சச்சிதானந்தம்
பூனைப் புனுகு சேகரித்தல்
நாய்போல் வளர்ந்த புனுகுப் பூனை,
நரிவால் போன்ற அடர்வால் சுருட்டி,
நாள்முழுதும் மரத்தில் பதுங்கித் தூங்கி,
நன்முன் னிரவில் உணவைத் தேடும்! 45
உணவைக் கூடத் தவிர்த்துத் தனித்து,
மினுக்கும் கண்களை மூடித் தூங்கும்,
புனுகுப் பூனை பதுங்கும் புதரை,
அணுகிப் புனுகுப் பூனை பிடித்தான்! 46
அஞ்சிப் பதறிய அந்தப் பூனை,
அட்ரினலின் போல் அதி வேகத்தில்,
ஆசன வாயின் அருகில் இருக்கும்,
அமுதச் சுரப்பியில் புனுகைச் சுரந்தது! 47
அடர்ந் திருக்கும் புனுகின் நெடியை,
நுகர்ந் திடாமல் தவிர்த்திட வேண்டி,
முகமூடிக் கொள்ளையன் போலக் குறவன்,
முகத்தைத் துணியால் மூடிக் காத்தான்! 48
புனுகை எடுத்துப் பத்திரப் படுத்தி,
பூனையை மீண்டும் மரத்தில் விடவே,
புழுவைப் போலத் துடித்த பூனை,
பாம்பைப் போல உடனே மறைந்தது! 49
அமிலம் போன்று அடர்ந்த புனுகை,
அமுதம் போன்று ஆக்கும் பொருட்டு,
அதிலே நீரைக் கலந்து குழைத்து,
அரும் பொருளாக மாற்றி விட்டான்! 50
ஆசன வாயில் சுரந்த புனுகு,
வாசனை மிக்க திரவிய மாகி,
ஈசனை மிக்கப் போற்றிட ஏற்ற,
பூசனைப் பொருளாய்ப் பூத்து விட்டதே! 51

Leave a Reply