இந்திய அரசியல் கூத்து!…
நாகேஸ்வரி அண்ணாமலை
தினம் தினம் பத்திரிக்கைகளில் வரும் தேர்தல் செய்திகளைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கொள்கை அளவில் கொஞ்சமும் ஒற்றுமை இல்லாத கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டாக போட்டி போடப் போகின்றனவாம். எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவான அம்சம் எல்லாக் கட்சித் தலைவர்களும் ஊழல் புரிகிறார்கள் என்பதுதான். இந்த லட்சணத்தில் யார் யாரோடு சேர்வது என்று கூட்டங்கள், விவாதங்கள்.
அரசியல் அனுபவமே இல்லாத ஒருவர் ஒரு கட்சியைத் தொடங்கி யாரோடு கூட்டுச் சேருவார் என்று பல கட்சித் தலைவர்கள் தலைமயிரைப் பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். பல முறை தமிழகத்தை ஆண்டு அரசியல் அனுபவம் பெற்றிருக்கும் ஒரு கட்சித் தலைவர் ஒரு மகனைக் கட்சியிலிருந்து விலக்கித் தேர்தலுக்குத் தயாராகிறார். இது இவர் போடும் நாடகமா அல்லது உண்மையிலேயே மகனைக் கட்சியிலிருந்து விலக்கிவிட்டாரா என்று கணிக்க முடியவில்லை.
தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் இன்னொரு கட்சித் தலைவர் இலவசப் பொருள்களாக (விலையில்லாப் பொருள்களுக்கும் இலவசப் பொருள்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை விலையில்லா ஓட்டுகளை வாங்குவதால் விலையில்லாப் பொருள்களா?) ஏழை மக்களுக்கு வழங்கி அவர்கள் ஓட்டுக்களைப் பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஈடுபட்டவர்களை விடுவித்து அதிலும் ஆதாயம் தேட நினைக்கிறார். இவர்களை விடுவிக்கும்பொறுப்பு மத்திய அரசின் அதிகாரத்தில் இருக்கிறது என்று நான் நினைத்திருந்தேன். இந்தச் செய்தி வந்த பிறகு இது எப்படி சாத்தியம் என்று நினைக்க ஆரம்பித்தேன். ஆனால் மணலையும் கயிறாகத் திரிக்கத் தெரிந்தவர்கள் எதையும் சாதிப்பார்களோ என்ற எண்ணமும் உண்டாகிறது. இப்போது உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டிருப்பது நாட்டில் சட்டம் இன்னும் ஊசலாடுகிறது என்று கொஞ்சம் நம்பிக்கை தருகிறது.
தேசிய அளவில் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் முழு மெஜாரிட்டி வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கை இல்லை. யார் யாரைக் கூட்டுச் சேர்க்கலாம் என்று பறந்துகொண்டிருக்கிறார்கள். ஊழல் புரிந்த முன்னாள் கர்நாடகா முதல் மந்திரியை பா.ஜ.கா.விலிருந்து வெளியேற்றிய பிறகு அவர் கர்நாடகா பா.ஜ.க. என்று புதுக் கட்சி ஆரம்பித்ததெல்லாம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரோடு சேர்ந்து நின்றுகொண்டு ‘ஜெயிப்போம்’ என்று கைகளைத் தூக்கிக்கொண்டு காட்சியளிக்கிறார். யாரைப் பிரதமராக மக்களுக்குக் காட்டுவது என்பதிலாவது பா.ஜ.கா. உறுதியாக இருக்கிறது. அந்தக் கட்சி காட்டும் தலைவர் கைகளில் இரத்தக் கறை படிந்திருக்கிறது என்பதைப் பற்றி அந்தக் கட்சி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனானப்பட்ட அமெரிக்காவே இவர் இந்தியப் பிரதமராக வந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக எண்ணி, மனித உரிமைகளை மீறியவர் என்பதால் இவருக்கு விசா வழங்க மறுத்ததை இப்போது எப்படிச் சமாளிக்கலாம் என்று யோசித்து வருகிறது.
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருக்கு வீசும் அலையைப் பார்த்துப் பயந்து காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிரதமர் வேட்பாளர் யார் என்று இப்போதைக்குத் தெரிவிக்கப் போவதில்லை என்று கூறிச் சமாளிக்கப் பார்க்கிறது. காங்கிரஸ் ஜெயித்தால், இவரால் அல்லவா காங்கிரஸ் ஜெயித்தது என்று பறைசாற்றிக்கொண்டு இந்தியா போன்ற பல முகங்கள் கொண்ட ஒரு நாட்டை நிர்வகிக்க எந்த அரசியல் அனுபவமும் இல்லாத ஒருவரைப் பிரதமர் பதவியில் உட்காரவைக்கப் பார்க்கிறது. ஒரு வேளை தோற்றுவிட்டாலும் காங்கிரஸ் தோற்றதிற்கான பழியைச் சுமக்கத் தேவையில்லை என்றும் கணக்குப் போடுகிறது.
இப்படித் தினம் தினம் கூத்துக்கள் போடும் அரசியல் கட்சிகளோடு – இந்தியாவில்தான் ஒரு ஜாதிக்கு ஒரு கட்சி இருக்கிறதென்று நினைக்கிறேன். அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையில் நாம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாம் என்று நினைக்கிறேன் – சமீபத்தில் பிரபலமான தேவயானி கோப்ரகடேயின் தந்தை உத்தம் கோப்ரகடேயும் தேர்தல் களத்தில் இறங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டிபோட எல்லாக் குடிமக்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் போட்டி போடுபவரின் அரசியல் கொள்கை, பொருளாதாரக் கொள்கை என்னவென்று தெரிய வேண்டுமல்லவா? அவருடைய பலம் எது என்று மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா? உத்தம் கோப்ரகடே எந்த பலத்தில் மக்களிடம் ஓட்டுக் கேட்கப் போகிறார்? எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடப் போகிறார் என்று இன்னும் தீர்மானிக்கவில்லையாம். (பல கட்சிகள் தங்கள் வேட்பாளராகப் போட்டி போடும்படி தன்னைக் கேட்டதாகப் பீற்றிக்கொள்ள வேறு செய்கிறார்.) அப்படியென்றால் அவருடைய கொள்கைகள் என்னவென்று அவருக்கே தெரியவில்லை. எந்த முகத்தைக் காட்டி ஓட்டுக் கேட்கப் போகிறார்? அமெரிக்கச் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்டு அந்தச் சட்டம் தன்னை சிறையில் தள்ளிவிடும் என்று பயந்து ‘ஆளை விட்டால் போதும்’ என்று அமெரிக்காவுக்குப் புறமுதுகு காட்டிவிட்டு – இந்தச் சலுகையும் இவர் இந்தியத் தூதரகத்தில் துணை அதிகாரியாக இருந்தார் என்ற காரணத்தால் கிடைத்ததுதான் – இந்தியாவுக்கு ஓடி வந்துவிட்ட தன் மகள் பெரிய வீராங்கனை, அப்படிப்பட்ட வீராங்கனையின் தந்தை தான் என்ற பலத்தில் போட்டியிடப் போகிறாரா? அல்லது அமெரிக்காவையே அடிபணிய வைத்தவர் தன் மகள் என்று பறைசாற்றப் போகிறாரா? அப்படிச் செய்தாலும் அவர் கூறுவதை நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற தைரியம் அவருக்கு இருக்கிறது போலும். உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெயர் பெற்றிருக்கும் என் தாய்த் திருநாடே, இதுவா உன் ஜனநாயகம்?