காதுகளைத் தீட்டிக்கொண்டு…

இன்னம்பூரான்

Innamburanஇங்கிலாந்தின் பெரிய எஃகு தொழிற்சாலைக்கும், புகழ் வாய்ந்த மோட்டார் வாகனத் தொழிற்சாலைக்கும் ஏகபோக உடைமையாளரும், அந்த நாட்டின் முதன்மைத் தொழிலதிபரும் பிரதமரின் ஆலோசகருமான ஒரு பிரபலம், தடாலடியாக 1,500 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டார். அத்தருணம் அவர் கூறிய காரணங்களை, எத்தருணமும் தன்னை இறக்கியே பேசிக்கொள்ளும் இந்தியர்கள், காதுகளை தீட்டிக்கொண்டு கேட்கவேண்டும்.

‘இது ஊழிய நேர்மை சம்பந்தப்பட்ட விஷயம்’ என்று தன்னுடைய தீர்மானத்தை நியாயப்படுத்திய அவர், இங்கிலாந்து மேலாளர்களின் தரத்தைக் குறை கூறி விளாசினார். இரு தொழிற்சாலைகளிலும், சற்றே முனைந்து, நிர்வாகத்தைப் பலப்படுத்த யாரும் தயாராக இல்லை. வெளிநாட்டிலிருந்து முக்கிய வணிக / தொழில் சம்பந்தமாகப் பேச வந்திருப்பவர்களைக்கூட மதியாமல், ‘நான் ரயிலைப் பிடிக்க வேண்டும்; வீடு செல்லும் நேரம் என்று ஓடிவிடுகிறார்கள்; வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30க்கு இருக்கைகள் காலி’ என்று குற்றம் சாட்டிய அவர் மேலும் சொன்னது:

‘தொழிலாளிகள் எவ்வளவோ தேவலை. கூடவே உழைக்கத் தயார்; மேலாளர்கள் தான் அழிச்சாட்டியம் செய்கிறார்கள். நீங்கள் மும்பைக்கு வந்து பார்க்க வேண்டும். அங்கு, இரவு நடுநிசியானாலும், ஒரு அவசரம் என்றால், மேலாளர்கள், தானாகவே, இருந்து முடித்த பிறகு தான் செல்வார்கள். அங்கு இருக்கும் ஊழிய நேர்மை இங்கு இல்லையே…’.

அத்துடன் நிற்கவில்லை, அவர். மேலும் சொல்வார், ‘ஒரு புதிய படைப்பை அறிமுகம் செய்ய வேண்டும். சிக்கல்கள் பல. கடியாரத்தை பார்த்தபடி இருந்தால், உருப்பட்ட மாதிரி தான். இந்த மாதிரி சோம்பேறித்தனத்தை, இந்தியாவில் என்ன! சைனா, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் காண இயலாது. இங்கிலாந்தும் அமெரிக்காவும் இந்த விஷயத்தில் திருந்தவில்லையெனில், தொழிற்சாலைகள் புலன் பெயரும். ஒரு காலத்தில் தொழில் வளம் நிறைந்த நாடு, இங்கிலாந்து. அதைத்தான் நினைவூட்ட விரும்புகிறேன்.’

அவருடைய கருத்தும் செயலும் இங்கிலாந்தின் அரசையும் தொழில் வல்லுனர்களையும் திகைக்க வைத்தது, சிந்திக்க வைத்தது.

அவர் மூன்றாம் தலைமுறை தொழில் அதிபர். 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் தொழிற்புரட்சி வந்த சிறிது காலத்திற்குள், ஒரு அடிமை நாட்டில் மாபெரும் எஃகு தொழிற்சாலை அமைத்தார், இவரின் மூதாதை. இங்கிலாந்தின் கல்வித் துறைக்கு கணிசமான நன்கொடை கொடுத்தவர் அவர். அடுத்து வந்தவரை தர்மாதிகாரி என்றே சொல்லலாம்.

இந்த மூன்றாம் தலைமுறை தொழில் அதிபரின் பெயர், ரத்தன் டாடா.

இங்கிலாந்தில் இருக்கும் அவருடைய எஃகு தொழிற்சாலை: கோரஸ் ஸ்டீல்.

மோட்டார் வாகனத் தொழிற்சாலை: ஜகுவார் லாண்ட் ரோவர்.

செய்தி: இங்கிலாந்தின் புகழ் பெற்ற டைம்ஸ் இதழுக்கு அவர் அளித்த நேர்காணல். டைம்ஸ் இதழ்: 21 05 2011.

1 thought on “காதுகளைத் தீட்டிக்கொண்டு…

  1. நல்ல பகிர்வு ஐயா. அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய விசயம். நன்றி.

Leave a Reply

Your email address will not be published.