மராட்டிய நாடக உலகம்

12

தேவ்

Devமராட்டியம் இந்தியாவின் தொன்மைமிக்க வரலாற்றுப் பின்புலம் கொண்ட பகுதியாக இருந்து வருகிறது. அகத்திய முனிவரின் மனையாளான லோபாமுத்திரையும், நிடத அரசியான தமயந்தியும், கண்ணபிரானின் பட்ட மகிஷியான ருக்மிணிப் பிராட்டியும் விதர்பத்தைச் சேர்ந்தவர்கள்.மராட்டியரின் கைவினைத் திறத்தைச் சிலப்பதிகாரம் போற்றும்; கவிதைத் திறனை பாரதியார் போற்றுவார்.

விதர்பப் பிராந்தியத்தில் நிலவிய வடமொழி நடையை அறிஞர்கள் கொண்டாடுவர். மராட்டிய பாகத மொழிக் காப்பியமான ‘காதா ஸப்தசதி’ புகழ்பெற்ற  நெடிய இலக்கியம். மராட்டிய ஹரிகதைப் பாணி தென்னகம் முழுவதும் பரவியது. பெண்கள் பங்கேற்கும் மராட்டிய கிராமிய நடனமான ‘லாவணி’ தஞ்சைப் பகுதியில் ஆண்கள் ஒருவருக்கொருவர் கேலி செய்துகொண்டு பாடும் முறையின் பெயரானது. ’சக்கரவர்த்தித் திருமகள்’ திரைப்படத்தில் என்.எஸ்.கே , எம்.ஜி.ஆர் இருவரும் லாவணி பாடுவார்கள்.

பாரதிதாசனார் 47 நாடகங்கள் எழுதியிருப்பது நம்மில் பலருக்கும் தெரியாத செய்தி; அவற்றில் பல புத்தக வடிவம் பெறவில்லை. அறிஞர் அண்ணாவின் நாடகங்கள் புகழ் பெற்றவை. தொலைக் காட்சியின் வருகைக்குமுன் சென்னையில் பல நாடகக் குழுக்கள் இயங்கி வந்ததை இன்றைய தலைமுறையினர்  அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இயல்,இசை,நாடகம் மூன்றிலும் மராட்டியத்தின் பங்களிப்பு போற்றத் தகுந்தது. சிறந்த பாகத நூல்களும், பக்தி இலக்கியங்களும், நாடகங்களும் மராட்டியத்தின் கொடை.

இங்கு மராட்டிய நாடகத் துறைக்குள் சற்று நுழைந்து பார்ப்போம். பிற மொழி நாடகங்களைப் போலன்றித் திரைப்படம், தொலைக்காட்சி இவற்றின் போட்டியையும் சமாளித்து நிற்கும் அதன் வலிமை ! பெரு வியப்பைத் தூண்டும் அதன் 160 ஆண்டு கால வரலாறு !

நான்முகனார் தாளமிட, அம்மையப்பர் மனம் மகிழ நடமிடும் வேழமுகப் பெருமானை வழிபடாமல் இதைச் சொல்ல முடியுமா ?

தாண்ட³வ ந்ரு’த்ய கரீ க³ஜாநந||
தி⁴மிகிட தி⁴மிகிட பா³ஜே ம்ரு’த³ங்க³ |
ப்³ரஹ்மா தாள கரீ க³ஜாநந ||
தே²தீச கோடி ஸுரக³ண தா³டி |
மத்⁴யே சிவகௌ³ரீ க³ஜாநந ||

இலக்கிய வாதிகளும், நாடக ஆசிரியர்களும் முதலில் கற்பனை உலகில் சஞ்சரித்து அதை அணி செய்து படைப்பாக்குவதும், ஒரு காலகட்டத்தில் யதார்த்தச் சூழலுக்குத் திரும்புவதும் இயற்கையாக நிகழ்வதுதான். இந்திய மொழிகள் அனைத்திலும் இப்போக்கைக் காண முடியும். ’மனோன்மணீயம்’ நாடகப் பின்புலம், வசன நடை இவற்றுக்கும், ‘ஓரிரவு’ நாடகத்தின் நடைக்கும் இருக்கும் வேறுபாட்டைப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

விஷ்ணுதாஸ் பாவே அவர்களின் ‘சீதா சுயம்வரம்’ (1843) நாடகத்திலிருந்து தொடங்கிய மராட்டிய மேடை நாடகத்துறை விடுதலை இயக்கம் வலுப்பெற்ற காலத்திலிருந்து சமூக இயலின்பால் கவனம் செலுத்தத் தொடங்கியது. 1943ல் மராட்டிய நாடக நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மும்பை சௌபாதி கடற்கரையில் திறந்த வெளி நாடகங்கள் நடைபெற்றன. நாற்பத்தொன்று நாடகக் குழுக்கள் பங்கேற்ற இவ்விழா அக்காலத்தில் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றது.
புகழ்பெற்ற நாடக நிறுவனமான ‘லலித் கலா ஆதர்ச’ 2008 ல் நூற்றாண்டு விழாக் கொண்டாடியது. தம் 16ம் வயதில் இந்நிறுவனத்தில பொறுப்பேற்ற திரு.பாலசந்த்ர பெண்டார்கர் தமது 80ம் வயதிலும் திறமை குன்றாமல் நடித்தார்.

 

dinananthதீனாநாத் மங்கேஷ்கர் – இவர் பாடகி லதா மங்கேஷ்கரின் தந்தையார். இவரும் நாடக நடிகர்; பாடும் திறமையால் நாடகத் துறையில் நுழைந்தார். 75 ஆண்டு நீண்ட நாடக அனுபவம் வாய்ந்த சந்த்ரகாந்த் கோகலேக்கு  இவரே வழிகாட்டி. கோகலேஜீ 64 நாடகங்களில் நடித்துள்ளார். இவருடைய மகன் விக்ரம் கோகலேயும் ஒரு நடிகரே.

 

விஜய் தெண்டுல்கர்

மராட்டிய நாடகத்துக்குப் பன்முகத்தன்மை அளித்தவர் இம்மாமனிதர்.
சமூக முரண்களையும், நாகரிக வளர்ச்சியின் பொருளற்ற போக்குகளையும் நாடகமாக்கிய மராத்திய நாடக ஆசிரியர்களின் வரலாறு 1930களிலேயே தொடங்கியது. பால கந்தர்வா, கட்கார் போன்றோர் தொடங்கி வைத்த இழையின் நீட்சி விஜய் தெண்டுல்கரில் முழுமை அடைந்தது என்று சொல்ல வேண்டும். மஹேஷ் எல்குஞ்ச்வார், டி.பி.தேஷ்பாண்டே போன்ற நாடக ஆசிரியர்களையும், டாக்டர்.ஸ்ரீராம் லாகூ, விஜய மேத்தா போன்ற  கலைஞர்களையும், குமார் சஹானி, ஜாஃபர் படேல் போன்ற நாடக இயக்குநர்களையும் அளித்த மராத்திய நாடக வரலாற்றின் முத்திரைப் பெயர் விஜய் தெண்டுல்கர்.(டெண்டுல்கர் தவறான உச்சரிப்பு)
நாட்டின் நவீன வாழ்க்கை முரண்களை வெளிச்சம்போட்டுக் காட்டும்  ”சாந்ததா ! கோர்ட் சாலூ ஆஹே” (அமைதி! கோர்ட் நடந்து கொண்டிருக்கிறது), கன்யாதான், சகாராம் பைண்டர், காசிராம் கோத்வால், கமலா, கிதாடே (பிணந்தின்னிக் கழுகுகள்) போன்றவை அவர்தம் புகழ் பெற்ற நாடகங்கள்.
‘அமைதி! கோர்ட் நடந்து கொண்டிருக்கிறது’ நாடகம் அவரைப் பிரபலப்படுத்தியது. மரபார்ந்த உள்ளடக்கங்களிலிருந்து விலகி, சமூகத்தின் குறுகிய, தேவையில்லாத விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்கிய கிதாடே (கழுகுகள்) (1961), சகாராம் பைண்டர் (1972), காசிராம் கோத்வால் (1973), கமலா (1982), கன்யாதான் (1983) முதலான நாடகங்கள் அவரை தேசிய அளவில் அறிமுகம் செய்து வைத்தன.

பிராந்திய அடிப்படைவாத இயக்கங்கள் தோன்றக் காரணமான உளவியலைத் தெளிவாக வெளிக்காட்டும் காசிராம் கோத்வாலும், இந்தியச் சமுதாயம் பெண்களை  வாங்கி விற்கும்  சந்தைப்பொருளாக வைத்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிய கமலாவும் தேசிய அளவில் மக்களின் வரவேற்பைப் பெற்றதில் வியப்பில்லை. இந்திய நாடகத்தை உலக நாடக வரைபடத்தில் இடம்பெறச் செய்த பெருமை அவரது காசிராம் கோத்வாலுக்கு உண்டு. ஜாபர் படேலின் இயக்கத்தில் அந்நாடகம் மேற்கத்திய நாடுகளிலும் மேடையேற்றம்  பெற்றது. மராட்டியத்தில் துளிர் விட்ட தலித் இலக்கிய முயற்சியின் பின்னணியில் அவரது ’கன்யாதான்’ குறிப்பிட்டுச் சொல்லும்படியான நாடகம்.

கிதாடே –

1970ம் ஆண்டுவரை  இந்த நாடகத்தை அவரால் மேடையேற்ற முடியவில்லை. நிலவுடமை தந்த வசதிகளிலிருந்து மாறி, மேற்கத்தியக் கல்விமுறையால் ஒரு விதமான மேட்டுக்குடி வர்க்கமாய் உருமாறிய ஒரு குடு‌ம்பத்தின் ஒழுக்கச் சிதைவுகளையும், குடும்ப அமைப்பில் மறைமுகமாக இயங்கிவரும் வன்முறைகளையும் முகத்தில் அறைந்தாற்போல் வெளிப்படுத்தி அக் காலகட்டத்தில் பலரையும் மிரளச் செய்த நாடகம் அது.
அமைதி ! கோர்ட் நடைபெறுகிறது –

1956ல் வெளியான “பொறிகள்” Traps ( Friedrich Dürrenmatt)  என்பாரின் சிறுகதைத் தழுவலான இந்நாடகம் 1967ல்  மேடை ஏறியது. சோ அவர்களின் ’முகமது பின் துக்ளக்’ நாடகத்துக்கு முன்னோடியானது தெண்டுல்கரின் நாடகம் எனலாம்.

http://www.dailymotion.com/video/k6BSITLJEI3zTXXlY0#from=embed

மெல்ல மெல்ல விமர்சகர்களும்,  கல்வியாளர்களும் இவர்பால் பார்வை செலுத்த ஆரம்பித்தனர். பின்பு 1971ஆம் அண்டு சத்யதேவ் துபே இதைத் திரைப்படமாக்கினார். திரைக்கதை அமைப்பும் தெண்டுல்கர்ஜீதான். இந்நாடகம் 16 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

1972 ல் இவர் மேடையேற்றிய ‘சகாராம் பைண்டர்’ (இதுவும் ஒரு சமூக நாடகம்) இரண்டாண்டுகளில் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. தமிழில் மகாகவி பாரதியாராக நடித்த  ஸயாஜி ஷிண்டே பின்னர் இந்நாடகத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார் –

http://www.youtube.com/watch?v=Jui8L-N2PNU
சாதாரா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பிறந்த ஸயாஜி ஹிந்தி, மராட்டி, தெலுகு, தமிழ் sayaji
என்று எல்லா மொழிப்படங்களிலும் கலக்கி வருவது ஓர் அதிசயமே.

காசிராம் கோத்வால் நாடகம் மும்பைத் தமிழரின் நிர்வாகத்தில் இருக்கும் ஷண்முகானந்தா அரங்கில் நூறாவது மேடையேற்றம் கண்டது.
தெண்டுலகர் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மாணவர்களுக்கு ’மேடை நாடகம் எழுதுவது எப்படி?’ என்பதை போதித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  முழுநீள நாடகங்கள் 27, ஐந்து குழந்தைகள் நாடகங்கள், எட்டு ஓரங்க நாடகங்கள்,  மூன்று கட்டுரை நூல்கள், நான்கு சிறுகதைத் தொகுதிகள், நான்கு மொழிபெயர்ப்பு நாடகங்கள், ஒன்பது மொழிபெயர்ப்பு நாவல்கள் இவர் எழுதியவை. தெண்டுல்கர்ஜீ 2008ல் தம் 80ம் வயதில் காலமானார்.

ஐந்து பதின்மங்களுக்கு மேலான அனுபவம் வாய்ந்த ப்ரபாகர் பண்ஷிகர் நடித்த ‘தோ மீ நவேச்’(நான் அவனில்லை) 2,000 முறைகளுக்கு மேல் மேடையேறியது. காட்சி மாற்றத்திற்கான நேரத்தைக் குறைக்கும் சுழல் மேடை இந்த நாடகத்தில் புகுத்தப்பட்டது. பண்ஷிகர் ஜீ இந்த ஆண்டு ஜனவரியில் காலமானார்.

shriramடாக்டர்.ஸ்ரீராம் லாகூ புணே மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தவர். ஹிந்தி, மராத்தி, குஜராதிய மொழிகளில் 40 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் 20 மராத்திய நாடகங்களை இயக்கியுள்ளார்.

தெண்டுல்கர் ஜீயின் நாடகங்களில் கதாநாயகியாக நடித்த சுலபா தேஷ்பாண்டே உள்ளிட்ட ஒரு சிலர் தாதரில் உள்ள சாபில்தாஸ் பள்ளியில் நாடகப் பரிசோதனைப் பட்டறை நடத்தினர். இரு பதின்மங்களில் அது ’சாபில்தாஸ் நாடக மறுமலர்ச்சி இயக்கம்’ என்று பெயர் பெறுமளவில் ஓர் இயக்கமாகவே வளர்ந்தது.

இன்றைய மராட்டியத் திரைப்பட / தொலைக்காட்சி நடிகர்கள் பலர் சபில்தாஸ் குழுமத்தில் பயின்றவர்கள்.
தத்தா பகத் தலித் இயக்கத்தை வலுப்படுத்தும் நாடகங்களை எழுதினார். இளம் படைப்பாளி திரு.சந்தேஷ் கெய்க்வாட் எழுதிய ‘தந்த முக்த காவ்’ (சச்சரவில்லாத கிராமம்) அண்மையில் அரங்கேறிய தலித் நாடக வடிவம்.
’அயின் வஸந்தாத் அர்த்ய ராத்ரி’ (A Midsummer Night’s Dream by William Shakespeare) மும்பைப் பல்கலைக் கழகத்தின் நாடக அகாடமி அளித்த சிறந்த மொழிபெயர்ப்பு நாடகம். இதை இயக்கிய மிலிந்த் இனாம்தார் மேலும் பல நாடகங்களை அளித்து வருகிறார்.

யோகேஷ் சோமன்மும்பை, புணே இரு நகரங்களிலும் புகழ் பெற்ற நாடகக் குழுக்கள் உள்ளன. புணேயின் ’தியேட்டர் அகாடமி’ தேசிய அளவில் சோதனை முயற்சிக்கான ஒரு சிறந்த நாடகப் பட்டறை. புணே நகரில் வாழும் யோகேஷ் சோமன் என்பவர் 2,200 நாடகங்களின் கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாத்து வருகிறார். 1883ம் ஆண்டில் அரங்கேறிய நாடகங்களும் இதில் உள்ளன. மும்பையைப் போலன்றி புணே நகரின் ரசிகர் குழாம் மேடையில் ஆணும், பெண்ணும் நெருக்கமாக நடிப்பதை விரும்புவதில்லை.

’ஆவிஷ்கார்’ குழுமம் 150 நாடகங்களுக்கு மேல் மேடையேற்றி,43 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது; அமெச்சூர் கலைஞர்களுக்குப் பயிற்சியளிக்கும் பட்டறைகளும் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது. பயனடைந்தோர் பலர்.

பொதுவாக மேடை நாடகத்தின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு மக்கள் விரும்பும் வரை மேடை நாடகம் வாழ்வு பெறும் என்ற விஜய் தெண்டுல்கர்ஜீ அளித்த விடை நினைவு கூரத்தக்கது

பதிவாசிரியரைப் பற்றி

12 thoughts on “மராட்டிய நாடக உலகம்

 1. அன்புள்ள தேவ் அவர்களே சென்னையில் இயங்கி வந்த எம் ஆர் ஆர் தியேட்டர்ஸ் என்னும் நாடக் குழுவிலும( இயக்குனர் திரு விசு அவர்களின் அண்ணன் நடத்தியது,

  தூண்கள் விசு இயக்கிய நாடக் குழு நவ்ரங் ஆர்ட் தியேட்டர்ஸ்,

  போன்ற ப்ரபல நாடகக் குழுக்களில் பங்கு கொண்டு பல நாடகங்கள் நடித்தவன் நான்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

  ,

 2. நன்றி தேனி ஐயா,
  உங்கள் திரை/நாடக அனுபவங்களைப்
  பகிர்ந்து கொள்ளலாமே

  தேவ்

 3. அருமையான பார்வை தேவ் ஜீ! ,மராட்டிய மாநிலம் கண்ட மகான்கள்தான் எத்தனை பேர்! இங்கே நீங்கள் அளித்துள்ள விஷயங்கள் எதுவுமே நான் அறியாதவை ஆகவே ரசித்துப்படித்தேன்.

  மேடை நாடகத்தில் நடித்தஅனுபவம் எனக்கும் உண்டு. நாடகத்தைவிட ஒத்திகை நினைவுகள் மறக்க முடியாதவை!

 4. அருமை தேவ். பல இந்தித் திரைப்பட, தமிழ் திரைப்பட நடிகர்கள் மராத்தியர்கள்.. பெயர்பட்டியல் நீளம் என்பதால், மக்களையே கண்டுபிடிக்க முயலச் சொல்கிறேன் 😉

  சந்திரா

 5. நல்லது. மராட்டிய நாடகம் பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள். பரிச்சயமும் கொண்டுள்ளீர்கள். சந்தோஷம். ஆனால் அன்ணாதுரை, பாரதி தாசன் நாடகங்களைப் பேசும் அதே மூச்சில் மராத்தி நாடகாசிரியர்களைப் ப்ற்றியும் பேசுகிறீர்கள். விஜய் தெண்டுல்கர் முதலில் வசைச் சொற்களையும், வன்முறையையும் கையாண்டு பிரபலமாக முயன்றார்.(உ-ம் கிதாதே) பின் காபி அடித்து. டூரன்மா வின் ட்ராப் அல்லது ட்ரையல் நாவலைக் காபி அடித்து. சாந்த்தாதா கோர்ட் சாலு ஆஹே. அவரைப் பற்றித்தான் நிறைய எழுதியிருக்கிறீர்கள். உலகமும் அவரைத் தான் நிறைய புகழ்கிறது. எனக்கு என்னமோ மகேஷ் எல்குஞ்ச்வாரும் தேஷ்பாண்டேயும் முக்கியமானவர்களாக, ஆனால் துரதிர்ஷ்டம் விஜய் தெண்டுல்கரின் பிராபல்யம் கிட்டாது போனவர்கள். என்ன செய்ய.

  சினிமாவால் தமிழ் நாடகம் இருந்த இடம் தெரியாமல் போனது என்பார்கள். மராத்தி நாடகம் சினிமாவோடு அதுவும் அங்கு வேர்கொண்டிருக்கும் ஹிந்தி சினிமாவோடு போட்டி போடுகிறது. அங்கு நாடக ஆசிரியர்களுக்க்கும் நாடக நடகர்களுக்கும் சினிமா நக்ஷத்திர அந்தஸ்து உண்டு.

 6. பண்டிட் ​தேவ் ஜீ அவர்களுக்கு வணக்கம்.

  முன்னாளில், ​கோயில்திருவிழா நாட்களில் நாடகங்கள் ந​டை​பெறும், விடிய விடிய உட்கார்ந்து பார்ப்பார்கள். நான் சிறுவனாக இருந்த காரணத்தினாலும், நாடகங்களின் உள்ளார்ந்த ​பொருள் விளங்காத காரணத்தினாலும் அ​னேகமாகத் தூங்கிவிடு​வேன். இப்​போது நாடகங்கள் பார்க்க ஆ​சை. ஆனால் வாய்ப்பு இல்லாமல் ​போய் விட்டது. எல்லாம் ​தொ​லைக்காட்சி மயமாகிவிட்டது.

  எது நடிக்கப்படுகிறதா!
  அது​வே மக்களின் வாழ்க்​கையாக மாறிவிடுகிறது!!

  மராட்டிய நாடக உலகம் இவ்வளவு சிறப்புப் ​பெற்ற​தை அறிந்து ​பெருமிதம்​ ​கொள்கி​றேன்.
  ​மேலும்

  //1956ல் வெளியான “பொறிகள்” Traps ( Friedrich Dürrenmatt) என்பாரின் சிறுகதைத் தழுவலான இந்நாடகம் 1967ல் மேடை ஏறியது. சோ அவர்களின் ’முகமது பின் துக்ளக்’ நாடகத்துக்கு முன்னோடியானது தெண்டுல்கரின் நாடகம் எனலாம்.//
  என்ற ​செய்தியும் எனக்குப் புதியது!
  அந்த நாடகம் “​சோ”அவர்களின் ​சொந்தத வசனம் என எண்ணியிருந்​தேன்,

  அரு​மையான பயனுள்ள பல தகவல்க​ளை அளித்துள்ளீர்கள்.

  பண்டிட்ஜி அவர்களுக்கு எனது அன்பான பாராட்டுக​ளை த் ​தெரிவித்துக் ​கொள்கி​றேன்,

  அன்பன்
  கி.கா​ளைராசன்

 7. >>> விஜய் தெண்டுல்கர் முதலில் வசைச் சொற்களையும், வன்முறையையும் கையாண்டு பிரபலமாக முயன்றார்.(உ-ம் கிதாதே) பின் காபி அடித்து. டூரன்மா வின் ட்ராப் அல்லது ட்ரையல் நாவலைக் காபி அடித்து. சாந்த்தாதா கோர்ட் சாலு ஆஹே. அவரைப் பற்றித்தான் நிறைய எழுதியிருக்கிறீர்கள். உலகமும் அவரைத் தான் நிறைய புகழ்கிறது<<<

  திரு வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்களுக்கு

  வணக்கம். நீங்கள் சொல்வது உண்மைதான். ஆயினும் சில கருத்துகளை முன்வைக்கிறேன்.

  தெண்டுல்கர் ஜீ பிறவிலேயே இலக்கியவாதி. ஆறு வயதில் கதை எழுதியவர். ‘அர்த ஸத்ய’ திரைக் கதை, வசனம் இவருடையது. பொதுவாக எங்கள் தலைமுறை திரைப்படம் வழியாக நாடக உலகைக் காண்பது. இன்றைய தலைமுறையினரின் பார்வை இன்னும் வேறு நவீன ஊடகம் சார்ந்ததாக இருக்கும் வாய்ப்பே அதிகம்.

  ‘கிதாடே’ கதை அமைப்பு அப்படிப்பட்டது. தெண்டுல்கர் ஜீ கிராமச் சூழலிலிருந்து விடுபட்டபின் மும்பையின் ‘சால்’ எனப்படும் சாதாரணக் குடியிருப்புகளில் வாழ்ந்து பழகியவர். சமூக அவலங்களை முன் வைக்கும் நோக்கம் கொண்ட அவருடைய நாடகங்களில் காரமான வசன நடை தவிர்க்க இயலாதது; பெண்களின் இளமையையும் , உழைப்பையும் அனுபவித்து மேலாண்மை செய்யும் ஒரு கீழ்த்தரமான போக்கின்மீது அவர் காட்டும் கோபம் நியாயமானதே . ’சகாராம் பைண்டர்’ கூடத் தரமற்ற நாடகம் என்று கூறுவோர் உள்ளனர். கதைப்போக்கில் யதார்த்தமே இருப்பதாக எனக்குப் பட்டது. ஒருவித கவன ஈர்ப்பு உத்தி என்று சொல்வாரும் இருக்கின்றனர்.

  இவர் ‘அஷி பாகரே யேதி’ என்னும் நளினமான நாடகத்தையும் எழுதியுள்ளார். ஹிந்தி திரைப்படமாகவும் வெளியானது.

  மோஹன் அகாஷே, ஸுலபா தேஷ்பாண்டே, Dr.லாகூ (Rangayan theatre group) போன்றோர் புகழ் பெறக்காரணமானது இவரது எழுத்தால் என்பர் மும்பயிலேயே வாழும் நண்பர்கள்; தவறாகவும் இருக்கலாம். எனது மும்பை வாசம் 6 ஆண்டுகள்தான். ஸுலபா அவர்கள் திரைப்படத்திற்குப் போனாலும் சோதனை நாடக முயற்சிகளில் ஈடுபட்டுத் திறமை வாய்ந்த நடிகர்களை உருவாக்கினார்

  நன்றியுடன்
  தேவ்

 8. >> பல இந்தித் திரைப்பட, தமிழ் திரைப்பட நடிகர்கள் மராத்தியர்கள்.<<

  ஆமாம், சந்திரா சார்.
  லதாஜியின் குரல் இனிமை இணையற்றது.
  சி.ராமசந்த்ர சிறந்த இசையமைப்பாளர்; ஆசாத், அல்பேலா படங்களின் பாடல்கள் மிக இனிமையானவை. அஜய் – அதுல் இரட்டையரும் திறமையான இசையமைப்பாளர்கள்.
  ஹிந்துஸ்தானி இசையிலும் மராட்டியர் முன்னணியில் உள்ளனர். கலைத் துறையில் மராட்டியரின் பங்களிப்பு கணிசமானது

  தேவ்

 9. நல்ல சுவையான அலசல், ஊரில் இல்லாததால் இன்றுதான் உங்கள் மடலைப் பார்த்தேன். தகவல்களுக்கு நன்றி.

 10. வணக்கம் தேவ்.உங்கள் கட்டுரை நல்ல இடுகை.மராட்டிய நாடகம் குறித்த தகவல்கள் சுவையானவை.லாவணி பற்றிய சில தகவல்கள்.லாவணி என்ற மராத்திய வார்த்தைக்கு நாற்று நடுதல் என பொருள்.1600- களில் அந் நாட்டுப்புற இசைக்கலை மராட்டியர்களோடு,தமிழகத்துக்குள் வந்தது.முதலில் மராட்டிய மன்னர்களைப் புகழ்ந்து பாடப்பயன்படுத்தப்பட்டது.நாளடைவில் பல கதைகள் அதன் பாடல் வடிவத்துக்குள் புகுந்தது.சிவன் மன்மதனை எர்த்தானா இல்லையா என்னும் புராணக்கதையால் எரிந்த கட்சி- எரியாத கட்சி என விவாதக் கதைப் பாடலாக புகழ்பெற்றது.காமன் பண்டிகை என்னும் நாட்டுப்புற பண்டிகையின் போது லாவணி கச்சேரி பாடு பழக்கம் இப்படியாகத்தான் ஏற்பட்டது.இக்கலை குறித்து லாவணி என்ற பெயரிலேயே நான் ஒரு விரிவான ஆவணப்படத்தை 2 ஆண்டுகளுக்கு முன் இயக்கியுள்ளேன்.அதன் பிறகு இக்கலை பரவலான கவனம் பெற்றது.என் மின்னஞ்சலுக்கு தங்கள் தரவும்.தங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். ~~~ நேசமிகு ராஜகுமாரன் – 20-02-2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *