அகவுறை ஆற்றுப்படுகை!!!

0

 
மகேந்திரன்

பிறந்த இடமதை
துறந்து பாய்ந்தேன்!
திறந்த மடையாய்
கறந்த பால்போல்
குறவஞ்சி பாடிவந்தேன்!!

‘ஆ’வென்று
அரற்றினேன்
‘ஓ’வென்று
ஓலமிட்டேன்
‘கோ’வினின்று
தாவியபின்!!

உச்சிதனை விட்டு
கூச்சல் தணித்து
நீச்சம் வியாபித்து
சிச்சிலிகள் சுற்றிநிற்க
மச்சம் சுமந்தேன்!!

கன்மம் ஈடேற்ற
மண்மிசை தவழ்ந்து
குன்னம் உறையும் முன்
காண்டிகை உரைத்திட
எண்ணம் செய்வித்தேன்!!

சுனையாக பொங்கிய நான்
அணைக்கட்டில் சிக்குண்டேன்!
திணைவழி ஏகிட
ஏனைய செயலுக்காய்
சுனைத்தெழுந்தேன் மதகுவழி!!

அழகு நடைபயின்று
கூழாங்கல் உருட்டி
கழனி வழி பாய்ந்து
உழவின் உயிரேற்றி
சோழகம் ஏந்திவந்தேன்!!

சிதறாது கரையடங்கி
சதங்கை ஒலியெழுப்பி
மிதமான வேகத்தில்
இதமாக ஓடிய நான்!
மேதகு தாகம் தணித்தேன்!!

சற்றே அகம் களைத்து
முற்றாய் உரகடல் இணையுமுன்
வற்றாத நினைவுகளுடன்
ஆற்றுப் படுகையாகி
நோற்புடை ஆழி கண்டேன்!!

அகச்சுவை அரங்கேற்றிய
உகப்புறை சமவெளியானேன்!
சேகரமாய் எனக்குள்ளே
சாகரமாய் வழித்தடத்தை
போகணியில் போட்டுவைத்தேன்!!

மலையகம் அவதரித்து
விலையில்லா பயனளித்து
இலையமுதம் புறம்கொண்டு
கலைக்கதிர் தொட்டிலென
தலைச்சங்கம் தாங்கி நின்றேன்!!

செங்குவளை மணமெடுத்து
பாங்குடனே முடிதரித்த
அங்குச மன்னவனாய்
எங்கனம் பிறப்பெனினும்
இங்கனம்தான் முடிவதுவோ?!!

நெஞ்சின் கனமது
பஞ்சுக்குவியல் ஆனது
எஞ்சிய உணர்வது
சிஞ்சிதமாய் ஒலிக்கிறது
துஞ்சாது என்னுள்ளே!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *