தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 7

இன்னம்பூரான்

வேலி காத்தான்

Innamburan‘அகப்பை பிடித்தவள் தன்னவளானால், அடிப்பந்தியில் இருந்தாலென்ன, கடைப்பந்தியில் இருந்தாலென்ன?’ என்றார், பாவாணர். ஆகவே, மஹாஜனங்களே, வேலிக்குக் காத்தான் வேணும்.

ஒரு மாந்தோட்டம். சுற்றிலும் வேலி. அத்துடன் நிற்காமல், காவல் காப்போர். அதுவும் போதாது என்று, அவர்களுடன் வேட்டை நாய். இதையெல்லாம் மயில் ராவணன் போல் தாண்டி, சைக்கிளில் அமர்ந்தபடியே மாங்காய் அடிக்கும் மாங்கனிச் சித்தர்களும் உண்டு; புறங்கை நக்கும் காவலாளிகளும் உண்டு. அவரவர் சொத்தைக் காபந்து பண்ணிக்கொள்வதும், அது சூறை ஆடப்படுவதும், நாம் அன்றாடம் காணும் காட்சிகள். அக்காலத்து அரசர்களின் கோட்டைகளுக்கும் குறைந்தது மூன்று அரண்கள்: மதில், காடு, அகழி. அவற்றைக் கடந்து வந்து பகைவன் ஊரைக் கைப்பற்றுவதும் வரலாறு, தமிழிலக்கியம்.

மக்களாட்சிக்கு உத்தரவாதமான பாதுகாப்பு தரக்கூடிய அரண்கள் யாவை, அவற்றை இந்தியாவில் திறனுடன் எழுப்பி, பராமரிப்பது எப்படி என்று, உங்களின் மேலான கருத்துகளை நாடுகிறேன். அதற்கு ஹேதுவாக, சில நிகழ்வுகளை பதிவு செய்கிறேன். ஒவ்வொன்றிலிருந்து படிப்பினைகள்.

=> இந்தியா: டைம்ஸ் ஆஃப் இந்தியா (மே 8,2011)வில், ஆடிட் பேச்சைக் கேட்டிருந்தால், காமென்வெல்த் கேம்ஸ் ஊழலைத் தவிர்த்திருக்கலாம் என்று பொருள்பட ஒரு கட்டுரை. உண்மை; அழுகுணி ஆட்டங்களை இரு வருடங்கள் முன்னாலேயே ஆடிட் மோப்பம் பிடித்துவிட்டது. ஆனால், அந்த ஆவணங்களை நாடாளுமன்றத்துக்கு ஏன் சமர்ப்பிக்கவில்லை என்ற வினாவை, அந்த இதழ் எழுப்புகிறது, விஷயம் புரியாமல்.

security வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்கலாமோ? நட்டாறு கடக்கும்போது, அதன் அடி மட்டத்தை தொடக் கூடாது; தணிக்கை ஒரு தொடர் பணி. விடைகளையும் இரு தரப்பையும், எல்லாக் கோணங்களையும் அலசி, ஒரு உயர் நிலையில் ஃபைசல் செய்ய வேண்டியதை, அரை குறையாக அறிவிப்பது தவறு. குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பதால், திரு.சுரேஷ் கல்மாடியின் காமென்வெல்த் கேம்ஸ் ஆளுமை, ஆடிட்டைப் புறக்கணித்தது. மத்திய அரசு இரு கண்களையும் இறுக்க மூடிக்கொண்டது. பாவாணர் சொன்ன மாதிரி, அகப்பை பிடித்தாளே, தன்னவள்!

படிப்பினை: எந்த நிர்வாகத்துக்கும் வேலி காத்தான் / காத்தாள் இருக்க வேண்டும்.

=> கனடா: கனடாவின் தணிக்கைத் துறையின் மரபுகள், கொள்கைகள், சாதனைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அதன் அக்காலத்துத் தலைவர் திரு.கென்னெத் டை அவர்களிடம் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன்; தங்கள் நூலகத்தில் என் கட்டுரை ஒன்றைச் சேகரம் செய்து எனக்கு ஊக்கமளித்தார். அத்துறையின் தற்காலத் தலைவர் திருமதி ஷீலா ஃப்ரேஸரும் (கீழுள்ள படத்தில் உள்ளவர்) புகழ் வாய்ந்தவர்.

Auditor-General-Sheila-Fraser

லோக்பால் என்று இந்தியாவில் தற்காலம் பெரிதும் (லொட லொடவென்று!) பேசப்படும் பதவியைப் போல அங்கும் ‘கண்ணியத்தின் காவலர்’ என்று ஒரு பதவி உண்டு. அப்பதவியில், திருமதி க்ரிஸ்டைன் க்யூமெ என்பவர் ஏப்ரல் 2007இல் ஏழு வருடப் பணியில் அமர்த்தப்பட்டாலும், அக்டோபர் 2010இலியே, கனமான ஓய்வு தொகை ($ 530,000) பெற்றுக்கொண்டு ஜூட், திடுத்தெப்பென்று! சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அதற்கு அவர் கொடுத்த விலை: ‘தான் செய்தது / செய்யத் தவறியது பற்றிப் பொது மன்றங்களில் பேசக் கூடாது’ என்ற நிபந்தனை.

இதன் பின்னணி யாதெனில், திருமதி. ஷீலா ஃப்ரேஸரின் தணிக்கை, ‘திருமதி க்ரிஸ்டைன் க்யூமெ தன் பணியைச் சரிவர செய்யவே இல்லை; $ 11 மிலியன் பட்ஜெட்டை வைத்துக்கொண்டு, 228 புகார்களில் ஏழு புகார்களை மட்டும்தான் விசாரித்தார்; மீதமுள்ள 221 புகார்களில், 70 புகார்களைத் தள்ளுபடி செய்ததில் முறைகேடுகள், மூன்று வருடங்களாகியும், கொள்கைகளை நிர்ணயிக்கத் தவறியது, அரைகுறை நிர்வாகம்’ என்றெல்லாம் குறை காணத் தொடங்கியது. ஆடிட் ரிப்போர்ட் வருவதற்கு இரண்டு மாதம் முன்னாலேயே பதவியை விட்டு விலக வேண்டிய கட்டாயம். இத்தனைக்கும் இவர் மீது பாரபட்சம் காட்டுகிறார், காசு பணம் தகராறு என்பதைப் போன்ற குற்றச்சாட்டுக்கள் கிடையாது. தன்னார்வக் குழுக்கள், ‘விக்கிலீக்ஸ்’ போன்ற கசிவு ஊழியர்கள், மற்றொரு தனியார் ஆடிட் எல்லாமே, தணிக்கைத் துறை சொன்னதை ஆமோதித்தன.
தனியார் ஆடிட்டின் அறிவிக்கை மே 5, 2011 தான் வெளி வந்தது.

Canada's former integrity commissioner Christiane Ouimet

தணிக்கைத் துறையின் ஆடிட் ரிப்போர்ட் வந்த சில தினங்களுக்குள்ளேயே, பொது கணக்குக் குழுவும் தன் விசாரணையைத் தொடங்கியது. அக்குழுவின் சம்மனைப் பெற்றுக்கொள்ளாமல், கொஞ்சம் போக்குக் காட்டினார், திருமதி க்ரிஸ்டைன் க்யூமெ, ஒரு வக்கீலை அமர்த்திக்கொண்டு (இந்திய வழக்குடன் ஒப்பியல் நோக்குவது நீங்கள்!).

பின்னர் அங்கு வந்து குற்றச்சாட்டுகளை மறுத்தார், ஆதாரமில்லாமல். ஒரு வழியாக, மார்ச் 2011இல், திருமதி க்ரிஸ்டைன் க்யூமெயையும், திருமதி. ஷீலா ஃப்ரேஸரையும் ஒரே சமயத்தில் விசாரிக்க, இந்தப் பொது கணக்குக் குழு முயல, குருவி உட்கார்ந்த உடனே பனம்பழம் வீழ்ந்தாற்போல, அரசு கவிழ்ந்தது!

இந்த நிகழ்வுத் தொடரில், இந்தியாவுக்குப் படிப்பினைகள் பல உள்ளன.

‘கண்ணியத்தின் காவலர்’ என்று பதவி ஒரு வேலி. அந்த வேலி அறுந்து கிடப்பதைக் கண்டு, பயிர் மேயப்படாவிட்டாலும், தணிக்கைத் துறை படம் பிடித்துக் காட்டியது. மக்கள் சமுதாயமும் அதே வழி சென்றது. கசிந்த செய்திகளுக்கும் முக்கியத்துவம். சுருங்கச் சொல்லின், திறன் இல்லாமையே பெரும்குற்றமாகி விட்டது. இதை எல்லாம் நம் நாட்டில் 2ஜி விவகாரம் அல்லல்படுவதோடு ஒப்பியல் செய்யவும். அதற்கு ஏதுவாக இத்தொடரின் 5ஆவது கட்டுரையை மீளப் பார்க்கலாம்; உங்கள் இஷ்டம். கனடாவில் மக்களாட்சி ரொம்ப ரொம்ப சூடிகை. இந்தியாவில், குறை காண முடியாத ஆடிட் ரிப்போர்ட்டைப் பந்தாடுகிறார்கள், அரசியல் சலுகை அனுபவிப்பவர்கள்.

=> இங்கிலாந்து: அங்கு, ஆடிட்டர் ஜெனெரல் பதவிக்கு மவுசு ஜாஸ்தி. அவரை தேர்ந்தெடுக்கும் குழு மிகவும் உயர்நிலை குழு. (இந்தியாவில் ஆடிட்டர் ஜெனெரலை நியமிப்பது, நடைமுறையில் பிரதமர் மட்டும். சம்பிரதாயமாக செய்வது ஜனாதிபதி). மேலும், இங்கிலாந்தில் ஆடிட்டர் ஜெனெரல் வேலை ஆயுசு பர்யந்தம். ஓஹோ! அசைக்க முடியாது என்றா நினைக்கிறீர்கள்? எனக்கு ஓரளவு பரிச்சயம் ஆன திரு.ஜான் போர்ன் 1988இலிருந்து 2007 வரை ஆடிட்டர் ஜெனெரல். அவரிடம் அக்டோபர் 1990இல், இரு மாதங்களில், நீவிர் ஸர் ஜான் போர்ன் என்றேன். நடந்ததே!

Sir John Bourn

பேரும் புகழும் நற்பெயருமாகத் திகழ்ந்த ஸர் ஜான் போர்ன் என்ற யானையின் அடி சறுக்கியது, 2004இலிருந்து. போட்டுக் கொடுத்தது யாரு? அவருடைய ஆளுமைக்கு உட்பட்ட தேசிய தணிக்கைத் துறையே. அது ‘Open Government’ என்ற கோட்பாட்டுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு, அன்னாரின் மூன்று வருட பயணச் செலவு(£365,000), சோத்துக் கடை (£27,000) கேளிக்கைகள், ஆட்டம் பாட்டம், கொழுத்த காண்ட்ரேக்ட் கம்பேனிகளுடன் கூடா நட்பு என்றெல்லாம் பட்டியலிட, ஊடகங்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் பொங்கியெழ, அவரே ராஜிநாமா செய்தார்.

படிப்பினை: இந்த வேலிக்குக் காத்தான், மக்களின் விழிப்புணர்ச்சி, இங்கிலாந்தின் மரபு காக்கும் பண்பு. தாமதம் ஆனாலும், தன்னவளானாளே அகப்பையை போட்டு விட்டு, துடைப்பத்தைத் தூக்கியது.

