வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (13)

1

பவள சங்கரி திருநாவுக்கரசு

 

அவந்திகா என்ற பெயரைக் கேட்டாலே உள்ளம் பூரித்து, உடல் சிலிர்க்க ஆனந்தப் பரவசம் அடையும் தன் மனநிலையிலா, இத்தனை மெத்தனம். என்ன ஆயிற்று? கால மாற்றம்,எதையும் புரட்டிப் போடக்கூடிய சர்வசக்தி படைத்த ஒன்று அல்லவா?

மனித மனங்களில் ஏற்படுகிற மாற்றங்கள் மிக ஆச்சரியமான விசயம்தான். இன்று மிக ஆழ்ந்து நேசிக்கிற ஒரு விசயம் ஏதோ சில காரணங்களுக்காக, திடீரென, வேண்டாதவையாகவோ அல்லது பற்றில்லாமலோ சென்று விடுகிறது. அவந்திகாவிற்காக ஏங்கிக் கிடந்த காலம் போய் இன்று அவள் வருகிறாள் என்று தெரிந்தும் ஏனோ பெரிய உற்சாகம் இல்லை மனதில். பலவிதமான குழப்பங்களே மண்டிக் கிடந்தது.

மதியம் 2 மணிக்கு அவந்திகா வரக்கூடிய விமானம் வந்து சேரும் என தினேஷ் கூறியிருந்த்தால், விமான நிலையம் செல்ல வேண்டிய தேவையும் ஏற்பட்டது. ஏனோ அவனுக்குத் தனியாகச் சென்று அவளை அழைத்து வருவதில் நாட்டம் இல்லை. ரம்யாவை துணைக்குக் கூப்பிட்டு, அவளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு, அப்பவும் விடாமல் அவளை நச்சரித்து அவளையும் அழைத்துக் கொண்டு விமான நிலையம் செல்வதற்குள் பெரும்பாடாகிவிட்டது.இன்று லேசான மழைத்தூரல்….பழைய மாறனாக இருந்தால் இந்நேரம் எத்துனை ஹைக்கூ கவிதை பொழிந்திருப்பான். இன்று இருக்கும் மனநிலையில் அது சாத்தியமாகவில்லை.

“மாறன், என்னது இது பேச்சையேக் காணோம். ஒரே அமைதியாய் …..யோசனையா?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை ரம்யா. ஒரு யோசனையும் இல்லை”

“உன் ஆள் வரப்போறா. எத்தனைப் பெரிய விசயம் அது. நீ நினைச்ச மாதிரியே நடக்கப் போகுது. இப்ப போய் ஏதேதோ செண்டிமெண்ட்டா பேசிக்கிட்டு …”

ரம்யாவிற்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை மாறன். அவள் பேச்சிற்கு எந்த விதமான பிரதிபலிப்பையும் அவனால் காட்ட இயலவில்லை.மனம் மரத்துப் போன நிலையில் இருந்தது. நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஏதேதோ யோசனையில் மனம் குழம்பிய நிலையில் இருந்தாலும்,உள்ளத்தின் ஒரு மூலையில் ஒரு சின்ன மழைச்சாரல் சிலிர்க்கச் செய்து கொண்டிருந்ததையும் அவனால் தடை போட இயலவில்லை.அதன் காரணம் அவந்திகாவின் வருகைதான் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தான் மாறன்.விமான நிலையத்தை நெருங்கி விட்டதை ரம்யா சொல்லிக் கொண்டிருந்தது லேசாக காதில் விழுந்தது….’ஓ, இவள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாளோ….நான் அதை கவனிக்கவில்லையோ’………..

” மாறன், என்ன ஆச்சு நான் பாட்டுக்கு பேசிக்கிட்டிருக்கேன். அப்படி என்ன ஆழ்ந்த யோசனை? முகத்தை கொஞ்சம் நார்மலா வைச்சிக்கக் கூடாதா.”

“ ம்ம்…பார்க்கலாம். சரி அவந்திகாவிற்கு லஞ்ச்சிற்கு ஏதும் ஏற்பாடு செய்திருக்கிறாயா.லோக்கல் விமான சேவையில் ஒன்னுமே சாப்பிட கொடுக்க மாட்டான்.இல்லைன்னா போகும் வழியிலேயே ஏதாவது ரெஸ்டாரெண்ட் போகலாமா…”

“ அடப்பாவி….இந்நேரமா நான் கரடியா கத்திக்கிட்டு இருந்தது உன் காதில விழலியா? எந்த உலகத்துல இருக்கறப்பா நீ…போகிற போக்கில் அப்படியே பட்டிணத்தார் போல போயிடுவ போல…”

“ அட ஏன் ரம்யா நீ வேற. ஏதோ நினைவா இருந்துட்டேன். சரி சொல்லு நேரமாச்சே , சமைச்சியா இல்லையா.”

“அதைத்தானே சொல்லிக்கிட்டிருக்கேன். உனக்கும் சேர்த்துத்தான் சமைத்து வைத்திருக்கிறேன். நீயும் வா, நாமெல்லாம் சேர்ந்து இன்னைக்கு சாப்பிடலாம்”

“இல்லை ரம்யா.எனக்கு இன்னைக்கு மூட் இல்லை. நான் வீட்டிற்குப் போய் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும்.இன்னொரு நாள் வருகிறேன்”

“ஏன் சாப்பிட வேண்டாமா.சாப்பிட ஏதும் ஏற்பாடு செய்த மாதிரி தெரியவில்லையே…..ஒழுங்கா வந்து சாப்பிட்டுப் போ, ரொம்ப ஃபீலிங்கஸ் வேணாம்ப்பா…..போர் அடிக்குது”

இதற்குமேல் அவளிடம் வாதம் பண்ணும் எண்ணமும் இல்லாதலால் அமைதியாக இருந்ததை, ரம்யாவும் சம்மதமாக எடுத்துக் கொண்டு அவந்திகாவின் வருகைக்காக இருவரும் காத்திருக்க ஆரம்பித்திருந்தனர்.

காலை மணி 5 அடித்தால் போதும், ராமச்சந்திரன் அதற்கு மேல் ஒரு நொடி கூட படுக்கையில் இருக்க மாட்டார்.எழுந்தவுடன் காலைக்கடன், நடைப்பயணம், குளியல், சந்தியாவந்தனம், மனைவிக்கு சின்ன சின்ன உதவிகள் இப்படித்தான் அவருடைய காலை வேளைகளில் பொழுது பறக்கும்.ஆனால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்ட இந்த சமீப காலங்களில் பல மாற்றங்கள் அவருடைய அன்றாட செயல்களில்கூட!இது சற்று மன அமைதியைப் பாதித்திருந்தாலும் அனு அவ்வப்போது நேரில் வந்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் உற்சாகப்படுத்த முயற்சி செய்து கொண்டிருப்பதே மனதிற்கு நிறைவாக இருப்பதையும் உணரமுடிந்தது அவரால்.இப்பொழுதெல்லாம் வாசலில் இருசக்கர வாகனச் சத்தம் கேட்டாலே அது அனுவாக இருக்குமோ என்று மாலை வேளைகளில் கண்கள் தேடத் துவங்கியிருந்தது. காரணம் பெரும்பாலும் மாலை வேளைகளில் அனு ஏதோ வேலை காரணமாக வர வேண்டியதாக இருக்கும்.

பெற்றோரிடம் பேசுவதற்காக மாறன் எப்போது போன் செய்தாலும் இப்போதெல்லாம் பாதி நேரம் அனுப்புராணம் தான் கேட்க வேண்டியிருப்பதாக இருப்பதையும் தவிர்க்க இயலவில்லை அவனால்.தந்தையின் குரலில் இருக்கும்  உற்சாகம் அவனை மகிழ்ச்சியோடு, அனுவிற்கு நன்றி சொல்லவும் தோன்றத்தான் செய்தது.அம்மாவின் மகிழ்ச்சியும் வெளிப்படையாகவேத் தெரிந்தது. பெற்றோர் அமைதியாக, பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டுமென்பது தானே ஒரு மகனின் கடமையாக இருக்க முடியும். அந்த வகையில் மாறனையும் நிம்மதியாக வைத்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் பெற்றோருக்கு இருந்ததும் நிதர்சனம்.

இந்தச் சூழலில் மாற்றங்கள் வரும்போது அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை காலம் தானே பதில் சொல்ல முடியும்?

தொடரும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (13)

  1. ‘…அவந்திகாவிற்காக ஏங்கிக் கிடந்த காலம் போய் இன்று அவள் வருகிறாள் என்று தெரிந்தும் ஏனோ பெரிய உற்சாகம் இல்லை மனதில். பலவிதமான குழப்பங்களே மண்டிக் கிடந்தது…’

    => உளவியல் நோக்கில், இது ஒரு மனித இயல்பு, மென்மையானது. உற்சாகம் இருக்கத்தான் இருக்கிறது. ‘குழப்பம்’ சில சமயங்களில் கவசம்; சில சமயங்களில் முகமூடி.

    ‘It is evidently foolish to accept probable reasoning from a mathematician and to demand demonstrative proofs from a rhetorician.’ – Aristotle

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.