இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
திருவேங்கடவனை சிலப்பதிகாரம் சங்கு சக்கரதாரியாகவும் மேலே வானமே கூரையாகவும், அந்த திறந்த வான் வெளியில் இரண்டு பக்கத்திலும் சூரியனும் சந்திரனும் தரிசனம் செய்து கொண்டிருக்க, தன்னந்தனியாளாக வேங்கடமலையில் நின்ற நெடுமாலாக வர்ணிக்கிறது. ஐந்தாம்/ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாக சொல்லப்பட்ட முதல் மூன்று ஆழ்வார்கள் திருவேங்கடவனை சிவகேசவனாக தரிசித்துப் பாடி மகிழ்ந்தார்கள். பின்பு வந்த குலசேகர ஆழ்வாரும், நம்மாழ்வாரும், திருமங்கை மன்னனும், திருவேங்கடவனை திருமாலாக பாவித்து பாடல் அருளினார்கள். தமிழ்த்தாயின் தவச் செல்வி ஆண்டாளோ சாட்சாத கண்ணனாக, தன் மணாளனாக திருவேங்கடவனை தரிசித்து, அவனிடம் தன் காதலை எடுத்துச் சொல்லுமாறு மேகசந்தேசம் அனுப்பி வைத்தாள். அடுத்து வந்த அருணகிரியாரோ மாமன் மருகனான முருகனே எம் திருவேங்கடவன் என இரண்டு முத்தான தமிழ்பாடலால் புகழ்ந்தருளினார். தேவி பக்தர்களுக்கு அவன் ’அவளாய்’ மாறியதில் ஆச்சரியமே இல்லைதான். புத்தபிரானின் சீடர்களுக்கு எட்டடி உயர புத்தபிரானாய் காட்சி அளித்ததில் கூட வியப்பு இல்லைதான்.
’எவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்’ எனும் நம்மாழ்வார் வார்த்தைகள் பொய்த்துப் போகக்கூடாதே என்று அந்த சத்திய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு யார் மனதில் எப்படி தான் இருக்கவேண்டும் என நினைக்கிறார்களோ அப்படியே தன் உருவத்தை அவர்களுக்கு காண்பித்துக் கொண்டிருக்கும் மாயன் அவன் என்கிற உண்மை அறிந்தோர்களுக்கு அவன் என்றும் திருவேங்கடமுடையான். இன்னும் சொல்லப் போனால்.படித்த அறிஞர்களுக்குதான் இந்த வேற்றுமையே தவிர பாமரரான பக்தர்களுக்கு அவன் என்றென்றும் திருவேங்கடத்தான் மட்டுமே.
இதை மனதில் வைத்துதான் என்னுடைய ‘திருமலைத் திருடன்’ புதினத்தில் நாயகிகளில் ஒருத்தியை சைவப்பித்தாக வர்ணித்து அவள் திருவேங்கடவனை சிவனாகப் பாவித்து தரிசனம் செய்ததாகச் சொல்லியிருந்தேன். திருவேங்கடவன் ஒவ்வொருவருக்கும் பிரத்யட்ச தெய்வம். உண்மையில் அவனுக்கு மதமோ பிரிவினையோ ஒத்து வராது என்பதும், இவன் நம்மவன் என்ற உரிமையும் அவனைத் தரிசித்த அத்தனை பேரின் மனசாட்சியும் சொல்லத்தான் செய்யும்.
இது இப்படி இருக்க, இப்பேர்பட்ட இஷ்ட தெய்வமான இந்த திருவேங்கடவனுக்கு தமிழில் திவ்வியப்பிரபந்தம் தவிர்த்து அதிகம் பாடல்கள் இல்லையே என்று வருத்தப்பட்டதுண்டு. திவ்விய கவி என்பார் அழகான பாடல்கள் சில நூறு தீந்தமிழில் பாடியுள்ளார் என்பது ஒரு ஆறுதலான விஷயம். இதுகூட ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதே காலத்தில் அன்னமய்யா தெலுங்கில் பாடிய எத்தனையோ ஆயிரம் பாடல்களில் சில ஆயிரம் பாடல்கள் கிடைத்துள்ளது. ஆனாலும் தமிழ் என்றும் இனிமையான மொழியாயிற்றே.. செந்தமிழில் இறைவனைப் பாடும்போது அவன் அதிகம் மகிழ்வதாக எனக்கு ஏதோ ஒரு மயக்கமான நம்பிக்கை எப்போதும் உண்டு. (இந்த மயக்கம் தெளியக்கூடாது என்று அஞ்சுபவன் கூட.)
அந்த நம்பிக்கையின் உருவகமாக காப்பியக் கலைஞர் மீனவன் அவர்கள் திருவேங்கடத்தான் அந்தாதி பாடல்களை பதிவு செய்து வருவது என் மனதுக்கு ஒரு நிறைவைக் கொடுத்தது என்றே சொல்வேன். இந்த வாரத்தில் அவர் பதிப்பித்த சில பாடல்கள் திருமலைத் தேன் போல இனித்தது. ஒரு சில தேன் துளிகைளை நீங்கள் பருக, படிக்கக் கீழே காணலாம்.
தலைஆ யிரம்கொண்டான் தன்மேல் துயிலும்
நிலையான் தனையே நினையாய் – மலையப்பன்
காலைப் பணிந்தால் கர்மம் தொலைந்தங்கே
ஆலாய்ப் பரவும் அருள்.
அருளாளன் மாமலையான் ஆயிரமாம் சென்னிக்(கு)
உரியவன் தன்மேல் உறஙகும் – பெருமான்
பரந்தாமன் காலைப் பிடித்தார்தம் வாழ்வு
நிரந்தரமாய் வாழும் நிலைத்து.
நிலையாய்த் திருப்பதியான் நெஞ்சிற்குள் நின்ற
சிலையாளன் சீதரன் செல்வப் – பொலிவாளன்
மங்கை அலர்மேலு மார்பிருக்கத் தான்மகிழ்வான்
எங்குமிருப் பானென்(று) இயம்பு.
இயம்புதமிழ்ப் பாசுரங்கள் எல்லாம் அறிந்தே
வயங்குதிரு மாலவனை வாழ்த்தி – மயலகற்றும்
ஏழு மலையானை எங்கள் பெருமானை
வாழியவே என்றுநீ வாழ்த்து.
இதே போல திருச்சானூரில் குடியிருக்கும் இதய தெய்வம் அலர்மேல் மங்கையின் மீதும் இவர் அந்தாதி பாடியுள்ளார். திருவேங்கடத்தானின் புகழ் பரப்பும் காப்பியக் கவிஞர் மீனவன் அவர்களை இந்த வார வல்லமையாளராக கௌரவம் செய்வதில் பெருமை கொள்கிறோம். வாழ்க அவர் தமிழ்த் தொண்டு. திருவேங்கடத்தானின் அருள் கவிஞருக்கு பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுதல்கள்.
கடைசி பாரா: ‘தமிழ்த்தேனி’ யின் ‘மனக்குரங்கு’ கதையிலிருந்து:
எப்பவுமே எந்த ஒரு பொருளையும் எவ்வளவு ப்ரச்சனை இருந்தாலும் எவ்ளோ ஓய்ந்து போயிருந்தாலும் இரவு எவ்வளவு நேரமானாலும் அது அதுக்குரிய இடத்திலே வைக்கணும் னு எல்லாருக்கும் உபதேசம் செய்வார் சபேசன், அவரும் அப்படியே வைப்பார்