மக்களாட்சியைத் திடப்படுத்த, வாய்மை நாடுவது மட்டுமே தணிக்கையின் இலக்கு, கண்டறிந்த உண்மையை உரைப்பது, பொது கணக்குக் குழுவின் கடமை. மேல் நடவடிக்கைகளுக்குத் தார்மீகப் பரிந்துரைகள் அளிப்பது நாடாளுமன்றத்தின் பணி, அவற்றை நிறைவேற்றுவது தான் அமைச்சரவையின் / பிரதமரின் தொண்டு என்றும், இந்த தொடர் கடமைகளிலிருந்து யார் தவறினாலும், பிரிதிநிதித்துவ மக்களாட்சியின் செங்கோல் வளைந்து, ஒடிந்து விடும் என்ற அச்சம் எழுகிறது என்பதை, இத்தொடரை படித்த வாசகர்கள் அறிவார்கள்.

எனவே, தணிக்கைத் துறை, பொது கணக்குக் குழு, நாடாளுமன்றம், அமைச்சரவை, பிரதமர் ஆகிய அமைப்புகளுக்கு, மதில், காடு, அகழி எல்லாம் இன்றியமையாத தேவை என்பதில் ஐயமில்லை. ஆக மொத்தம், வேலி காத்தான் என்ற முள்வேலி தேவை தான் என்பதை உணர்த்த ‘ஸேம் சைட் கோல்’ போடப்பட்டது, முள்ளுப் பொறுக்கியாக? யாரு முள்ளுப் பொறுக்கி?

(தொடரும்………………

====================================================

படங்களுக்கு நன்றி – http://www.readthehook.com, http://www.chilliwacktoday.ca,

http://www.vancouversun.com, http://www.guardian.co.uk

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 7

 1. அருமையான கட்டுரை. மேற்கோள்களும் பிரமாதம், ஆனால் இப்படி எல்லாம் இந்தியாவில் நடக்கக் குறைந்தது பத்து நூற்றாண்டுகளாவது ஆகும் என நினைக்கிறேன். ஆசை இருக்கு, உடனே நடக்க! ஆனால்??? எங்கே?? உள்துறை அமைச்சரே தேர்தலில் தோற்றுவிட்டுப் பின்னர் அறிவிப்பை மாற்றிச் சொல்லச் சொல்லி மக்கள் சபைக்கு வந்து மந்திரியாகி இருக்கார். இன்று வரையும் அதற்காகத் துளிக்கூட வெட்கம் அடையவே இல்லை. அவர் தேர்தல் கமிஷனைச் சாடுகிறார். குறை கூறுகிறார். மனசாட்சி என்பதையும் சேர்த்தே அடகு வைத்துவிட்டார்களோ??

 2. அன்பின் இ ஐயா,

  எத்துனை மகத்தான இடுகை இது! பன்னாட்டுத் தணிக்கைத் துறையையும் அலசி ஆய்ந்த பாங்கு, தங்களின் ஆழ்ந்த ஞானத்தைக் காட்டுகிறது. தங்கள் துறை சார்ந்த அனுபவமும் மற்றும் இலக்கிய ஞானமும் சேர்ந்து நல்லதொரு இடுகையை வழங்க உதவியுள்ளது. இன்னும் ஆட்சியில் இருக்கும் பலரையும் சென்று அடைய வேண்டிய இடுகை இது. தொடருங்கள் ஐயா…… விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயணம் தொடரட்டும்!

 3. மருந்தை விருந்தாகக் கொடுக்கும் சாமர்த்தியம், ‘இ’ ஐயாவுக்கு உண்டு. படத்தில் நான் போட்ட தொப்பியோடு போஸ் 🙂 நன்றி ஐயா, நன்றி.

 4. கருத்துகளுக்கு நன்றி. இப்போதைக்குச் சந்திராவுக்கு மட்டும் பதில். உன்னை ‘கவர்’ செய்யத்தான், நீ எனக்குக் ‘குல்லா போட்ட படத்தை’க் கொடுத்தேன். அடுத்தபடியாக, நீ எடுத்த மற்றொன்று வரும்!

 5. எல்லோரையும் கவர் பண்ற எல்லாவற்றையும் கவர் பண்ற திரு இன்னம்பூராரே !

  வேலிகாத்தான் அதி அவசியமாகத் தேவை என்பதை நம் நாட்டு மக்கள் உணர இவை போன்ற கட்டுரைகள் மிகவும் அவசியம்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *