அன்றைய நினைவில்…….
தனுசு–
என் ஊரில்
ஆறு இருந்தது
யார் ஆண்டாலும் கவலையின்றி
நிரம்பி வழிந்தது.
என் ஊரில்
குளம் இருந்தது
மழை பெய்தாலும் பொய்த்தாலும்
பாழாகாமல் பெருமை காத்தது.
என் ஊரில்
வாய்க்கால் இருந்தது
எக்காலத்திலும் தப்பாமல்
தெளிந்த நீரில் சலசத்தது.
இந்த இருந்தது எல்லாம்
இன்று
இல்லை.
அதனால்
ஊர் ஜனம் கஷ்டப்படவுமில்லை.
அவை
கல் குவாரியும்
மணல் குவாரியுமாக மாறி
பணம்
மும்மாரி பொழிவதால்
அந்த
நீர் ஆதாரம் தேடி
அன்று வந்த ஆடும் மாடும்
இன்று
விலை பேசி
வேறிடம் போனது பாதுகாப்பாய்.
அந்த நீரில் குத்தாட்டம் போட்ட
விளையாட்டுப் பிள்ளைகள்
புது திடல் பெற்றதால்
நீர் தடம் மறந்து போனார்கள்.
ஆனால்
அன்று அதில்
மீன் கொத்தி வாழ்ந்த
கொக்கும் நாரையும் மட்டும்
அந்த நீரை தேடித் தேடி சுற்றி வருகிறது
அன்றைய நினைவில்!
படத்துக்கு நன்றி: http://www.birding.in/birds/Gruiformes/Gruidae/siberian_crane.htm

அற்ற குளத்தை விட்டு நீங்குவதாகக் கூறும் பறவைகளே பழைய நினைவுகளை மறக்க முடியாமல் அங்கு சுற்றி வருவதாகக் கூறுவதன் மூலம், மனிதர்கள் வாழ்க்கை முறையை எவ்வளவு மாற்றிக்கொண்டு விட்டார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் தனுசு. ஒப்பிடும்போது தெளிவாகத் தெரிகிறது மனிதர்களின் மிகச் சுலபமாக மாறும் இயல்பு. நல்லதொரு கவிதையைத் தந்தற்கு நன்றி.
அன்புடன்
….. தேமொழி
பாராட்டுக்கு நன்றி தேமொழி.
அன்று ஓடிய நதியகள் இன்று நம்மால் நடை மறந்து நின்றிருப்பது நேசமர உன்மைதானே!
‘சுளீரெ’ன ஒவ்வொரு வரியும் சத்தமில்லாமல் ஆனால் அதிரடியாய் விழுந்திருக்கிறது. ‘பணம் மும்மாரி பொழிவதால்’ என்ற வரிக்குப் பின்னால் எத்தனை எத்தனை நிதர்சன உண்மைகள். கொட்டுகிற பணம், விளைவுகளை மறக்கச் செய்து விடுவது உண்மையே. கடைசி நான்கு வரிகள் முத்திரை பதித்திருக்கின்றன. மிக அருமை கவிஞரே!!!!