குறவன் பாட்டு – 4
சச்சிதானந்தம் கானகம் செல்லுதல்
அரும்பொருள் சேகரிக்கக் கானகம் செல்லுதல்
மனிதனின் வாடை அண்டாக் காட்டில்,
தன்னந் தனியாய்ச் செல்லும் குறவன்,
கடவுளும் கூடக் காணாக் காட்சியைக்,
காணும் வாய்ப்பைப் பெற்றிருந் தானே! 31
புலியைப் பின் தொடர்ந்து செல்லுதல்
கடமான் ஒன்றை உணவாய்ப் பிடிக்கத்,
தவறாய்ப் பின்னால் பதுங்கிப் பாய்ந்த,
கிழட்டுப் புலியைப் பலமாய் உதைத்து,
உயரத் துள்ளிப் பாய்ந்தது மானே! 32
உதைபட்ட புலியின் இரண்டு பற்கள்,
சிதைவுற்று மண்ணில் சிதறிக் கிடக்க,
பதைப்புற்ற புலியும் பசியில் மறைய,
அதைக்கண்ட குறவன் பலசேக ரித்தான்! 33
புலிநடந்த கால்தடத்தை வைத்ததனின் வயதறிந்து,
தனிமையிலே நடமாடும் முதுமைப்புலி என்றுணர்ந்து,
தொடர்ந் ததனைத் தொடர்ந்து சென்று,
அது வசிக்கு மிடமறிந் தான்! 34
அடர்ந்த் திருக்கும் கானகத்தில், உடல்
தளர்ந் திருக்கும் புலியைத்தேடி, தோள்
வளர்ந் திருக்கும் வாலிபக் குறவன்,
துணிந்து தினம் பின் தொடர்ந்தான்! 35
மானடிக்கும் பலமிழந்து, மெல்லப் பின்னர்
முயலடிக்கும் திறனிழந்து, நாட்கள் செல்லச்செல்ல
உயிர்வாழும் மனமிழந்து, ஊன்வளர்க்கும் உணவிழந்து,
நீர்பருகும் வழிமறந்து, உயிர்துறந்த புலி! 36
உயிர்துறந்த புலிசுமந்து, பல்நகங்கள் பிளந்தெடுத்து,
உடல் கிழித்துக் கறி எடுத்து,
தோல் தனித்துப் பிரித்தெடுத்து, அள்ளி
நீர் தெளித்து சுத்தம் செய்தான்! 37
துறவறம் பூண்ட முனிவனைப் போலக்,
குறவனும் புலித்தோல் தனிலே அமர்ந்தான்,
அறநெறி ஆகம விதியினும் உயர்ந்த,
அன்பெனும் நெறியினில் தினம் நடந்தான்! 38
/////அறநெறி ஆகம விதியினும் உயர்ந்த,
அன்பெனும் நெறியினில் தினம் நடந்தான்! /////
அருமை!!. தொடருங்கள். தொடருகிறேன்.
ஆகம விதியிலும் உயர்ந்த
அன்பு நெறியில் பயணம்-
நன்று…!
திருமதி.பார்வதி இராமச்சந்திரன் மற்றும் திரு.செண்பக ஜெகதீசன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.