அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை-

0

சாகர்

2. எகிப்து விஜயம்

ஒரு வழியாக விமானத்தில் அமர்ந்து மீண்டும் கைப்பேசியில் எதாவது மின்னஞ்சல் வந்துள்ளதா என்று பார்த்தபோதுதான், நான் எகிப்து பற்றி சேகரித்த குறிப்புகளை எனது மடிக்கணிணியில்(Laptop) வீட்டில் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. விமானம், கூடிய விரைவில் கிளம்பபோவதாகவும் மின் கருவிகளை சிறிது நேரத்தில் நிறுத்தவேண்டும் அல்லது வான் பயணபாங்குக்கு (flight safe) மாற்ற வேண்டும் என்று அறிவித்தனர். இருக்கும் சில நிமிடங்களில் ஒரு உபாயம் செய்யலாம் என்று தோன்றியது. எனது ஐப்பாடை(IPAD) எனது போன் மூலம் இணையதளத்தில் இணைத்து(tethering) எகிப்து பற்றி லோன்லி பிலானட்(Lonely planet) கை வழிக்காட்டியை இறக்குமதி(Guide Download) செய்தேன். அதே நேரத்தில் அம்மாவுக்கும்,அமெரிக்காவில் உள்ள தம்பி மற்றும் மைத்துனனுக்கும் தொலைபேசியில் கிளம்பிவிட்டோம் என்று சொன்னேன்.  நான் இறக்குமதி செய்து முடிக்கவும் எல்லா கருவிகளையும் நிறுத்துங்கள் என்று ஒலிபெருக்கியில் சொல்வதற்கும் சரியாக இருந்தது. ஐப்பாடில் வழிகாட்டி இருந்தது பின்னர் மிகவும் நெருக்கடியான சமயத்தில் மிகவும் உதவியது.

BA155 சரியாக ஐந்து மணிக்கு மெல்ல ஊற ஆரம்பித்தது. சிறிய விமானம்தான், இரு பக்கமும் மூன்று இருக்கைகள் கொண்ட விமானம். மனைவியும் பிள்ளைகளும் முன் இருக்கையில் அமர, நான் தனியே அமர்ந்திருந்தேன். என் மனைவி ஆனந்தி, “சிவப்பா? வெள்ளையா?” என்று கேட்டதும் சிரிப்பு வந்தது.

ஏன் என்றால், நான் மிகவும் சீக்கரம் விமான நிலையத்திற்கு வந்து விடுவோம், போகும் ஊரோ இஸ்லாமிய தேசம்.  கிளம்பும் முன் அருந்துவோம் என்று ஒரு சிறிய சிவப்பு மது புட்டி ஒன்று கொண்டு வந்தேன். நாங்கள் வந்த அமளியில் சின்ன பையன் சக்தியை பதிவு செய்து, பெட்டிகளை உள்ளே அனுப்பிவிட்டு புறப்பாடு பரிசோதனைக்கு செல்லும் அவசரத்தில் ஆனந்தி பையை கிழே போட அந்த புட்டி விழுந்து உடைந்து. ஹீத்ரோவின் வெள்ளை பளிங்கு தரையில் ரத்தம் போல் தேங்கியது சிவப்பு மது. எங்கே அதை துடைப்பதற்கு டிசு(tissue) கிடைக்கும் என்று பார்க்கும் போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர் இருவர் “நீங்க உங்கள் விமானத்திற்கு போங்க நாங்க பார்த்துக்கிறோம்” என்றது மனதை தொட்டது.

கணவரின் மதுவை கொட்டியதால், என் மனைவி இப்போது, எனக்கு வாங்கி கொடுக்க கேட்ட கேள்வி தான் அது. குடிபழக்கம் இல்லாத ஆனந்தி சிவப்பு மது வாங்கி தரவா என்று கேட்டதும் வந்தது சிரிப்பு.

விமானம் மெல்ல லண்டன் நகரத்தை கிழே விட்டு மெல்ல எகிப்து நோக்கி பறக்க ஆரம்பித்தது.ஆறு மணிநேர பயணம்! மெல்ல எகிப்தி தேசத்தை பற்றிய குறிப்புக்களை படிக்கலாம் என்று ஆரம்பித்தேன். இரண்டு கோப்பை மது மெடிதெரனியன் ஆட்டு பிரியாணி சாப்பிடவாறு மெல்ல அவர்களின் ஆராயிர வருட சரித்திரத்தை பற்றி படிக்க ஆரம்பித்தேன்.

கிறிஸ்து பிறப்பதற்கும் நாலாயிரம் வருட சரித்திரம் உள்ள நாடு எகிப்து தேசம், மற்ற பண்டை நாடுகளை விட எகிப்துக்கு ஒரு விஷேட அம்சம் உண்டு. அதுதான் ரோஸெட்டா கல்(Rosetta Stone)! நமது சிந்து வெளி சமுதாயம் உலகத்திற்கு ஒரு பெரிய கேள்விகுறி ஏன் என்றால் இன்றைக்கு வரை சிந்து சமவெளியினரின் எழுத்துக்களை யாரும் சரியாக மொழி பெயர்ச்சி செய்ய இயலாமை தான். ஐராவதம் மகாதேவன், போர்போலா போன்ற அறிஞர்கள் சிந்து சமவெளி எழுத்துவடிவம் பண்டை பிராமி தமிழ் வடிவத்துடன் ஒத்து உள்ளது என்கிறார்கள். ஆனால் எதுவும் திண்ணமாக ஒப்புக்கொண்ட கருத்து அல்ல.

அங்குதான் எகிப்து வேறுபடுகிறது. பண்டை எகிப்திய மன்னர்கள் தங்களை பற்றி கல்களில் பதிவு செய்தததை பல்வேறு அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். வெவ்வேறு  உருவங்களும் மிருகங்களும் கொண்ட இந்த பாஷை இதை கண்டுபிடித்த எகிப்தியர்களுக்கும் ஐரோப்பிய வல்லுனர்களும் ஒரு சவாலாகவே இருந்தது. எகிப்திய வரலாற்றின் ஜீவநாடியே நைல் நதிதான், அந்த நைல் நதி மெடிதெரனியன் கடலில் கலக்கும் முன் கிளைகளாக பிரியும் போது  ரோஸடா(Rosetta) மற்றும் டமியட்டா(Damietta) என்று இரண்டு கிளைகளாக பிரியும். அந்த ரோஸடா தீரத்தில் கண்டுபிடித்த ஒரு கல் தொல்பொருள் ஆய்வாளர்கள் வாழ்வில் ஒரு தீபாவளி! இன்று லண்டன் பிரிட்டிஷ் தொல்கட்சியகத்தில் உள்ள அந்த உலக புகழ் மேற்ற ஒரு கல் ரோஸடா கல்!

ரோஸடா கல்லின் மகத்துவத்தை அறிவதற்கு முன் பண்டை எகிப்திய வரலாறு பற்றி அறிவது கொஞ்சம் முக்கியம்.பண்டை எகிப்திய மன்னர்களின் ஆதிக்கம் நைல் நதி தீரத்தில் மட்டும் தான் பிரதானம் ஏன் எனில் மற்றவை எல்லாம் பாலைவனம் . நைல் நதி தீரத்தை மேல் தீரம்(Upper Egypt) மற்றும் கீழ்தீரம் (Lower Egypt) என்று இரண்டு பாகங்களாக பிரித்து இரண்டு ராஜ்ஜியங்களாக ஆண்டனர். பின்னர் இரண்டும் ஒரு குடையின் கீழ் ஒரு பெரியதேசமாக ஆளப்பட்டது.

காலப்போக்கில் எகிப்தில் கிரேக்க ஆத்திகம் ஆரம்பித்தது, முதலில் ஆண்ட கிரேக்க மன்னர்கள் தங்கள் கலாச்சாரத்தை எகிப்திய கலாச்சாரத்துடன் இணைத்து ஆண்டனர் என்பது வரலாறு.கிரேக்க(Greek) அரசுகளை தொடர்ந்து ரோமானிய(Romans) ஆதிக்கம் அதை தொடர்ந்து பைஸாண்ட்டியம்(Byzantium) பின்னர் இஸ்லாமிய மன்னர்கள் கடைசியில் ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு ஆதிக்கம் தொடர்ந்து பின்னர்  மன்னராட்சி வீழ்ந்து சுதந்திரம் அடைந்தது எகிப்து.அப்படியும் மக்களாட்சி வெகு நாள் நீடிக்காமல் சர்வதிகார ஆட்சி மேவியது. சமீப காலத்தில் முபாரக் ஆட்சியை விரட்டி மக்களாட்சி நிறுவியது அரபிய வசந்தம்(Arab Spring) என்னும் புரட்சிப்படை..
எகிப்திய பாரம்பரியமும் சரித்திரமும் நமது பாரதத்தை ஒத்து இருப்பத்தை காணலாம். ஆனால் உலகம் எகிப்திய சரித்திரம் எவ்வளவு தொன்மையானது என்பதை கார்பன் கணிப்பினால்(Radio Carbon Dating) உறுதி செய்தது. அதைவிட முக்கியமான இரண்டு அம்சங்கள் எகிப்திய நாகரிகம் பற்றி நாம் அறிய இன்றிமையாதவை ஆகின்றன.

ஒன்று ரோஸடா கல்! ரோஸடா நதி தீரத்தில் கண்டுபிடிக்கபட்ட ஒரு கல் சாசனம் தான் உலகபார்வையில் எகிப்தியர்களை பற்றி அறியும் அகராதி ஆனது. முன்னமே கிரேக்க ஆட்சி எகிப்தில் பரவியது என்று குறிப்பிட்டேன் அல்லவா, அப்பொழுது சமூக பழக்கத்தில் இருந்த ஒரு மொழி டேமொடிக்(Demotic) அல்லது காப்டிக்(Coptic) என்று வழங்கிய ஒரு மொழி. ஹீரோகிளிபிக்ஸ்(Heroglyphics) மன்னர்களின் மொழியாக நிலவியது. கிரேக்க மன்னர்கள் தங்கள் சாசனங்களை கிரேக்கம், காப்டிக் மற்றும்  ஹீரோகிளிபிக்ஸ் மொழிகளில் பதித்தனர். கிரேக்க மொழி அறிந்த அறிஞர்களுக்கு அதை வைத்து மொழிப் பெயர்ச்சி செய்யும் அகராதி (Translating Dictionary) மற்றும் வழிகாட்டியானது இந்த கல்

. <http://www.britishmuseum.org/explore/highlights/highlight_objects/aes/t/the_rosetta_stone.aspx>

இரண்டு, எகிப்தியர் தங்கள் உடல்களை இறந்தப்பின் பதப்படுத்தி புதைக்கும் பழக்கம். மம்மி(mummy) என்றழைக்கப்படும் இந்த உடல்களை கோவில்கள் மற்றும் பிரமிட் என்னும் பெரிய கட்டடங்களில் மற்றும் குகைகளில் புதைத்தனர்.பிரமிட்கள் கட்டியதும் அவற்றை மாற்றி குடைவரை கோயிலில் புதைப்பதற்கு மாறியதற்கு காரணம் திருட்டு பயம். புதைக்கும் போது உணவு, நகைகள், மது, மற்றும் வேலையாட்களையும் சேர்த்து புதைத்தார்கள். ஏன் எனில் எகிப்தியர்கள் இறந்தபின் வேறு உலகத்திற்கு இந்த உடலோடு செல்வதாக நம்பினார். நகைகள் திருடும் கொள்ளைகாரர்கள் எடுத்தது போக சில மம்மிகள் புராதன ஆராய்ச்சியாளர் கைகளில் கிடைத்தது, இன்னும் சில  கிடைத்துக்கொண்டிருக்கிறது. அவை  கார்பன் கணிப்பினால் எவ்வளவு பழமையானது என்று நிறுவப்பட்டது, மேலும் அவை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் உள்ள ஹீரோக்லிபிக்ஸ் மூலம் எகிப்திய சரித்திரம் மிக அழகாக விவரிக்கப்பட்டது.

இந்த சரிதத்தை படிக்கும் போது இந்த மகத்தான நாட்டுடன் நம் மூதாதையர்கள் வாணிப தொடர்பு கொண்டிருந்தாஅர்கள் என்பதற்கு,  எகிப்தில் கண்டெடுக்க பட்ட தொன்தமிழ் காசுகளே சான்று. எகிப்தை கிரேக்க ரோமானியர் ஆண்டபோது பாரதத்துடன் கொழித்த வாணிபம் பற்றி பல்வேறு சரித்திர சான்றுகள் உள்ளன. புராதன எகிப்தியர் நம் இந்தியர்களோடு  கொண்ட தொடர்புகள் பற்றி ஆராய்வது மிகவும்  முக்கியம்!

படிக்க படிக்க சுவாரசியம் கொள்ள செய்தது நைல் நதி. எகிப்திய பாலைவனத்தை சில இடங்களில் சோலைவனமாக்கிய முக்கிய நதி.பண்டை எகிப்தியர் தங்கள் தேசத்தை நதியின் தீரத்தையோட்டியே அழைத்தனர்.நைல் என்ற பெயரும் பிற காலத்தில் வந்ததே, பண்டை எகிப்தியர் அதனை வெறும் ஹிடேறு (hiteru) அதாவது நதி என்று அழைத்தனர். நீர்நிலங்களை கேமெட் அதாவது கருநிலம் (kemet) என்றும் பாலைவனத்தை செந்நிலம் அதாவது தேச்ரெட்(desret) என்றும் அழைத்தனர்.பிற்காலத்தில் இதுவே ஆங்கிலத்தில் பாலைவனத்தை குறிக்கும் டேசெர்ட் (desert) சொல்லாக மருவியது. கிரேக்கர்கள் அந்நாட்டு மக்களை எகிப்தியர்கள் என்றழைத்ததால் அந்த பெயரே பிற்காலத்தில் அந்த தேசத்தை குறிக்கும் பெயராகியது.
பண்டை எகிப்தியாரின் வாழ்வே நைல் நதியின் சீற்றதையும் வேகத்தையும் பொறுத்திருந்தது. அந்த நதி பெருகும் குறையும் காலங்களை வைத்து பயிர் செய்து நதியின் நீர்நிலையை வைத்து வரி விதித்தது எல்லாம் படிக்க, படிக்க  மிகவும் சுவையாக இருந்தது.பெரிய பிரமிடுகளையும்,ஒபெளிஸ்க்(Obelisk) என்னும் உயர்ந்த தூண்களையும் கட்டுவதற்கு கல் அஸ்வானிலிருந்து இதே நைல் நதியில் தான் நூற்றுகணக்கான மைல் தொலைவில் உள்ள கிஸா மற்றும் லக்சோருக்கு கொண்டுவரப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது.

நான் எகிப்திய வரலாறு பற்றி புரட்டிகொண்டேயிருக்கும் போது விமானம் மெல்ல கைரோவில் தரையிறங்கியது.நான்கு டிகிரி குளிரில் இங்கிலாந்தை விட்டு கிளம்பிய எங்களை பதினெட்டு டிகிரியில் பதமாக எகிப்து அரவணைத்தது. மெல்ல நடந்து சர்வதேச வரவுகளை நோக்கி நடந்தோம். அங்கிருந்த வங்கியில் இன்னம் கொஞ்சம் எகிப்திய பவுண்ட் பணம்மாற்று செய்தோம்.  ஆச்சரியம் இங்கே ஒரு பிரிட்டிஷ் பவுண்டுக்கு பத்து எகிப்திய பவுண்ட் கொடுத்தனர். ஆஹா இங்கேயே வந்து மாற்றியிருக்கலமோ என்று தோன்றியது.

பிரிட்டிஷ் நாடு தேசத்தினர் எகிப்தில் உள்ளே வரும்போது, $25 செலுத்தி கடவுச்சீட்டு(Visa) பெற்றுக்கொள்ளமுடியும். ஷர்ம் அல் ஷேக் போன்ற கடலோர சுற்றல பயண நகரங்களில் வரும் பிரிட்டிஷ் தேசத்தினருக்கு அந்த செலவும் கிடையாது. சரி பாஷை தெரியாமல் எப்படி போராட போகிறோமோ என்றவாறு நடந்த பொழுது நிறையப்பேர் பெயர் பலகை(nameboard) மற்றும் பயண உதவி(tours) நிறுவன பெயர்களோடு நின்றனர். பல நாடுகளுக்கு சென்றுள்ள எனக்கு  கடவு பரிசோதனைக்கு(Immigration) முன்னால் பயணிகளை தவிர யாரும் அனுமதித்து பார்த்ததில்லை. இதுவே முதல் முறை! ஆச்சரியமாகக் பார்த்துகொண்டே ஒரு வரிசையில் நின்றவாறு, பயண இசைவு சீட்டு (Passport),சுற்றுலாப்பயண தகவல்களை (itinerary and bookings) எடுத்து கையில் வைத்துகொண்டு, முஸ்தபாவிற்கு தொலைபேசி செய்யலாம் என்றபோது, வருண் “டாடி! நம்ம பெயரோடு ஒரு ஆள் நிக்கிறார்” என்று சொன்னான்.

