ஆயிரம் நிலவே வா…
கவிஞர் காவிரி மைந்தன்
ஒரு முறை இலக்கியக் கூட்டமொன்றில் புலவர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது.. கவிஞர் கண்ணதாசனைவிட ஆயிரம் மடங்கு நான் படித்தவன் என்று சொல்ல.. ஜனங்களின் சலசலப்பு அடங்கும் முன்பாக.. என்னைவிட ஆயிரம் மடங்கு அவன் படைத்தவன் என்று சொன்னதும் கைத்தட்டல் அடங்கிட சில நிமிடங்கள் ஆனது என்றார்.
திரைப்பாடல்கள் இலக்கியமாகுமா என்கிற வினாவிற்கு இந்த ஒரு பாடல் போதுமே எடுத்துக்காட்ட என்றே சொல்லலாம்! புலவர் பெருமகனாரின் பூங்கவிதை இது! பொங்கிடும் தமிழ்நதி புறப்பட்டு வந்தது காண் என்று சொல்வதே சரியாகும்! பெண்ணை உவமைப்படுத்த ‘நிலா’வை இழுக்காத கவிஞர்களே இல்லை! அட.. இவரென்ன.. ஆயிரம் நிலவே வா’ என ஒரு ஆனந்தப் பல்லவி தருகிறார். அகத்துறை பாடலென்பதால் மனசுக்குள் ஒரு மகரந்த மழை பொழிய வைக்கிறார். தலைவனும் தலைவியும் தழுவிடும் கோலங்களில் கிட்டிடும் சுகமத்தனையும் மொத்தமாய் அள்ளித்தருகிறார். கற்பனையில் கன்னித்தமிழைக் கட்டி ஆளத் தெரிந்தவர் என்பதால் சொற்சுகம், பொருட்சுகம் என சுகங்களின் ராஜபவனியில் நம்மையும் கலந்திடச் செய்கிறார்.
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
என்னுயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ?
மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக
பொய்கை எனும் நீர்மகளும் பாவாடை போர்த்திருந்தாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணரமாட்டாயோ?
அந்த நிலையில் அந்த சுகத்தை நானுணரக் காட்டாயோ?
மக்கள் திலகத்திற்காக முதன் முறையாக எஸ்பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் என்கிற வரலாறும் இதற்கு உண்டு! எனினும் அதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டபின் உடல்நிலைக் குறைவால் ஒலிப்பதிவு தள்ளிப்போடப்பட்டு வந்தது. இவருக்கு பதிலாக இன்னொருவரை பாட வைக்கலாம் என்கிற யோசனை முன்வைக்கப்பட்ட போது,பொன்மனச்செம்மல்.. புதிய பாடகன்.. எம்.ஜி.ஆருக்காக பாடுகிறேன் என்று தன் நண்பர்களிடமும் உறவினிர்களிடமும் சொல்லியிருப்பான். அவனுக்கு ஏமாற்றம் தர வேண்டாம்.. இன்னும் காத்திருக்கலாம் என்றாராம். திரையுலகில் புதிதாக நுழைகின்ற கலைஞனையும் அவன் மனப்பாங்குவரை யோசித்து ஆதரித்த புரட்சித்தலைவரைப் போல் இன்னொருவர் இனி வருவாரோ?
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான சரித்திரப் பின்னணி கொண்ட படம்! ஜெய்ப்பூர் அரண்மனையின் கதவுகள் புரட்சித்தலைவருக்காகவே திறக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன என்பதையும் மறக்க முடியுமா?
http://www.youtube.com/watch?v=JYcCIiVEMr8
http://www.youtube.com/watch?v=JYcCIiVEMr8
பாடல்: ஆயிரம் நிலவே வா
திரைப்படம்: அடிமைப்பெண்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1969
பாட்டும் பரதமும் இயக்கமும் வெளிச்சமும் பாவமும் பக்குவமும் ஆடையும் அணிகலனும் எல்லாம் கலந்து இன்றும் அழியா இப்பாட்டில் ஒன்று மட்டும்
புரியாதது ‘ ஆயிரம் நிலவுகள்’ வாராது ‘ஆயிரம் நிலவே’
என்ற பல்லவிதான்……?? தவறுதனை மறைக்க வைத்தது எது?