இரண்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

அண்ணாகண்ணன்

(ஆசிரியர், வல்லமை மின்னிதழ் | vallamaieditor@gmail.com)

Annakannan2010 மே 16ஆம் நாள், பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்களின் இ-நேர்காணலை வல்லமையின் முதல் இடுகையாக வெளியிட்டோம். இதன் தொடர்ச்சியாக, மின் தமிழ் இணையக் குழுமத்தில் எழுதிய செய்தியில், ‘தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது, தமிழ்த் தரவுகள் அனைத்தையும் கூடிய வரை திரட்டிச் சேமிப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த இதழ் இயங்கும்’ எனக் குறிப்பிட்டோம்.

படிப்படியாகப் பலரும் வல்லமையில் எழுதத் தொடங்கினர். இன்று 75 படைப்பாளர்கள், 750 இடுகைகள், 1000 பின்னூட்டங்கள், 12 ஆயிரம் வாசகர்கள்…. என இந்த ஓராண்டில் வல்லமை கணிசமாக வளர்ந்துள்ளது. அலெக்சா இணையத்தளத் தரவரிசைப் பட்டியலில் தொடக்கத்தில் 40 இலட்சத்திற்கும் அப்பால் இருந்த வல்லமை, இப்போது 10 இலட்சத்திற்குள் வந்துள்ளது. இதோ, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த 2011 மே 16 அன்று 940,146ஆம் இடத்தில் உள்ளது. விரைவில் மேலும் முன்னணி இடத்தைப் பிடிக்கும் என நம்புகிறோம்.

வல்லமையில் வெளியாகும் படைப்புகள் மிகுந்த தரத்துடன் விளங்குவதாகப் பலரும் நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் கருத்துத் தெரிவித்துள்ளனர். கேள்வி – பதில்கள், கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவை அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. முக்கியமான பல விவாதங்கள், இந்த இதழில் நிகழ்ந்துள்ளன. வல்லமையில் வெளியான தமிழ்த்தேனீயின் சிறுகதைகளைத் தொகுத்து, திரிசக்தி பதிப்பகம் தனி நூலாக வெளியிட உள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல நூல்கள் இவ்வாறு வெளிவரும் வாய்ப்புண்டு.

கவிதைகள் உள்ளிட்ட சில இடுகைகள், இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் எனச் சிலர் தெரிவித்துள்ளார்கள். அனுபவம் வாய்ந்த மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளுடன் புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் சம அளவில் வல்லமை வெளியிட்டு வருகிறது. புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே முதல் நோக்கம். வாசகர்கள் படைப்புகளை விமர்சிப்பதன் மூலம் படைப்பாளர்கள் தங்களை இன்னும் மேம்படுத்திக்கொள்வார்கள் என வல்லமை நம்புகிறது.

திரையுலகச் செய்திகளை வெளியிட்ட போது, இது முக்கியமா என்ற கோணத்தில் விமர்சனங்கள் எழுந்தன. எமது பார்வையில், தமிழில் உள்ள ஒவ்வொரு தரவும் முக்கியம். ஒரு திரைப்படத்தைத் திட்டமிடுவதிலிருந்து, பட பூஜையிலிருந்து தொடங்கி, படம் வெள்ளி விழா காணும் வரை உள்ள ஒவ்வொரு நிகழ்வையும் செய்தியாக்கி, மக்கள் தொடர்பாளர்கள் மூலமாக ஊடக நிறுவனங்களுக்கு உடனடியாக அனுப்பி வருகிறார்கள். இவ்வாறு குறும்படத் தயாரிப்பாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், இதர படைப்பாளிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்… உள்ளிட்டோர் ஏனோ செய்வதில்லை. இவர்களும் தங்களின் ஒவ்வொரு நகர்வையும் செய்தியாகத் தட்டச்சு செய்து அனுப்பினால், கட்டாயம் வெளியிடப் பரிசீலிப்போம். ஏனெனில் எமது பார்வையில் தமிழில் உருவாகும் ஒவ்வொரு தரவும் முக்கியம்.

வேறு எங்கும் வெளிவராத புதிய படைப்புகளை வெளியிட வேண்டும் என்பது வல்லமையின் முன்னுரிமை. படைப்புகளை அனுப்புவோர், அதனை உறுதிப்படுத்தினால் மிக உதவிகரமாக இருக்கும். செய்திகள், அறிவிப்புகள், நிழற்படங்கள், ஒலி – ஒளிப் பதிவுகள்…. ஆகியவற்றுக்கு இந்த முன்னுரிமையிலிருந்து விலக்கு உண்டு.

செய்திகள் முதல் படைப்புகள் வரை அனுப்புவோர், ஆக்கங்களை ஒருங்குறியில் அனுப்பினால் மிக உதவிகரமாக இருக்கும். அல்லது, ஒருங்குறியில் மாற்றக்கூடிய எழுத்துருக்களில் அனுப்ப வேண்டுகிறோம். மேலும் பிடிஎப் வடிவில் அனுப்பாமல், உரைக் கோப்பாக (வேர்ட், நோட்பேட்…) அனுப்ப மறவாதீர்கள். ஆசிரியரின் தனி மின்னஞ்சலுக்கு அனுப்பாமல், vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

மிகுந்த அக்கறையோடும் கர்ம சிரத்தையோடும் எழுத்தாளர்கள் பலரும் வல்லமையில் எழுதி வருகிறார்கள். பத்தி எழுத்தாளர்கள் பலரும் வாரந்தோறும் மிகச் சரியாகப் படைப்புகளை அனுப்பி உதவி வருகிறார்கள். திரையுலக மக்கள் தொடர்பாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நண்பர்கள் பலரும் செய்திகள், நிழற்படங்கள், ஒலிப் பதிவுகள், ஒளிப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, உள்ளடக்கத்தை வளப்படுத்தி வருகிறார்கள்.

சென்னையிலிருந்து ஒவியர் ஜீவா, வல்லமையின் இலச்சினையை வடிவமைத்தார். கிருஷ்ணகிரியிலிருந்து செல்வ முரளி, தொழில்நுட்ப ஒத்துழைப்பினை நல்கி வருகிறார். சீனாவிலிருந்து காமேஷ், வல்லமையைப் புதிதாக வடிவமைத்து வருகிறார். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர்… உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து படைப்பாளர்கள் எழுதி வருகிறார்கள். வல்லமைக்கு எனப் புதிய ஆசிரியர் குழுவினை அமைக்கவும் திட்டம் உண்டு. எதிர்காலத்தில் மேலும் பல புதிய பகுதிகளுடன், புதிய படைப்புகளுடன், புதிய படைப்பாளர்களுடன் வல்லமை தனி முத்திரை பதிக்கும்.

எமது சிறிய முயற்சிக்குக் கை கொடுத்து, வளர்ச்சிக்கு வித்திட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் உள்ளார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள், மக்கள் தொடர்பாளர்கள், திரைத் துறையினர், இதழாளர்கள், நிழற்படக் கலைஞர்கள், ஓவியர்கள், சகோதர இணையத்தள நிர்வாகிகள், விளம்பரதாரர்கள், ஆலோசகர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனித் தனியாக எமது நன்றிகள்.

வல்லமையைத் தொடர்ந்து படியுங்கள். எழுதுங்கள். படைப்புகளுக்கு மறுமொழி இடுங்கள். அவை, படைப்பாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும். வல்லமையை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்கள் வலைப்பதிவுகளிலும் இணையத்தளங்களிலும் வல்லமைக்கு இணைப்பு அளியுங்கள்.

இணையத்தின் புதிய சாத்தியங்கள் அனைத்தையும் இங்கே படிப்படியாகப் பரிசோதிப்போம். எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைத் தாங்களே நேரடியாக வல்லமையில் உள்ளிடவும் வாய்ப்பளிப்போம். உங்கள் வாழ்த்துகளையும் பங்களிப்புகளையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

12 thoughts on “இரண்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

  1. வாழ்த்துகள் கண்ணன் சார். மேலும் பலரைத் தாங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

  2. வாழ்த்துகள் திரு. அண்ணாகண்ணன். இந்தக் குறுகிய காலக்கட்டத்தில் நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்கும் தங்கள் வல்லமை இதழ், தங்களின் அயராத உழைப்பைக் காட்டுகிறது. தாங்கள் மென்மேலும் வானளவு உயர என் பிரார்த்தனைகள். நன்றி.

  3. Congrats Mr.Anna Kannan; Definitely Vallamai will attain greater heights in the coming years; All the very best to you and your team.

  4. மேலும், மேலும் வளர வாழ்த்துகள். வல்லமை.

  5. vallamai will reach Himalayan heights under your editorship. The best thing about vallamai is Ithat it encourages new writers. The coverage of news is very good. Congrats editor sir , for bringing out such a first rated web magazine. I am really proud to be a part of it. I thank Anna kannan sir for giving me that opportunity.

  6. வல்லமை எனும் மின்னிதழ் வந்த பின் தீவிர இலக்கிய வாசகர்கள் நிறைவும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறார்கள். மின்னிதழ்க் கூட்டத்தில் முன்னிலை பெற்றுத் திகழவும், தேர்ந்த நல்லிலக்கிய ஆர்வலர்கள் வாசிக்கக் கிடைத்த கருவூலமாய் மேலும் வளரவும் வாழ்த்துக்கள்.

  7. en nenjam nagizhntha vaazhththukalum prarththanaikalum. intha valarchi ungaludaiya nermaiyaana uzhaippum puthiyavarkalai ookkuviththalaalthaaan. vallamai menmaelum valarnthu vallamaiyai nilaiththu nirkka vaazhththukal.

  8. வணக்கம். தங்களது வல்லமை இதழ் இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள். தொடர்ந்து முழு ஆக்கத்தோடும் ஊக்கத்தோடும் இயங்க உங்களுக்கு வல்லமை கிடைக்கட்டும். நன்றி.

  9. ”இன்று 75 படைப்பாளர்கள், 750 இடுகைகள், 1000 பின்னூட்டங்கள், 12 ஆயிரம் வாசகர்கள் “…. என இந்த ஓராண்டில் வல்லமை கணிசமாக வளர்ந்துள்ளது. ஒத்த கருத்துடையோரை ஐக்கியப் படுத்திடும் அண்ணா கண்ணனின் வல்லமையைப் பாராட்டுகின்றேன். புது வெள்ளம் பாயட்டும். வல்லமை வளரட்டும்.வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *