நாகேஸ்வரி அண்ணாமலை

கிட்டத்தட்ட கென்யர்கள் எல்லோரும் தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை.  தங்க நகை அணிந்து நாங்கள் பார்த்த ஒரே பெண் நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் வரவேற்பாளர் மட்டுமே.  இவரும் ஒரு மெல்லிய செயினைக் கழுத்திலும் சிறு வளையம் போன்ற காதணிகளைக் காதுகளிலும் அணிந்திருந்தார்.  எங்களைப் பார்க்க வந்திருந்த மாணவ நண்பனின் மனைவி காதில் சிறிய காதணி அணிந்திருந்தார்.  இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் தங்க நகைகள் அணிந்திருக்கவில்லை.

பாரம்பரிய உடைகளை நைரோபியில் யாரும் அணிந்திருக்கவில்லை.  எல்லோரும் மேற்கத்திய உடைகளுக்கு மாறியிருக்கிறர்கள்.  தினம் தினம் நைரோபியின் பல இடங்களில் கூடும் சந்தை போன்ற இடங்களில் மட்டும் சிலர் பாரம்பரிய உடைகள் அணிந்திருந்தார்கள்.

இன்னும் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து மாறாமல் வாழும் பழங்குடி மக்களைத் தவிர மையநீரோட்டத்தில் சேர்ந்துவிட்ட கென்யர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்.  இது ஆங்கிலேயர்கள் இவர்களை ஆண்டதின் காரணமாக இருக்கலாம்.  பலர் தீவிர கிறிஸ்துவர்கள்.  எல்லோருக்கும் பெற்றோர் கொடுத்த பெயர்கள் பால், ஜேக்கப், பாலின், கேத்தி, மெர்சி, டிக்கன்ஸ், கெல்வின், பிலிப் போன்ற கிறிஸ்தவப் பெயர்களே.  எங்கள் வீட்டு யூனிட்டில் தங்கியிருக்கும் மாணவர்கள் வீட்டின் வாசலில் இயேசு இந்த வீட்டின் அதிபதி (Jesus is the Lord of this house)  என்று ஒரு அட்டையில் எழுதித் தொங்கவிட்டிருப்பார்கள்.  அடிக்கடி கென்யாவிலிருந்து இங்கு வந்திருக்கும் மாணவர்களைக் கூட்டி கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுவார்கள்.  பிரார்த்தனை பண்ணுவார்கள்.  சில சமயங்களில் சில இந்தியர்கள் கூட இக்கூட்டங்களில் கலந்துகொள்வதுண்டு.

இவர்களுடைய திருமண பழக்க வழக்கங்களும் மேற்கத்திய நாகரீகத்தைத் தழுவியே இருக்கின்றன.  ஒரு முறை எங்கள் யூனிட்டில் இருந்த மாணவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது ‘இந்தியாவில் 90 சதவிகிதத் திருமணங்கள் பெற்றோர்களால்தான் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று நான் சொல்லப் போக அந்த மாணவர் ‘நாங்கள் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டுதான் திருமணம் செய்துகொள்கிறோம்’ என்றார்.  கென்யாவில் விவாகரத்துக்கள் எத்தனை சதவிகிதம் என்று தெரியவில்லை.  நாங்கள் முஸ்லீம்கள் யாரையும் சந்திக்கவில்லையாதலால் அவர்களிடம் இன்னும் ஒருவன் நான்கு பெண்களை மணந்துகொள்ளும் பழக்கம்இருக்கிறதா என்று தெரியவில்லை.  இன்னும் அந்தப் பழக்கம் இருப்பதாக கென்ய மாணவி ஒருத்தி கூறினாள்.  அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் தந்தை  முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர்.  அந்த வழக்கம் இருந்ததால்தான் அவர் கென்யாவில் மனைவி இருந்தும் பாரக் ஒபாமாவின் தாயை மணந்துகொண்டார்.

இன்னொரு முக்கிய விஷயம்.  எல்லோரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை காலணிகள் அணிந்திருந்தார்கள்.  மசாய் இன குடும்பத்தின் குழந்தைகள் கூட தோலில் செய்த ஒரு வகையான காலணிகளை அணிந்திருந்தார்கள்.  காலில் காலணிகள் இல்லாமல் – குழந்தைகள் உட்பட – நாங்கள் யாரையும் பார்க்கவில்லை.

இதை விட முக்கியமான இன்னொரு விஷயம் பள்ளிக்குச் சென்ற கென்யர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவது.  மசாய் இன குடும்பத்தைச் சேர்ந்த ஆறாவது வகுப்புப் படிக்கும் ஜேக்ஸனின் அண்ணன் மகள் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு  ஆங்கிலத்தில் தயங்காமல் பதில் கூறினாள்.  எங்கள் ஓட்டலில் அறையைச் சுத்தம் செய்யும் பெண்ணும் அப்படியே.  பிரயாண வழிகாட்டிகள் (இவர்களையாவது அது அவர்கள் தொழில் என்று விட்டுவிடலாம்), டாக்சி ஓட்டுநர்கள், கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் என்று இப்படி யாரை எடுத்துக்கொண்டாலும் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.  ஒரு மொழியை ஒருவர் நன்றாகக் கற்க வேண்டுமென்றால் ஓரளவு அவர் புத்திசாலியாக இருக்க வேண்டும், அந்த மொழி பேசப்படும் சூழ்நிலையில் இருக்க வேண்டும், அந்த மொழியில் நிறையப் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்ததெல்லாம் கென்யவில் சரி வரவில்லை.  பள்ளிக்குச் செல்லும் எல்லோருக்கும் ஆங்கிலம் பேச வருகிறது என்ற விஷயத்தைக் கென்யாவில் தெரிந்துகொண்டேன்.

நம் நாட்டில் பி.ஏ. படித்தவர்களால் கூட சரியாக ஒரு வாக்கியம் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை.  ஒரு விஷயத்தை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட ஆங்கிலத்தில் உரையாடத் திணறுகிறார்கள்.  இது ஏன் என்று கண்டுபிடிக்க வேண்டும்.  தாய் மொழிப் பற்று என்று ஆங்கிலத்தை ஒதுக்கிவிட்டோமெயொழிய தாய் மொழியிலும் பாண்டித்யம் பெறவில்லை.  என் கணவர் ஒரு மொழியியல் வல்லுநர்.  நான் அவரிடம், ‘என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது.  இந்தியாவிலும் கென்யர்கள் போல் எல்லோரும் நன்றாக ஆங்கிலம் பேச வேண்டும்.  கென்யாவில் என்ன செய்கிறார்கள் என்று கண்டுபிடியுங்கள்’ என்று கூறியிருக்கிறேன்.  கென்யா ஆங்கிலேயரின் கீழ் இருந்தது காரணம் என்றால் நம்மையும் அவர்கள்தானே முன்னூறு வருடங்கள் ஆண்டார்கள். பள்ளியில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்படும் முறையில்தான் நமக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இருக்க வேண்டும்.  இதை நாமும் எளிதாகச் செய்யலாமே.

ஆங்கிலம் அகில உலக மொழியாக வளர்ந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.  அதனால் இந்தியர்களாகிய நாமும் தாய் மொழியோடு ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி பெற வேண்டும்.  இதில் கென்யா நமக்கு முன்னால் இருக்கிறது.

நைரோபியின் தெருக்களில் மட்டுமல்ல, நாங்கள் பார்த்த சிறிய ஊர்களின் தெருக்களிலும் ஆடு, மாடுகளோ, நாய்களோ காணப்படவில்லை.  தெரு நாய்களை ந்கராட்சி கொன்றுவிடும் என்று கூறினார்கள்.  வீட்டில் நாய் வளர்க்கலாம்.  நாங்கள் பார்க்கச் சென்ற மசாய் இன மக்களிடம் இரண்டு நாய்கள் இருந்தன.  நம் நாட்டில் போல் மாடுகளைத் தெருவில் அலையவிடுவதில்லை.  அதற்கு இரண்டு காரணங்கள். அது சட்டப்படி குற்றம்.  இரண்டாவது, அவை திருட்டுப் போகும் அபாயம் இருக்கிறது.

சிறு கிராமங்களில் வசிப்பவர்கள் மாடுகளை வளர்த்தால் அந்த மாடுகளின் பாலைப் பக்கத்தில் உள்ள பால் பண்ணைகளுக்கு விற்பார்களாம்.  அங்கு அதிகமாக பால் சேர்ந்துவிட்டால் நைரோபியில் இருக்கும் தேசிய பால பண்ணைக்கு அனுப்பிவிடுவார்களாம்.  அங்கு பாக்கெட்டுகளாகத் தயாரிக்கப்பட்டுப் பல இடங்களுக்கும் அனுப்பப்படும்.  பெரிய டிபார்ட்மெண்ட் கடைகளில் இந்த பால் பாக்கெட்டுகள் கிடைக்கின்றன.  சிறிய கிராமங்களில் வசிப்பவர்கள் பக்கத்து வீடுகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் இருந்தால் அவர்களிடம் தங்களுக்குத் தேவையான பாலை வாங்கிக்கொள்வார்களாம்.

டாக்சி ஓட்டுநர்களைப் பற்றிக் கூறாவிட்டால் கென்யா பற்றிய வர்ணனை முடிவு பெறாது.  நாம் ஓட்டலுக்கு வரச் சொன்ன நேரத்திற்கு வந்துவிடுகிறார்கள்.  இங்கும் பேரம் உண்டு.  ஆனால் பேரம் பேசிய பிறகு கடைசியில் அதிகம் கொடுங்கள் என்று கேட்பதில்லை.  ஒரு ஓட்டுநர் செய்த காரியம் இன்னும் நினைவில் நிற்கிறது.  எங்களை ஹாண்டி உணவகத்திற்குக் கூட்டிச் சென்று, அங்கேயே காத்திருந்து பின் ஓட்டலுக்கு அழைத்து வருவதற்கு ஒரு தொகையைப் பேசிக்கொண்டோம்.  உணவகத்திற்குப் பக்கத்தில் டாக்சியை நிறுத்தினால் அதற்கு ஒரு கட்டணம் உண்டு.  அதையும் நாங்களே கொடுப்பதாக ஏற்பாடு.  இருப்பினும் இந்த ஓட்டுநர் என்ன செய்தார் தெரியுமா?  எங்களை உணவகத்தின் வாசலில் இறக்கிவிட்டுவிட்டு டாக்சியை நிறுத்துவதற்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லாத தெருவிற்குச் சென்று காத்திருந்திருக்கிறார். எங்கள் பணத்தை மிச்சப்படுத்த அவர் செய்த காரியம் இது.

எல்லா நாடுகளிலும் போல் கென்யாவிலும் சமூகத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருப்பது போல் தெரிகிறது.  ஒரு புறம் பரந்த இடங்களில் பெரிய வீடுகளைக் கட்டிக்கொண்டு வீட்டைச் சுற்றிலும் பெரிய கோட்டை மாதிரி மதில் சுவரைக் கட்டிக்கொண்டு காவலர்களை வைத்துக்கொண்டு வாழும் கென்யர்கள்.  இன்னொரு புறம் கால் கடுக்கப் பன்னிரெண்டு மணி நேரம் ஓட்டலின் வாசலில் நின்றுகொண்டு ஓட்டலுக்கு வருபவர்களை வரவேற்று அவர்கள் கொண்டுவரும் சூட்கேசுகளை அவர்களுடைய அறைகளுக்கு சுமந்துசெல்லும் பணியாளர்கள்.  இவர்கள் சம்பளம் மாதத்திற்கு 8,000 ஷில்லிங்குகள்தானாம்.  இந்தச் சம்பளம்  ஒருவருக்கே போதாது.  அமெரிக்க மாடல் மால்களில் பொருள்களை வாங்கிக் குவிக்கும் கூட்டம் ஒரு புறம்; தெருக்களில் கடை வைத்து வியாபாரம் செய்யும் கூட்டம் இன்னொரு புறம்.  தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்கள் பல மைல்கள் நடந்தே வேலைக்குச் செல்வதைக் கென்யாவில் பார்க்கலாம்.  எல்லோருக்கும் கட்டாயம் கொடுத்தாக வேண்டிய குறைந்த சம்பளமாக 7500 ஷில்லிங்கை அரசு நிர்ணயித்திருந்தாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லையாம்.

மருத்துவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ஷில்லிங் சம்பளமாம். இதற்குமேல் தனியாக கிளினிக் நடத்தலாம். பேர்பெற்ற வழக்கறிஞர்களுக்கு மாதம் ஐந்து லட்சம் ஷில்லிங் வரை வருமானம் இருக்குமாம்..  அதனால்தான் இங்கு வரும் கென்ய மாணவர்களில் முக்கால்வாசிப் பேர் சட்டம் படிக்கிறார்கள் போலும்!  இந்தியாவும் கென்யாவும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததால் கிட்டத்தட்ட இரண்டு நாட்டு அரசியல் சட்டங்களுக்கும் ஒற்றுமை இருந்தபோதிலும், இந்தியாவில் சட்டம் படித்துவிட்டுப் போகும் மாணவர்கள் கென்யாவில் இன்னொரு தேர்வு எழுத வேண்டுமாம்.  கென்யாவில் பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்யும் பழக்கம் இல்லையாம்.  ஒரு முறை ஒரு மாணவனிடம் ‘இந்தியக் கல்வித் திட்டத்தில் மனப்பாடம் செய்வதுதானே முதன்மையாக இருக்கிறது.  அதை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’ என்று கேட்டபோது  ‘விரிவுரையாளர்கள் பாடக் குறிப்புகளை ‘டிக்டேட்’ செய்யும்போது அதை எழுதிக்கொள்வோம்;.  அதன் துணையைக் கொண்டு பின் பாடப் புத்தகங்களைப் படித்துக்கொள்வோம்’ என்றான்.  தேர்வுகளில் விரிவுரையாளர் ‘டிக்டேட்’ பண்ணியதை அப்படியே எழுதுவதில்லை.  அப்படி எழுதாவிட்டால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்காது என்று இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.  இருப்பினும் டிக்டேட் பண்ணியதை இவர்களால் எழுத முடியவில்லை.  மேலும் இவர்கள் தேர்வுகளில் தொண்ணூறு, நூறு சதவிகிதம் மதிப்பெண்கள் எதிர்பார்ப்பதில்லை.  ஏனெனில் இவர்கள் இந்தியாவில் உள்ள நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்பதில்லை.  ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்கள் வாங்கி பட்டம் பெற்றுவிட்டால் போதும்.  அவர்கள் நாட்டிற்குப் போய் அங்குள்ள தேர்வுகளை எழுதிக்கொள்வார்கள்.  அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கலவியின்மூலம் பெறும் பட்டத்திற்கும் கென்யாவில் மதிப்பு உண்டாம்!

கென்யாவில் சுதந்திரத்திற்குமுன் ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் இருந்ததாம்.  இப்போது பத்துக்குமேல் இருக்கின்றனவாம். இவற்றொடு இணைந்த் கல்லூரிகளும் இருக்கின்றன. அங்கு கல்லூரியில் சேருவதற்கே பெரிய போட்டி இருக்கும்.  ம்திப்பெண் குறைவாக இருந்தால கல்லூரிக் கட்டணமும் மிகவும் அதிகம்.  இக்காரணங்களால் கென்ய மாணவர்கள் இந்தியாவிற்குப் படிக்க வருகிறார்கள். இங்கு ஆங்கிலம் வழி கல்வி பயில முடிவதும் ஒரு காரணம்.  சில கென்ய மாணவர்கள் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு அந்த நாடு உதவித்தொகை தருவதால் செல்கிறார்களாம்.  அங்கு முதல் ஆண்டு கொரிய மொழியைக் கற்க வேண்டும்.  அந்த நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்காக ஆங்கில மீடியம் உள்ள பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. பணவசதி உள்ள கென்யர்கள் அங்கு சேர்ந்து படிப்பார்கள்.

நான் இது வரை பார்த்த நாடுகள் பலவும் வளர்ந்துவிட்ட நாடுகள்.  இந்தியாவைப் போல் வளர்ந்துகொண்டிருக்கும் கென்யாவைப் பார்த்தது ஒரு புதிய அனுபவம்.  இந்தியாவில் உள்ளதைப் போல் வறுமை, லஞ்சம், அரசியல் அடிதடிகள் போன்ற சில கூறுகள் இருந்தாலும் பொது இடங்களில் சிறுநீர் கழித்தல், கண்ட இடங்களில் எச்சில் துப்புதல் போன்ற அநாகரீகப் பழக்கங்கள் கென்யாவில் இல்லை.  இது கென்ய கலாச்சரத்தின் வெளிப்பாடு.

நைரோபியின் படங்கள் இந்த இணைப்பில் பார்க்கலாம்.

https://picasaweb.google.com/108173580006522327175/ScenesFromNairobi?authkey=Gv1sRgCIellMKNpa7szgE

 

படங்கள். மெல்லியல்

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “கென்யா பயணம் – 8

  1. வல்லமையில் 100வது பதிவை வெளியிட்டிருக்கும் முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ….. தேமொழி 

  2. ஆழமான, எளிமையான, அர்த்தமுள்ள ஆக்கங்களை அளித்து வரும் நாகேஸ்வரி அம்மா அவர்கள், வல்லமையில் 100ஆவது பதிவை வெளியிட்டிருப்பது, வல்லமைக்குப் பெருமை. அவரது பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகள்.

  3. பாரம்பரிய கலாச்சாரங்களை விடுத்து கென்யர்களும் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கிக் கிடப்பது வருத்தமளிக்கிறது.

    தங்களது எழுத்து என்னும் கண்ணாடியின் மூலம் கென்யாவின் முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

    நூறாவது பதிவை வழங்கி இருக்கும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.