நான் அறிந்த சிலம்பு – 95
புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
கவுந்திஅடிகள் வாழும் பள்ளியை அடைதல்
காத தூரம் கடந்து சென்று
பூக்கும் மரங்கள் இருந்த சோலையில்
கவுந்தியடிகள் எழுந்தருளிய
தவச்சாலையைக் அடைந்து
அங்கிருந்த பூஞ்சோலையில்
இருவரும் தங்கினர்.
கண்ணகியின் வினாவும், கோவலன் உரைத்த விடையும்
இற்றுவிடுமோ என்று ஐயப்படும்படி
கொடி போன்ற இடையையும்
நடந்து வந்த களைப்பால்
மிகவும் வருந்திய பாதங்களையும் கொண்ட
கருங்கூந்தல் கண்ணகி பெருமூச்செறிந்தனள்.
தன் கூரிய பற்கள் வெளியே தெரியும்படி
முற்றாத தன் மழலைச் சொல்லாலே
கோவலனை வினவினள்:
“மதுரை மூதூர் இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது?”
கண்ணகியின் அறியாமையும் துயரும் கண்டு
வருந்திய கோவலன் தானும் வருந்தி,
“நறுங்கூந்தல் உடையவளே!
மதுரை மாநகர் இன்னும்
முப்பது காத தூரத்தில் உள்ளது” என்றனன்.
கோவலனும் கண்ணகியும் அறப்பள்ளியில் இருந்த கவுந்திஅடிகளைத் தொழுதல்
அதன் பின்னர்,
தேன் போன்ற மொழியுடைய கண்ணகியோடு
தவச்சாலைக்குச் சென்று
கவுந்தியடிகளின் திருவடிகளில்
வீழ்ந்து வணங்கினன் கோவலன்.
கவுந்தி அடிகளின் வினாவும் கோவலனது மறுமொழியும்
“அழகும் உயர்குடிப் பிறப்பும்
பெருமை தரும் ஒழுக்கமும்
அருக தேவனின் ஆகமவிதிகள்
பிறழாமல் கடைப்பிடிக்கும் நீங்கள்
தீவினை செய்தவர்களைப்போல்
உங்கள் நாட்டை விட்டு நீங்கி
இங்கே வருவதற்குக் காரணம் யாது?” எனக்
கவுந்தியடிகள் கேட்க,
கோவலனும்,
“அருந்தவத்தை உடையீர்!
மதுரை நகர் சென்று
வாணிகம் செய்து
பொருளீட்ட விரும்புகிறேன்
என்பதைத் தவிர
வேறொன்றும் சொல்லும்
நிலையில் நான் இல்லை…”
என மறுமொழி பகர்ந்தனன்.