வரலாற்று நாயகர்களும் வண்ணப்பட நாயகர்களும்
அருண் காந்தி
இது நம்மைப் பற்றியும் நம் மக்களைப் பற்றியுமான சிறு சிந்தனை ஓட்டத்தில் உருவான கட்டுரை. இன்று நாம் சமுதாயத்தில் எந்த நிலையில் இருக்கிறோம் அல்லது தள்ளப்பட்டிருக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கையில் என்னுள் எழுந்தவை. அவை ஏற்புடையவையா, இல்லையா என்று தெரியாது இருந்தபோதிலும் பகிர்கிறேன்.
இவ்வுலக வரலாற்றில் எத்தனையோ நாயகர்கள் தோன்றினர், மறைந்தனர். துறைகள் எல்லாவற்றிலும் நாம் அறிந்த நாயகர்கள் பலர் உண்டு. அவர்களுள் பொது வாழ்க்கையில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த சிலரை எடுத்துக் காட்டினால், அஹிம்சையின் பலத்தை உலகுக்கு எடுத்துக் காட்டிய அண்ணல் காந்தியடிகள், அவரைப் பின்பற்றிய ஆப்பிரிக்க அமெரிக்க மக்களுக்காகத் தம்மை அர்ப்பணித்த மார்டின் லூதர் கிங், தம் இன மக்களுக்கான விடுதலைக்காக இருபத்து எழு வருடங்கள் சிறையில் இருந்து வித்திட்ட நெல்சன் மண்டேலா, சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து காரல் மார்க்சின் மூலதனம் பற்ற வைத்த தீயால் ஜார் மன்னனின் அடக்குமுறைக்கு முடிவு கட்டி ரஷ்யாவை உழைப்பாளிகளின் நாடாக மாற்றிய, ரஷ்யா மட்டுமின்றி உலகின் எல்லா ஏகாதிபத்திய நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஒப்பற்ற புரட்சித் தலைவர் லெனின், அவரைத் தொடர்ந்த ஸ்டாலின்…..
அடிமைகளை விடுவித்து நாட்டின் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி அதற்காகவே உயிர் நீத்த ஆபிரகாம் லிங்கன், நம்மில் ஒருவராகப் பிறந்து, வெறும் 5% மட்டுமே கல்வி அறிவு கொண்ட ஒரு மாநிலத்தில் 3 மயில் சுற்றளவுக்குள் ஓர் பள்ளி என அமைத்து, தமிழ்நாட்டில் முதல் முறையாக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, கல்வி கற்றோர் விகிதத்தை 37% ஆக உயர்த்திக் காட்டி, நம் மூத்த குடி கரிகாலனுக்குப் பின் எண்ணற்ற அணைகள் கட்டி, தமிழகத்தின் நீர் பாசனத்தைச் சீர்படுத்தி, தொழிற்சாலைகள் அமைத்து நம் கண் கண்ட தெய்வமாக வாழ்ந்த கர்ம வீரர் காமராஜர் என நம்மை வாய் பிளக்க வைக்கும் நாயகர்கள் நம் வரலாற்றில் சிலர் உண்டு.
இன்னும் சற்று பின்னோக்கிச் சென்றால் 33 வயதில் உலகையே தன்னிடம் சரணடையச் செய்த அலெக்சாண்டர், பிரான்சு மண்ணில் வீரத்தை விதைத்த மாவீரன் நெப்போலியன், இங்கே தென் கிழக்காசிய நாடுகளையே தன் வசப்படுத்திய ராஜராஜ சோழன் போன்ற வரலாற்றுப் புருஷர்களும் உண்டு.
மேற்கண்ட நாயகர்கள் எல்லோரும் வெவ்வேறு காலச் சூழலில் வெவ்வேறு பிராந்தியத்தில் தம்மை நிலை நாட்டியவர்கள். இவர்களுள் செல்வந்தர்களாகப் பிறந்தவர்களும் சரி, சாமான்யர்களாகப் பிறந்தவர்களும் சரி, விதையிலிருந்து வரும் விருட்சம் எப்படி கதிரவனை நோக்கி வளருமோ அதுபோல் தம் மக்களின் துயர் துடைத்து, அவர்களின் நலம் காக்கப் பொது வாழ்வை நோக்கி ஈர்க்கப்பட்டவர்கள். தம் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் அவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தையும் இழந்த இழப்புகளும் அளப்பரியவை.
இத்தலைவர்களின் கொள்கைப் பிடிப்பையும் மக்கள் பணியின் மகத்துவத்தையும் நம் மனத்தில் ஆழப் பதித்தவர்களாவர். இவர்களைப் படித்தும் பார்த்தும் சிலாகித்துப் போன நாம், மக்கள் பணி செய்வதையே பிறவிக் கடனாக கொண்ட தலைவன் நம்மில் நமக்காக யார் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஏழைகளை ஏற்றி விட, இளைத்தவர்கள் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஒரு தலைவன் வர வேண்டும் என விரும்புகிறோம், ஏங்குகிறோம், தேடுகிறோம்.
நம் வரலாற்றை உற்று நோக்கினால் கடந்த 2500 வருடங்களில் எல்லா நூற்றாண்டிலும் நம்முடைய வரலாற்றுச் சுவடுகள் நமக்குத் தரும் இலக்கியங்கள் எல்லாம் பெரும்பாலும் கலை சம்பந்தப்பட்டவையே. உலகின் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவுக்கான கலை இலக்கியங்கள் நம் தமிழில் உண்டு. ஆக கலையும் கலை சார்ந்தவையும் நம் ரத்தத்தில் ஊறிப் போன ஒன்றாகும். அக்கால மன்னர்கள் இயல் இசை நாடகத்திற்கு அளித்த முக்கியத்துவத்தை நாம் இலக்கியங்களின் மூலம் அறிய நேரிடுகிறது. இந்தக் காலக்கட்டத்திலும் கலை மற்றும் கலைத் துறை சார்ந்தவர்களின் மீது நமக்கு உள்ள ஈர்ப்பும் ஈடுபாடுமே இதற்கு சாட்சி.
இன்று கலையின் நவீன வடிவமாக எழுந்து நம்மை ஆட்கொண்டிருப்பது சினிமா மற்றும் அது சம்பந்தப்பட்ட உலகம். மக்களுக்கான தலைவனை தேடிக்கொண்டிருக்கும் பலவீனர்களாகிய நாம் நினைத்ததை, செய்ய முயன்று தோற்றுப் போனதை, செய்யத் தயங்கியவற்றை, கனவில் மட்டுமே நாம் அரங்கேற்றியதை நம் கண் முன் திரையில் செய்கிறான் நாயகன். நம் கண்கள் விரிகிறது, ரத்தம் சூடேறுகிறது, நரம்பு புடைக்கிறது, மனம் மேலெழுந்த நிலையில், உரக்க கூச்சலிடுகிறோம். அன்று பிடித்துப் பார்க்கப்பட்ட நம் நாடித் துடிப்பு பின் அடிக்கடி பார்க்கப்படுகிறது. ஒரு புள்ளியில் புறப்பட்டு, பின் குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த நாயகனை அரிதாரம் பூசாத நிலையிலும் நாம் அலக்சாண்டராக, அபிமன்யுவாகப் பார்க்கிறோம்.
அந்த வரலாற்று நாயகர்களைப் போல எந்தச் சமூக அவலத்தின் பாதிப்பும் இன்றி, வலி இன்றி, வெறி இன்றி, கொள்கை இன்றி, லட்சியம் இன்றி வெறும் முக அடையாளத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு அங்கே ஒரு நாயகன் தலைவனாகிறான். அரசியல் என்ற ஓர் அர்த்தமற்ற வார்த்தையின் கீழ் அடங்கிய மீப்பெரு கலத்தினுள் பணம் என்ற பேராயுதத்தின் துணை கொண்டு அடியெடுத்து வைக்கிறான் நம் தலைவன். பணம் அதிகாரத்தைக் கொண்டுவருகிறது. அதிகாரம் பெரும் பணத்தைக் கொண்டுவருகிறது. பெரும் பணம் சர்வ அதிகாரத்தையும் கொண்டு வருகிறது. இவை இரண்டும் ஒன்றை ஒன்று வலுவூட்டிக் கொண்டே செல்கிறது. அதிக்கார வர்க்கமும் பணம் படைத்த செல்வந்தர்களும் பிரித்தறிய முடியாதவர்களாக மாறிப் போயினர்.
கலை மட்டுமே எப்படி நம் இலக்கியத்தையும் மனத்தையும் ஆக்கிரமித்ததோ அதுபோல் அரசியலையும் ஆக்கிரமித்தது. ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது எல்லாத் துறைகளிலும் ஆன ஒட்டு மொத்த வளர்ச்சி ஆகும். குழந்தை உண்ணும் உணவில் சகல ஊட்டங்களும் சரியான விகிதத்தில் இருத்தல் வேண்டும். அப்போதுதான் குழந்தையின் ஆரோக்கியம் காக்கப்படும். இல்லையேல் அந்தக் குழந்தை சவலைப் பிள்ளையாகத் தான் வளரும்.
இன்று தமிழகமும் சவலைப் பிள்ளையாகத்தான் உள்ளது. இன்றைய தமிழ் சூழலில் அரசியலை விலக்கிய சினிமாவையும் சினிமாவை விலக்கிய அரசியலையும் நினைத்துப் பார்க்க முடியுமா? இவை இரண்டையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் தமிழகம் வெற்றிடமாகத்தான் காட்சி அளிக்கும். இன்ன பிற துறைகள் உண்டா? அவற்றைச் சீர்ப்படுத்த அரசின் கவனம் என்ன? அரசியல் என்பது உத்தமமான அரசை நடத்திச் செல்ல மட்டுமே. அரசு என்பது முற்றிலும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஒன்று. இவற்றின் துறைகளுள் கல்வி, வேளாண்மை, பாதுகாப்பு, சுகாதாரம், நிதி, சுற்றுச் சூழல், உணவு, பண்பாடு, சட்டம், போக்குவரத்து மேம்பாடு, சுற்றுலா, இயற்கை மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவை முக்கிய கூறுகள். இவற்றின் வளர்ச்சியை எடையிட்டுப் பார்த்தால் அதன் சமநிலையின்மை விளங்கும். இந்நிலைக்கு யார் காரணம்? உண்மையான நோக்கமில்லா மனிதர்கள் அங்கே அமர்த்தப்பட்டதே அல்லவா?
சினிமாவையும் அத்துறை சார்ந்தவர்களையும் புறந்தள்ள வேண்டும் என்று நான் இதைக் கூறவில்லை. அரசியல் எல்லா மக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். திரையில் பேசும் வசனங்கள் வயலில் ஒருபோதும் உரமாவதில்லை. ஆலய வழிபாட்டுடன் நிறுத்திக்கொண்டு, நாயக வழிபாட்டை வேரறுப்போம்.
விழிப்போம், எழுவோம், உழைப்போம்…..
=================================================
படத்திற்கு நன்றி: http://www.squidoo.com/intuitiveleadership
உமது சிந்தனை ஓட்டம் ஏற்புடையதே, திரு அருண் காந்தி. நாயகர்களும் மனித இயல்பான பலவீனங்களுக்கு உட்பட்டு, சிதைந்து போவதும், சிதைப்பதும் உண்டு. எனவே வரலாறுகள் மெய்கீர்த்திகளாக அமைந்து விடும் அபாயத்தை நாம் கடக்கவேண்டும். பாமர மக்களின் வரலாறுகள் வேண்டும்.
நம்முடைய வரலாற்றுச் சுவடுகள் நமக்குத் தரும் இலக்கியங்கள் எல்லாம் பெரும்பாலும் கலை சம்பந்தப்பட்டவையே அன்று. அகமும்,புறமும், இயற்கை பாராட்டலும், நீதி நூல்களும், சங்ககாலத்திலிருந்து தமிழ் அன்னையின் அணிகலன்கள்.
சான்றாக, 13 05 2011 அன்று வல்லமையில்
‘” …அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின், மறவாது இது கேள்!
மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்…”
என்ற மணிமேகலையின் உயரிய சிந்தனையை நோக்குக.
வாழ்த்துகள்
அருமை!