சச்சிதானந்தம்


குறத்தியின் எழில் 

 

கம்பன் செய்த சீதையின் அழகும்,

பிரம்மன் செய்யும் புதுப்புது அழகும்,

கண்கள் குளிர்ந்த வள்ளியின் வழிவரு,

குன்றக் குறத்தி எழில்முன் சிறிதே!                                                                                      90

 

இளந்தோள் இரண்டும் பொன்வடம்போல் இருக்க,

இதழ்கள் இரண்டும் செந்தடம்போல் நிலைக்க,

இளமை ததும்பி சந்தனம்போல் மணக்க,

இதயம் நிறைந்த அன்புடையோள் குறத்தி!                                                                          91

 முகத்தின் வனப்பு 

 

வெண்மணியின் சுட்டி இட்ட நெற்றியில்,

வெள்ளரியின் விதை வடிவப் பொட்டிட்டு,

வெந்தயத்தின் அளவில், புருவத்தைச் சுற்றி,

வெவ்வேறு வண்ணப் புள்ளிகளால் பொட்டிட்டாள்!                                                  92

 

இமைகளின் புதிய வண்ணம் 

 

மூடிய விழிகளின் மேற்புறத்தில் அழகாக,

மூவண்ணங் குழைத்து மெதுவாகத் தீட்டி

கூடிய இமைகளில் இருவண்ணங் குழைத்துப்

பீலியின் தோகையில் தொய்த்தெடுத்து இட்டாள்!                                                             93

 

மூடிய விழிகளோ சோளியின் வடிவெடுக்க,

கூடிய இமைகளோ பின்புறப் பிளவெடுக்க,

ஏடெனப் புரட்டி விழிகளை அவள் திறந்தால்,

காடுகள் கொண்ட கவினையும் விஞ்சிடுமே!                                                                        94

 

இதழ்களின் வண்ணம்

 

பாலைவனப் பூக்களைப் போலப் பாவையவள்,

பலநூறு வண்ணம் கொண்டாள், மலர்

வாழை  மடல் வண்ணம் போல,

அதரத்தில் அடர் நிறம் கொண்டாள்!                                                                                           95

 

நகங்களின் வண்ணம் 

 

நீலவண்ணம் பூசிய நகங் கொண்டு,

நெற்றி குவிந்திருக்கும் கேசமுங் கொண்டு,

நித்தம் கலையாமல் நிலைத் திருக்கும்

புன்னகையில் இதழ் கொண்டாள் பேரழகி!                                                                             96

 

உடையும் வளை கரமும் 

 

நீண்டிருக்கும் கரம் கொண்டு, அதில்

நிறைந்திருக்கும் வளை கொண்டு ஒருபுறம்,

நளினமாய்ச் சரிந்திருக்கும் செவ்வாடை கொண்டு,

நடந்து வந்தாள் நவ்வியக் குறத்தி!                                                                                             97

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “குறவன் பாட்டு – 12

 1. சான்ஸே இல்லை.சங்கப்பாடல் போல் வர்னனைகள், உவமைகள் அதி அற்புதம். பெண்ணை வர்ணனைகளுக்கு உட்பட்டு கண்ணதாசன் அவர்கள் ‘நிலவும் ஒரு பெண்ணாகி
  உலவுகிற அழகோ….’ எனும் பாடலை எழுதியிருப்பார், அதில் வந்த வர்ணனைகளும், உவமைகளும் அத்தனை கொள்ளை அழகு.அது போல் இந்த பெண்ணின் அழகை

  ///இளந்தோள் இரண்டும் பொன்வடம்போல் இருக்க,
  இதழ்கள் இரண்டும் செந்தடம்போல் நிலைக்க///

  ///வெள்ளரியின் விதை வடிவப் பொட்டிட்டு,
  வெந்தயத்தின் அளவில், புருவத்தைச் சுற்றி,
  வெவ்வேறு வண்ணப் புள்ளிகளால் பொட்டிட்டாள்!///

  ///மூடிய விழிகளோ சோளியின் வடிவெடுக்க,
  கூடிய இமைகளோ பின்புறப் பிளவெடுக்க,
  ஏடெனப் புரட்டி விழிகளை அவள் திறந்தால்/// என்று,

  கவிஞர் வர்ணித்திருப்பது அந்த பாடலுக்கு ஈடாகவே தெரிகிறது. பாராட்டுக்கள்.

 2. @@தனுசு

  கவிதைகளைத் தொடர்ந்து படித்து பாராட்டுக்களை வழங்கி வரும் தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் நண்பரே!

 3. ஏடெனப் புரட்டி விழிகளைத் திறக்கும்
  அழகே அழகுதான்…!

 4. //ஏடெனப் புரட்டி விழிகளைத் திறக்கும்

  அழகே அழகுதான்…!//

  கவிதைகளை வாசித்து இரசித்தமைக்கு நன்றி திரு.செண்பக ஜெகதீசன் அவர்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *