸ் – தேவயானி – ஒரு தாயின் சபதம்
மோகன்குமார்
ஆடலாம் பாயிஸ் சின்னதா டான்ஸ் – இது ஒரு படத்தோட பெயர். சுருக்கமா முதல் எழுத்துக்களை வைத்து ABCD !. பிரபு தேவா ஹீரோவாக நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க டான்ஸ் படமாம். டான்ஸ் – 3 D – யில் பார்க்கலாம். புதுமுக இயக்குனர் இயக்க பிரபல தயாரிப்பு நிறுவனமான UTV தயாரிக்கிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா ஜெயா டிவி யில் காட்டினர். படம் ஓட வைக்க டான்ஸ் 3- D யில் பாருங்க என்றெல்லாம் வித்யாசம் காட்ட முயல்கிறார்கள் . கதை ஒழுங்கா இருந்தாலே படம் ஓடிடும் என்பதை சில நேரம் மறந்து விடுகிறார்கள்
ஜீ தமிழில் ஒரு தாயின் சபதம்
டி. ராஜேந்தர் சினிமா தலைப்பான ” ஒரு தாயின் சபதம் ” என்கிற தலைப்பில் ஜீ தமிழில் உமா பத்மநாபன் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார். கணவரை இழந்து தங்கள் குழந்தைகளை தனி மனுஷியாக வளர்த்த அம்மாக்கள் பற்றிய தொடர் இது. சனிக்கிழமை மாலை 8:30 க்கு ஒளிபரப்பாகிறது. அம்மாவை நேசிக்காதோர் யாருமே இருக்க முடியாது. அதிலும் கணவன் இன்றி தானே உழைத்து, குழந்தைகளையும் வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வரும் தாய்மார்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
ஆனால் இந்த நிகழ்ச்சி மிக பெரும் அழுகாச்சி காவியமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். பேசும் மகன் / மகள் அழ, அதை கேட்டு அம்மா அழ,,,, பார்வையாளர் எல்லாம் அழுகிறார்கள். ஒரே ஒரு நாள் பத்து நிமிஷம் பார்த்ததில் டென்ஷன் ஆகி போன என் பெண் ” இனிமே இந்த சான்ல பக்கம் வந்தே தொலைச்சுடுவேன்” என்று சொல்லியபடி சானல் மாற்றி விட்டாள் !
டிவியில் பார்த்த படம் – உள்ளத்தை அள்ளி தா
எப்பவும் பிடித்த காமெடி படங்களில் ஒன்று உள்ளத்தை அள்ளி தா. கவுண்டர் கலக்கி இருப்பார். இந்த படம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்
பார்க்கும் ஒவ்வொரு முறையும் கொசுவர்த்தி சுற்ற ஆரம்பித்து விடும். ACS என்கிற கடினமான கோர்ஸ் நான் பாஸ் செய்த போது வந்த படம். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். அந்த கொண்டாட்ட மனநிலைக்கு ஏற்ற படி இருந்தது உள்ளத்தை அள்ளி தா.
ரம்பாவின் அழகு, கவுண்டர் மற்றும் கார்த்திக்கின் கெமிஸ்ட்ரி, சிற்பியின் பாட்டுகள் என சூப்பர் ஹிட் ஆன இப்படம் இன்றைக்கும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. ” பாத்து போட்டு கொடுங்க; வேன் எல்லாம் வச்சி கடத்திருக்கோம் ” போன்ற டயலாக்குகள் அமரத்துவம் பெற்றவை !
ஆட்டோ கிராப்பில் தேவயானி
சுஹாசினி தொகுத்து வழங்கும் ஆட்டோ கிராப்பில் தேவயானி உரையாடினார். வழக்கம் போல் சொல்லும் ” காதல் கோட்டை தான் எனக்கு திருப்பு முனை, etc ” ( 15 வருஷமா இதையே தான் கேட்டுகிட்டு இருக்கோம் மேடம் !)
40 வயதாவது இருக்கும் இவரை பார்க்க 30 க்கும் குறைவாய் தான் தோன்றுகிறது. வெயிட் போடாமல் இருப்பதன் விளைவு !
” ராஜ் குமாரனை கல்யாணம் செய்து கொள்ள குடுத்து வைத்திருக்க வேண்டும்; அவருக்கென்றே பிறந்தவள் நான் ” என்றார்.
இவர்கள் இருவரும் இணைந்து மிரட்டும் புது பட டிரைலர் நினைவில் வந்து வயிற்ரை கலக்கியது. சானல் மாற்றி விட்டேன்
பிளாஷ்பேக் – தூர்தர்ஷனில் பிராந்திய மொழி திரைப்படங்கள்
டிவி வந்த புதிதில் வாரம் இரண்டே படம் பார்க்க தான் வாய்ப்புண்டு. ஒன்று – ஞாயிறு மாலை வரும் தமிழ் திரைப்படம். மற்றொன்று அதே ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகும் பிராந்திய மொழி திரைப்படம். நல்ல விஷயம் என்னவென்றால், பெரும்பாலும் தேசிய விருது பெற்ற அல்லது பிற மொழியின் சிறப்பான படங்கள் இதில் திரையிடுவார்கள். சப் டைட்டிலுடன் தான் வந்த ஞாபகம். சத்யஜித்ரே, கே. விஸ்வநாத் உள்ளிட்ட புகழ் பெற்ற இயக்குனர்களின் படங்களை இதில் பார்த்து மகிழ்ந்துள்ளோம். வெகு அரிதாய் சுழற்சி முறையில் ஒரு தமிழ் படமும் கூட இந்த ஸ்லாட்டில் வரக்கூடும். அன்றைக்கு நமக்கு மகிழ்ச்சி சொல்லி மாளாது. அடடா ” இன்னிக்கு ரெண்டு சினிமா பார்க்கலாம்; மதியம் ஒரு படம்; இரவு ஒரு படம் என குதிப்போம் ழ்’ ம்ம் அது ஒரு காலம் !
அம்மா நடத்தி வைத்த திருமணங்கள்
தனது 65வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா 65 பேருக்கு திருமணம் நடத்தி வைத்ததை விரிவாக ஜெயா டிவியில் காட்டி மகிழ்ந்தார்கள். அம்மா ” மணமக்கள் மாலையை எடுங்கள். கழுத்தில் போடுங்கள். இப்போ தாலி எடுங்கள்.. ம்ம் கட்டுங்கள் ” என்றதும் மணமகன்கள் ” மாண்புமிகு” மாதிரி அடிபணிந்தனர்.
அம்மா ஓரிரு குட்டி கதைகளை பார்த்து பார்த்து படித்தார். ஆவ்வ்வ் என நமக்கு கொட்டாவி வர, நிகழ்ச்சியில் அமர்ந்திருந்த அமைச்சர் பெருமக்கள் சட்டசபை போல, ஒவ்வொரு நிமிடமும் கை தட்டி அம்மாவை மகிழ்வித்தனர். பார்க்க செம காமெடியா இருந்தது. டிவி யில் காட்டும் சட்ட சபை நிகழ்சிகள் கூட இந்த காமெடிக்காக சில நிமிடங்கள் பார்த்து மனம் விட்டு சிரிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்.