வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 10
பவளசங்கரி திருநாவுக்கரசு
‘விரும்பிப் போனால், விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும்’ என்பது வாழ்க்கையின் ஒரு விதி.
மாறன், தந்தையைப் பர்த்தவுடன் அழுதுவிடக் கூடாது, தைரியமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தது, தந்தையின் கலங்கிய விழிகளைப் பார்த்த அந்த நொடியில் தவிடு பொடியாகிவிட்டது. தன்னையறியாமல் கண்களில் மாலையாகக் கண்ணீர். என்னதான் கண்டிப்பான அப்பாவாக இருந்தாலும், சிறு வயதிலிருந்தே தங்களுக்கு வேண்டியதையெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்த மனிதராயிற்றே. இன்று இப்படி படுக்கையில் இருப்பதைக் காணச் சகிக்காமல் மனத்தைப் பிழிந்தது.
‘‘அப்பா, இப்ப தேவலையாப்பா….’’ அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை.
‘‘நன்னாயிருக்கேன்ப்பா……ஏதோ நம்ம பார்த்தசாரதி என்னை மீட்டுண்டு வந்துட்டான்…… அன்றாடம் அவனைச் சேவிச்ச பலனை மொத்தமா கொடுத்துட்டான்.. பாவம் அம்மாதான் ரொம்பவும் நடுங்கிப் போயிட்டா..’’ கண்களைச் சுழற்றி அம்மாவைத் தேடுவதைக் கவனித்த மாறன்,
‘‘அப்பா, அம்மா வெளியில இருக்காப்பா. டாக்டர் ஒருத்தர்தான் உள்ளே இருக்கணும். அதுவும் 5 நிமிடத்திற்கு மேல் இருக்கக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாராம்.’’
‘‘சரிப்பா… நீயும் இப்பத்தானே ஊரிலிருந்து வந்திருக்கே. பிரயாணமெல்லாம் நன்னாத்தானே இருந்தது?’’
‘‘ம்ம்..ஆமாம்ப்பா…. நீங்க ஓய்வெடுத்துக்கோங்கோ… நானும் ஆத்துக்குப் போய் ஸ்நானம் பண்ணிண்டு வரேன்’’
‘‘ம்ம் சரிப்பா. அம்மாவை வரச்சொல்லு. நாக்கு வறண்டு போறது. குடிக்க ஏதானும் வேணும்’’
வெளியில் வந்தவன், அம்மாவிடம் அனு நின்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துச் சற்றே தயங்கி நின்றான். இரட்டைப் பின்னலும் பட்டுப் பாவாடையும் கட்டிக்கொண்டு, ஓயாமல் வாய் பேசிக் கொண்டிருந்த சுட்டிப் பெண்ணாக, பார்த்தசாரதி கோவில் தேர்த் திருவிழாவின் போது இறுதியாகப் பார்த்தது, அவளை.
இப்போது நேர் மாறாக, மிக அமைதியாக, பொறுப்பான பெண்ணாக, சுத்தமாக மாறிவிட்டிருந்தாள். அம்மாவிடம் மிக அனுசரணையாக அவள் நடந்துகொண்டது அவனுக்கு நிறைவாக இருந்தது. துளியும் சங்கோஜப்படாமல், யதார்த்தமாகச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அவள் நடந்து கொண்ட விதம் மாறனுக்குப் பிடித்திருந்தது. குடும்பத்திற்கேற்ற நல்ல பெண் என்று அப்பா சொன்னது சரியாகத்தான் இருக்கிறதென்று நினைக்கத் தோன்றியது.
இந்த ஒரு வாரத்தில் தந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது, மனத்திற்கு அமைதி அளிப்பதாக இருந்தது. அடுத்த நாள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் கூறியிருந்தாலும் வீட்டிற்குச் சென்று, கவனமாக இருக்க வெண்டும் என்ற அறிவுரைகளையும் மருத்துவர் வழங்கியிருந்தார். இன்னும் இரண்டொரு நாளில் ஊருக்குக் கிளம்ப வேண்டும். அப்பா நலமாக இருப்பதில் மன நிம்மதியுடன் கிளம்ப முடியும். இந்த முறை இந்தியாவிற்கு வந்து 10 நாட்களே தங்க முடிந்தாலும், மனத்திற்குள் ஒரு அமைதி இருந்தது. மலை போல் வந்த துன்பம் பனிபோல் நீங்கியது போல ஒரு நிம்மதி. அனுவின் அமைதியான தோற்றமும் நட்புறவுடன் பழகும் அவளின் குணமும் தன் பெற்றோருக்கு உதவியாக இருக்கும் நல்ல மனதும் அவளிடம் ஒரு மரியாதையை மாறனுக்கு ஏற்படுத்தியது. அதற்கு மேல் எதைப் பற்றியும் நினைத்துப் பார்க்க இயலாத சூழல்.
ஊருக்குக் கிளம்பும் போது அப்பாவின் கண்களில் துளிர்த்திருந்த சிறிய கண்ணீர் முத்துகள், மனத்தை நெகிழச் செய்தது. பழைய தெம்பு இன்னும் வரவில்லை. மரண பயத்திலிருந்து மீளக் கொஞ்ச காலம் பிடிக்கும் போன்று தெரிந்தது. எப்படியும் அனு அடிக்கடி வந்து பார்த்து, இவர்களைச் சரி செய்துவிடுவாள் என்று நினைப்பது தவறோ என்று மனம் தயங்கத்தான் செய்தது. எது நடந்தாலும் நன்மைக்கே, என்று பொத்தாம் பொதுவாக முடிவு செய்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. அப்பா விமான நிலையம் வந்து வழி அனுப்பி வைக்க இயலாதது, அவனுக்குப் பெரும் மனக்குறையாக இருந்தது. அண்ணனும் முதல் நாளே கிளம்பிப் போய்விட்டான். மன்னி வேறு அங்கு தனியாக இருந்து கொண்டிருக்கிறார்களே. வாயும், வயிறுமாக இருப்பவர்களுக்கு ஒத்தாசைக்குக்கூட அங்கு அக்கம் பக்கத்தில் ஆட்கள் இல்லை. அதுதான் நகர வாழ்க்கை. நகரங்களில் மக்கள் அவரவர்களின் பாட்டைப் பார்ப்பதே பெரும் பாடு. இதில் அடுத்த வீட்டுப் பிரச்சினைகளைப் பார்ப்பது சாமான்யமான காரியம் அல்லவே.
====================
ரம்யாவிற்குத் தான் கிளம்பப் போவதை முன்பே தெரிவித்திருந்ததால், அவள் விமான நிலையத்திற்கு உல்லாச ஊர்தியுடன் வந்திருந்தாள். பனிக் குன்றுகளின் சொச்சம் அங்கங்கே குத்த வைத்திருந்தது கணகளுக்கும் குளிர்ச்சிதான். சுட்டெரிக்கும் சென்னை வெய்யில், எவ்வளவு கொடியது என்பதை இந்த மிதமான குளிர் நன்கு உணர்த்தியது. நெவார்க் விமான நிலையம், மிகவும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. சரியான நேரத்திற்கு விமானம் தரையிறங்கிவிட்டாலும், பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து வெளிவர சற்று தாமதம் ஆனது. பாவம் ரம்யா வந்து காத்துக் கொண்டிருப்பாளே என்று வேக வேகமாக ஓடி வந்த மாறன் வெளியில் ரம்யாவைக் காணாமல் தலையைத் திருப்பி அங்கும் இங்கும் தேடிக் கொண்டிருந்தான்.
வலது புறம் நுழைவாயிலில் ஒரு சீனக் குழந்தை, குண்டுக் கன்னம், சப்பை மூக்கு, ரோசா வண்ண இதழ்கள், அழகான மழலையில் உடன் வந்த இன்னும் சற்றே பெரிய குழந்தையிடம் ஏதோ கையை நீட்டி, நீட்டிப் பேசிக் கொண்டிருந்தது… நடு நடுவே, தன்னையே யாரோ உற்றுப் பார்ப்பதை உணர்ந்து, சற்றே நாணத்துடன், லேசான புன்னகையைப் பூத்தது….. அந்த அழகில் அப்படியே மெய்மறந்து நின்று கொண்டிருந்த போதுதான், முகத்தின் வெகு அருகில் சாவி ஆடியது. “யாரது…” என்ற கோபத்துடன், திரும்பிப் பார்த்தவன், “அட ரம்யா…நீதானா?”
‘‘ஆமாம் மாறன், கொஞ்சம் தாமதமாகிவிட்டது. வழியில் ஒரே போக்குவரத்து நெரிசல் வேறு. வந்து சேருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. சாரிப்பா’’
‘‘பரவாயில்ல விடு, எனக்கு நேரம் போனதே தெரியலப்பா…. இந்தக் குழந்தைகள் அத்தனை அழகு… என்னமா பேசறாங்க…… ஆங்கிலமும் சீனமும், கலந்து தூள் கிளப்புறாங்க……. பொழுது போனதே தெரியல.”
‘‘என்னப்பா, அதுக்குள்ள குழந்தை ஆசை வேறு வந்துவிட்டதா? ரொம்ப டூ மச்சா இல்ல இருக்கு இது. அது சரி அப்பாகிட்ட, மேட்டரைப் போட்டு உடைச்சு எனக்கு வேலை இல்லாம பண்ணிட்ட போல’’
‘‘அட ஏன்ப்பா, நீ வேற? அங்க இருக்கற நிலைமை தெரியாம பேசிக்கிட்டு இருக்கே. அதெல்லாம் இருக்கட்டும், நம்ம ஆபீஸ்ல என்ன விசேசம். நீ பேக்கிங் எல்லாம் ஆரம்பிச்சுட்டியா?’’
“ஆபீஸ் எப்பவும் போலத்தான்… நாளொரு இஷ்யூவும், பொழுதொரு சங்கடமுமாக போய்க்கொண்டு இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லை. இப்பத்தான் ஊருக்கு, ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சு இருக்கேன். இனிமேதான் பேக்கிங் ஆரம்பிக்கனும். இன்னும் ரெண்டு வாரம் இருக்கே…”
இருவரும் பேசிக் கொண்டே, கார் பார்க்கிங்கிற்கு வந்து தரையில் பரவிக் கிடந்த பனிக்கட்டிகளில் வெகு கவனமாக அடி எடுத்து வைத்து நடந்து சென்று வண்டியினுள் ஏறினர். ரம்யா, எடுத்த எடுப்பிலேயே, சர்ரென, ஆக்சிலேட்டரை தூக்கி விட்டு வேகமாகக் கிளப்பினாள்.
‘‘என்ன ஆச்சு, ரம்யா. ஏன் இப்படி… பார்த்து நிதானமா எடு’’
‘‘ம்ம்ம்’’
பார்க்கிங் ஏரியாவை விட்டு வெளியே வந்த்வுடன், திரும்பவும் வேகத்தை அதிகமாக்க முயன்றாள். ஸ்பீட் லிமிட் 40 மைல் என்று தெரிந்தும், அதற்கு மேலும் வேகம் எடுக்க ஆரம்பித்தாள். பல முறை ஏற்கனவே டிக்கெட் வாங்கியவள்தான் என்றாலும், அங்கங்கே இன்னும் பனிக்கட்டிகளின் மீதம் பரவிக் கிடக்கையில் இப்படி சர்ரென்று வண்டி எடுப்பது எவ்வளவு ஆபத்தானது என்று தெரிந்தும் இப்படிச் செய்கிறாளே என்று யோசிக்கும் போதே, ரம்யா வண்டியை அப்படியே பனிக்கட்டியின் மீது வேகமாக ஏற்ற, வண்டி ஒரு சுற்று சுற்றி சர்ரென வழுக்கிக்கொண்டே…….. இழுத்துச் சென்றது. கத்துவதற்குக்கூடத் தோன்றவில்லை இருவருக்கும். நல்ல வேளையாக ஒரு மரம் சாலையோரம் இருந்தது. வண்டி அதில் சென்று மோதி நின்றது. இன்னும் இரண்டு அடி சென்றிருந்தால், அவ்வளவுதான், ஒரு பெரிய பள்ளம். ஏழு, எட்டு அடி இருக்கும். நல்ல வேளையாக எந்தச் சாமி புண்ணியமோ, மரம் வந்து காப்பாற்றியது. வண்டியைத் திறந்தால் திறக்க முடியாமல், கதவு இறுகிக் கொண்டது.
ரம்யா அப்படியே சாய்ந்து உட்கார்ந்துவிட்டாள், படபடப்பாக……
மாறன் அவளிடமிருந்த செல்பேசியை வாங்கி 911 என்ற அவசர உதவி எண்ணை அழைத்து, செய்தியைச் சொல்லி உதவி கேட்டு, அவர்கள் வந்து ஒரு வழியாக வண்டியைத் திறந்துவிட, பிறகு இருவரும் ஓரளவிற்குச் சரி செய்துகொண்டு புறப்படத் தயரானார்கள். மாறன் தான் வண்டியை ஓட்டிக்கொண்டு வருவதாக எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடம் பிடித்து, தானே ஓட்டி வந்து சேர்ந்தாள்.
‘‘என்ன ரம்யா….இன்னும் இவ்வளவு டென்சனாவே இருக்கே….. என்ன ஆச்சுப்பா?’’ என்றான் கனிவாக.
‘‘அதெல்லாம் ஒன்னுமில்ல மாறன். இந்தா உனக்குச் சாப்பாடு. ஏதோ செய்திருக்கேன். சுமாராத்தான் இருக்கும். நாளைக்குத் தனியா சப்பாத்தியும் சன்னாவும் வைத்திருக்கிறேன். இப்போ போய், சாதம் சாப்பிடு. தக்காளி சாதம், உனக்குத்தான் பிடிக்குமே. நாளைக்குப் பார்க்கலாம். சரியா….?’’
‘‘ரம்யா, பார்த்துப் போ ரம்யா. நாளைக்குப் பேசலாம்’’ என்று கூறி அனுப்பினாலும், ரம்யாவை நினைத்து, மாறனுக்கு மேலும் கவலையாக இருந்தது. ஏன் இவ்வளவு டென்சனாக இருக்கிறாளோ தெரியவில்லையே. நாளை ஆபீஸ் சென்றவுடன் முதல் வேலையாக அதைக் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். வீட்டில் நுழைந்து பெட்டியை ஓரமாக வைத்துவிட்டு, கழிவறைக்குச் சென்று முகம் அலம்பிக்கொண்டு வந்து உட்கார்ந்தான்.
அம்மா இத்தனை நெருக்கடியான மனநிலையில் கூட தனக்காகவும், அண்ணன், மன்னிக்காகவும், பலகாரங்கள் செய்து கொடுத்ததை நினைத்து, அவனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. தாய்மை என்ற அந்த உணர்வு இந்த உலகத்தில் வேறு எந்த உறவுக்கும் ஈடாகுமா என்று கற்பனைகூட செய்து பார்க்க இயலாத ஒன்று. இட்லி பொடி, பருப்பு பொடி, கருவேப்பிலை பொடி என்று எல்லாம் பார்த்துப் பார்த்துப் பக்குவமாகத் தயார் செய்து, அழகாக அதைப் ‘பேக்’ செய்தும் கொடுத்திருந்தார்கள். எப்பொழுதும் ‘பேக்கிங்’ தந்தையின் வேலை. இந்த முறை அம்மா, அப்பாவின் மேற்பார்வையில் அதே போல் அழகாக ‘பேக்’ பண்ணி அனுப்பியிருந்தார்கள். அம்மா கைபட்ட அந்தப் பொட்டலத்தின் ஸ்பரிசம் கூட அவனுக்கு அந்த நேரத்தில் இதமாக இருந்தது. ஏதோ தன் தாய் அருகில் இருப்பது போன்று ஒரு உணர்வு. இதற்காகவே அவன் தன் அம்மாவிடம் எதையாவது இப்படி கேட்டு வாங்கி வைத்துக்கொள்வான். முடிந்தவரை அதைக் கொஞ்சமாவது சேமித்து வைத்தும் கொள்வான், அடுத்த முறை ஊருக்குச் செல்லும் வரை. ரம்யா கூட பல முறை இதைக் கிண்டல் செய்திருக்கிறாள், தேவையில்லாத செண்டிமெண்ட் என்று…… ரம்யா கொடுத்த தக்காளி சாதம் சுவை சற்று மட்டுதான் என்றாலும், பசிக்குத் தேவாமிர்தமாக இருந்தது. அம்மா கையால் சுவையாகச் சாப்பிட்டு வந்ததனால் ஒரு வேளை இது மட்டாகத் தெரிகிறது போலும் என்று நினைத்துக்கொண்டே சாப்பிட்டான். திடீரென அவனுக்குப் புரை ஏற ஆரம்பித்தது. யாரோ தன்னை நினைத்துக் கொள்வார்கள் போலிருக்கிறதே… யாராக இருக்கும்……?
====================
வாஷிங்டன் – நண்பன் தினேஷின் வீடு. இரண்டு பேருக்குப் போதுமான அளவில் சிறிய வீடு. ஒரு படுக்கை அறை, சமையலறை, சின்ன வரவேற்பு அறை எனச் சிறிய வீடுதான். அங்கு வாங்குகிற சம்பளத்தில் கணிசமான செலவு என்றால் அது வீட்டு வாடகையும், குழந்தைப் பராமரிப்புச் செலவும்தான். கணவன், மனைவி இருவருக்குப் போதுமான வீடுதான். ஆனாலும் யாராவது இப்படி விருந்தாளி வந்துவிட்டால் கொஞ்சம் திண்டாட்டம்தான்.
தினேஷின் மனைவி அனிதாவின் தூரத்து உறவினரின் பெண் அங்கே குடியிருப்பதாகவும், அவள் தனியாக இருப்பதனால் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செய்யும்படியும், அனிதாவின் பெற்றோர், ஏற்கனவே தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார்கள். அதனால் இன்று அவள் வீட்டிற்கு வந்து நேரில் சில விசயங்கள், அலுவல் சம்பந்தமாகப் பேச வேண்டும் என்பதாலும் தினேஷின் இல்லம் தேடி வந்திருக்கிறாள்.
அப்போதுதான் அவள், தன் நிறுவனத்தில், டெப்புடேஷனாக 2 மாதங்களுக்கு நியூ ஜெர்சிக்கு மாற்றல் செய்திருக்கிறார்கள், என்றும் அங்கு ஒருவரையும் தெரியாது ஆகையால் தனக்கு உதவ யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள்.
அப்போதுதான் மாறனின் நினைவு, தினேஷிற்கு வந்தது. மாறனின் நல்ல குணங்கள் குறித்தும், அவன் கல்லூரிக் காலத்திலேயே, அனாதை ஆசிரமம் ஒன்று ஆரம்பித்து அதன் மூலம் பல குழந்தைகளின் வாழ்வில் இன்றும் ஒளியேற்றிக் கொண்டிருப்பதையும், அந்த வகையில்தான், தனக்கும் மாறனின் அறிமுகம் கிடைத்ததையும் குறித்து விளக்கமாகக் கூறி, அவனை அறிமுகப்படுத்தி வைப்பதாகவும் தினேஷ் கூறினான், அவந்திகாவிற்கு. ஆம் அதே அவந்திகாதான்………….
(தொடரும்…………
சுவை மிகுந்த நல்ல நடை. தொய்வில்லாமல் செல்லும் விரைவு நடை. ஆனால், நிதானம் இழக்காத நடை. எழுத, எழுத, மேலும், மேலும் மிளிரும். ஒரு கருத்து; கூடு விட்டு கூடு பாய்வதை, வாசகர் நுட்பமாக அறியவேண்டும். எனவே,
‘====================’ க்கு பதில் ஒரு * போதும்.
Good writing; Please continue.
தொடருங்கள் மாறி மாறிப் போகிறது கதை.