அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (12)

0

12. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – ஸ்பெயின்

சுபாஷிணி ட்ரெம்மல்

ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை கவனிக்கும் போது ஒவ்வொரு நாடும் அதன் இப்போதைய நாட்டு எல்லையை அடைய குறிப்பிடத்தக்க போர்களை சந்தித்து வெற்றிகளையும் தோல்விகளையும் மாறி மாறி அனுபவித்து அவை கடந்து வந்திருக்கும் பாதையை ஒதுக்கி வைத்துப் பார்த்து விட முடியாது. சரித்திரத்தில் மிகப் பல மாற்றங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்த ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயினும் அடங்குகின்றது.

ஸ்பெயினின் எல்லை நாடுகளாக இன்று இருப்பவை போர்த்துக்கலும் பிரான்சும். ஏறக்குறைய 35,000 ஆண்டுகளாக மனித வாழ்க்கை இருந்திருப்பதற்கான தடயங்கள் இங்கு தென்படுகின்றன. ரோமானிய பேரரசு தனது ஆளுமையை விரிவாக்கிய போது இன்றைய ஸ்பெயினின் எல்லைக்குள்ளும் வந்தது இந்தப் பேரரசு. சில நூறு ஆண்டுகள் ரோமானிய ஆட்சி, பின்னர் 8ம் நூற்றாண்டு தொடக்கம் மூரிய இஸ்லாமியர்களின் கைக்குள் ஸ்பெயின் வந்துவிட இஸ்லாமிய கலைகள் பெருகி வளர்ந்த ஒரு மேற்கு ஐரோப்பிய நாடாக அக்கால கட்டத்தில் ஸ்பெயின் விளங்கியது. அக்காலகட்டத்தில் நாடெங்கிலும் பதிந்து போன இஸ்லாமியக் கலைகளும் கலாச்சாரமும் கட்டிடக் கலையும் இன்றும் மறையாமல் ஸ்பெயினின் சில நகரங்களில் இருக்கின்றன.

12ம் நூற்றாண்டு தொடங்கி, 13, 14ம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற பல போர்களில் ஆயிரக்கணக்கான போர் வீரர்களின் மரணத்தைத் தாண்டி இஸ்லாமிய ஆட்சி முற்றிலுமாக ஸ்பெயினிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டது. மீண்டும் கத்தோலிக்க கிறிஸ்துவ ஆட்சி ஸ்பெயினைக் கைப்பற்றி மிகுந்த ஆளுமையுடனும் தீவிரத்துடனும் நாடு முழுமைக்கும் கத்தோலிக்க மதம் சார்ந்த அரசாக உருவாகியது. மூரிய இஸ்லாமியர்களால் அழிக்கப்பட்ட மறைக்கப்பட்ட தனது முந்தைய பாரம்பரியத்தை மீட்டெடுத்தது இந்தப் புதிய அரசு. இந்த முயற்சிகளோடு இப்புதிய அரசின் செயல்பாடுகள் நின்று விடவில்லை.

கடல் போரினை விளக்கும் ஒரு 17ம் நூற்றாண்டு ஓவியம் (2013)
கடல் போரினை விளக்கும் ஒரு 17ம் நூற்றாண்டு ஓவியம் (2013)

ஸ்பெயின் இப்போதைய போர்த்துக்கலையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்ததோடு உலகம் முழுதும் தனது பராக்கிரமத்தை நிலை நாட்ட கடல் வழி பயணத்தில் கவனம் செலுத்தி மிகத்தீவிரமாக பல மாலுமிகளையும் ஆய்வாளர்களையும் இப்பணியில் அமர்த்தியது. வணிகம், புதிய நிலப்பரப்பை கண்டு பிடித்தல் அங்கு தனது ஆளுமை விரிவாக்கம் செய்தல் என்பவை இதன் முக்கிய நோக்கமாக இருந்த போதிலும் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதையும் அதன் தலையாய நோக்கமாகக் கொண்டு இயங்கியது இந்தப் புதிய அரசு. ஸ்பெயின் அரச பரம்பரையினர் போர்த்துக்கல் மாலுமிகளுக்கு மிகுந்த பொருளுதவியும் தேவையான அனைத்து ஏற்பாட்டு வசதிகளையும் செய்து கடல் வழி பயணத்தை ஊக்குவித்தது. அந்த முயற்சிகளின் பின்னனியில் அமைந்த பயணத்தின் காரணத்தினால் தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த வரலாற்று முக்கியத்துவம் பொருந்திய நிகழ்வு நடபெற்றது; வாஸ்கோ ட காமா இந்தியா வந்ததும் நிகழ்ந்தது. கடல் வழி பயணத்தில் ஏனைய ஐரோப்பிய முயற்சிகள் மீண்டும் ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியா வந்து பின்னர் மலாயா தீபகற்ப இந்தோனேசிய தீவுகளை அடைந்ததும் பின்னர் மேலும் பயணத்தை விரிவாக்கி கொரியா, சீன வழிப் பயணங்களை மேற்கொண்டதும் என புதிய பாதைக்கு ஆதாரமாக அமைந்தது இந்த முயற்சிகளின் தொடர்ச்சிகள். இந்த மாலுமிகள் ஈடுபட்ட கடல் வழி பயண ஆய்வுகளின் வழியாக ஆய்வு உலகில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன. மிக முக்கியமாக இன்றைய உலகின் பல நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு தாக்கமும் அடிப்படையும் கொடுத்த பெருமை இந்த வகை முயற்சிகளையேச் சாரும்.

கடல் வழி பயணம் மேற்கொண்டு இந்த மாலுமிகளும் ஆய்வாளர்களும் மேற்கொண்ட பயணங்களினால் ஸ்பானிஷ் மொழி உலகின் சில குறிப்பிடத்தக்க நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழியாக ஆகியிருக்கின்றது. உருளைக்கிழங்கு, மிளகாய், முந்திரி, தக்காளி போன்ற தாவர உணவுகள் ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளுக்கு அறிமுகமாகின. கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் அமெரிக்கா முழுமைக்கும், ஆசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக இந்தியாவிலும் காலூன்றியது.

ஸ்பேனிஷ் மாலுமிகள் இவ்வகைப் பயணங்களில் செல்லும் போது தமது கப்பலில் கத்தோலிக்க மத குருமார்களையும், போர் வீரர்களையும், அரச பிரதி நிதிகளையும், வணிகர்களையும் சேர்த்தே அழைத்துச் செல்வார்களாம். ஓரிடத்திற்கு வணிக நோக்கமாகச் சென்று, உள்ளூர் அரசியல் பிரமுகர்களிடம் ஸ்பேனிஷ், போர்த்துக்கீஸிய அரச தூதுவர் வழியாக நட்புறவை உருவாக்கிக் கொண்டு பின்னர் அங்கே உள்ளூர் மக்களை ஏதாவது ஒரு காரணத்தினால் கத்தோலிக்க மதத்திற்கு மதம் மாற்றுவதும் பின்னர் தக்க வாய்ப்பு அமைந்தால் அரசியல் ரீதியாக தமது முயற்சிகளைத் துவக்கி நாட்டை கைப்பற்றுவதும் என்பது குறிப்பிடத்தக்க வகையில் நிகழ்ந்துள்ளன. இவர்களின் இந்த திட்டமிட்ட பயணத்தினால் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்தது ஸ்பேனிஷ் அரசு. தாம் போரிட்டு வென்றோ அல்லது தந்திரமாகவோ கைப்பற்றும் நாடுகளிலும் நகரங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பொன்னும் மணியும் வைரங்களும் வைடூரியங்களும் ஸ்பேனிஷ் அரச மாளிகையில் அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஸ்பெயின் நாட்டின் வளத்தை இவை பெருக்கிக் கொண்டிருந்தன.

15ம் நூற்றாண்டு தொடங்கி ஸ்பேனிஷ் அரசின் பொருளாதார உதவியுடன் போர்த்துக்கீஸிய மாலுமிகள் மேற்கொண்ட கடல் பயணங்களின் போது உலகின் வெவ்வேறு பூகோளப்பகுதிகளிலிருந்து தேடிக் கொண்டு வந்து சேர்த்த விலை மதிக்க முடியாத பொருட்கள் அனைத்தும் இப்போது ஸ்பெயினின் பல நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களை நிரப்பியிருக்கின்றன. இந்த வரலாற்று தொன்மை மிக்க பொருட்களையெல்லாம் அதன் அருமை பெருமை உணர்ந்து உலகத்தரம் நிறைந்த ஆய்வுத்தரம் பொருந்திய பிரமாண்டமான அருங்காட்சியகங்களை ஸ்பெயின் நிருவியுள்ளது. தனது ஆளுமை எந்தெந்த நாடுகளிலெல்லாம் நிருவப்பட்டதோ அங்கிருந்தெல்லாம் கொண்டு வரப்பட்டு தனியார் சேகரிப்பாகவும் அரச சேகரிப்பாகவும் அமைந்த அனைத்து பொருட்களும் அதனதன் நோக்கத்திற்கேற்ற வகையில் இனம் பிரிக்கப்பட்டு வெவ்வேறு பிரத்தியேக அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டு இப்பொருட்கள் எல்லாம் இப்பிரமாண்டமான எழில் நிறைந்த கட்டிடங்களில் காட்சிக்கு வைக்கப்ப்பட்டுள்ளன.

ஸ்பெயினில் இதுவரை நான் ரோண்டா, மலாகா, கோர்டோபா, டொலேடோ, ஸ்பெயினின் தலைநகர் மட்ரிட் ஆகிய பெரும் நகரங்களுக்குச் சென்று வந்திருக்கின்றேன். ஸ்பெயினுக்குச் சொந்தமான கனேரித் தீவுகளை இங்கு தற்சமயம் குறிப்பிட அவசியமில்லை என்பதாலும் அதன் சிறப்புகள் ஸ்பெயின் தீபகற்பத்திலிருந்து வேறுபடுவதாலும் கனேரித் தீவுகளில் உள்ள அருங்காட்சியகங்கள் பற்றி வேறொரு முறை குறிப்பிட நினைத்திருப்பதாலும் இத்தீவுகளின் அருங்காட்சியகங்களை இப்பதிவில் ஒதுக்கிவிடுவது சிறப்பு என்றே கருதுகிறேன். அந்த வகையில் இந்த நான்கு மிகப் பெரிய நகரங்களிலும் நான் சென்று பார்த்து தகவல் பதிந்து கொண்டு வந்த அருங்காட்சியகங்கள் 30க்கும் மேற்பட்டவை.

இந்த 30க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களில் எதிலிருந்து தொடங்குவது எதில் முடிப்பது என்பது எனக்கு ஒரு சோதனைதான். ஆனாலும் ஸ்பெயின் நாட்டினை என் மனதில் நினைத்தால் கடல் பயணமும் அதன் தொடர்பான நிகழ்வுகளும் தான் மனதில் வந்து அலை மோதுகின்றன. ஆக மட்ரிட்டில் அமைந்திருக்கும் Museo Naval அதாவது (Naval Museum) கடல்வழிப்பயண அருங்காட்சியகம் முதலாகத் தொடங்கி இந்த நாட்டின் அருங்காட்சியகங்களை அறிமுகப்படுத்துவதே தகும் என்று கருதுகிறேன்.

அருங்காட்சியகத்தின் வாசல் பகுதி (2013)
அருங்காட்சியகத்தின் வாசல் பகுதி (2013)

பயணம் செல்ல ஆயத்தமாகி விட்டீர்களா..? நம் பயணத்திற்கான கப்பலும் அதன் மாலுமியும் காத்திருக்கிறார்கள். வாருங்கள் செல்வோம்..!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *