-பன்னீர்செல்வம் மகேந்திரன்

அமைதியான ஆழ்கடல்
ஆழிப்பேரலை கண்டதுபோல்
அவதானித்து விழித்தேன்!
அமைதியின் தன்மையது
ஆர்ப்பரிப்பு கொண்டது ஏன்?!!

விடையற்றுப் போன
வினாக்கணை ஒன்றினை
வீதிவழி எடுத்துச்சென்றேன்!
விதிவழி கடந்துசென்ற
விந்தைமிகு காட்சி காண!!

ஈர மணற்தடம் நோக்கி
ஈருருளி வேகம் கொண்டேன்!
ஈவுகள் தேடியவன்
ஈடற்ற விடைகள் கண்டு
ஈர்க்கப்பட்டு நின்றேன்!!

மகரந்தத்தேன் குடித்த
மதுவுண்ட வண்டது போல்
மயங்கிப்போய் நின்றேன்!
மடக்கைகள் பலகொண்ட
மண்டிநிறை அஞ்ஞானங்களால்!!

அகப்பட்ட தூண்டிலதை
ஆலிங்கனம் செய்வித்து
அகத்தினில் கறைபடிந்த
அரூபப் பொழுதுகளை
அகழ்ந்து நோக்கினேன்!!

தூளியின் வெப்பம் கடந்து
துள்ளி எழுந்த காலம் முதல்
தூற்றிவிட்டுப் போன பருவங்களை
தூர்த்து துளாவினேன்
துர்குணங்களின் ஆதிக்கமே!!

தனக்கான தகுதியை
தரணி புகழ்கையில்
தகுதியாகு பெற்றவனென
தற்பெருமை கொண்டிருந்தேன்
தகைவாய் இன்றுவரை!!

செம்மாந்த உறைவிடத்தில்
செருக்கின் சுவடுகளால்
செதுக்கிய சிலையான பின்னே
செயப்படு பொருளுக்கெல்லாம்
செந்தீமை விளைவித்தேன்!!

பெரும்பணம் சேர்த்து
பெட்டக கொட்டிலிலே
பெட்டியில் பூட்டி வைத்து – உடல்
பெருக்கம் கொண்ட நான்
பெறுமதி ஈதலை மறந்திருந்தேன்!!

குடல்கொண்ட மேனியெல்லாம்
குருதி நிறம் ஒன்றல்லவென
குடையுறை வேந்தன்போல்
குணத்தில் சாதி கொண்டு
குற்றம் புரிந்திருந்தேன்!!

நிறைகர்வம் கொண்டிருந்தேன்
நிகரில்லா அகங்காரத்தால்
நிகழ்காலப் புகழுக்காக – பிறரை
நிந்தை செய்வித்து
நிதானம் இழந்திருந்தேன்!!

இவனா அவன்?
இங்ஙனம் வளர்ந்திட்டானா?
இவனிலும் குறைந்தவனா – நானென
இதனினும் மேற்படியடைய
இதயத்தை இற்றுப் போகச் செய்தேன்!!

சோலையான ஆழ்மனம்
சோகையாய் மாறியதேன்?
சோடனையாய் நான்கொண்ட
சோடை போன குணங்கள் தானோ
சோதித்துப் பார்க்கிறது??!!!

அமைதியான எனதுளத்தில்
ஆழ கல் பாய்ந்ததால்
அகச்சுழற்சி விட்டுப்போன
ஆழிப்பேரலை ஆர்ப்பரிப்பு
அமைதி கொள்வதெப்போது??!!!

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “ஆழிப்பேரலை அமைதி!!!

 1. பாராட்ட வார்த்தைகளில்லை. என்னவொரு அற்புதமான சொல்லாட்சி!!. மெய்மறந்து போனேன். மன ஆழத்தில் ஊடுருவிச் செல்கின்றது ஒவ்வொரு வரியும். மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

 2. பார்வதி அவர்கள் சொன்னது போல் நானும் மெய்மறந்து படித்து ரசித்தேன். வார்த்தைகளும் அவைகளின் அடுக்குகளும் ஆஹா.. போட வைக்கிறது. இன்னும் இது போல் தாருங்கள்

 3. நண்பர் மகியும் நானும் அடிக்கடி கூகிள் சேட் மற்றும் முகநூலில் உரையாடுவது உண்டு. உரையாடல் கூட கவித்துவமாக இருக்கும். 

  ‘ஆழிப்பேரலை அமைதி’ உருவான விதம் பற்றி அவருடன் பேசியதை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். (அவர் அனுமதியின்றி):

  மகி ஆழ்கடலில் இயற்கை எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் இடத்தில் பணிபுரிபவர். கடும் பணி மற்றும் கடல் – இவை தவிர வேறு எதையுமே காண முடியாத ஒரு வாழ்க்கை! 

  கடந்த வாரம் ஆழ்கடலில், பணியிடத்தில் ஒரு கடல் பறவையைக் கண்டிருக்கிறார். அவரைக்கண்டும் பறந்து செல்லாமல் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது கடல் பறவை. இது என்ன அதிசயம்? நம்மூரிலெல்லாம் மனிதன் வாசம் பட்டாலே பறவைகள் பறந்துவிடுமே? இது இத்தனை நெருக்கத்திலும் நம்மை உற்று நோக்குகிறது என நினைத்தாராம். 

  கடும் பணிக்கும், கடலுக்குமிடையே இப்படியொரு கடல்பறவையை காண நேர்ந்தால் ஒரு கவிஞன் என்னதான் செய்வான்?  

  கவிஞன் + கடல் + பறவை = கவிதை 

  அப்போது எழுதப்பட்டதுதான் “ஆழிப்பேரலை அமைதி”. 

  இந்த விஷயத்தை எனக்கு சொல்லிக்கொண்டே, மறுபக்கம் கவிதையை எழுதி முடித்துவிட்டார். சொற்களும், கருத்துகளும்  இவருக்கு வந்து கொட்டுகிறது. கலைமகள் வீணை வாசிப்பால் தெரியும்; ஆனால் இவர் விரல்களிலோ தாண்டவமே ஆடுகிறாள்.

  //நிகரில்லா அகங்காரத்தால் 
  நிகழ்காலப் புகழுக்காக – பிறரை 
  நிந்தை செய்வித்து 
  நிதானம் இழந்திருந்தேன்!!//

  எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை. நிகழ்காலப் புகழுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்? மறைந்த சுஜாதா அவர்களை, அவரின் பிறந்த நாளன்றே ஏளனமாக விமர்சித்து எழுதியிருந்ததை பார்த்த போதுதான், மகியின் இந்தக் கவிதை வரிகள் எவ்வளவு உண்மையானது என்று தோன்றியது.   
   
  வாழ்த்துகள், மகி! நீங்கள் என் நண்பர் என்பதில் எனக்குப் பெருமை!!!

 4. ’சுய பரிசோதனை’ அடிப்படையில் எழுதப்பட்ட இக்கவிதையில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் ‘ஆரவாரப் பேய்கள் அடங்கி மனம் அமைதிகொள்வது எப்போது?’ (இக்கவிதையைப் படிக்கையில் ‘சட்டி சுட்டதடா’ பாடல் மனத் திரையில் ஓடியது) என்ற வினாவை அழகாக நம்முன் வைக்கின்றன. நல்லதொரு கவிதையை வாசிக்கத்தந்த தங்களுக்குப் பாராட்டுக்கள் கவிஞரே!

 5. தன்னைத் தானேகேவி கேட்டுக் கொள்வது போல,சமுதாயத்தை நோக்கி சாட்டையை வீசி இருக்கிறீர்கள். மிகவும் அருமை திரு.மகேந்திரன் அவர்களே! வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *