நான் வேற அப்பாவிற்குப் பிறந்திருக்கலாம்

1

தி.சுபாஷிணி

மாலை மயங்கி மணி 5.30 ஆனவுடனயே, சந்திராவின் உடலும் உள்ளமும் பரபரத்தது. கணினியை ஷட் டவுன் செய்து விட்டு, தன் டிபன் பாக்ஸ், கைப்பை, செல்போன் எல்லாவற்றையும் சேரிகரித்துக் கொண்டு அலுவலகம் விட்டு வெளியேறினாள் சந்திரா. அவள் வீடு செல்ல ஓரு மணி நேர இரயில் பயணம் கூட்டம் அதிகம் இருந்தாலும், ரயில் செல்லும் வேகத்தில் முகத்திலடிக்கும் காற்று புத்துணர்வைத் தந்துவிடும். சந்திராவும் இரயில் ஏறி இடம் பிடித்து அமர்ந்ததும், அவளது செல்போனில் எஸ்.எம்.எஸ் வந்திருக்கின்றது என்று மெதுவாகக் சிணுங்கிக் கூறியது. அவளும் நிதானமா எடுத்துப் பார்த்தாள். அவளது தலைமகன் சத்யா தான் அனுப்பியிருந்தான். “மொட்டைமாடியிலிருந்த துணிகளை எடுத்து வீட்டினுள் வைத்துவிட்டு தானும் டிபன் சாப்பிட்டுவிட்டு, தம்பி சேகருக்கும் கொடுத்துவிட்டதாகவும், டியூசஷனுக்குப் போய்க்கொண்டிருப்பதாகவும்” அச்செய்தி கூறிது. சத்யாவை நினைத்ததுமே சந்திராவின் மனம் சஞ்சலப்படத் தொடங்கிவிட்டது.

சத்யா இப்போதுதான் பாலிடெக்னிக்கில் சேர்ந்திருந்தான். ப்ளஸ்டுவில் அவன் எதிர்பார்த்த மார்க்குகள் கிடைக்கவில்லை. சத்யாவைப் பொறுத்தவரையில் மிகவும் உண்மையாக உழைத்துப் படிப்பான். எப்போது எந்த பாடத்தில் கேட்டதும் தயங்காமல் கேட்ட கேள்விக்கு பதில் கூறுவான். அனால் அவனால் அந்த அளவிற்கு பிரிட்சையில் பரிமளிக்க இயலவில்லை. அதன் காரணம் சந்திராவிற்கு இன்றளவும் புரியவில்லை. இதனால் அவள் அப்பா சங்கரனிடம் அடிக்கத் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பான். பக்கத்துவிட்டு ரமேஷை எதிர்விட்டு கணேஷைப் பார்த்தாவது கற்றுக்கொள் என்று அடிக்கடிக் கூறுவான் அவர் சொல்வதற்கு ஏற்றாற்போல், சத்யாவின் பரிட்சையின்போது அவன் உடல்நலம் சரியில்லாத போகும். இல்லாவிடில் அவன் தம்பிக்காக ஆஸ்பத்திரி செல்ல வேண்டிவரும். இவை ஒன்றும் இல்லாவிட்டாள் அவரது அம்மா அப்பா வருவார்கள். தாத்தா பாட்டியினால் இன்னமும் சங்கரனது கோபம் அதிகம் ஆகும். சந்திராவிற்கு இதெல்லாம் இவன் விஷயத்தில் ஏன் நடக்கிறது என்றே புரியவில்லை.

சத்யா, சங்கரனது உடன் பிறந்தவர்களின் குழந்தைகள் போல் பிடிவாத குணம் உடையவன் அல்ல. பெரியவர்களிடம் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடந்து கொள்வான் மற்றவர்களைப்போல் அல்லாது காலையிலும் மாலையிலும் சந்தியா வந்தனம் பண்ணுவான் கடவுள் பக்தி உள்ளவன். காயத்திரி மந்திரத்தின் பேரில் மிகவும் நம்பிக்கையுள்ளவன். தன்னுடைய அம்மா, அப்பா, தம்பி ஆகியேரிடமும் அன்பு கொண்டவன். அப்படியிருக்க பாழாய்ப்போன மார்க்கு மட்டும் அவனால் எடுக்க முடியவில்லையே ஏன்! ஏன்! என்று சந்திராவிற்கு அவள் செல்லும் இரயிலில் சக்கரம் போல் விடாது அவளிடம் கேள்விக் கேட்டுக் சுழன்று கொண்டிருந்தது. ஒவ்வொருநாளும் ஏதாவது ஒரு விதத்தில் அவனை மட்டும் தட்டுவது, ‘என்பதில் சங்கரன் பிடிவாதமாக இருந்தார். அவர் வீட்டில் இருந்தால் டி.வி. அலறும். அவருக்கு வேண்டிய நிகழ்ச்சிதான் அதில் ஓடிக்கொண்டிருக்கம். அது படிப்பதற்கு இடைஞ்சலாக இருக்குமே என்ற எண்ணம் ஏன் அவருக்குத் தோன்றுவதில்லை என்பது- சத்யாவிற்குப் புரியாத புதிராகத்தான் இருக்கின்றது. சத்யாவைப் பற்றிய யோசனையிலேயே அவளை அறியாது செக்குமாடு மாதிரி அவள் இறங்கும் விஜயநகர இரயில் நிலையத்தில் இறங்கி, எந்திரமாய் வழியில் கண்ட காய்கறியையும் வாங்கிக் கொண்டு விடு வந்த சேர்ந்தாள் சந்திரா. வீட்டுக் கதவைத் தட்டுகிறாள்.

‘அம்மா எனச் சின்னவன் சேகர் திறக்கிறான்.

அவனைக் கட்டிக்கொண்டே, உள்ளே நுழைகின்றாள் சந்திரா.

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், பெரியவன் சத்யா விரைந்து வந்து, அம்மாவிடமிருந்து எல்லாப் பைகளையும் பெற்றுக்கொண்டு சமையல் அறையில் வைக்கிறான்.

அப்பா எதிர்தாத்திற்குச் (எதிர்வீடு) சென்றிருக்கிறார் என்று தகவலைச் சொல்லிட்டு அவன் அறைக்குச் சென்று விட்டான் சத்யா.

சந்திராவும் சேகருக்கு ஒரு முத்தத்தை வழங்கிவிட்டுக் கைகால் முகம் அலம்பி பொட்டு இட்டுக்கொண்டாள். சாமி விளக்கேற்றினாள். சமையலறையில் புகுந்து கொண்டாள். சப்பாத்தி செய்யு-ம் வேலை தொடங்கி விட்டது. முதலில் காய்கறிகளை ப்ரிஜ்லிருந்து எடுத்து அலம்பினாள். பின் கோதுமை மாவு எடுத்து சப்பாத்திக்கு பிசைந்து எடுத்தாள். காய்கறிகளை நறுக்கி, ஒரு அடுப்பில் அதை வேகவைத்தாள். மறு அடுப்பில் சப்பாத்தி தயாரித்துக் கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் எதிர்வீட்டிலிருந்து திரும்பிட்ட சந்திராவின் கணவன் சங்கரன் காபி கேட்டுக் குடித்தார்.

சத்யா, தன் பாடங்களை படிக்கத் திரும்பிச் சென்றுவிட்டான். சேகர் வீட்டுப் பாடங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தான். அன்றைய இரவு இயல்பாகப் போவது போல் போய்க் கொண்டிருந்தது.

வழக்கம்போல், சங்கரன் டி.வியைப் பெரிதாக அலறவிட்டுக் கொண்டிருந்தார். அந்த அலறல் சந்திராவிற்குத் தலைவலியைத் தரத் தொடங்கியது எனினும் அவள் சப்பாத்தியை சுட்டுப் போட்டு எடுப்பதில் கவனமாக இருந்தாள்.

அதற்குள் சேகருக்குப் பசிக்கத் தொடங்கியதால், அவன் சமையலறைக்கு வந்து அம்மாவின் பின் நின்றான்.

இதோ! பத்து நிமிடம்தான் கண்ணா! என்று தன்னைத் துரிதகதிக்குச் செலுத்தினாள் அவள். சொன்னாற்போல் பத்தே நிமிடத்தில் எல்லாம் தயார். இரவு உணவுக்கு அனைவரையும் அழைத்தாள். அம்மாவின் அழைப்பு கேட்டு சத்யா அறையை விட்டு வெளியே வந்தார்.

‘அவ்வளவு வேகமா சாப்பாட்டிற்கு’ என்பதுபோல் சத்யாவை முறைத்தார் சங்கரன். ஒரு வினாடித் தயக்கம் சத்யாவிற்கு. இதைக் கவனித்த சந்திரா, “சத்யா! எல்லோருக்கும் தட்டுக்களை அலம்பி எடுத்துவா! அப்படியே குடிக்கவும் ஜலம் வைப்பா” என்று வேலை கொடுப்பதுபோல் சமாளித்தாள்.

சந்திராவைப் பொறுத்தவரை, தன் குழந்தைகள் இயல்பாய் படிக்க வேண்டும். ஆசையாய் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டி நிறைந்த உலகம்தான். அதற்காக உயிரை விடவா முடியும். அவரவர்க்கென்று ஒரு சக்தி உண்டு. அதன்படிதான் செய்ய முடியும். உழைப்பும் முயற்சியும் வேண்டும். அதற்காக சும்மா தானாக வரும் என்று சோம்பி இருக்கக் கூடாது என்று எண்ணம் கொண்டவள். அதன்படிதான் தன் குழந்தைகளிடம் நடந்து கொள்வாள். எல்லாவிதத்திலும், அனுசரணையாய், அன்பாய், ஆதரவாய் இருப்பாள். இவளுக்கு நேர் எதிர் சங்கரன். பாடங்கள் அனைத்திலும் நூற்றுக்கு நூறு எதிர்பார்ப்பான். தன் குழந்தைகள் இருவரையும் எதிர் வீடு, பக்கத்துவீடு, தன் சகோதரர், சகோதரி குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பேசுவான். அவர்கள்போல் மார்க் வாங்க வேண்டும் என்று எப்போது பார்த்தாலும் இந்த ஒப்பிட்டுக் கூறுதல் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். இதனால் பெரியவன் சத்யா பலசமயம் சோர்ந்து போய் தன்னால் எதுவும் செய்ய இயலாதோ என்றெல்லாம் நினைக்கத் தொடங்கி விடுவான். அப்போதெல்லாம் சந்திராதான் அவனுக்கு அனுசரணையாய் இருப்பாள். அவனுக்கு அவனை அழகாக எடுத்துக் கூறுவாள். அவன் அம்மாவிற்குச் செய்யும் உதவிகள், தாத்தா பாட்டி மற்றும் உறவினர்களிடம் இவன் நடந்து கொள்ளும் விதம், நண்பர்களுக்கு உதவி செய்யும் பண்பு எனச் சுட்டிக்காட்டி உற்சாகமூட்டுவாள். படிப்பு என்பது மார்க் எடுப்பது மட்டுமல்ல என்பாள். நீ உழைத்துப் படி உன் உழைப்பு வீணாகாது என்று தைரியம் சொல்வாள். ஆனால் இதெல்லாம் சங்கரன் இல்லாதபோதுதான். சங்கரன்முன் சந்தியா ஒரு சாதாரணமானவளாக அமைதி காப்பாள்.

எந்திர கதியில் சாப்பாடு முடிந்தது. சமையலறையைச் சுத்தம் செய்து அடுப்பில் பாலை ஏற்றினாள். பால் மிகவும் பனிக்கட்டியாய் உறைந்திருந்தது. எனவே அடுப்பைக் குறைத்து வைத்துவிட்டு ஹா-லுக்கு வந்தாள்.

சத்யா கம்ப்யூட்டரில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தான். சங்கரன் சத்யாவிற்கு பின் நின்று கொண்டு ஏதோ காய்களை நகர்த்துமாறு கூறிக் கொண்டிருந்தார்.

‘என்னப்பா! நானே விளையாடுகிறேனே’ என்றான் சத்யா.

‘நான் சொல்வதுபோல் விளையாடினால் ஜெயிப்பாய்’ என்றார் சங்கரன்.

‘போங்கப்பா! விளையாட்டுத்தானே அப்பா! நான் விளையாடி நானே கற்றுக் கொள்கிறேனே’.

‘விளையாட்டுன்னாலும் ஜெயிக்கனும்னு வெறி இருக்கணும். அதான் உனக்குக் கிடையாதே. இல்லாவிட்டால் ப்ளஸ் டூவில் மார்க் குறைவாக எடுத்து என் மானத்தைக் காற்றில் பறக்க விட்டிருப்பாயா? எதிர்விட்டு ரமேஷும், உன் மாமா பையன் சுரேஷும் கை கொள்ளா மார்க்குகள் எடுத்ததைப்பார்த்துமா ஆசை வரலை. எனக்குன்னு பிறந்து வச்சிருக்கியே! உன்னைச் சுற்றி இருந்தவா எல்லோரும் இன்ஜினியரிங் சேர்ந்தாச்சு. நீதான் வெறும் பாலிடெக்னிக்கில் சேர்ந்து என் மரியாதையெல்லாம் போக்கியுமா, இன்னும் என் சொல்பேச்சுக் கேட்க மாட்டேன்கிற’ என்று சொல்லிக் கொண்டே போனார் சங்கரன்.

‘கொஞ்சம் நிறுத்துங்கப்பா! வெறும் செஸ் விளையாட்டிற்குப் போய் என்னை இவ்வளவு தூரம் கேவலப்படுத்துறீங்களே அப்பா!

அப்பா! நீங்க சொன்ன அத்தனைப் பேரும் நல்ல மார்க் எடுத்திருக்காங்கதான். ஆனால் அதற்கு அவங்க வீடே உதவியிருக்காங்கப்பா! இதோ! இந்த டி.வி. அலறல் சத்தத்திலே யாருக்கப்பா படிப்பு ஏறும், நீங்க ஒருநாளாவது நான் படிக்கிறேனே… டி.வி சத்தம் இடைஞ்சலா இருக்குமேன்னு யோசித்திருக்கீங்களாப்பா! எனக்கு போர்டு எக்ஸாம் போதும் டி.வி. ஓடிக்கிட்டேதானே இருந்தது. மற்றவங்களையெல்லாம் ஒப்பிட்டீங்களே அப்பா…. அவங்க அப்பா அவங்களுக்கு என்னவெல்லாம் வாங்கித்தர்றாங்க. ஒரு நோட்டுக்கு இரண்டாவது கேட்டால் சிக்கனமா எழுதிப் படிக்கத் தெரியாதான்னு திட்டுவீங்க. சந்தைக்குப் போய் காய்கறி வாங்கி வருவது நான்தானே அப்பா. என் கிளாஸ்மேட்ஸ் யாரும் ஒரு வேலை செய்யமாட்டங்கப்பா. பரிட்சை அன்றுகூட நூறு தடவை என்னை கடைக்கு விரட்டினீங்க. அம்மா தடுத்ததற்கு அம்மாவைத் திட்டினீங்கப்பா! நான் ஏதாவது எனக்கு வேணும்னு கேட்டதாக உங்களுக்கு நினைவிருக்காப்பா! அப்பாவிற்கு என்னைப் பிடிக்கவில்லை. என்னால் மார்க் எடுக்க முடியவில்லைன்னு எத்தனை தரம் அழுதிருப்பேன். உங்களுக்குத் தெரியுமா-? ஆமா அப்பா! சமீபத்தில் ஆக்ஸிடெண்ட்டில் நான் பைக்கிலிருந்து எகிறி விழுந்து, நொறுங்கிக் கிடந்தபோது கூட, எனக்கு வலிக்கவில்லைப்பா. நீங்கள் அதற்கும் என் மார்க்கை வைத்துப் பேசுவீர்களே என்று பயந்தேன். அதெல்லாம் விடுங்கப்பா! அத்தை, சித்தப்பா, பெரியப்பா என அவங்க பசங்களையெல்லாம் கம்பேர் பண்றீங்களே அப்பா! நீங்க ஏம்பா பெரியப்பா, அத்தை மாதிரி இன்ஜினியராகவும், டாக்டராகவும் ஆகலை?….. “ஐயாம் ஸாரிப்பா! நான் வேற அப்பாவிற்குப் பிறந்திருக்கலாம்..” என்று வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியேறினான் சத்யா.

இத்தனைநாள் கேட்க வேண்டும் என தன் ஆழ்மனத்தில் எழுந்த கேள்வியைக் கேட்டுவிட்டு நிதானமாய்ப் போனான். சின்னவன் சேகருக்கு ஒன்றும் புரியவில்லை. சந்தியாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. குழந்தை கொட்டியதும் ஒருவிதத்தில் நல்லதுதான் என நினைக்கத் தொடங்கி விட்டாள்.

சங்கரன் சிலையாய் சமைந்து போனார். சத்யா இறுதியாய்க் கேட்ட கேள்வி அவரைச் சுற்றி சுற்றி வளைய வந்தது. அடுப்பில் வைத்த பால் பொங்கி கீழே விழுந்து விடுவேன் என விளிம்பில் நின்று கொண்டிருந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நான் வேற அப்பாவிற்குப் பிறந்திருக்கலாம்

  1. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மற்றப்பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது பிள்ளைகள் பெற்றோரை மற்றப் பெற்றோருடன் ஒப்பிடுவதில் தவறே இல்லை. சொல்லப்போனால் அப்படியொரு எண்ணத்தை உருவாக்கியதும் அந்தப் பெற்றோரின் தவறே.  வெறும் விதையை ஊன்றிவிட்டு,  நீரூற்றாமல், உரமிடாமல், வேலிகட்டாமல், ஆடுமாடு மேயாமல் பாதுகாக்காமல் இருந்துவிட்டு, பழம் அதுவும் நல்ல தரமான பழம் தரும் விருட்சமாய் வளரவேண்டும் என்று பலனை எதிர்பார்ப்பது எவ்விதத்தில் நியாயம்? நல்லதொரு கருத்துள்ள கதைக்குப் பாராட்டுகள் சுபாஷிணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *