திருவிளையாடல்
அன்பாதவன்
ஆட்டங்கள் சுவாரஸ்யமானவை;
சுகமானவையுங்கூட
ஈடுபாட்டுடன் விளையாடினால்
இரட்டிப்பு மகிழ்ச்சி.
விளையாட்டுக்குப் பின்னான
வியர்வை ருசியானது
களிப்புத் துளிர்ப்பது களைப்பு
ஆடுகளத்தைப் புறக்கணித்து
ஒதுங்கியே இருப்பவரை
இழுப்பதோ பெருமுயற்சி.
அருஞ்சுவை அறியாமலும்
ஆட்ட விதிகள் புரியாமலும்
ஆடுவதும் ஆட்டம் தானா?
நடுவரும் நாயகருமின்றி
கொடுப்பதூஉம் பெறுவதூஉமான
குதூகல ஆட்டத்தின் இலகுவான திசையில்
அதிகாரம் நுழைய
ஆட்டத்தின் போக்கே மாறும்
அபாயமுமுண்டு+
ஒப்புக்குச் சப்பாணிகளும்
அழுகுணி ஆட்டங்களும் அதிகமாக
அணி மாறுதலும் சாத்தியமே.
பிணங்கள் மரக்கட்டைகளுடன்
ஏலாது விளையாட
துரதிர்ஷ்டவசமாக உணர்ச்சியற்று ஆடுகிறது ஓரணி
ஏமாற்றமே மிஞ்சுகிறது எதிரணிக்கு
இயலாமையை, ஏமாற்றங்களை,
கண்ணீரை, கசப்பைப் பதிவு செய்யும்
விதியின் விளையாட்டோ
குரூரமானது.