-பிரசாத் வேணுகோபால்

 

இதோ கொட்டிக் கொண்டிருக்கிறது
குளிர்காலப் பனிப்பொழிவு

வேலை நாள்தான்
ஆனால் விடுப்பு கொடுத்து விட்டார்கள்
அலுவலகத்தில்.

என்ன செய்ய?

இறுக்கி அணைத்து
சல்லாபித்திருக்க
மனைவி இன்னும் அமையவில்லை…

குளிருக்கு இதமாய்
ஆல்கஹாலைப் பருக
இன்னும் கற்றுக் கொண்டிருக்கவில்லை

உடன் பிறந்தவர்களுடனோ
நட்புகளுடனோ
பனியை வீசியெறிந்து விளையாட
நான் இந்த நாட்டுக்காரனில்லை…

சில காலம்
பணி நிமித்தமாய் கடல் கடந்த
வந்தேறிகளுள் ஒருவன்

வெப்பமூட்டப்பட்ட அறையில் நின்றவாறு
சாளரத்தின் வழியே வேடிக்கை பார்க்கிறேன்

துணையேதுமின்றி
ஓடியாட…
உறங்க…
வழியேதுமின்றி

பசிக்கு கத்தவும் வழியின்றி
ஒடுங்கிக் கொண்டு
பனிப்பொழிவை வெறித்துக் கொண்டிருக்கிறது அது….

என்னைப் போல.!

 

படத்துக்கு நன்றி: http://wuppenif.com/tag/nature/

 

8 thoughts on “பனிப்பொழிவு

  1. தாய் நாட்டைப் பிரிந்த பிரிவுத் துயர், அழகிய பனிப் பொழிவிலும் துன்பத்தையே காணுகின்றது. அழகான பதிவு. வாழ்த்துக்கள் திரு. பிரசாத் வேணுகோபால்.

  2. ஏன் இந்த இல்லைப்பாட்டு பாடுகிறாய், பிரசாத். While in Rome, Be a Roman. சல்லாப சமாச்சாரம் ஒத்துக்கிறேன். ஆல்கஹால் குளிரை தணிக்கிறது என்பது மாயை. பனிக்கட்டி விட்டெறிய நாடென்ன? பாடென்ன? லீட்ஸை விட இங்கு குளிர் குறைச்சல். ஆனால், என் வயது அதிகம். Take it in the stride, Yar.

  3. இன்னம்பூரான் ஐயாவிற்கு,

    வணக்கம்… கவிதையில் முதல் பாதி உண்மை… பிற்பாதி பொய்மை… கவிதைக்கு பொய்யழகு எனச் சொல்வார்கள் இல்லையா… அது போல…

    பனிப்பொழிவில் விளையாடியதும், கொட்டி இருக்கும் பனியில் பெயரை எழுதி மகிழ்ந்ததும் மறக்க இயலாது… மகிழ்வோடே கழிகிறது பொழுது…

  4. சின்னதா சுவையா அந்த ஐஸ் மாதிரியே ஜில்ல்ல்……வாழ்த்துக்கள் வேணு.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க