தமிழ்த்தேனீ

ரமேஷ் அவனுடைய முறை  வருவதற்காக காத்திருந்தான் , டோக்கன் எண் 9 என்று அழைத்தார்கள். ஓ இன்னும் ஆறு  பேர் போய்விட்டு வரவேண்டுமா, பல்வலியுடன் காத்திருந்தான் ரமேஷ். வாழ்க்கையில் தலைவலி, பல் வலி, காது வலி ,கண் வலி என்று எது வந்தாலும்  அதைத் தவிர எதுவந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றும், ஆனால் எந்த வலி வந்தாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை என்று தோன்றியது ரமேஷுக்கு. அட துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு வள்ளுவர் சொன்னாப்  போலே .
பல்வலி வந்து இங்கே வந்து உக்காந்து இருக்கையில் ஏதோ தத்துவமெல்லாம் தோன்றுகிறதே   என்று சிரிப்பாய் வந்தது  ரமேஷுக்கு.  சிரிக்க முயன்று பல் வலியினால் சிரிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டு நிமிர்ந்தான்.  அந்தக் காட்சி கண்ணில் பட்டது.ஒரு பெரியவர்  உட்கார்ந்திருந்தார், அவருக்கு பக்கத்தில்  ஒரு பெண்மணி அவர் மனைவியாக இருக்க வேண்டும், அந்தப் பெண்மணி முகத்தில் கவலை, சற்று நேரம் கணவன் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, ஏதோ தோன்றவே தண்ணீர் பாட்டிலை எடுத்து அவருக்கு நீட்டினாள், அவரும் அந்தப் பாட்டிலை வாங்கி  தண்ணீர் குடித்துவிட்டு  அவளிடம் நீட்டினார், அந்தப் பெண்மணியும்   சற்று தண்ணீர் குடித்துவிட்டு பாட்டிலை உள்ளே வைத்தார்,
ஏங்க பல்லை எடுக்கணும்னாலோ ,  இல்லேன்னா ரூட் கெனால் செய்யணும்னு சொன்னாலோ  வலியைப் பொறுத்துக்க முடியுமா என்றாள் கவலையோடு, எல்லாம் சமாளிச்சுதான் ஆகணும் , நீ எதுக்கும் கவலைப் படாதே  நான் பாத்துக்கறேன்  என்றார் அவர், அரை மணிக்கொரு முறை அந்தப் பெண்மணி ஆதரவாக  தண்ணீர் கொடுப்பதும் ,ஏதோ கவலையுடன் பேசுவதும் அவர் ஆறுதல் சொல்வதுமாக நேரம் நகர்ந்தது.
டோக்கன் 15 என்று அழைத்தவுடன் அவரும் அந்தப் பெண்மணியும் மெதுவே உள்ளே  போனார்கள், சற்று நேரத்தில் அவர் மட்டும் வெளியே வந்தார்.
நீங்க இங்கே உக்காருங்க ,அவங்களுக்கு ட்ரீட்மென்ட் செய்யும்போது  நீங்க அங்கேயே இருந்து பாத்துகிட்டு இருந்தா  உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும், அதுனாலே ட்ரீட்மென்ட் முடிச்சிட்டு டாக்டர் கூப்புடுவாங்க ,அதுக்கப்புறம் உள்ளே போங்க என்று அவரை உட்கார வைத்தாள் நர்ஸ்.
ரமேஷுக்கு அதிர்ச்சியாய் இருந்தது . மெதுவே அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்து  ஏங்க உங்களுக்கு பல் வலி இல்லையா  என்றான்.அட ஏன் தம்பி நீங்க வேற எனக்கு ஒண்ணும் இல்லே, அவளுக்குதான் பல் வலி  என்றார்,
நீங்க தப்பா நெனைக்கலேன்னா நான் ஒண்ணு கேக்கலாமா  என்றான் ரமேஷ்
கேளுங்க தம்பி , உள்ளே அவளுக்கு ட்ரீட்மென்ட் நடக்கற வரைக்கும் நமக்கும் பொழுது போகணும் இல்லே, சும்மா கேளுங்க  என்றார் பெரியவர்
ஏதோ உங்களுக்குத்தான் பல் வலி போலவும், அடிக்கடி உங்களுக்கு ஆறுதல் சொல்லிகிட்டு  ,அடிக்கடி குடிக்கத் தண்ணீர் கொடுத்து உங்களை கவனிச்சிகிட்டாங்க உங்க மனைவி. அதுனாலேதான் நான் உங்களுக்கு பல்வலின்னு  தப்பா நெனைச்சுகிட்டு  உங்களுக்கு   பல் வலி இல்லையான்னு கேட்டேன் என்றான் ரமேஷ்
ஓ அதுவா தம்பி உலகத்திலே பலவிதமான மனிதர்கள் இருக்காங்க, அதுலே ஒரு விதம் என் மனைவி, அவளுக்குதான் பல் வலி, ஆனா அவளுக்கு பயம் அதிகம், அதுனாலே சந்தேகம் கேட்டுகிட்டே இருந்தா. பயம் அதுனாலே அடிக்கடி  தண்ணீர் குடிச்சா, அதுவும் பத்தாக் குறைக்கு  அவளுக்கு நெனைப்பு நான் ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவன்னு. அதுனாலே   எனக்கு தைரியம் சொல்றாப் போலே அவ தனக்குதானே தைரியம் சொல்லிக்குவா. அவளோட பயத்தைப் போக்கிக்க  அப்பப்போ தண்ணீர் குடிப்பா, அப்பிடியே எனக்கும் குடுப்பா, அதை நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க அதான் என்றார்.
பலபேரு அவங்க பயத்தையெல்லாம் நம்ம மேலே ஏத்திடுவாங்க, ஏனுங்க ஜாக்கிறதையா வண்டி ஓட்டிகிட்டு போயிட்டு வாங்கன்னு பொண்டாட்டி சொன்னா , அது நம்ம மேலே உள்ள அக்கரையாவும் இருக்கலாம், நம்ம மேலே உள்ள அவநம்பிக்கையாவும் இருக்கலாம். இதெல்லாம் உங்களுக்கும் கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் வாழ்ந்தப்புறம் உங்களுக்கும் புரியும்  என்றார்
ரமேஷுக்கு உண்மையிலேயே இப்போதுதான் பயம் வந்தது, அவனுக்கு எப்படிப் பட்ட பெண் மனைவியாக வரப் போகிறாளோ  என்று
அவன் தன் பயத்தைப் போக்கிக் கொள்ள  பெரியவரைப் பார்த்து   நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க என்றான்.
பெரியவருடைய  மனைவி  வெளியே வந்தாள், ஓடிப்போய் அவளத் தாங்கி கூட்டிவந்து   உட்கார வைத்தார் பெரியவர்.
டோக்கன்  எண் பதினாறு என்று குரல் கேட்டது, சார் கொஞ்சம் தண்ணி குடுங்க  என்று அவரிடம் தண்ணீர் பாட்டிலை  வாங்கி  கொஞ்சம் குடித்துவிட்டு, சார் நீங்களும் கொஞ்சம் தண்ணீர் குடிங்க என்று சொல்லிவிட்டு   பயத்துடன் உள்ளே சென்றான்   ரமேஷ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *