ராமஸ்வாமி ஸம்பத்

சித்திரகூடத்தில் இருக்கும்வரை அயோத்தி மக்களின் அன்புத் தொல்லை தொடரும் எனக்கருதி ராமன் ஸீதையுடனும் லக்ஷ்மணனுடனும் அங்கிருந்து தெற்கு நோக்கி நடந்து தண்டகாரண்யம் சேர்ந்தனர். வழியில் எதிர்ப்பட்டு ஸீதையைக் கவர முயன்ற விராதன் எனும் அரக்கனைக் (குபேரன் சாபத்தால் அரக்கனாகி ராமன் வருகையால் அச்சாபம் நீங்கும் என குபேரனால் சொல்லப்பட்டு ராமன் வரும் வரை காத்திருக்கும் ஒரு கந்தர்வன்) கொன்றபின், சரபங்க முனிவரின் ஆசிரமத்தை அடைந்து அவர்தம் ஆசிகளைப் பெறவேண்டி அவர் குடிலுக்குச் சென்றனர். ஸீதா ராம லக்ஷ்மணர்களைக் கண்ட அம்முனிவர், “ராமா, உன் வருகையால் என் மனம் உவகை அடைகிறது. இந்த ஆசிரமும் பாவனமாகி உள்ளது. புவியில் என் கடமை முடிந்து இறைவனடி சேர விழையும் என்னை உள்மனம்  ‘’ராமன் வரும் வரை காத்திரு’ என்று ஆணையிட்டவாறு இருக்கிறது. ஆகவே உன்னைப் பார்ப்பதற்காகவே இந்த சரீரத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறேன்”  என்றார்.

மூவரும் முனிவரடி பணிந்து ஆசிபெற்றனர். “ஐயனே, தாங்கள்தான் இந்த தண்டக வனத்தில் எங்களுக்கு வழிகாட்டவேண்டும்” என்ற ராமனை நோக்கி ”என் சக முனிவர் சுதீக்‌ஷணர் என்னைப் போலவே உனக்காகக் காத்திருக்கிறார். அவர்தான் உனக்கு சரியான வழிகாட்டி; ஏனெனில் என்னைவிட இந்த அரண்யத்தின் நெளிவுசுளிவுகளை நன்கு அறிவார். அவரிடம் ஆசிபெற்று அவர் காட்டும் இடத்தில் உன் குடிலை அமைத்துக்கொள்.  என் கோரிக்கை நிறைவேறிவிட்டது. எனக்கு விடை கொடு. உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்” என்று கூறி தன் முன்னிருந்த ஹோமகுண்டத்தில் விழ்ந்து ஆவி நீங்கி உயர்நிலை எய்தினார் சரபங்க முனிவர்.

அங்கிருந்து புறப்பட்ட ராமன் சுதீக்‌ஷணர் ஆசிரமம் செல்லும் வழியில் கண்பட்ட தவசீலர் பலர், “ராமா, நீயே எங்களுக்குப் புகலிடம். அரக்கர்களால் நாங்கள் மிக்க அவதியடைகிறோம். ஜனஸ்தானம் என்னும் இந்தப் பகுதியில் கரன், தூஷணன் என்கிற அரக்கர் கோமான்கள் எங்கள் தவத்திற்கு இடையூறு செய்கின்றனர். அதோ பார். அந்த எலும்பு குவியல்கள் எல்லாம் எம்போன்ற தவத்தோரைச் சேர்ந்தவை. தண்டகாரண்யத்தில் நீ வந்திருப்பது எங்களுக்கு யானை பலம் போன்றது” என்றனர்.

ராமன் அவர்களை வணங்கி, ‘உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதே இனி என் கடமை” என்று அடைக்கலம் அளித்து அவர்கள் மூலமாக சுதீக்‌ஷணரின் ஆசிரமத்திற்கு வழி தெரிந்து கொண்டான். அவர் குடிலை அடைந்ததும், அம்முனிவர் பரிவோடு ராமனை நோக்கி, “நீ சித்திரகூடம் வந்தது தெரிந்ததும் இங்கு கட்டாயம் வருவாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. சரபங்கரைப்போலவே நானும் உனக்காகவே காத்திருக்கிறேன். இனி இப்பகுதிவாழ் முனிவர்களுக்கு நீயே காப்பு. இந்த ரம்யமான வனத்தில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வாசம் செய்யலாம்” என்று கூறி விடை கொடுத்தார்.

அதன்பின் பத்து ஆண்டுகள் தண்டகாரண்ய ரிஷிகளுக்குக் காப்பாக இருந்து ஆனந்தமாகக் காலத்தை கடத்தினர் ஸீதா ராம லக்ஷ்மணர்கள். ஒரு நாள்  தென்னாடுடைய சிவபெருமானிடமிருந்து தமிழ் யாப்பிலக்கணத்தைக் கற்று அந்த செம்மொழியைப் பேணி வளர்க்கும் குறுமுனி அகஸ்தியரைக் காண ராமன்  விருப்பம் கொள்ள, மூவரும் அவர் ஆசிரமத்தை அடைந்தார்கள். மிக்க மகிழ்ச்சியோடு அவர்களை வரவேற்ற அகஸ்தியர், ”நீங்கள் மூவரும் இவ்வாசிரமத்திலேயே எஞ்சியுள்ள வனவாச நாட்களைக் கழிக்கலாம். ஏனெனில் இங்கு அரக்கர் தொல்லையே இருக்காது”  என்றார்.

மிக்க பணிவுடன் ராமன், “ஆதிசிவன் அருள் பெற்ற அகஸ்தியரே! தண்டகாரண்ய முனிவர்களின் வேண்டுகோளின்படி அவர்களுக்கு நான் ஒரு காப்பாக இருக்கிறேன். ஆகவே தங்கள் ஆசியோடு திரும்பிச் செல்லவே விரும்புகிறேன்” என்றான்.

முனிவர்கள் மேலுள்ள ராமனின் அன்பைப் போற்றி, அகஸ்தியர் அவனுக்கு தன்னிடம் உள்ள ஒரு வில்லினையும் மற்றும் சில அஸ்திரங்களையும் அளித்து பஞ்சவடியில் வாசம் செய்யுமாறு அறிவுரை வழங்கினார்.

கோதாவரி நதி உற்பத்தியாகும் திரியம்பக க்ஷேத்திரத்தின் அருகே உள்ள பஞ்சவடி நோக்கிச் சென்ற வழியில் மூவரும் ஜடாயு எனும் மாபெரும் பருந்தினைக் கண்டனர். அப்பட்சிராஜன் அருகே வந்து தன்னை அருணன் புத்திரன் என்றும் மற்றொரு பருந்தான ஸம்பாதியின் இளவல் என்றும் அறிமுகம் செய்துகொண்டு, அவர்கள் யார், எங்கிருந்து வருகின்றனர் என்று விசாரித்தான். அவர்கள் தசரதன் புத்திரர்கள், அவள் ஜனக குமாரி என்பதை அறிந்ததும் பேருவகை கொண்டு “என் இனிய நண்பன் தசரதன் நலமா?” என்று ஜடாயு வினவினான். (சம்பராசுரனுடன் நடந்த போரில் ஜடாயு பல்வகையிலும் தசரதனுக்கு உதவி செய்து அவன் நண்பனாகினான்). ராமன் தசரதன் காலமான செய்தியையும் தாங்கள் காட்டுக்கு வரவேண்டிய காரணத்தையும் விவரித்தபின், ஜடாயு பெருந்துயரோடு கண்ணீர் சிந்தினான். பின்னர், “வருந்தற்க, விதியை யாரால் வெல்ல முடியும்? இந்த பஞ்சவடி பிரதேசம் மிகபாதுகாப்பானது. நானும் உங்களுக்கு ஒரு காவலனாக இருக்கிறேன்” என்று உறுதியளித்தான்.

பஞ்சவடியில் லக்ஷ்மணன் சிறப்பாக அமைத்துக் கொடுத்த கவின்மிகு குடிலில் கம்பர் வர்ணிப்பதுபோல் ‘அல்லையாண்டு அமைந்த மேனி அழகனும் அவளும்’ ஆனந்தமாகக் குடியேறினர். இளவல் அவர்களுக்குப் பலவிதமான சேவைகளைப் புரிந்து, ’வில்லை ஊன்றிய கையோடும் வெய்த உயிர்ப்போடும்’ ஒரு திறன்மிகு காப்பாளனாகத் திகழ்ந்தான்.

இந்நிலையில் ஒரு நாள் இலங்கை அரசனும் அரக்கர் கோமானுமான ராவணனின் தங்கை சூர்ப்பணகை பஞ்சவடியில் திரிந்துவாறு ராமனின் திருமேனி செளந்தர்யத்தைக் கண்டு அவன்மீது மையல் கொண்டாள். தன் அரக்கி உருவினை நீக்கி பேரழகியாகத் தன்னை மாற்றிக்கொண்டு, கம்பர் வாக்கில் காணப்படுவதுபோல்

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க

செஞ்செவிய கஞ்ச நிகர் சீறடியள் ஆகி

அஞ்சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்

வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.

[ஒளி மிகுந்த செம்பஞ்சு தனது செம்மைக்கு ஓப்பாகாமல் வருந்த, குளிர்ச்சி மிகுந்த தளிர்கள் தனது மென்மைக்கு ஒப்பாகாமல் வருந்த, சிறந்த அழகு அமைந்த தாமரை மலரைப் போலத் தோன்றும் சிறிய அடிகளை உடையவளாகி, அழகிய சொற்களைப் பேசும் இளைய மயில் போலவும், பெண் அன்னம் போலவும்,  நஞ்சு போலவும், அந்த வஞ்சனை உடையவளான சூர்ப்பணகை வந்தாள்]

பின்னர் ராமனிடம் தன்னை காமவல்லி என்றும் இலங்கை மன்னன் ராவணனின் தங்கையென்றும் கூறியபின், தான் அவன்மீது கொண்ட காதலை வெளிப்படுத்தி தன்னை காந்தர்வ விவாகம் செய்யுமாறு வேண்டி நின்றாள்.

ராமன் தனது ‘ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்’  கோட்பாட்டினை அவளிடம் கூறி மறுதளிக்க, சூர்ப்பணகை கோபாவேசத்துடன் ’இந்த இடையே காணப்படாத மானுடப்புழு உடன் இருப்பதால் தானே என் கோரிக்கையை இவன் நிராகரிக்கிறான்’ எனக்கருதி தனது அரக்க உருவுடன் ஸீதையை விழுங்க முயன்றபோது, அப்பொழுதே அங்கு வந்த லக்ஷ்மணன் அவ்வரக்கியின் மூக்கை அறுத்தெரிந்தான். (அந்த அறுந்த நாசி வீழ்ந்த இடமே ’நாசிக்’ என வழங்கப்படுகிறது).

அவமதிக்கப்பட்ட சூர்ப்பணகை வெகுண்டெழுந்து, ”என்னை காயப்படுத்தி அவமானம் செய்த இந்த மனித பூச்சிகளை அழிக்க அரக்கர் குலத்தில் யாரும் இல்லையா?” என்று உரக்கக் கதறினாள். அவளது பிரலாபத்தைக் கேட்ட ஜனஸ்தானத்தில் கோலோச்சும் கரன் எனும் ராவணனின் சகோதரன் தன் இளவல்களான தூஷணனையும் திரிசிரஸையும் பெரிய அரக்கப் படையோடு பஞ்சவடிக்கு அனுப்பினான். ராமன் சிறிதும் கலங்காமல் “தம்பி, நீ ஸீதையை பத்திரமாகப் பார்த்துக்கொள். நான் இவர்களை யமனிடம் அனுப்பிவிட்டு வருகிறேன்” என்றான். ஸீதையும் லக்ஷ்மணனும் சென்றபின், அவ்வரக்கப் படை மொத்தத்தையும் தன் அம்புகளுக்கு ராமன் விருந்தாக்கினான். இந்த ஒரு-மனித படையின் வெற்றி கரனுக்கு ஒரு அதிசயமாக இருந்தது. மற்றொரு பெரும் படையுடன் அவன் வந்து ராமனோடு மோதினான். அந்த உக்கிரமான போர் முடிவில் கரனும் அவனுடைய படைவீர்ர்களும் சின்னாபின்னமாகி காலனிடம் சேர்ந்தனர்.

இந்த கண்கொள்ளாக் காட்சியை எட்ட இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜனகபுத்திரி ஓடிவந்து ராமனை அணைத்துக் கொண்டாள். “இப்போதாவது என் வலிமை உனக்குப் புரிந்ததா? அன்று அயோத்தியில் உன்னை காட்டுக்கு வரவேண்டாம் என்று சொன்னபோது நீ என்னை ‘ஒரு ஆண் போர்வையில் இருக்கும் பெண்’ என்று பழித்தாயல்லவா?”என்று செல்லமாக ராமன் அவளைக் கடிந்து கொண்டான்.

இதே காட்சியைக் கண்ட சூர்ப்பணகை இலங்கேசனிடம் ஓடினாள். ”தன் அவமானத்தைப் பழிவாங்க ராம லக்ஷ்மணரைக் கொன்று அந்த எழில்மிகு ஸீதையை நீ மணந்து கொள்ள வேண்டும்” என்று கூறி ராவணின் மனதில் ஒரு விஷ விதையை ஊன்றினாள். சூர்ப்பணகை ஸீதையின் எழிலை வெகுவாக விவரித்தது ராவணனின் காமவெறியைத் தூண்டிவிட்டது. அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ராமன் வரும் வ​ரை காத்திரு… (4)

  1. அருமையான பதிவு.  நாசிக், பஞ்சவடி போன்ற இடங்களுக்குச் சென்று தரிசித்திருக்கிறோம். அந்த நினைவு வந்தது.   ராவணனால் சந்தர்ப்பவசத்தால் கொல்லப்பட்ட தன் கணவனின் உயிருக்குப் பழிவாங்கவென்றே சூர்ப்பநகை, ராவணனை மாட்டிவிட ஏதுவாக இந்தத் தந்திரத்தைச் செய்தாள் என்றும் கூறுவார்கள். எல்லாம் ஒன்றோடு ஒன்று சார்புடையனவே! 🙂

  2. நன்றி கீதாம்மா!
    தாங்கள் சொல்வதுபோல் சூர்ப்பணகை தன் அண்ணன்மீது பழிவாங்கவே ஸீதாபஹரணத்திற்கு அடிகோலினாள் என்பதற்கும் உபகதை ஒன்று உண்டு. ராவணன் முதலில் மாரீசனின் அறிவுரையை ஏற்று தனது உத்தேசத்தை கைவிட்டான் என்றும், பின்னர் சூர்ப்பணகையின் உந்துதலால் மனம் மாறி அந்த இழிந்த செயலைப் புரிந்தான் என்றும் ஒரு கருத்து உள்ளது.
    தர்ம வழியில் செல்பவர்கள் தங்கள் அழிவிற்கு அவர்களே விதை நாட்டிக் கொள்வது என்பது யுகயுகமாக நடப்பதே. ‘Evil doers always carry the seeds of their destruction’ என்பர் சான்றோர்.
    வணக்கத்துடன்
    ஸம்பத்

  3. அன்புள்ள கீதாம்மா!
    ஒரு சிறிய தவறு ஏற்பட்டுவிட்டது. என்னுடைய மறுமொழியில் இரண்டாம் பத்தியில் ‘அதர்ம் வழியில் செல்பவர்கள்..’ என்று இருக்கவேண்டும். தவற்றிற்கு மன்னிக்கவும்.
    இவண்
    ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *