Featuredஇலக்கியம்கட்டுரைகள்

வேர்களுக்கு நன்றி சொல்வோம் …

20130728001059_00001எஸ்.ஆர்.எஸ். என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பெறும் திரு எஸ்.ஆர். சுப்பிரமணியம் அவர்கள் மிகச் சிறந்த தொழிலதிபர், நிலக் கிழார் சமூக நல ஆர்வலர், சிறந்த எழுத்தாளர், என பன்முக நாயகராக விளங்குபவர். அன்னைத் தமிழ் மற்றும் தாய் மண் இரண்டையும் தம் இரு கண்களாகப் போற்றும் வல்லமையாளர். எம்.ஏ. வரலாறு பட்டதாரியான இவர் பல்வேறு நூல்களும், தினமணி, காலைக்கதிர், தினமலர் போன்ற நாளேடுகளில் பல்வேறு பிரபலமான தொடர் கட்டுரைகளும் எழுதி அனைவராலும் அறியப்படுபவர். இவருடைய நூல்களில் மிக முக்கியமானவைகள், ‘தண்ணீரைத் தேடி’, ‘சரங்கள்’, ‘அண்ணா ஒரு அண்ணல்’ போன்றவைகள். உழவர் பெருமக்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டவரான இவரின் படைப்புகள் அனைத்தும் பெரிதும் உழவர் பெருமக்களின் வாழ்வின் மலர்ச்சியின் அடிப்படையிலேயே அமைந்திருப்பது சிறப்பு. திராவிட இயக்கத்தின் வரலாற்றை அதன் அடித்தளத்தினூடே அருமையாக ஆய்வு செய்திருப்பவர். மிகச் சிறந்த சிந்தனையாளர். நதிநீர்ப் பிரச்சனையான காவிரி, முல்லைப் பெரியாறு ஆகியவைகளின் தோற்றம் மற்றும் அதன் பிரச்சனைகள் குறித்த ஆதாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவித் திறமும், உரைத்திறமும் ஒருங்கே அமையப் பெற்றவர். விவசாயம், நதிகள், தண்ணீர் பிரச்சனை பற்றி இவர் எழுதியுள்ள ‘நதிகளின் சங்கமம்’ என்ற நூல் அரிய பல தகவல்களைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியக் குறுநில மன்னர்கள் ஒற்றுமையின்றி வாழ்ந்த காலமது. வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நம் இந்திய நாட்டையே வளைத்துப் பிடிக்கத் திட்டமிட்டது. இவர்களை எதிர்த்துப் போரிட்டு தம் இன்னுயிரையும் தியாகம் செய்த எண்ணற்ற தியாகச் செம்மல்களில் சிறந்த போர்க்கலை வல்லவன், தேசப் பற்றும், வீரமும், விவேகமும் என அனைத்தும் அமையப் பெற்ற வீரமகன் தீரன் சின்னமலையும் ஒருவர். இவருக்கு ஈரோடு மாநகரில் மாபெரும் விழா எடுக்க முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் என்ற பேருவகையுடன், தாய் நாட்டிற்காகத் தம் இன்னுயிர் ஈந்த அந்த மாபெரும் வீரனின் வாழ்க்கை வரலாற்றை இத்தருணத்தில் எழுதி வெளியிட்டிருப்பது சாலப் பொருந்தும். கன்னட நாட்டின் போர்வாள் என்று பாராட்டப் பெற்ற திப்புசுல்தானின் கரத்தைப் பலப்படுத்தியவர் தீரன் சின்னமலை. கொங்கு மண்ணில் அவதரித்த மாவீரன் , மூன்று முறை கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை புறமுதுகுகாட்டி ஓடச் செய்தவன் தீரன் சின்னமலை. 1805ம் ஆண்டு ஆடித் திங்கள் 18ம் நாளான, இதே நாளில் ஆங்கிலேயர்களால் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்த தீரன் சின்னமலை பற்றிய வாழ்க்கை வரலாற்றை தெள்ளுத் தமிழில், அழகு நடையில் கட்டுரை வடித்துக் கொடுத்து அவர் நினைவைப் போற்ற நமக்கும் வாய்ப்பளித்திருக்கும் திரு எஸ்,ஆர்,எஸ் அவர்களை வல்லமை வாழ்த்தி வரவேற்கிறது. இன்னும் பல்வேறு ஆகச் சிறந்த படைப்புகளை அவரிடம் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்
பவள சங்கரி

  தீரன் சின்னமலை நினைவு நாள் 31.07.1805 … 

எஸ், ஆர். சுப்பிரமணியம்

நல்ல இமயம்

நலம் கொழிக்கும் கங்கை நதி – மகவாய் வளர்க்கும் தாய் காவேரி

வெல்லத் தமிழ் நாட்டின் மேன்மைப் பொதியமலை

செழுங்கரும்புத் தோட்டங்கள், செந்நெல் வயல்கள்

தின்னக் கனிகள்

தெவிட்டாப் பயன்மரங்கள்

புராணங்கள், இதிகாசங்கள், நீதிநூல்கள்

தத்துவக்கோவைகள், உபதேச மஞ்சரிகள், அறப் பேருரைகள்

இத்தனையும் செறிந்திருக்கும் நாடு, இந்தியத் திருநாடு !

                வளங்கள் அனைத்தையும் இயற்கையிடம் வரமாகப் பெற்ற இந்தியா, கருத்துக்கு எட்டாத காலம் முதல் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. முத்தும், பவளமும், வைரமும், வைடூரியமும் வரம்பின்றிக் கிடைக்கும் தேசம் இந்தியா என்று கேள்விப்பட்டவர்கள் ஆசியாவிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் வந்து கொண்டே இருந்தார்கள்.

                கொட்டிக்கிடக்கும் தங்கத்தையும், மணியையும் கொண்டுபோக வந்தவர்கள் பலபேர்! தத்துவ ஞானத்தின் தாய்வீடு என மதித்துக் கற்க வந்தவர்கள் பலபேர் ! கொள்ளலாம் என்றும், தமது பொருள்களைக் கொடுக்கலாம் என்றும் கடலின் முதுகில் ஏறிக் காற்றின் துணையால் கரையில் வந்து இறங்கியவர்கள் பலபேர் ! பாருக்குள்ளே இது எப்படி நல்லநாடு என்று பார்ப்பதற்காக, காடுமலை பலகடந்து, சமவெளிகளில் சஞ்சரித்து, மன்னர்களையும் மக்களையும் சந்தித்து, பயணிகளாய் வந்தோர் பலர் !  ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கண்டு வரலாம் என்பதற்கும் கற்றுவரலாம் என்பதற்கும் வழிகேட்டு வந்த கலைவாணர்கள் பலர் ! மாயங்கள் நிறைந்த மர்மதேசம் இந்தியா என்று கேள்விப்பட்டு, மனதில் வளர்த்த கதைகளை நனவாக்க வேண்டும் என்று அலை அலையாய் வந்த அன்னிய மக்கள் பலர் ! உலக இனங்களை எல்லாம் ஒருமுறையாவது காணவேண்டும் என்று துடித்த, உன்னதத்துக்கு இன்னொரு பெயர்தான் இந்தியா ! இத்தனை பெருமைகளையும் முற்று மோனையாகப் பெற்ற இந்தியாவைப் பார்த்து மகிழ்ந்தவர்கள் அத்தோடு நிற்கவில்லை !  அள்ள அள்ளக் குறையாத அத்தனைச் செல்வங்களையும் கொள்ளை கொள்ளத் துடித்தார்கள். காட்டுமிராண்டி மனிதர்கள் கொள்ளை கொண்டு போனது ஒருபக்கம் ! நாகரிக நாட்டில் சுரண்டிக் கொண்டு போனது ஒரு பக்கம் !  இப்படி முப்புறமும் பாரதத்தை முற்றுகையிட்டவர்கள் தாக்கிய தாக்குதல்களால் இந்திய வரலாறே திசை மாறிப் போனது. உலகப் பந்து காயப்படுவது இடியாலோ, மின்னலாலோ, சூறாவளியாலோ, சுனாமியாலோ அல்ல ! அதில் வாழ்கின்ற மக்களின் வன்செயலால் !

                தனது சுதந்திரத்தைக் கொண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய ஒரு நாடு, மற்ற நாடுகளின் சுதந்திரத்தைக் கண்டு மாச்சரியம் கொள்வதும், அவற்றை அடிமைப்படுத்த முயல்வதும் மனித நேயத்துக்கு விடப்படும் அறை கூவலாகும். இதற்கு அதிக ஆராய்ச்சி வேண்டியதில்லை. அண்மைக்கால நூற்றாண்டுகள் இதற்குச் சாட்சியளிக்கும். 18, 19, 20ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கில வணிகர்களும், ஆங்கில அரசும் இந்திய மக்களுக்கு இழைத்த கொடுமைகளைக் கேட்டால் மண்ணும், மலையும் உருகும் ! சோப்பு, சீப்பு விற்க வந்தவர்கள் ஒரு துணைக் கண்டத்தையேச் சூறையாடி, கொள்ளையடித்து, ஆயிரம் ஆயிரம் மக்களின் ஆவிகுடித்த பயங்கரக் கதையே ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த இந்திய அடிமை வரலாறு !

                வணிகக்குழு அமைத்து வியாபாரம் செய்யவந்த கிழக்கு இந்தியக் கம்பெனியினர் இந்திய குறுநில மன்னர்களின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியப் பெருநாட்டின் ஆட்சியாளர்களாகத் துடித்தனர். அந்நாளிலேயே அவர்களது ஆதிக்கம் காலூன்றுவதை எதிர்த்த வீரப் பெருமக்களில் கொங்கு நாட்டுப் பகுதியில் தீரன் சின்னமலை 07.04.1756இல் பிறந்தார். இவருக்கு  தீர்த்தகிரி சின்னமலை என்றும், தம்பாக்கவுண்டர்  என்ற செல்லப் பெயரும் உண்டு.  18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குக் கோவை, ஈரோடு மாவட்டப் பகுதியில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான் மாவீரன் தீரன் சின்னமலை (1756-1805).

பிரபல திரைப்பட நடிகரும் சிறந்த ஒவியருமான திரு சிவக்குமார்
நன்றி: பிரபல திரைப்பட நடிகரும் சிறந்த ஒவியருமான திரு சிவக்குமார்

                15.08.1947இல் நாம் விடுதலை பெற்றோம்.  நாம் பெற்ற விடுதலை எளிதாகக் கிடைத்துவிடவில்லை.  பலர் விடுதலைக்காகப் போராடினர்.  அப்போரில் சொல்லொணாத் தொல்லைகளுக்கு உள்ளான பலர் தம் இன்னுயிரையும் ஈந்தனர். இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக நடைப்பெற்ற போராட்டத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

                ஆங்கிலேயர் ஆட்சி அமையும் போதே அவர்கள் தலைமையை ஏற்க மறுத்துப் போராடியது என்பது முதல் கட்டம்.

எந்த உத்தரவிற்கும் காத்திராமல் தாங்களாகவே முன்வந்து, விடுதலை வேள்வியில் தங்கள் இன்னுயிரை பலிபீடத்தில் ஆகுதியாகத் தந்த வீரத் திலகங்கள் பலர். அவர்களில்,

நெட்கட்டுங்சேவல் புலித்தேவன் 1767

சிவகங்கை முத்துவடுகநாதப் பெரியஉடையாத்தேவர் -1772

ராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி – 1795

தஞ்சாவூர் அமர்சிங் – 1798

சிவகங்கை வேலுநாச்சியார் – 1798

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் -1799

மருது சகோதரர்கள் – 1801

ஊமைத்துரை – 1801

போன்ற பலரும் தென்தமிழகம் சார்ந்தவர்கள். வட தமிழ்நாட்டின் சுதந்திரக்கனல் அவியவில்லை எனக்காட்ட முனைந்து கிழக்கிந்தியக் கம்பெனியாரின் விரட்டும் வீரப்போரில் கலந்து கொண்ட மாவீரன் கொங்கு நாட்டு தீரன் சின்னமலை (1756).

                ஆங்கிலேயர் ஆட்சி வேரூன்றிய பின், அவர்கள் ஆட்சியை எதிர்த்துப் போராடியது இரண்டாவது கட்டம்.

                இரண்டாம் கட்டப் போருக்கு திலகர்,  மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் பட்டேல், மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், தீரர் சத்தியமூர்த்தி  போன்றோர் தலைமையேற்றனர்.  இது தான் இந்திய சுதந்திர வரலாறு…

                ஆடிப்  பதினெட்டு… இன்று போர்க்களம் முடிந்தது. தருமத்தின் வாழ்வைச் சூது கவ்விய இருண்ட காலம் முடிவு பெற்றது. குருட்சேத்திரத்தின் மகாபாரதப் போரில் தருமம் இறுதி வெற்றி பெற்ற நாள். அமுதமும், விஷமும் ஒரே இடத்தில், நன்மையும் தீமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். காலதேவனின் கணக்குப் புத்தகத்தில் ஜனனமும், மரணமும் ஒரு பக்கத்தில் எழுதப்படுகிறது. தருமம் அரியணையேறிய அதே நாளில் என் மண் எனக்கே சொந்தம், பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம், பரிபூரணருக்கே அடிமை என்று வாழ்வோம் என்று உரிமைக்கு வாழ்ந்த ஒரு உன்னத சுயமரியாதைக்காரனை ஒண்ட வந்த பிசாசுகள் சங்ககிலிக் கோட்டையின் அரண்களின் நடுவே தூக்கிலிட்டுக் கொன்றனர்.

                கங்கையைச் சிமிழுக்குள் அடைக்க நினைத்தனர், அகம்பாவக்காரர்கள். எரிமலையின் உச்சியில் அமர்ந்து கொண்டு வெற்றி எக்காளமிட்டனர், ஆதிக்க வெறியர்கள். அலைகடலை நில்லென்று உத்திரவிட்டனர் அதிகார ஆட்சியாளர்கள். ஆம், கொங்கு நாட்டில், 18-ஆம் நூற்றாண்டு இறுதியில் காவிரியின் மேற்கே உள்ள கொங்குப் பகுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் ஏற்படாமல் தடுத்து நிறுத்திட வீரப்போர் புரிந்து தூக்குக்கயிற்றை முத்தமிட்டவன் மாவீரன் தீரன் சின்னமலை.

20130727235840_00002

                நில வளத்திற்கும், மக்கள் மனவளத்திற்கும், உறுதியான ஊக்கத்திற்கும், இடைவிடாத உழைப்பிற்கும் பெயர் பெற்றது கொங்கு மண்டலம். சங்க காலத்திற்கு முன்னரே சிந்துவெளி நாகரிகம் போல் நொய்யல் வெளி நாகரீகத்திற்குச் சொந்தக்காரர்கள் கொங்கு நாட்டவர்கள். பல்வேறு பன்முகப்பட்ட மாட்சிகளையுடைய கொங்கு மண்டலம் வணிகத்தின் பொருட்டு இங்கு வந்து நாட்டை வளைக்க முற்பட்ட கிழக்கிந்திய கம்பெனியாரை வேர் கொள்ளச் செய்யாமல் விரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டது.

                சின்னமலைக்கு ஒரு அண்ணனும் (குழந்தைசாமி) மூன்று தம்பியரும் (பெரியதம்பி, கிலேதார், குட்டிச்சாமி) ஒரு தங்கையும் (பருவதம்) இருந்தனர். மூத்த அண்ணன் குழந்தைச்சாமிக்கும் கடைசி சகோதரரான குட்டிச்சாமிக்கும், தங்கை பருவதத்துக்கும் மட்டுமே திருமணம் நடந்தது.  மற்ற சகோதரர்கள் மேலப்பாளையத்தில் விவசாயத்தில் ஈடுபட்டனர்.

                அக்காலத்தில் கொங்கு நாட்டில் பல இடங்களில் இருந்த சிலம்பக் கூடங்களில் தடிவரிசை, மல்யுத்தம், வில் பயிற்சி, புலிப் பாய்ச்சு, வாள் போர், போன்றவைகளை இளைஞர்கள் கற்றனர்.

                தீர்த்தகிரியும், பெரியதம்பியும் கிலேதாரும் மேலப்பாளையத்தில் இருந்த சிலம்பக் கூடத்தில் இதுபோன்ற போர்க்கலைகளையெல்லாம் நன்கு கற்றதோடு, அதில் நல்ல பயிற்சியும் பேராற்றலும் பெற்றனர். அப்போது மைசூர் மன்னர் உடையார் மரபினர் கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தனர்..  காங்கேய நாட்டில் வசூலிக்கப்படும் வரிப் பணம் சங்ககிரி சதுக்கத்துக்குச் சென்று பின்னர் மைசூர் சேரும்.

                ஒருமுறை தீர்த்தகிரி சகோதரர்கள் மூவரும் காட்டுவழி சென்ற போது சங்ககிரிக்கு வரிப்பணம் எடுத்துச் செல்வதைப் பார்த்த தீர்த்தகிரி சகோதரர்கள் அவர்களை மறித்து விசாரித்து ‘இது கொங்கு நாட்டுப் பணம், மைசூருக்கு ஏன் செல்ல வேண்டும்?” என்று அவர்களிடமிருந்து பிடுங்கி அப்பணத்தை ஏழையருக்கும், இரவலருக்கும் பகிர்ந்து அளித்தனர்.

                வெறும் கையோடு சங்ககிரிக்குச் சென்று நடந்த விபரங்களைக் கூறவே, சில வீரர்கள் தீர்த்தகிரியை பிடித்துச் செல்ல மேலாப்பாளையம் வந்தவர்களை சிலம்பக் கூடப் பயிற்சியாளரின் ஆட்கள் மூலம் சங்ககிரி வீரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். சங்ககிரிப் பணியாளர்கள் வரிப்பணத்தை பறிந்தவர்  யார் என அறிவிக்கக் கேட்கவே, ‘சிவன்மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் உள்ள சின்னமலை” என்று அவர்களிடம் கூறவே எங்கும் ‘சின்னமலை” என்பதே பேச்சாயிற்று பின்னர் அப்பெயரே நிலைத்தது தீர்த்தகிரிக்கு.

                இந்த நிகழ்சிக்குப் பின்னர் சின்னமலை தனக்காக ஒரு படையை உருவாக்கிக் கொண்டார்.  தன்னோடு கருத்து ஒத்த மற்ற பாளையக்காரரின் துணையையும் நாடி ஆதரவைப் பெருக்கிக் கொண்டார்.

                07.12.1782ல் ஐதர் அலியின் மரணத்திற்குப் பின் திப்பு சுல்தான் கர்நாடக நாட்டுத் தலைமை ஏற்றுக் கிழக்கிந்தியக் கம்பெனி எதிர்ப்புப் போரை மிகவும் தீவிரப்படுத்தினார்.  மைசூர் உடையார்கள் ஆட்சிக்குட்பட்ட கொங்குநாடு அப்போது திப்புவின் வசத்தில் இருந்தது. திப்புவின் படைக்குப் போர் வீரர்கள் தேவைப்பட்டதால் கொங்கு வீரர்கள் திப்புவின் படைக்கு அழைக்கப்பட்டனர். சின்னலையின் தூண்டுதலால் கொங்கு வீரர்கள் பலர் சீரங்கப்பட்டணம் சென்று திப்புவின் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.

ஒரு நாள் பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை, வேலப்பன் ஆகியோருடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை அழைத்துக் கொண்டு காட்டு வழியாக மைசூர் சென்றார். சின்னமலை.

அமைச்சர் பூரணய்யாவும், தளபதி சையது சாயபுவும், சின்னமலையை வரவேற்றுத் திப்புவிடம் அழைத்துச் சென்றனர். ஜாகோபின் கழகம் பிரெஞ்சு விடுதலை மன்றப் படைவீரர்கள் சீரங்கப் பட்டணத்தில் அப்போது இருந்தனர்.  அவர்களிடமும், கொங்கு வீரர்கள் சிறந்த போர்ப்பயிற்சி பெற்றனர்.  அங்கு கொங்குப்படை அமைக்கப்பட்டது.  கருப்பசேர்வை பிரெஞ்சு மொழியை நன்கு கற்றார்.  அதன் பயனாக திப்புவிற்காக நெப்போலியனிடம் சென்ற தூதுக்குழுவில் கருப்பசேர்வை இடம் பெற்றார். நான்காம் மைசூர் போரில் சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர் முனைகளில் சின்னமலையின் கொங்குப்படை திப்புவிற்காகச் சிறப்பாக போரிட்டது.

04.05.1799ல் போர் முனையில் திப்பு வீரமரணமடையவே சின்னமலையும் அவர் தம் கொங்குப்படையும் ஊர் திரும்பியது.   அதற்குப் பின்னர்தான் கொங்கு நாட்டு பெருமக்கள் அளித்த காட்டுப் பகுதியில் வேளாளர்  பெருமக்களின் ஆதரவோடு ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் வலிமையான கோட்டை ஒன்றைக் கட்டிச் சின்னமலை படை பலத்தைப் பெருக்கியபோது, திப்புவின் படைவீரர் சிலரும் வந்து ஓடாநிலையில் தங்கினர்.

சீரங்கப்பட்டணம் உடன்படிக்கைப்படி கொங்கு நாடு கம்பெனிக்கு உட்பட்டாலும், கோவைக்கும், சங்ககிரிக்கும் இடைப்பட்ட பகுதி கம்பெனியார் வசப்படவில்லை. சின்னமலையின் கண்காணிப்பிலும் அவருடைய ஆதரவாளர்களின் ஆதிக்கத்திலும் அப்பகுதி இருந்தது.  ஆங்கிலேயர் அதைத் தன்வசமாக்க விரும்பினர்.

திப்பு சுல்தான் வீழ்ச்சிக்குப் பின் அவருடைய வீரத்தளபதி மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக் கம்பெனி எதிர்ப்பாளர்களுக்கிடையே பெரும் ஆற்றல் பெற்று விளங்கினார். கொங்குத்தூதர்கள் வெங்கடரமணய்யா, ரிஷாசாகிப், விருப்பாட்சி கோபால நாயக்கரின் தூதர் தும்மச்சி முதலியார் மூலம் காவிரிக்கு மேற்கில் சின்னமலையும் காவிரிக்குக் கிழக்கே ஓசூர் கானி ஜாகானையும் தலைவராக ஏற்றுக் கொள்ளுமாற தூண்டாஜி வாக் பணித்தார். அதனை எல்லாரும் ஏற்றுக் கொண்டனர்.

கோலாப்பூரில் தங்கியிருந்த தமிழக விடுதலைக்குழு ஆங்கிலேயே எதிர்ப்புக்காரர்களை ஒன்று சேர்ந்து உதவி பெற விரும்பியது. அணைகுந்திப் பாளையக்காரர், விஜயநகர அரசின் வாரிசுகள், நிஜாமின் சர்தாரிகள், ஷோலாப்பூர் ராயதூக்குத் தலைவர்கள், குவாலியரின் சிந்தியா, திப்புவின் எஞ்சிய படைத் தலைவர்கள் உதவியைக் கொங்குப் போராளிகள் பெற விரும்பினர்.  சிலர் ஆதரவளிக்க முற்பட்டனர்.  சிலர் தேவைப்படும் போது படையுடன் வருவதாகக் கூறினர்.

மருது சகோதரர்கட்கும், கொங்குத் தலைவர்கட்கும் தொடர்பை ஏற்படுத்த விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால் நாயக்கர் விரும்பினார்.

இவர்கள் சேர்ந்து சின்னமலையின் தலைமையில் போராட முயற்சி செய்ததே ‘கோவைப்புரட்சி” என்று அழைக்கப்படுகிறது. கோயமுத்தூர் கொங்கு நாட்டின் ஒரு முக்கியமான பகுதி. 18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மைசூர் மன்னர்கள் சாமராஜ உடையார் கிருஷ்ணராஜ உடையார் கோவைப்பகுதியை ஆட்சி புரிந்தனர்.  அவர்கள் சார்பில் குமாரதேவய்யன், குறிக்கார மாதய்யன் ஆகியோர் கோவையில் அதிகாரம் செலுத்தினர்.

ஐதரும், திப்புவும் ஆட்சிக்கு வந்தபோது அவர்கள் கையில் வந்தது.  அப்பொழுது கோவைக்கு ஒரு கோட்டை இருந்தது.  திப்பு சுல்தான் பலப்படுத்திய கொங்கு கோட்டைகளில் கோவைக் கோட்டையும் ஒன்று. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிலை மாறியது. மூன்றாம் மைசூர் போர் நடைபெற்றபோது கோவை ஆங்கிலக் கம்பெனியார் கைக்கு வந்துவிட்டது.  ஜெனரல் மெடோஸ் தலைமையில் கோவைக் கோட்டையில் ஒரு படை இருந்தது.

பவானியின் வடகரையில் சத்தியமங்கலம் அருகே திப்புவின் படையோடு மோதிய பிளாயிட் தோற்றோடி வந்து கோவைக்கோட்டையில்தான் தஞ்சம்புகுந்தான். 1800ஆம் ஆண்டு, கோவைக் கோட்டையின் தலைவனாக விளங்கியவன் லெப்டினன்ட் கர்னல் கே.மக்னிஸ்டர் என்பவன்.  கிழக்கிந்தியக் கம்பெனியின் 5ம் பட்டாளம் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.  அங்கிருந்து கொண்டு தளி, விருப்பாட்சி, மலபாரோடும் தொடர்பு கொள்ள ஆங்கிலேயர் வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டனர்.

கோவைக் கோட்டை ஆங்கிலேயர் வசம் இருப்பது தங்களுக்கு ஆபத்து என்பதனை விடுதலைப் போராளிகள் உணர்ந்தனர்.  எப்படியாவது கோவைக் கோட்டையை மீட்பது என்று முடிவு செய்தனர்.  திண்டுக்கல் கூட்டமைப்பினர் அதற்கான  பணியைச் செய்வதெனவும், கோட்டைமீட்பு முயற்சிக்குத் தீரன் சின்னமலை தலைமை தாங்குவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது.

                கோவைப் புரட்சியை 03.06.1800 அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கோவைக் கோட்டையில் ஆங்கிலேயர் படையில் முஸ்லீம் வீரர்கள் கனிசமான அளவு இருந்தனர். 03.06.1800 அன்று மொகரம் நாள்;. முதிய முஸ்லீம் வீரர்கள் தொழுகைக்குச் சென்றுவிடுவர். இளைய முஸ்லீம் வீரர்கள் விருந்திற்கும், கேளிக்கைகளுக்கும் சென்றுவிடுவர். அந்தச் சந்தர்ப்பத்தில் கோட்டைமீட்பு எளிதாகும் என்று கருதினர். ஒரு மாதம் முன்பே விடுதலை வீரர்கள் பலர் கோவைக்குச் சென்று மக்களோடு மக்களாகக் கலந்தனர். மக்களிடையே பெருத்த ஆதரவு இருந்தது. எல்லாவகையான உதவிகளையும் அவர்கள் செய்து வந்தனர்.  கோவை நரசிங்கராவ் விடுதலை வீரர்கட்குப் பல வசதிகளைச் செய்து கொடுத்தனர். பலர் விரைவில் கோவைக்கு வருவதாகச் சின்னமலைக்கு இரகசியத் தகவல் அனுப்பியிருந்தனர். ஓசூர் பத்தே முகம்மதும், இச்சிப்பட்டி ரோனோன் உல்லாகானும் வந்த கொண்டிருந்தனர். கஜ்ஜல்ஹட்டிக் கணவாயிலிருந்து ஒசூர் கானி ஜா கான் 4000 குதிரை வீரர்களோடு வந்து கொண்டிருந்தான். திண்டுக்கல் லக்கம நாயக்கரும், விருப்பாட்சி கோபால நாயக்கரும் உதவி அனுப்பி இருந்தனர்.

                சின்னமலையின் நண்பர்களான பூந்துறை வாரணவாசி, ஈரோடு வெள்ளை கவுண்டர், பெருந்துறை குமாரவெள்ளை, அரவக்குறிச்சி பெரியதம்பி ஆகியோரும் தம் ஆட்களுடன் வந்து விட்டனர். கோவை நகரை ஒட்டிய மணியக்காரம்பாளையம், கணபதி, சிரவணம்பட்டி, பேரூர், இராமநாதபுரம், புலியகுளம், பூளைமேடு ஆகிய இடங்களில் வீரர்கள் தலைமறைவாகினர்.

 சேலத்திலிருந்து பரமத்தி அப்பாச்சிக்கவுண்டர், நீலப்பகவுண்டர் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். சின்னமலை பெரிதும் எதிர்பார்த்தது வட கர்நாடகத்  தலைவர் தூண்டாஜிவாக், மேல் கர்நாடகக்தலைவர் மாகி கிருண்ணப்ப நாயக்கர் ஆகியவர்களின் படை வருகையைத்தான். கடைசி நேரம்வரை அவர்கள் வரவில்லை. மிக முக்கியமானவரான தூண்டாஜி வாக்கிடமிருந்து எந்தத்தகவலும் இல்லை. காரணமும் தெரியவில்லை.

                சிவகங்கை மருதுபாண்டியர் கூட படை அனுப்புவதாகக் கூறியிருந்தனர். தூண்டாஜி வாக்கிடமிருந்து எந்த சைகையும் வராததால் மருது பாண்டியர் படைகளை அனுப்பவில்லை. இருப்பினும் சின்னமலை சோர்வடையவில்லை. பம்பரமெனச் சுற்றிக் கொண்டிருந்தான். மொகரம் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. விடுதலை வீரர்கள் மாறு வேடத்தில் பால்க்காரர் போலவும், காய்கறி விற்பவர் போலவும், சோதிடம் கூறுபவரைப்போலவும்,  விறகு வெட்டுபவரைப் போலவும் கோவைக் கோட்டை அருகில் சென்று நோட்டம் பார்த்தனர்.

                சில விடுதலை வீரர்கள் தங்கள் ஆர்வத்தின் காரணமாக மொகரத்தின் முதல் நாளே கோட்டை அருகில் போர் நடவடிக்கையில் ஈடுபட ஆயத்தமாயினர். புதிய நபர்களின் நடவடிக்கைகளைக் கண்ட கோவை தாசில்தார் கோவைப் புரட்சிச் செய்தியை உணர்ந்தார். உடனே தளபதி மக்ளிஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெள்ளைப்படைகளையும், ராஜபுத்திரப்படைகளையும் அவர் தயார்படுத்தினார். முஸ்லீம் படை வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்டையின் எல்லா நிலைகளும் உஷார் ஆயின. நகரெங்கும் பல பகுதிகளில் பரவலாக இருந்த விடுதலைப் படையினர் ஒன்று சேர்வது தடுக்கப்பட்டது. விடுதலை வீரர்களிடையே செய்திகள் உரிய காலத்தில் சென்று சேர ஏற்பட்ட தடைகளும் கோவைப் புரட்சி தோல்வி அடைய ஒரு காரணமாக இருந்தது.

                வெண்ணைய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதை ஆயிற்று. இரண்டு மாத்திற்கு மேல் செய்த முயற்சிகள் வீணாயின. விடுதலை வீரர்கள் பின்வாங்கினர். பலர் தத்தம் பகுதிகட்குத் திரும்பிச் சென்றனர். இன்னும் பலர் அடுத்த ஆணையை எதிர்பார்த்து நின்றனர். சின்னமலை சகோதரர்கள் ஓடாநிலை திரும்பினர்.

                மக்ளிஸ்டாரின் படைவீரர்கள் 42 பேரை விடுதலைக் கைதிகளாகப் பிடித்தனர். பவானியில் இருந்த வில்லியம் கேரோவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 42 பேரும் பல இடங்களில் தூக்கில் போடப்பட்டனர். இந்நிகழ்ச்சி 08.06.1800 அன்று நடைபெற்றது. ஒரு சிலர் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர். தூக்கிலிடப்படுவதற்கு முன் ஆங்கிலேயர் , ‘போலி  இராணுவவிசாரணை’ நடத்தி அவர்களிடம் வாக்குமூலம் வாங்கினர்.

                சின்னமலை தலைமை தாங்கித் திட்டமிட்டு நடத்திய கோவைப்புரட்சி சிலரின் ஆர்வக்கோளாறால் நடைபெறாமல் தோல்வி அடைந்தது. இப்புரட்சி வெற்றி பெற்று இருந்தால் அது ஆங்கிலேயேரை எதிர்த்து நடத்திய சுதந்திரப் போரில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

                கோவைப்புரட்சிக்குப் பின்னர் சின்னமலை சோர்ந்துவிடவில்லை. தன்னுடைய ஓடாநிலைக் கோட்டையைப் பலப்படுத்தினார். சின்னமலையிடம் சங்ககிரிக் கம்பெனி அதிகாரி, சின்னமத்தம்பி என்பவரைத் தூதாக அனுப்பினார். கம்பெனி ஆதிக்கத்தைச் சின்னமலை ஏற்றுக்கொண்டால் அவரையே அப்பகுதிக்குத் தலைவர் ஆக்குவதாகவும், வரிப்பணத்தில் பத்தில் மூன்று பகுதி கம்பெனிக்குக் கொடுத்தல் போதும் என்றும் பேரம் பேசினார். சின்னமலை இசையவில்லை. கம்பெனியார் அதிர்ச்சியுற்றனர்.  சின்னமலையுடன் போருக்கு ஆயத்தமாயினர்.

                எப்படியும் சின்னமலையை ஒழித்துவிடுவது என்று கம்பெனியார் முடிவு செய்தனர். அதற்காகச் சின்னமலையுடன் மூன்று பெரும் போர்களை நடத்தித் தோற்றனர். 1801-ல் காவிரிக் கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அரச்சலூரிலும் நடைபெற்ற போரில் சின்னமலையே பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் கம்பெனித் தளபதி மேக்ஸ்வெல் கொல்லப்பட்டான். அரச்சலூரில்  கம்பெனியின் குதிரைப்படையைக் குண்டுவீசி நிலைகுலைய வைத்து பின்வாங்கி ஓடுமாறு செய்தனர். ‘பல இடங்களில் தன் பெரும்படையால் வெற்றி பெற்ற மேக்ஸ்வெல் ஒரு சிறிய படையிடம் தோற்றார்’  என்று கம்பெனிக் குறிப்பு  கூறுகிறது.

ஆங்கிலேயப் படைகளின் நடவடிக்கைகளை உளவு சொல்ல, சின்னமலையின் நெருங்கிய நண்பர் வேலப்பன் கள்ளிக்கோட்டையில் ஆங்கிலேயப் படையில் ரகசியமாகப் பணி புரிந்தார். 1805-ஆம் ஆண்டு திடீரென வேலப்பனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், 32 பெரும் பீரங்கிகளுடன் ஓடாநிலை கோட்டையை தகர்க்க ஆங்கிலேயப் படை புறப்பட இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஓடாநிலையை விட்டு வெளியேறி, பழனிமலை தொடரில் உள்ள கருமலையில் மறைந்து வாழ முடிவு செய்தார். சின்னமலை மற்றும் அவரது ஆட்களுக்கு சமையல் செய்ய நல்லப்பன் என்பவனை உடன் அழைத்துச் சென்றனர். குறிப்பிட்ட ஒரு நாள் கள்ளிக்கோட்டையிலிருந்து ஆங்கிலேயேரின் பீரங்கிகள் ஓடாநிலைக்கு மூன்று கிலோ மீட்டர் மேற்கேயுள்ள ஓலவலசு கிராமத்தில் வந்து நின்றன. சின்னமலை தப்பிய செய்தி அறிந்து ஆங்கிலேயர்களின் கைகளில் வேலப்பன் எழுதிய கடிதம் கிடைத்தது. கோட்டை வாயிலில் வேலப்பன் சுடப்பட்டார். தொடர்ந்து பீரங்கிகள் ஓடாநிலை கோட்டையைத் துளைத்தெடுத்தன. கோட்டை மண் மேடாகும் வரை அவை ஓயவில்லை.

கருமலையில் தங்கியிருந்த சின்னமலை துடி துடித்துப்போனார். கோட்டை இடிக்கப்பட்டதை விட, நண்பர் வேலப்பனின் மறைவு அவரை வாட்டியது. தொடர்ந்து கருமலையிலேயே தங்கினார். அங்கு பீரங்கிகள் செய்ய ஆயத்தமானார். கள்ளிவலசு, விருப்பாட்சி, பழனியில் இருந்து பாளைய ஆட்கள் அவருக்கு உதவினார்கள்.

தனது கவலையை மறைக்க சின்னமலை விவசாயப் பணிகளிலும் ஈடுபட்டார். இந்த காலகட்டத்தில் சமையல்காரன் நல்லப்பனை ஆங்கிலேயேரின் ஆள் ஒருவன் சந்தித்தான். பணம் கைமாறியது., சின்னமலையின் நடமாட்டத்தைக் காட்டிக் கொடுத்தான் கயவன் நல்லப்பன்.

ஆங்கிலேயப்படை சின்னமலையையும், சகோதரர்களையும் சூழ்ந்து கைது செய்து முன்னும், பின்னும் பீரங்கி வண்டிகள் வர சின்னமலையும் அவரது சகோதரர்களும் சங்ககிரி கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கொங்கு நாடே கண்ணீர் விட்டு அழுதது. சின்னமலை உள்ள இடமே தன் இடம் என்று கருதிய கறுப்பசேர்வை சங்ககிரி கோட்டையில் சரணடைந்தார்.

31.07.1805 ஆடிப் பதினெட்டு பண்டிகை நாள் …….. கொங்கு நாட்டு வரலாற்றில் ஒரு கொடிய நாள் ……. சங்ககிரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கதவுகள் அடைக்கப்பட்டன். 10 வாயில்களும் மூடப்பட்டன. மலையில் தமிழ் வீரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.  கடைசி நேரத்தில், தங்கள் படையுடன் சேர்ந்து கொண்டால் விடுதலை செய்வதாக,  ஆங்கிலேயே தளபதி மார்ஷல் ஆசை வார்த்தை கூறினான். மயங்காத சுதந்திரச் சுடரொளி சின்னமலை மார்ஷல் முகத்தில் காரித்துப்பினார்.

சங்ககிரி மலை உச்சியில், பொழுது காண்பாழிக்குக் கிழக்கில், ஆலமரத்தின் வடக்கே நான்கு தூக்கு மரங்கள் தயாராக இருந்தன. சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை ஆகிய நால்வரும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டனர். தூக்கிலிடும் ஆட்களை தன் கண் சைகையால் அப்புறப்படுத்தினார், சின்னமலை. நால்வரும் தங்கள் கழுத்தில் தாங்களே  தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டனர்.

சுதந்திரச் சுடர் அணைந்தது …..  கொங்கு மாவீரர்கள் கொடியவர்  சூழ்ச்சிக்குப் பலியாயினர். …..  கொங்கு நாடே கதறியது   …..   தியாக சீலனை இழந்ததால்  …..!

                                                                                    முற்றும்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க