வெல்லவைக்கும் வேலன்…
‘வெல்ல வைக்கும் வேலன்’ திரு செண்பக ஜெகதீசன் அவர்களின் வல்லமைக்கான 100 வது படைப்பு. வாழ்த்துக்கள். தொடர்ந்து இன்னும் பல நூறு கவிபாடி அனைவரையும் மகிழ்விக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அன்புடன்
ஆசிரியர்
அலைவந்து பாடுதடி
அறுமுகனின் பேர்சொல்லி – அழகுச்
சிலைவடிவில் அருள்தருவான்
சிவன்மகன்தான் செந்திலிலே…
(அலைவந்து..)
நிலையில்லா வாழ்வினிலே
நிலைத்திருப்போன் அவனல்லவா,
விலைமதிப்பு ஏதுமில்லா
வேலுமணி அவனல்லவா…
(அலைவந்து..)
சந்தனத்தில் குளிக்கின்றான்
சவ்வாது பூசிடுவான்,
அந்திவானச் சந்திரன்போல்
அருளொளிதான் தந்திடுவான்..
தந்தைகுரு அவனல்லவா
தந்தையும்தான் சிவனல்லவா,
வந்தனைகள் செய்வோர்க்கே
வரமருளும் குகனல்லவா…
(அலைவந்து..)
கூடிவரும் பக்தரெல்லாம்
கும்பிட்டுப் பலன்பெறுவார்,
தேடிவந்த பொருள்பெறுவார்
தெய்வத்தின் அருள்பெறுவார்,
வேடிக்கைக் கதையில்லை,
வெல்லவைப்பான் வேலவன்தான்
எல்லையில்லாக் கருணையாலே…
(அலைவந்து..)
படத்துக்கு நன்றி
http://pillaiyar.blogspot.in/2012/11/blog-post.html
வல்லமையில் 100 ஆவது பதிவினை வெளியிட்டுள்ள திரு. செண்பக ஜெகதீசன் ஐயா அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
அன்புடன்
….. தேமொழி
வல்லமையில் 100ஆவது கவிதை எழுதிய செண்பக ஜெகதீசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
வல்லமையில் 100ஆவது கவிதை எழுதிய திரு. செண்பக ஜெகதீசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வெல்லவைக்கும் வேலன் திருவருள், எவ்விடத்திலும் தங்களை வெற்றிகளைக் குவிக்க வைக்கும். மேன்மேலும் தங்கள் பணி சிறந்து தொடர வேண்டுகிறேன்.
100ஆவது பதிவாக, வேலவனின் கவிதையை வழங்கி இருக்கும் திரு.செண்பக ஜெகதீசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
வல்லமை இணைய இதழில் 8-10-2011ல்,
பெரியவர் இன்னம்பூரான் அவர்களின் வாழ்த்துகளுடன்
தொடங்கிய பயணத்தில்,
வெல்லவைக்கும் வேலன் துணையுடன் சதத்தை எட்டியுள்ளேன்..
இதற்கு வாய்ப்பளித்த இத்தளத்தின் நிறுவனரும் எனது முகநூல் நண்பருமான
அண்ணா கண்ணன் அவர்களுக்கும், எழுதுவதற்கு என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர் பவளசங்கரி அவர்களுக்கும்,
படைப்புகளைப் பாராட்டி ஊக்கமளித்துவரும்
திருவாளர்கள் தேமொழி, தனுசு, பார்வதி இராமச்சந்திரன், சச்சிதானந்தம் போன்றோருக்கும்
எனது இதயம் கனிந்த நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…