அவன் காட்டிய திசையில் எங்கள் பெயரோடு மெம்பிஸ் டூர்ஸ் என்ற அட்டையுடன் ஒரு இளைஞர் எங்களை நோக்கி வந்தார். http://uk.memphistours.com/Egypt/#
“வணக்கம் எகிப்துக்கு நல்வரவு! என் பெயர் அப்துல், மெம்பிஸ் டூர்ஸில்லிருந்து வருகிறேன் பயணம் சுகமா?” என்றார்.   அறிமுகங்கள் முடிந்ததும் என்னிடம் $100 வாங்கிக்கொண்டு இதோ வருகிறேன் என்று போனவர் ஐந்து நிமிடங்களில் கடவு அங்கீகார சீட்டோடு(Visa Stickers) வந்தார். எங்கள் பயண இசைவு சீட்டுகளை(passport) வாங்கி வரிசையில் நகர்ந்தவாறு ஒவ்வொருவருடைய  பயண இசைவு சீட்டுகளிலும் கடவு அங்கிகார ஒட்டு சீட்டை ஒட்டினார். அவர் ஒட்டுவதற்கும் நாங்கள் கடவு பரிசோதனை மேசைக்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. எங்கள் பயண இசைவு சீட்டுகளை கொடுத்து ஏதேதோ அரபிக் மொழியில் சொன்னார். இங்கிலாந்து மற்றும் மெம்பிஸ் டூர்ஸ் மட்டும் தான் எங்களுக்கு புரிந்தது, அதிகாரி புன்னகைத்தவாறு அனுமதி முத்திரையிட்டு நல்வரவு என்றார்.

எங்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு, வெளியே வரவும் எங்களை ஏற்றி செல்ல எங்கள்  வேன் வரவும் சரியாக இருந்தது. விமான நிலையத்தை விட்டு வெளிவரும்போது சுற்றுலா காவல்துறையினர்(Tourism Police) வண்டியில் உள்ளவர் யார் எங்கு போகிறோம் என்று விசாரித்தனர். அப்துல் மீண்டும் அரபிக்கில் ஏதோ கூறினார். மீண்டும் இங்கிலாந்து மற்றும் மெம்பிஸ் டூர்ஸ் மட்டும் தான் எங்களுக்கு புரிந்தது. சுற்றுலா பயணிகள் எகிப்தின் அன்னியகாசு வரவின்(Foreign Exchange Income) பெரும் பகுதி என்பதால் சுற்றுலா காவல்துறையினர் என்று ஒரு தனி காவல் துறையே உண்டு என்றும், அவர்களுக்கு தெரியாமல் யாரும் அந்நிய சுற்றுலா பயணிகளை யாரும் எங்கும் கொண்டு செல்ல முடியாது என்றும் சொன்னார். அரைமணி நேர பயணத்தின் போது மேலும் இரண்டு இடங்களில் சுற்றுலா காவல்துறையினர் வண்டியில் உள்ளவர் யார் எங்கு போகிறோம் என்று விசாரித்தனர் அவற்றை பதிவும் செய்துகொண்டனர்.


<http://www.grandpyramidshotel.com/>
ஒரு வழியாக எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த கிராண்ட் பிரமிட்ஸ்(Giza Grand Pyramids) ஹோட்டலை அடைந்தோம். பெரியதாகவும் நவீன அம்சங்களை கொண்ட நான்கு நட்சத்திர ஹோட்டல். கைரோவில் இரண்டு இரவு தான் தங்குவதாக எற்பாடு. இந்த ஹோட்டலுக்கும் ஐந்து நட்சத்திர மேனா ஒபராய்க்கும்(Mena Oberoi) இரண்டு இரவு தாங்கும் செலவில் சுமார் $1000 வித்தியாசம். காலை இரண்டு மணிக்கு வந்து ஒன்பது மணிக்கு புறப்படுவதற்கு எதற்கு வீண் செலவு என்று கிராண்ட் பிரமிட்ஸில் தங்க முடிவு செய்தோம். என்ன ஒரே குறை ஹோட்டல் ஒரு பெரிய முக்கிய சாலைக்கு பக்கத்தில் இருந்தது தான்.
அப்துல் மிச்ச பணத்தை வசூலித்து கொண்டு, “காலை ஒன்பது மணிக்கு தயாராக இருங்கள், வழிகாட்டியும் வண்டியும் அனுப்புகிறேன். நான் உங்களை நாளை இரவு ரயில் நிலையத்தில் சந்திக்கிறேன்” என்று கூறி விடை பெற்றார். இரண்டு மணி ஆகிவிட்டது ஒரு வழியாக படுக்கையில் விழுந்தபோது.நாளை எப்படி இருக்குமோ என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் மனதை ஆக்கிரமிக்க தூக்கம் ஒரு வழியாக ஆட்கொண்டது.(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.