தொடர்கதை

வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 9

பவளசங்கரி திருநாவுக்கரசு

Pavalasankariரந்து விரிந்த வனாந்திரம். திரும்பிய புறமெல்லாம் வறண்ட் நிலங்கள்! காய்ந்து சருகாய்ப் போன மரங்கள். அங்கங்கே கூட்டம் கூட்டமாய் முகம் தெரியாத விதவிதமான மூகமூடிகளுடன், எள்ளி நகையாடும் மனிதர்கள். இதில் அழகான முகமூடிகளைத் தாங்கிய உருவங்களை நாடிச் சென்ற மற்றொரு முகமூடி அதன் உண்மை முகத்தைக் கண்டு அலறிக்கொண்டு காத தூரம் ஓடும் காட்சி………. மத்தியில் மரக்கட்டையாய் நீண்ட ஒரு உருவம் மல்லாந்து கிடக்க, சுற்றிலும் கருமையான, பயங்கரத் தோற்றத்துடன் கொத்தித் திங்கக் காத்திருக்கும் இராட்சதக் கழுகுகள்………. அய்யோ பாவம் யாரந்த உருவம் என்று உற்று நோக்க………. அம்மாடியோவ்………. நானா அது?

வியர்வை வெள்ளம் ஆறாய்ப் பெருக, கண்கள் திறக்க மறுக்க, மிகச் சிரமப்பட்டு போராடி மீண்டு வந்தது போல் கண் விழித்தாள ரம்யா. டிஜிட்டல் கடிகாரம் இரவு 2 மணியைக் காட்டியது. ஓ……. கனவா……. சே……… என்ன மோசமான கனவு!

இரவு வெகு நேரம் தூங்காமல் எதை, எதையோ நினைத்து மனக் குழப்பத்தோடேயே கண் அசந்ததன் விளைவுதான் இப்படி ஒரு மோசமான கனவு என்பது புரிந்தாலும், அதைத் தவிர்க்கும் உபாயம்தான் அவளுக்குப் பிடிபடவில்லை. ரிஷியின் மனைவி சொன்ன விசயம் தன் மனத்தை மிகவும் பாதித்திருந்ததையும் அவளால் உணர முடிந்தது. ரிஷி மீது இருந்த அத்துணைக் கோபமும் நொடியில் மறைந்து போனது அவளுக்கே ஆச்சரியமாகவும் இருந்தது. ஆம் ரிஷி செய்தது சாதாரண தியாகமா? எந்தக் குறையும் இல்லாத பெண்களைத் திருமணம் செய்யவே ஆயிரம் யோசனை செய்யும் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெண் என்பதற்கு ஆதாரச் சுருதியான, கருவைச் சுமக்கும் அந்த கர்ப்பப் பையே இல்லாத ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்த அவன் தியாகச் சிந்தையை எப்படிப் பாராட்டுவது.

தன் தாய், அந்த கொடிய வியாதியால் அவதிப்பட்டு, உருக்குலைந்து உயிர்விட்ட ரணம் அந்த இளகிய உள்ளத்தை ஆழமாகப் பாதித்ததன் விளைவு, அதே வியாதியால், திருமண வயதில் பாதிக்கப்பட்டு, நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்ததனால், அந்த ஒரு பகுதியின் இழப்போடு உயிர் பிழைக்க முடிந்த, தன்னுடைய தூரத்து உறவினரின் பெண்ணை மனமுவந்து மணந்துகொண்ட அவனைத் தன் நண்பன் என்று சொல்வதில் அவளுக்குப் பெருமையாக இருந்தது.

சுட்டித் தனமும், குறும்பும் நிறைந்திருந்த இந்த ரிஷிக்குள் இத்துனை நல்ல மனம் இருக்கும் என்று நினைக்க முடியவில்லை. ஆனாலும் தனக்கு அந்தப் பேரிழப்பைத் தாங்குவது சிரமமான காரியம் என்றாலும், காலம் எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த மருந்து என்பதும் அவளால் உணர முடிந்தது.

மாறனின் தந்தையின் உடல் நலம் குறித்த பெரும் கவலையும் சேர்ந்துகொண்டது. மூன்றாவது நாளாக இன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது வேதனையான விசயம் தான். மாறன், மருத்துவரிடம் தந்தையின் உடல் நலம் குறித்து விசாரித்துக்கொண்டே இருந்தாலும், அவன் உடனே கிளம்பிச் செல்ல முடியாத அளவிற்குச் சில பிரச்சனைகள். விரைவில் கிளம்பும் ஏற்பாடுகளும் செய்துகொண்டுதான் இருக்கிறான். தந்தை அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக அறிந்தவுடன் தான் அவனிடமிருந்து சற்றே நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

சில நேரங்களில் விதியின் போக்கை எவராலும் உணர முடிவதில்லை. எப்படியும் அவந்திகா பற்றி அம்மாவிடமும் அப்பாவிடமும் சொல்லிவிட வேண்டும் என்று அவன் எடுத்த முயற்சியை எவ்வளவு எளிதாக முறியடித்ததோடு, அதே அத்தையிடமும் அத்தை பெண்ணிடமும் தானே வலியச் சென்று அப்பாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க வேண்டி அடிக்கடி பேசவும் வைத்துவிட்டதே……

ம்யாவின் நிலையோ அதனினும் பரிதாபமானது. இவ்வளவு நாள் ரிஷி தனக்குப் பெரிய துரோகம் இழைத்து விட்டதாகக் கற்பனை பண்ணிக் கொண்டதன் விளைவு, அவன் மீது ஏற்பட்ட கோபம், காதலை மறக்கச் செய்தது. ஆனால் இன்று அவனுடைய தியாக மனநிலையை உணர்ந்து கொண்ட பின், காரிருள் விலகிய கதிரவன் போல் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது மனது. ரிஷியின் மீது எப்படியும் தப்பு கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று மனம் திட்டம் போட்டு வேலை செய்ததையும் அவளால் மறுக்க இயலவில்லை.

தனக்கு நிறைவேறாமல் போன காதலை எப்படியும், தன் நண்பனை அவன் அன்பிற்குப் பாத்திரமான அவந்திகாவுடன் சேர்த்து வைத்துவிடுவது என்று முடிவு செய்த பிறகுதான் சற்றே ஆறுதல் அடைந்தது. நினைப்பதெல்லாம் நடத்திவிடத்தான் அனைவருக்கும் ஆசை, விதி என்ற ஒன்று இருப்பதை மறக்கும் வரை.

மாறன் அலுவலகத்திலும் இருப்பு கொள்ளாமல், தந்தையின் உடல் நலம் குறித்த கவலையில் பணியிலும் கவனம் செலுத்த இயலாமல் பரிதவித்ததை உணர்ந்த உயர் அதிகாரி, அவனுக்கு விடுமுறையும் கொடுத்து, பயணச் சீட்டிற்கான ஏற்பாடும் பண்ணிக் கொடுத்தார். ரம்யாவிற்கு முன்பாகவே தான் இந்தியா கிளம்பி வருவோம், அதுவும் இப்படி ஒரு சூழலில் வருவோம் என்ற நினைத்துப் பார்க்கவில்லை என்றாலும், காலத்தின் கட்டாயம்.

விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன், தன்னையறியாமல் மனது அப்பாவைத் தேட ஆரம்பித்தது. ஒவ்வொரு முறை தான் செல்லும் போதும் வரும் போதும் தந்தையை வர வேண்டாம் என்று கூறினாலுல் அவர் அதைச் சட்டை செய்யாமல், காலந்தவறாமல் சரியாக வந்து சேர்ந்துவிடுவார். கண்கள் தன்னையறியாமல் தந்தையைத் தேட, மூத்த அண்ணன் கண்ணில் பட்டான். ….

‘‘அண்ணா, நீ எப்ப மும்பையிலருந்து வந்தாய்?”

‘‘நானும், நேற்றுதான் வந்தேன், மாறன்’’

‘‘அண்ணியும் கூட வந்திருக்காங்கல்ல. எப்படி இருக்காங்க?”

‘‘இல்லப்பா. அண்ணியை டாக்டர் டிராவல் பண்ண வேண்டாம்னு சொல்லியிருக்காங்க….. குழந்தை உண்டாகியிருக்கு. கொஞ்சம் வீக்கா இருக்கறதுனால ரெஸ்ட்ல இருக்கச் சொல்லியிருக்கா, டாக்டர்.”

இருவரும் ஏதும் பேசத்தோன்றாமல், ஆழ்ந்த யோசனையினூடே, மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள்.

அண்ணன் வீட்டிற்குச் சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு வந்து அப்பாவைப் பார்க்கலாம் என்று சொல்லியும் கேட்காமல், மாறன் அடம்பிடித்து நேரே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். கட்டிலில் கிழிந்த நாராய்க் கிடந்த தந்தையைப் பார்க்கவே வேதனையாக இருந்தது. இந்த ஒரு வாரத்தில் எத்துணை மாற்றம். அசந்து உறங்கிக் கொண்டிருந்ததால், சத்தம் செய்ய மனம் வராமல், அம்மாவை வெளியே வரும்படி கையை ஆட்டிவிட்டு, வெளியில் வந்தான்.

மாறனைப் பார்த்தவுடன், தாய்மை உணர்ச்சி மேலிட, மகனின் கையைப் பிடித்துக்கொண்டு, ‘எனக்குப் பயமா இருக்குப்பா’…….. என்று நாத்தழுக்க சொல்ல, மாறனின் கண்களிலும் கண்ணீர் தளும்புவதைப் பார்த்த அண்ணன்,

‘‘என்ன மாறன் இது. அம்மாதான் உணர்ச்சிவசப்படுகிறார் என்றால், நீயும் இப்படி இருப்பது சரியல்ல. அம்மாவிற்கு ஆறுதல் சொல்வதை விட்டு, நீயும் இப்படி இருந்தால் எப்படி..?’’

‘‘சரி அண்ணா, டாக்டர் என்ன சொன்னார்? ஒன்னும் பயம் இல்லையே’’

“அப்பாவிற்கு இரண்டு அடைப்பு இருக்கிறதாம். அதனால் அப்பா இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டி வரும். ஆஞ்சியோகிராம் செய்து பார்த்துவிட்டு மேற்கொண்டு சிகிச்சை பற்றிச் சொல்வார்களாம்’’

‘‘சரி . மருத்துவமனையைப் பார்த்தவுடன் அப்பாவிற்கு நல்லபடியாக விரைவில் குணம் அடைந்து விடும் என்ற நம்பிக்கை வருகிறது. அம்மா, நீங்க ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க. பயப்படாதீங்க அம்மா. அப்பா விரைவில் குணமடைந்து விடுவார்’’ என்றான், தாயின் கைகளைப் பிடித்துக்கொண்டு.

அம்மாவின் செல்பேசி அழைக்கவும், மாறன் அதை எடுத்து “ஹலோ” என்று அழைக்க, மறு முனையில், அத்தை.

“ஹலோ, மாறனாப்பா….. எப்படி இருக்கிறாய்? அப்பா நல்லா இருக்கார். கவலைப்படாதீங்கப்பா. விரைவில் வீட்டிற்கு நல்லபடியாக கூட்டிச் செல்லலாம்” என்று சொல்லிவிட்டு, மங்களத்திடம் போனைக் கொடுக்கச் சொல்லி,

“மங்களம், அனுவிடம் சாப்பாடு கொடுத்தனுப்புகிறேன். இன்னைக்கு அவளுக்கு ஆபீஸ் லீவ்தான்.’’

‘‘சரி, அக்கா, நீங்களும் முடிந்தால் ஒரு எட்டு வந்துட்டுப் போனேள்னா பரவாயில்லை’’

“அதுக்கென்ன… நான் சாயங்காலமா, வரேன்’’

அத்தை போனை வைத்தவுடன், மாறன் அம்மாவின் முகத்தைப் பார்க்க, அம்மாவும்,

‘‘இந்த ஒரு வாரமா, அனுதான் தினந்தோறும் வந்து அப்பாவிற்குத் தேவையான காரியங்களெல்லாம் செய்துண்டிருக்கா…….. இதோ இன்னும் சித்த நாழில வந்துடுவோ……’’

அனு வரப்போகிறாளா….. மாறனுக்கு அதுக்கும் மேல் அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காவிட்டாலும், தந்தை முழித்தவுடன் அவரைப் பார்த்து பேச வேண்டுமென்ற ஆவலில் மௌனமாகக் காத்திருந்தான்…..

(தொடரும்…………

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

 1. Avatar

  ‘introspection’ என்ற ஆங்கில சொல் ‘மனம் அலை பாய்வதை’ மட்டுமில்லாமல், அகக்கண் புறக்கண்களை இயக்குவதையும், அத்தருணம், மூளையும் உடன்படுவதையும்/விலகி நிற்பதையும், மூளை புறக்கண்களை இயக்குவதையும், அத்தருணம், அகக்கண் உடன்படுவதையும்/விலகி நிற்பதையும், உணர்த்தும்.

  “O Rose, thou art sick!
  The invisible worm
  That flies in the night,
  In the howling storm,
  Has found out thy bed
  Of crimson joy:
  And his dark secret love
  Does thy life destroy.”

  -The Sick Rose by William Blake

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க