‘இயக்குநர் இளவல்’ அருண் வைத்தியநாதன்

‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு இயக்குநர் இளவல் என்ற பட்டத்தை நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் வழங்கிப் பாராட்டியுள்ளது.

arun vaidyanathan

பிரசன்னா, சிநேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படம் வெளியான பிறகு அனைத்துத் தரப்பு மக்களாலும், விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட இப்படம் ஷாங்காய், கெய்ரோ, கோவா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு முதல் பரிசைப் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் படமாக்கப்பட்ட இப்படம், தொழில்நுட்பத்தில் பல புது முயற்சிகளைக் கையாண்டு இருந்தது.

இந்நிலையில் இப்படம் குறித்தும், டைரக்டர் அருண் வைத்தியநாதன் குறித்தும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமதி தேவி நாகப்பன் கூறியதாவது, அருணின் இந்தப் படைப்பு இங்குள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. தனது முதல் படத்திலேயே சிறுவர் சிறுமியரை நோக்கிய பாலியல் பலாத்காரத்தைப் பற்றி தைரியமாகவும், அதே சமயம் ஆபாசமில்லாமலும் எடுத்த அருணின் முயற்சி ‌பெரிதும் பாராட்டப்பட வேண்டியது. அவருக்கு இயக்குநர் இளவல் என்ற பட்டம் பொருத்தமானது தான். அவர் மேலும் பல நல்ல படங்களை எடுக்க வேண்டும். அவருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள் என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

இவ்விருது கிடைத்தது குறித்து அருண் பேசுகையில், “கடந்த பத்து வருடங்களாக நியூ ஜெர்சியில் வாழ்ந்து வருகிறேன். இந்த விருது கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தை எடுக்க எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர், நடிகர், நடிகையர் மற்றும் மற்ற ‌இதர டெக்னீசியன்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தத் தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் எனது அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்க இருக்கிறேன்” என்றார்.

முன்னதாக இந்த விழாவிற்கான டிக்கெட்டில் கிடைத்த பணத்தை, “கிப்ட் எ ப்யூச்சர்” என்ற, சிறார்களின் கல்விக்கு உதவும் திட்டத்திற்கு நன்கொடையாக அளித்தனர்.

=====================================

தகவல்: மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *