சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே!

ஆண்டொன்று ஓடி மறைந்தது புதிதாய் ஒரு வருடம் மெதுவாக உள்ளே புகுந்தது. யாரைப் பார்த்தாலும் ஓரே கேள்வி? எப்படி ஒரு வருடம் ஓடி மறைந்தது என்று ஒரு கேள்வி அனைத்து உதடுகளிலும் இருந்து அரும்புகிறது. விடை தெரிந்தால் பின் ஏன் இத்தனை வியப்பு?

எத்தனையோ நிகழ்வுகள், எப்படி, எப்படியோ எத்தனையோ விதமாக நிகழ்ந்து முடிந்தன . சில மகிழ்வைத் தந்தன, சில சோகத்தைத் தந்தன, சில வியப்பைத் தந்தன, சில சந்தேகத்தைக் கிளப்பின ஆனால் அனைத்திலும் ஒரேயொரு ஒற்றுமை அவற்றின் நிகழ்வுகள் அனைத்தும் எமது கட்டுப்பாடுகளிலில்லை.

பார்வையாளர்களாகவும், மெளனமான பங்காளிகளாகவும் அந்நிகழ்வினுள் நாம் உருட்டப்படுவது ஒன்றே யதார்த்தமாகிறது.

காலம் எனும் பகடைக்காயை யாரோ உருட்டுகிறார்க:ள் காய்களாக நாம் நகர்த்தப்படுத்துகிறோம் அது ஒன்றுதான் நிஜமான நடைமுறையாகிறது.

ஆனால் அகிலத்தில் அதிகாரத்திலிருப்போர் ஏதோ வழ்க்கை நிலையென நினைத்து மக்களின் வாழ்வோடு விளையாடுவது போன்ற நிகழ்வுகள் பல கண்ணுக்குப் புலப்படுகிறது.

மொழி, இனம், நிறம், மதம் எனும் பலதரப்பட்ட பாகுபாடுகளுக்காக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் பல யுத்தங்கள் உரிமைப்போர் எனும் பெயரில் ஆங்காங்கே நிகழாமலில்லை.

இவையெல்லாம் சரியோ அன்றிப் பிழையோ எனும் கேள்வியை விட இவற்றின் நிகழ்வுகள் தான் அகிலத்தின் அன்றாட வாழ்க்கையையும் அந்தந்த நாடுகளின் பொருளாதார ஸ்தரங்களையும் நிர்ணயிக்கின்றன என்பதுவே கசப்பான உண்மை.

2008ம் ஆண்டு தொடங்கிய சர்வதேசப் பொருளாதாரச் சிக்கல் கொஞ்சம் கொஞ்சமாகக் அதிகரித்து 2010,11,12களில் மக்களின் அன்றாட வாழ்க்கையைக் குறிப்பாக இங்கிலாந்தில் படு மோசமாகத் தாக்கியிருந்தது.

இப்பொருளாதாரச் சிக்கல்களினால் எடுக்கப்பட்ட கடுமையான நிதிக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் தாக்கம் 2013 வரை நீடித்து இன்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதித்த வண்ணம் இருக்கிறது.

ஆனால் 2013ம் ஆண்டில் நாட்டின் பொருளாரச்சீர்கேடு கொஞ்சம் தேற்றமடைந்து முன்னேற்றப்பாதையில் அடிப்போடத் தொடங்கியுள்ளது எனச் சில பொருளாதார நிபுணர்களும் அரசாங்க அமைச்சர்களும் சத்தமாக குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இது எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்பதைப் புலர்ந்திருக்கும் இந்த 2014ம் ஆண்டுதான் புரியவைக்கும் என்பதுவே உண்மை.

ஆவ்கானிஸ்தான் போர் எனும் சகதிக்குள் காலை வைத்துச் சிக்குப்பட்டிருந்த இங்கிலாந்து இராணுவம் ஒருவாரு தமது காலை அச்சேற்றினுள் இருந்து வெளியெடுத்து திரும்ப்பிவது 2014 என்பது அவ்விராணுவ வீரர்கள் பலரது குடும்பத்திற்கு ஒரு நல் எதிர்[பார்ப்பாக இருப்பதுவும் குறிப்பிடக்கூடியதாக உள்ளது.

ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் அவ்வருடம் ஒவ்வொருவரது மனதிலும் பலவிதமான எதிர்பார்புகளைத் தாங்கிக்கொண்டே பிறக்கிறது.ஆனால் இவ்வெதிர்பார்ப்புகளில் எத்தனை ஒரு நிஜமான நிகழ்வாகிறது என்பது கேள்விக்குறியே?

லாட்டரிச் சீட்டில் லட்சரூபாய் விழ வேண்டும் என எதிர்பார்ப்போர் சிலர், மூன்றுவேளை உணவு வேண்டும் என எதிர்பார்ப்போர் சிலர் இப்படி எதிர்பார்ப்புகளின் விகிதாசாரம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது என்பதுவே உண்மை.

ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் பலர் தமது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பல புதிய தீர்மானங்களை எடுப்பது வழக்கம். இத்தீர்மானங்களை இறுதிவரை கடைப்பிடிப்போர் எண்ணிக்கை மிகக்குறைவானதுவே!

இவ்வாழ்க்கை எத்தனை நிலையானது என்பது ஒருபுறமிருக்க அமைதியான வாழ்வை நோக்கி நடைபயில எத்தகைய தேவை மனிதர்களுக்குத் தேவை என்பது மிகவும் ஆழமன ஒரு கேள்வி.

வருடம் முடியும் போது இத்தோடு இவ்வருடம் நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து போய்விடும் என்பதுவும், இதோ புலர்ந்திருக்கும் இப்புதுவருடம் பல இன்பநிகழ்வுகளைத் தன்னுள் புதைத்து வைத்துள்ளது நம் வாழ்வும் மலர்ந்து விடும் என்பதுவும் பொதுவாக மனிதராகப் பிறந்தோரில் பெரும்பான்மையோர் மனங்களில் ஊஞ்சலாடும் உணர்வுகள்.

ஆக மொத்தம் இந்த மடலில் இவன் சொல்ல வருவது என்ன? எனும் எண்ணம் உங்கள் உள்ளங்களில் பெரும் பங்கு வகிக்கிறது.

எனது இனிய வாசக உள்ளங்களே! நாம் நாமாக, நாம் மனிதராக, மனிதாபிமானம் மிக்கவர்களாக வாழ்வது ஒன்றே எப்போதும், எவ்வருடத்திலும் நிலையான் தீர்மானமாக இருப்பதுவே அனைவருக்கும் பயன் தரக்கூடிய செய்கை.

மலர்ந்து விட்ட இந்த 2014ம் ஆண்டு அனைவரது வாழ்வினிலும் மகிழ்வான மாற்றங்களைக் கொண்டு வர என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *