மேகலா இராமமூர்த்தி

கடற்கரையில் தனியே அமர்ந்திருந்த  தாமரை சுற்றும் முற்றும் பார்த்தபடியே பதட்டத்தோடு  காணப்பட்டாள். கடலிலிருந்து எழும்பி வந்த ஓர் அலை அவள் ஆடையை நனைத்துவிட்டுச் சென்றது. ’ஓ’ என்று கடல் எழுப்பும் பேரிரைச்சல் சிறிது நேரமாக அவள் உள்ளத்துக்குள்ளும் கேட்டுக்கொண்டிருந்தது. யாரையோ எதிர்பார்த்தபடி அவள் தவிப்புடன் அமர்ந்திருப்பதை அவள் முகம் நன்றாக எடுத்துக் காட்டியது

கைப்பையிலிருந்த செல்ஃபோன்  அப்போது ஒலிப்பதைக் கேட்டு சற்றே திடுக்கிட்டவளாய் அதை எடுத்தாள். வீட்டிலிருந்துதான் ஃபோன்.

எடுத்து ’ஹலோ’ என்றாள். அவளுடைய தந்தைதான் பேசினார், “என்ன தாமரை மணி ஆறாகப் போகுது…ஏன் இன்னும் வீட்டுக்கு வரல, பஸ்ஸு கெடக்கலையாம்மா?”

என்ன சொல்வது என்று  சில வினாடிகள் யோசித்துவிட்டு, ”இல்லப்பா, எங்கூட வேல பாக்குற ஃப்ரெண்டு ஒருத்திக்கு இன்னிக்கு பர்த் டே. அதான் ஈவ்னிங் ’ட்ரீட்’ தரேன்னு ஹோட்டலுக்குக் கூட்டிக்கிட்டு வந்திருக்கா. அவளோடதாம்பா இப்ப ஹோட்டல்ல ஒக்காந்திருக்கேன். மத்தியானமே அம்மாவுக்குப் ஃபோன் பண்ணி இதப் பத்தி சொல்லணும்னுதான் நெனச்சேன்…ஆனா வேல டென்ஷன்ல மறந்துட்டேன்….ஸாரிப்பா, சீக்கிரமே கெளம்பி வீட்டுக்கு வந்துடறேன். கவலப்பட வேணான்னு அம்மாட்டயும் சொல்லிடுங்க.”

“சரிம்மா, காலம் கெட்டுக்கெடக்கு….ராத்திரில  லேட்டா வரதெல்லாம் அவ்வளவு  நல்லதில்ல. சீக்கிரம் வந்துடு” என்றபடி ஃபோனைத் துண்டித்தார்.

”சே…தப்பு செஞ்சுட்டோமோ…இந்த  ஆதவன் கூப்பிட்டார்னு பீச்சுக்கெல்லாம் தனியா வந்திருக்கக் கூடாது. இதனால தேவையில்லாம அப்பாட்ட பொய் சொல்லவேண்டியதாப் போச்சே” என்று தன்னையே நொந்து கொண்டாள்.

”ஹலோ தாமரை ரொம்ப நேரமாக் காத்திட்டிருக்கீங்களா? ஸாரி ஃபார் த டிலே..” என்ற குரல் கேட்டுத் திரும்பியவள், சமீபமாக வந்து கொண்டிருந்த ஆதவனைச் சற்று கோபத்தோடு பார்த்து “ஆமாங்க, அரை மணி நேரமாக் காத்திட்டிருக்கேன்…. நீங்க ஏன் சொன்ன டயத்துக்கு வரலே…?”

“ஸாரிங்க….இன்னிக்குன்னு பாத்து ஆபீஸுல எதிர்பாராத வேல ஒண்ணு வந்துடுச்சு. அத முடிச்சுட்டுக் கெளம்பக் கொஞ்சம் ’லேட்’ ஆயிடுச்சு. உங்கள வெய்ட் பண்ண வச்சதுக்கு ஐயாம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி.”

”அப்படியா? சரி….பரவாயில்ல…..ஏதோ முக்கியமான விஷயம் பேசணும் கண்டிப்பா வாங்கன்னு சொன்னதால தான் நான் இங்க வந்தேன். மத்தபடி இங்கக் கடற்கரையிலே தனியா வந்து உக்காந்திருக்கறது எனக்கு ரொம்பக் கூச்சமா இருக்கு” என்றாள் தாமரை.

”உங்ககிட்ட மனசு விட்டுப் பேசணும்னுதான் தனியா மீட் பண்ணுவோம்னு சொன்னேன் தாமரை. மறுப்பு எதுவும் சொல்லாம என்ன சந்திக்க வந்ததுக்கு ரொம்ப தாங்ஸ்”

சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தனர். சுண்டல் விற்கும் சிறுவனொருவன் அருகில் வந்து, ”அண்ணே! சுண்டல் வேணுமா? சூடா இருக்குண்ணே” என ஆதவனைப் பார்த்துக் கேட்க, அவனோ தாமரை முகத்தைப் பார்த்தான். அவள் ”வேண்டாம்பா” என்று பதில் சொல்லிவிட்டு, ”ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லிட்டு சும்மா உட்கார்ந்திருந்தா எப்படி?” என்று கேட்டாள்.

”ம்..ம், முக்கியமான மேட்டர் பேசணும்னுதான் வந்தேன். ஆனா… இப்ப பேசவே வார்த்த கெடக்க மாட்டேங்குது.”

”என்ன ஆதவன் இது….ஆச்சர்யமா இருக்கு. பஸ்ஸுல அவ்ளோ கலகலப்பா எல்லாரோடயும் பேசுவீங்க; ஜோக் அடிப்பீங்க. இப்ப என்னாச்சு உங்களுக்கு…?” என்ற தாமரையின் கேள்வி அவனுக்குச் சற்றே தைரியத்தை அளித்தது.

”அது ஒண்ணுமில்லீங்க தாமரை…நம்ம எதிர்காலம் பத்திப் பேசத்தான் கூப்பிட்டேன்.”

”நம்ம எதிர்காலத்தப் பத்தியா? புதிர் போடாம விஷயத்த சொல்லுங்க  ப்ளிஸ்.”

”அது வந்து….நம்ம ரெண்டு பேருக்குமே ஒரே மாதிரியான ’டேஸ்ட்’ இருக்கு… ஃபார் எக்ஸாம்ப்ல்…..எனக்கு இளையராஜா பாட்டுக்கள் பிடிக்கும், உங்களுக்கும் பிடிக்குமுன்னு ஒரு தடவை சொல்லியிருக்கீங்க. எனக்கு கவிதைகள் வாசிக்கப் பிடிக்கும்; உங்களுக்கும் பிடிக்கும், எனக்குச் சரித்திர நாவல்கள் பிடிக்கும், உங்களுக்குந்தான் இல்லையா?” என இழுத்தான்.

அவன் போடும் ரசனைப் பட்டியலைக் கேட்டுச் சிரித்த தாமரை ”அதெல்லாம் சரிதான்…அதுக்கும் நாம இங்கே சந்திக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று ஒன்றும் விளங்காதவள் போல் கேட்க, இனியும் சுற்றி வளைக்க வேண்டாம் என்று முடிவெடுத்துத் தொண்டையை லேசாகக் கனைத்துக் கொண்ட ஆதவன், தாமரையின் முகத்தைப் பார்த்தான். சினிமா ஹீரோக்களுக்கு வருவதுபோல் திடீரென்று ஓர் துணிச்சலும், வீரமும் அப்போது அவனுக்கு வந்தது. “சுத்தி வளைக்காம நேரடியாவே விஷயத்துக்கு வரேனே, எனக்கு உங்களப் பிடிச்சிருக்கு. உங்களை லவ் பண்றேன்; கல்யாணம் செஞ்சுக்கவும் ஆசப்படறேன்” என்றான்.

தாமரை சற்று நேரம் பேசாமல் ஏதோ யோசனை செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தாள். பின்பு அவனைப் பார்த்து மெல்லிய குரலில், ”என்ன சொன்னீங்க…..என்னக் கல்யாணம் செஞ்சுக்க ஆசப்படறேன்னா….நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தீங்களா?”

”நல்லா யோசிச்சுட்டேன் தாமரை. உங்கள மனைவியா அடையணும்னு ஆசப்படறேன். .உங்களுக்கு என்னப் புடிச்சிருக்கா…? என்னக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதமா சொல்லுங்க?” ஆவலோடு அவளைப் பார்த்தான்.

மெல்லிய முறுவலை முகத்தில்  தவழவிட்டவள், ”ஒங்களையே எனக்கு ஆறு மாசமாத்தான் தெரியும். நாம காலையில ஒரே பஸ்ஸுல ஆபீஸ் போறோம். ஈவ்னிங் கூட திரும்பிவரும்போது அடிக்கடி ஒரே பஸ்ஸுல மீட் பண்றோம். அப்படித்தான் நீங்க எனக்கு அறிமுகம். யூஷுவலா ஜென்ட்ஸ்கிட்ட நான் அதிகம் பேச்சு வச்சுக்கறதில்ல. ஆனா ஒங்கள்ட்ட மட்டும் பேசறேன்னா அதுக்குக் காரணம் எந்த பந்தாவும் இல்லாம நீங்க எல்லாரோடையும் பழகற விதமும், உங்க பேச்சுல இருந்த கண்ணியமும் தாங்க. ஆனா இன்னிக்கு…..”

”இன்னிக்கு  என்ன தாமரை…?” சற்று பதட்டத்தோடு இடைமறித்த ஆதவன், “இன்னிக்கு உங்கள நான் பீச்சுக்கு வரச்சொன்னதால என்ன தப்பா நெனச்சுட்டீங்களா…?” சற்று கவலையோடு கேட்டான்.

”இல்ல ஆதவன். அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல……அப்படி ஒரு சந்தேகம் எனக்கிருந்தா, இன்னிக்கு மத்தியானம் நீங்க எனக்கு ஃபோன் செஞ்சு, எங்கிட்டக் கொஞ்சம் தனியாப் பேசணும், ஆபீஸ் முடிஞ்சதும் பீச்சுக்கு வரமுடியான்னு கேட்டப்பவே மாட்டேன்னு சொல்லியிருப்பேனே…? நீங்க ஒரு ‘ஜென்டில்மேன்’ங்ற நம்பிக்கையிலதான் நான் உங்கள சந்திக்க ஒத்துக்கிட்டேன்.”

”அப்பாடி….! நம்ம மேல நல்ல ’ஒபீனியன்’தான் வச்சிருக்கா, அப்ப நம்ம காதலையும் கண்டிப்பா ஏத்துப்பா” என்ற நம்பிக்கையோடு தாமரையைப் பார்த்தான். ’ஆலிவ் க்ரீன் கலர் காட்டன் புடவை’யில் பூலோக ரம்பையாக, அவன் கண்களுக்கு அவள் தெரிந்தாள். சில நொடிகள் கனவுலகில் சஞ்சரித்தவன் மீண்டும் நனவுலகுக்குத் திரும்பி வந்தான்.

தாமரைக் கடலைப் பார்த்தபடியே அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டு,

அவள்  தன் கேள்விக்கு இன்னும் எந்த பதிலையும் சொல்லவில்லை என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டு, “தாமரை நான் கேட்ட கேள்விக்கு நீங்க ஒரு பதிலும் சொல்லலையே… ஏதோ யோசிச்சிட்டு இருக்கற மாதிரி இல்ல தெரியுது…”

”அதெல்லாம்  ஒண்ணுமில்லீங்க.”

”அப்படீன்னா…..உங்க பதிலச் சொல்லுங்க….ஆனா நல்ல பதிலாச் சொல்லுங்க…ப்ளீஸ்” கேட்டுவிட்டு ஏக்கத்தோடும், காதலோடும் அவளைப் பார்த்தான்.

”சொல்றேங்க, ஆனா அதுக்கு முன்னாடி உங்க தங்கச்சி இப்ப எப்படி இருக்கான்னு சொல்லுங்க?” என்ற தாமரையை ஒன்றும் புரியாமல் பார்த்தவன், ”தங்கச்சியா..?அப்படி ஒருத்தி இருக்கறதையே நான் மறந்திட்டேன்….இந்த நல்ல நேரத்துல அவள ஏன் ஞாபகப்படுத்தறீங்க” என்றான் எரிச்சலுடன்.

”காரணம் இருக்குங்க, அதான்  ஞாபகப்படுத்தினேன்”

”எவ்வளவு ஆசையா அவள வளத்தாங்க எங்க வீட்டுல..அதுலயும் கடைக்குட்டிங்கறதால ரொம்ப செல்லம். அவ கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்தாரு எங்கப்பா”

”அப்படின்னா….ஷீ இஸ் வெரி லக்கின்னுதான் சொல்லணும்.”

“ஆமாங்க. நான் ’பைக்’ கேட்டப்ப முடியாதுன்ன எங்க அப்பா அவ கேட்ட உடனே ’ஸ்கூட்டி’ வாங்கிக் குடுத்தாரு. அவளத் தலையில தூக்கி வச்சுக்கிட்டில்ல ஆடினாங்க. அதுக்கு சரியான சூடு குடுத்துட்டு, எவனோ கூடப் படிச்சவனோட ஓடிப் போயிக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. நன்றி கெட்டவ. எங்க அம்மாவோட மனநிலகூட அதனால கொஞ்சம் பாதிக்கப்பட்டுடிச்சு. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாத் தேறிட்டு வராங்க…இதெல்லாம் நான் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லிருக்கேனே….இப்ப ஏன் புதுசாக் கேக்கறீங்க” என்று அலுத்துக்கொண்டு ”நான் உங்களக் கேட்டதுக்குப் பதிலே சொல்லாம வேற ஏதேதோ சம்பந்தமில்லாம பேசறீங்களே தாமரை.”

”சம்பந்தமில்லாத விஷயத்தப் பேசலைங்க. நமக்கும் இதுக்கும் நெறயவே சம்பந்தமிருக்கு.

”எப்படி?”

“உங்க தங்கச்சி, உங்க குடும்பத்துக்கு விருப்பமில்லாத, உங்க சமூகத்துலேர்ந்து வேறுபட்ட வேற சமூகத்தச் சேர்ந்த ஒரு பையனக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கறதால தானே நீங்கல்லாம் அவள வெறுக்கறீங்க. உங்க .குடும்பத்திலேயே சேக்கமாட்டேங்கறீங்க. இப்ப அதே தப்ப நாம செஞ்சாப் பரவால்லியா?” என்றவளைக் குழப்பத்தோடு பார்த்தான்.

”இதப் பாருங்க ஆதவன். நீங்க ரொம்ப நல்லவர்தான். சொல்லப்போனா இந்த காலத்துப் பசங்க கிட்ட இருக்கற சிகரெட், குடின்னு எந்தக் கெட்ட பழக்கமும் உங்ககிட்ட இல்லங்கறத நானே கவனிச்சுருக்கேன். கை நிறைய சம்பாதிக்கவும் செய்யறீங்க…ஸோ யூ ஆர் அன் எலிஜிபில் பாச்சுலர்……நோ டவுட் அபௌட் தட். பட்… நம்ம கல்யாணம் நடக்கறதுக்கு அது மட்டுமே போதுமா? நானும் நீங்களும் வேற வேற சமூகத்த சேந்தவங்கங்கறது உங்களுக்குத் தெரியும் இல்லயா? என்னக் கல்யாணம் செஞ்சுக்கமட்டும் உங்க வீட்டுல ஒத்துப்பாங்களா…சொல்லுங்க பாப்போம்?”

”அது வந்து…. அதப்பத்தி நீங்க கவலப்படாதீங்க தாமரை. நான் இன்னிக்கு நைட்டே எங்க வீட்டுல இதப்பத்திப் பேசிடறேன். அப்புறம் உங்களயும் அழைச்சுட்டுப்போய் அவங்க முன்னாடி நிறுத்தறேன். உங்களப் பாத்தா எங்க அம்மா, அப்பாவுக்கு நிச்சயம் புடிக்குங்க. நம்ம கல்யாணம் நடக்கறதில எந்தப் பிரச்சனையும் வராம நான் பாத்துக்கறேன். நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்க போதும்”

அதைக் கேட்டதும் அவன் அறியாமையை நினைத்து அழுவதா…சிரிப்பதா என அவளுக்குப் புரியவில்லை. ”சரிங்க…நீங்க சொல்றபடியே ஒங்க அம்மா, அப்பா ஒத்துக்கறாங்கன்னே வெச்சுப்போம். அதுமட்டும் போதுமா….? எங்க அம்மா, அப்பாவோட சம்மதம் வேண்டாமா உங்களுக்கு?”

”அதுவும்தாங்க வேணும். வேணா நானே உங்க வீட்டுலயும் வந்து பேசி நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்கறேன்.”

”கொழந்த மாதிரி பேசறீங்க ஆதவன். எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இந்த காதல், கத்தரிக்காயெல்லாம் சுத்தமாப் புடிக்காது. அவங்க ஒரு நாளும் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க.”

“என்ன தாமரை…இப்படி சொல்றீங்க. உங்கப்பாவப் பத்தி எனக்கும் கொஞ்சம் தெரியும். அன்னிக்கு ஒங்க அப்பாவோட ஃப்ரெண்டு ஒருத்தர் நம்ம பஸ்ஸுல வந்தாரே….அவர் ஒங்க அப்பா மாதிரி எல்லாரும் முற்போக்குச் சிந்தனை உடையவங்களா இருந்துட்டா வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லதுன்னு ஒங்ககிட்ட சொல்லிட்டு இருந்தாரே….அது பக்கத்து சீட்டுல ஒக்காந்திருந்த என் காதிலயும் விழுந்தது. அப்படிப்பட்டவரு லவ் மேரேஜை ஒத்துக்க மாட்டார்னு நீங்க சொல்றது நம்பற மாதிரி இல்லையே.”

”அவர் எங்கிட்ட சொல்லிட்டிருந்தத நீங்களும் கேட்டீங்களா? தட்ஸ் ஓகே….அது ஒண்ணும் பெரிய ரகசியமில்ல. அவர் சொன்னாப்ல எங்கப்பா முற்போக்குச் சிந்தனை உடையவர்தான். ஆனா…முற்போக்குங்கற பேருல நம்மள மாதிரி இளைய தலைமுறையினர் செய்ற எல்லாத் தப்பையும் அவர் ஆதரிக்கமாட்டார்.”

”புரியலயே..?”

”எங்க அப்பாவப் பத்தி சொல்லணும்னா….அவர் சில விஷயங்கள்ள முற்போக்கானவர்….சில விஷயங்கள்ள பழமைய ஆதரிக்கிறவர், கன்வென்ஷனல் டைப்.”

”தெளிவாக் கொழப்பறீங்க தாமரை.”

”இதுல கொழப்பம் ஒண்ணும் இல்லீங்க. ஒங்களுக்கு புரியற மாதிரியே சொல்றேனே….பெண்கள் நெறயப் படிக்கணும், தங்களோட சொந்தக் கால்ல நிக்கணுங்கறதுல அவர் புதுமை விரும்பி. அதே சமயம் புள்ளைங்க, பெத்த அப்பா அம்மாவத் தூக்கி எறிஞ்சுட்டுத் தங்களோட மேரேஜ் லைஃபை தாங்களே முடிவு செய்யறதுல அவருக்கு உடன்பாடு கிடையாது. அதுல பழமைவாதின்னு சொல்லலாம்.”

”அது எப்படி இவ்வளவு ஸ்ட்ராங்காச் சொல்றீங்க. இதுபத்தியெல்லாம் அவரோட நீங்க ஏற்கனவே டிஸ்கஸ் பண்ணியிருக்கீங்களா..என்ன?”

”ஆமாங்க. எங்க சொந்தக்கார பையன் ஒருத்தன் வேற ’கம்யூனிட்டி’ பொண்ணக் கல்யாணம் செஞ்சுகிட்டது சம்மந்தமா சமீபத்தில எங்க அம்மாவும், அப்பாவும் ரொம்பக் கோவமாப் பேசிக்கிட்டு இருந்தத நானே பாத்திருக்கேன். அந்தப் பையனோட பேரண்ட்ஸ் அவங்க சொந்தக்காரங்க மொகத்துலயே முழிக்க முடியாதபடி அந்தப் பையன் செஞ்சுட்டான்னு அவங்க திட்டிட்டு இருந்ததும் எனக்குத் தெரியும். அப்ப நானே எங்க அப்பாகிட்ட, ”என்னப்பா…ஒங்களுக்குப் பெரியாரோட கொள்கைகள் புடிக்கும்னு அடிக்கடி சொல்லிக்கறீங்க, ஆனா அதுக்கு ’ஆப்போசிட்டா’ காதல் கல்யாணத்த எதிர்க்கறீங்களேன்னேன்.”

”நீங்களே அவரக் கேட்டீங்களா? பரவாயில்லியே………அதுக்கு அவர் என்னங்க சொன்னார்?” அடங்காத ஆவலோடு கேட்டான் ஆதவன்.

அவரா…….? ”எனக்குப் பெரியாரோட கொள்கைகள் பிடிக்கும்தான், அதுல சந்தேகமில்ல. காதல் கல்யாணம் செஞ்சுகிட்டா சமுதாயத்தில ஏற்றத்தாழ்வ உண்டாக்குற ஜாதிங்கற நோய் ஒழியும்னு நெனச்சுப் பெரியார் அப்படிச் சொன்னார். ஆனா இங்க நடந்தது என்னம்மான்னு?” என்னக் கேட்டார்.

“எனக்குத் தெரியலப்பா”ன்னு நான் சொன்னேன்.

”காதல் கல்யாணம் செஞ்சுக்கறவங்க என்ன ஜாதி ஒழிப்பா செஞ்சுட்டாங்க? இல்லையே. இப்படிக் கல்யாணம் செஞ்சுகிட்டவங்கள்ள ஆணோ, பெண்ணோ ஒருத்தர் இன்னொருத்தருடைய ஜாதி அல்லது மத சம்பிரதாயத்த ஃபாலோ பண்றாங்க. அப்படித்தானே? இதுல கொடும என்னன்னா….”காதல் கல்யாணம் செஞ்சுகிட்ட பாவத்துக்காக அந்தப் பொண்ணுதானே எல்லாத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கு. ஆம்பளைங்க எதையும் விட்டுக் கொடுக்கறதில்லியேம்மா….அவங்களுக்குப் பிறக்கற புள்ளங்ககூடத் தன் அப்பாவோட ஜாதியத்தானே தங்களோட ஜாதியா எல்லா ’சர்டிஃபிகேட்லயும்’ போட்டுக்கறாங்க. இப்பசொல்லு….இதுல ஜாதி எங்க ஒழிஞ்சிருக்கு?”

”எங்கப்பாவோட இந்தக் கேள்விக்கு நெஜமாவே எனக்குப் பதில் தெரியல ஆதவன்.”

”என்ன தாமரை நீங்க…..உங்க அப்பாவப் பத்தி இப்படிச் சொல்றீங்க…நான் நம்ம கல்யாணத்துக்கு எங்க வீட்டுலதான் எதிர்ப்பு வரும், அத எப்படியாவது சமாளிச்சிடலாம்னு நெனச்சுகிட்டு இருந்தேன். நீங்க சொல்றதப்பாத்தா எதிர்ப்பே உங்க வீட்டுலேந்துதான் பலமா வரும்போலத் தெரியுது.”

”ஆமா…ஆதவன். கண்டிப்பா எங்கவீட்டுலேந்து எதிர்ப்பு வரத்தான் செய்யும். இப்ப சொல்லுங்க…..இப்படிப் பெத்தவங்க எல்லாரையும் பகைச்சுகிட்டு, அவங்க மனசயும் நோக அடிச்சுட்டு நாம கல்யாணம் செஞ்சுக்கணுமா? அப்படி செஞ்சுகிட்டா அந்தக் கல்யாணம் நமக்கு என்ன சந்தோஷத்தக் கொடுத்துடும்?”

அவனிடம் பதிலில்லை.

”காதல் கல்யாணங்கறது மேலோட்டமாப் பாத்தா ரொம்ப இனிமையாவும், சந்தோஷமானதாவும்தான் தெரியுது. ஆனா உண்மையிலேயே கல்யாணத்துக்கு அப்புறம்தான் அதோட சுயரூபமே தெரிய வருது. இதெல்லாம் இல்லன்னு சொல்ல முடியுமா உங்களால?” தாமரையின் ஆழமான கேள்வியில் ஆடிப் போய்விட்டான் ஆதவன்.

”சரி  முடிவா என்னதான் சொல்றீங்க  தாமரை?” கேட்கும்போதே தொண்டை அடைத்தது அவனுக்கு.

”நம்ம அப்பா, அம்மாவுக்குத் தல குனிவ ஏற்படுத்தற வகையில என் கல்யாணத்த ’நானே’ முடிவு செய்ய விரும்பலீங்க. அவங்க பாத்து முடிவு செய்யற ’எனக்கும் பிடிச்ச’ ஒரு பையனக் கல்யாணம் செஞ்சுக்கவே நான் ஆசப்படறேன். அதுதான் என்னோட எதிர்காலத்துக்கும் நல்லது.”

”அப்ப, உங்களுக்கு என்ன பிடிக்கல…இல்லையா….?”

”சே…சே..அப்படியில்லீங்க. உங்க குணமும், பழக்க வழக்கங்களும் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. நீங்க சொல்ற மாதிரி நம்ம ரசனைகளும் ஒண்ணா இருக்கு, நான் ஒத்துக்கறேன். ஆனா… அது எல்லாத்தையும்விட நம்ம பெத்தவங்களோட சம்மதமும், ஆசீர்வாதமும்தானே நம்ம கல்யாணத்துக்கு ரொம்ப முக்கியம். அது நமக்குக் கெடைக்கும்னு எனக்குத் தோணல. ஸோ…. ’ஸாரி ஆதவன், ஐ கெனாட் மேரி யூ…….ப்ளீஸ் டோன்ட் கெட் மீ ராங்.”

“உங்க முடிவ இப்பவே சொன்னதுக்கு தாங்க்ஸ் தாமரை. உண்மையிலேயே எனக்கு இது ஏமாற்றமாத்தான் இருக்கு. இருந்தாலும் என்ன செய்யறது…? நீங்க சொல்றதுல இருக்கற நியாயம் எனக்கு நல்லாப் புரியுது. காதல் கல்யாணத்தப் பத்தி இவ்வளவு ஆழமால்லாம் நான் இதுவரைக்கும் யோசிச்சதில்லீங்க. அதோட இன்னொரு பக்கத்தையும் நீங்க எனக்கு இன்னிக்கு புரியவச்சுட்டீங்க.”

”எந்த ஒரு விஷயத்தையும் ’நம்ம பாயிண்ட் ஆஃப் வியூலேர்ந்து’ மட்டுமே பாக்காம அடுத்தவங்க எடத்திலேர்ந்தும் பாக்கக் கத்துக்கணும். அப்பதாங்க அத நம்மளால முழுசாப் புரிஞ்சுக்க முடியும். இப்ப ஒங்க தங்கச்சி விஷயத்தையே எடுத்துக்கங்க….அவ என்ன தப்பு செஞ்சா…..அவ இஷ்டப்படி லவ் மேரேஜ் செஞ்சுகிட்டா, அவ்வளவு தானே? அதுக்கு நீங்களும், ஒங்க அப்பா அம்மாவும் குடும்ப கௌரவமே போச்சுன்னு வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கலையா? இப்ப நீங்களும் அதே தப்ப செய்ய ரெடியா இருக்கீங்க. அது தப்புன்னும் ஒங்களுக்குத் தோணவேயில்ல. ஒங்க தங்கச்சி செஞ்சா தப்பு….அதயே நீங்க செஞ்சா தப்பில்லங்கறது என்ன நியாயங்க?” தாமரை கேட்கத் தலைகுனிந்து கொண்டான் ஆதவன்.

அவன்  முகத்தில் தெரிந்த வருத்தமும், ஏமாற்றமும் தாமரையை வேதனையடையவே  வைத்தது.

“பாத்தீங்களா…நான் சொன்னதக் கேட்டதும் உங்க முகம் வாடிப் போச்சு. உங்கக் காதல மறுத்ததுக்கு என்ன மன்னிச்சுடுங்க. ஆனா…நான் சொல்றது சரியா, இல்லையாங்கறதப் பொறுமையா ஒக்காந்து யோசிச்சுப் பாருங்க, உங்களுக்கே புரியும். பின்னால வரப்போற பிரச்சனைகள முன்னாலயே யோசிச்சுப் பாத்து, நம்ம ரெண்டு பேருக்கும் எது நல்லதோ அதச் செய்யறதுதானே புத்திசாலித்தனம்….?” என்ற தாமரையை மரியாதையோடு பார்த்தான்.

”இவ்வளவு  தீர்க்க தரிசனத்தோட நீங்க  பேசறது எனக்குப் புடிச்சிருக்கு தாமரை. நீங்க சொல்றதுதான் சரின்னு நானும் ஒத்துக்கறேன். நம்ம சந்தோஷத்துக்காக நம்மள பெத்து, வளத்து, ஆளாக்கின அம்மா, அப்பாவத் தூக்கியெறிஞ்சுட்டு போறதுங்கறது தப்புதாங்க” என்றவனின் முகத்தில் இப்போது ஓர் தெளிவு தெரிந்தது.

ஓரிரு நிமிட மௌனத்திற்குப் பின்…..

”சரி  தாமரை……நான் கூப்பிட்டதுக்காக இவ்வளவு தூரம் வந்ததுக்கு ரொம்பத் தாங்ஸ்ங்க. அப்ப நாம வீட்டுக்குக் கெளம்புவோமா? நல்லா இருட்டிடுச்சு பாருங்க…..”

”நீங்க புறப்படுங்க ஆதவன்…நான் இதோ பின்னாலேயே வந்துடறேன்”

ஏன் என்று அவளைக் கேட்காமல்  ஆதவன் அங்கிருந்து நகர ஆரம்பிக்க……..

”ஆதவன்!” என்ற அவள் குரல், அவன் நடையை நிறுத்தியது. என்ன என்பதுபோல் திரும்பிப் பார்த்தான்.

“ஒண்ணுமில்ல….உங்கக் காதல நான் ஏத்துக்கலேன்னு எம்மேல ஒங்களுக்கு கோவம் எதுவும் இல்லையே….?”

”அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க.”

“கோவம்  ஏதாவது இருந்தா இப்பவே திட்டிடுங்க……ஏன்னா, நம்ம ஃப்ரெண்ட்ஷிப் எப்பவும் நீடிக்கணும்னுதான் நான் ஆசப்படறேன்.”

”கண்டிப்பா  தாமரை. நம்ம நட்பு எப்பவும் தொடரணும்கறதுதான் என்னோட ஆசையும். அப்ப நாளைக்கு பஸ்ஸுல மறுபடி சந்திப்போம்….குட் நைட்” என்றபடி விடைபெற்றான்.

அவன்  போவதையே சற்று தூரம்வரைப் பார்த்திருந்த தாமரை தன் மனபாரம் இறங்கியவளாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலைப் பார்த்தாள். பொங்கிவரும் கடலலைகள் அந்த இருட்டில் பளபளக்கும் வெள்ளிப் பாளங்களாக அவள் கண்களுக்குத் தோன்றின. வெகு வேகமாக முன்னேறி வந்த ஓரலை அவள் கால்களை முத்தமிட்டுவிட்டு ஓடி மறைந்தது. தன் முடிவைப் பாராட்டியே அது தன்னை முத்தமிட்டுச் செல்வதாகத் தோன்றியது தாமரைக்கு. தன் வீட்டு ஞாபகம் உடன் வரவே எழுந்து நடக்கத் தொடங்கினாள்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “தாமரை நெஞ்சம்

 1. ஆதவனைக் கண்டு தாமரை இயல்பாக மலர்ந்தாலும், தன்னை வளர்த்த குளத்தை விட்டு நீங்க மறுப்பது யதார்த்தமான முடிவு.

  காதல் கலியாணம் என்பது மட்டும் அல்ல, காதலை மறுப்பதும் கூட தன்னைச் சார்ந்தவர்கள் மனம் புண்படக் கூடாது என்ற முற்போக்குச் சிந்தனையின் வெளிப்பாடே என்பதை விளக்கும் கதை.

  கதாசிரியர் திருமதி. மேகால இராமமூர்த்தி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

 2. தங்கள் பெயரைக் குறிப்பிடும் போது உண்டான எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்.

 3. பத்து நிமிட உரையாடலே கதை. இரண்டே கதா பாத்திரம். பாலசந்தர் படம் போல் ஒரு தெளிவு. இந்தக்கால பெண்கள் பக்குவப்பட்டவர்கள். அழகாக பலமாக இதை கதையில் பதிக்க மேகலா அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் சுத்தம். கதை நாயகியின் பெயர் தாமரை. கதை நாயாகனின் பெயர் சூரியன். இந்த காம்பினேஷன் மிகவும் பிடித்தது.

  முடிவு ஒரு ஏக்கம் தருகிறது. உலகில் உள்ள காதலன் அனைவருக்கும் இந்த ஆதவனின் குனமாக இருக்காக்கூடாதா என்று. அப்படி இருந்திருந்தால் காரைக்கால் இஞ்சினியர் வினோதினி உட்பட எந்த பெண்ணும் ஆசிட் வீச்சுக்கு ஆளாக மாட்டார்கள் அல்லவா

 4. நிறைய உண்மைகளைச் சொல்கிறது கதை. நிஜமாகவே கதையெனத் தோன்றவில்லை. திருமணத்திற்குப் பின், பெண், கணவனின் ஜாதி அல்லது  மதத்தையே பின்பற்ற நேரிடுவது நெஞ்சைச் சுடும் நிதர்சன அவலம்.  மேலும், தன் அப்பா அம்மா, தனக்காக, தான் விரும்பிய பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொண்டதால் தன் மனைவி அவர்களுக்கு கொத்தடிமை போல் பணிந்து போக வேண்டும் என்றும் தனக்கு என்று எந்த விருப்பு வெறுப்புகளும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் தான் காதல் திருமணம் செய்து கொண்ட ஆண்களில் பெரும்பாலோர் நினைக்கிறார்கள். தாமரையின் தீர்க்க தரிசனம் நிறைந்த முடிவு மட்டுமில்லாமல், ஆதவனின் பெருந்தன்மையும் பாராட்டப்படவேண்டியதே. மிக்க நன்றி மேகலா அவர்களே!!

 5. கதையைப் படித்துப் பாராட்டியதோடு தங்களுடைய ஆக்கபூர்வமான, ஆழமான கருத்துக்களையும் பதிவு செய்துள்ள எழுத்தாள நண்பர்கள் திரு. சச்சிதானந்தம், திரு. தனுசு, திருமதி. பார்வதி இராமச்சந்திரன் ஆகியோர்க்கு என் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன்.

  …மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.