தமிழ்நாடு நாடுவது பாடாண் திணை
இன்னம்பூரான்
கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னால், மணிமேகலையின் மைய செய்தியையும் பாடாண் திணையின் ஈகையையும் கொடையையும் அறிவுரையையும் இணைத்து, யான் எழுதிய கட்டுரை ஒன்றின் பகுதி இது:
=> ” …அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்,
மறவாது இது கேள்! மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்…”
=> “இத்தகைய ஈகையும், கொடையும் பாடாண் திணை இலக்கியத்தில் மட்டும்தான் பொருந்தும், அன்றாட வாழ்க்கையில் இயலாது என்று மேகலையின் இலக்கியச் சுவையையும், மறுக்க இயலாத மனிதநேயத்தையும் கண்டு ஒதுக்கி விட்டோமா என்ன?”
அதை இன்று முன்னிறுத்த, என்னை வற்புறுத்துவது, மக்களின் தேர்தல் தீர்வு. தமிழ் இலக்கியத்தில், புறப்பொருள் வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறும் ஏழு புறத் திணைகளின் முடிபுரையான பாடாண்திணை, ஓர் அறிவுரைச் சுரபி. இது தலைமைப் பண்புகளின் உயர்வைப் பாடுகிறது. அறிவு, ஆற்றல், தன்னலம் இல்லாத ஈகைப் பண்பு, அருள் ஆகிய நல்ல இயல்புகள் அனைத்தும் கொண்ட அரசியல் தலைமையைப் போற்றி, அறிவுரைகள் பல அளித்து, ஒரு சன்மார்க்கக் கையேடாக அமைகிறது.
மக்கள் அளிக்கும் பொன்வாக்கின் பயனாக, தலைமை என்னும் சிறப்பு அடைவோருக்கு, அத்தருணத்தில் அருமருந்தாக அமையும் மூலிகை என்க. கடவுள் வாழ்த்து, அரசனை வாழ்த்துதல் ஆகியவையும் பெருமை சேர்க்கின்றன. இன்றைய அரசியல் நிலையில், பாடாண் திணையை வாழ்த்தி வணங்கி, வரலாறு காணாத முறையில் மக்களின் பேராதரவையும், ஆணி வேரென நம்பிக்கையையும் பெற்று, முதல்வராக மே 16, 2011 அன்று பதவி ஏற்கப் போகும் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களிடம் அதை முன்மொழிவது, நம் கடனே.
ஏனெனில், பாடாண் திணை நுட்பமாகத் தலைமையை ஆராய்ந்து பாராட்டிப் புகழ்ந்து, மேலும் உயர்த்தும், பொருந்தி இருந்தால். மக்களிடையே அந்த ஆளுமை பரவி அவர்களையும் உயர்த்தும். இவர்களைக் கொண்ட சமுதாயம் முழுதும் உயர்ந்த பண்புகளால் சிறக்கும். பண்புகளின் உயர்வைப் பாடும் பாடாண் திணையே, நன்னெறி நாடும் தமிழ் மக்களுக்கு, உகந்த தமிழ்த் தூண். நங்கூரமும் அதுவே. கலங்கரை விளக்கும் அதுவே.
கடவுள் துணை
‘…இன்னது செய்தல் இயல்பு என இறைவன்
முன்னின்று அறிவன் மொழி தொடர்ந்தன்று…’
‘…ஒன்றில் இரண்டு ஆய்ந்து முன்று அடக்கி நான்கினால்
வென்று களம் கொண்ட வேல் வேந்தெ – சென்றுலாம்
ஆழ்கடல்சூழ் வையகத்துள் ஐந்து வென்று ஆறு அகற்றி
ஏழ்கடிந்து இன்புற்று இரு.’
திணை யாதாயினும் இறையின் துணை நாடுவது நலமே.
ஒரு பார்வை:
‘பாடாண் பாட்டே, வாயில் நிலையே
கடவுள் வாழ்த்தொடு, பூவை நிலையே,
பரிசில் துறையே, இயன்மொழி வாழ்த்தே,
கண்படை நிலையே, துயிலெடை நிலையே,
மங்கல நிலையடு, விளக்கு நிலையே,
கபிலை கண்ணிய புண்ணிய நிலையே,
வேள்வி நிலையடு, வெள்ளி நிலையே,
நாடு வாழ்த்தொடு, கிணையது நிலையே,
பரிசில் விடையே, ஆள்வினை வேள்வி,
பாண் ஆற்றுப்படையே, கூத்தர் ஆற்றுப்படையே,
பொருநர் ஆற்றுப்படையே, விறலி ஆற்றுப்படையே,
வாயுறை வாழ்த்து, செவியறி உறூஉக்
குடை மங்கலமொடு, வாள் மங்கலமே,
மண்ணு மங்கலமே, ஓம்படை, ஏனைப்
புறநிலை வாழ்த்தும், உளப்படத் தொகைஇ
அமர்கண் முடியும் அறுவகை ஆகிய
கொடிநிலை, கந்தழி, வள்ளி, குணம் சால்
புலவரை அவர்வயில் புகழ்ந்து ஆற்றுப் படுத்தல்,
புகழ்ந்தனர் பரவல், பழிச்சினர் பணிதல்,
நிகழ்ந்த காமப் பகுதியுள் தோன்றிய
கைக்கிளை வகையும், பெருந்திணை வகையும்,
நல்துனி நவின்ற பாடாண் பாட்டும்,
கடவுள் பக்கத்தும், ஏனோர் பக்கத்தும்,
மாதர் மகிழ்ந்த குழவியும் ஊரின்
கண்ணே தோன்றிய காமப் பகுதியடு
ஆங்கு அவ்வாறு எண்பகுதிப் பொருளும்
பாங்குற உரைப்பது பாடாண் பாட்டே (9)”
என்று பாங்குடன் தொடங்குகிறது, கடவுளை வாழ்த்தி, பாமரப் பெண்ணாகிய விறலியை வாழ்த்தியும் புலவரைப் புகழ்ந்தும் வாழ்வியல் நோக்கியும் இந்த அறிவுரை ஊற்று.
ஒரு ஆசி:
‘கஙகுல் கனைதுயில் எழுந்தோன் முன்னர்
மங்கலம் கூறிய மலிவு உரைத்தன்று..’
என்று மங்கல வாழ்த்து.
என் நாடே! வாழ்க!
‘தாள்தாழ் தடக்கையான்
நாட்டது வளம் உரைத்தன்று…
…எண்ணின் இடர் எட்டும் இன்றி வயல் செந்நெல்
கண்ணில் மலர்க் கருநீலம் – விண்ணின்
வகைத்தாய் வளனொடும் வைகின்றே வென்வேல்
நகைத் தாரான் தான் விரும்பும் நாடு.’
தமிழனும் தமிழ்நாடும், தமிழ் மொழியும் வாழிய! வாழியவே! வாழியவே!
இனி, மக்களின் எதிர்ப்பார்ப்பை, பத்து விருப்பங்களாக, ஒரு பட்டியல்:
=> 1. ஆளப் போகும் கட்சியின் உள் நிகழும் நிழல் முரண்களைக் களைய வேன்டும்.
=> 2. லஞ்சம், கட்டப் பஞ்சாயத்து, மணல் வாரி, ஒப்பந்த ஊழல்கள் வகையறாவை, போர்க் கோலத்தில், மகிஷாசுரமர்த்தினி மாதிரி இருந்து, அறவே, ஒழிக்க வேன்டும்.
=> 3. மின் துறையை முழுதே அலச வேண்டும்; மின்வெட்டைத் தணிக்க வேண்டும்.
=> 4. வருங்கால முதல்வருக்கு நல்லதொரு, கட்சி சார்பு அற்ற, ஆலோசகர் தேவை.
=> 5. அரசு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு பச்சை சிக்னல் போக வேண்டும்.
=> 6. காவல் துறையில் கடுமையான மாற்றங்கள் தேவை.
=> 7. வருங்கால முதல்வர் தணிக்கை ரிப்போர்ட்டுகளைப் படிக்க வேண்டும்.
=> 8. ஊடகங்கள் பொறுப்புடன் நடப்பதற்கு வகை செய்ய வேண்டும்.
=> 9. கிராமங்களை உன்னத நிலைக்குக் கொணர வேன்டும்.
=> 10. இலவசங்கள் தேவையே இல்லை. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளைப் பொதுநலம் நாடி, திருத்தி அமைக்க, ஏற்புடைய இலக்கணம் வகுக்கவேண்டும்.
கல்வி மட்டுமே இலவசம்
என்ற கருத்தே நிதர்சனம்
கல்வி மனித உரிமை. எனவே அந்த மான்யம், ‘இலவசப்பட்டியலில் வராது. கருத்துக்கு நன்றி, நண்பரே. ‘பாடாண்திணை’ என்ற தலைப்பைப்பார்த்து விட்டு ஒருவரும் படிக்கவில்லையோ, நாம் எழுதுவது வியர்த்தமோ என்று நினைத்தேன்.
Ayya Sonnadhu pola Kalvi manidharin urimai
Ilavasa Kalvi kodupathu Arasin kadamai!
Kalvi koodangalil nadakkum muraikedugal yeraalam,
adhai kalaya vendum!!