Featuredஇலக்கியம்கட்டுரைகள்

அன்பின் உறைவிடம்

விப்ரநாராயணன் திரும​லை

Gandhi_Kasturba_1942வாழ்விக்க  வந்த காந்தி என்று நம் தேசியக் கவி பாரதியாரால் பாராட்டப் பெற்றார் காந்தி அண்ணல். அவர்தம் வாழ்க்கை  மிக  உன்னதமாகவும் அவரை நம் தேசத் தந்தை என்று பாராட்டும் தகுதியை அவர் பெற்றதற்கும்  அவரது மனைவி கஸ்தூர்பாவின் தியாகம் தான் காரணம். அவர்தம் வாழ்க்கையை நாம் படிக்கும்போது இக்கருத்தை நாம் உணரலாம் “கஸ்தூர்பா எதிலும் எனக்குப் பின்னால் இல்லை; எனக்கு முந்தியே இருப்பாள். அவளுடைய பெருந்துணையில்லையேல் நான் அதள பாதாளத்தில் தள்ளப் பட்டிருப்பேன். என்னை விழிப்புடன் இருக்கச் செய்தவள்; என் உறுதிமொழிகளைப் பின்பற்றி  உண்மையாக வாழ்ந்தவள்; எல்லா அரசியல் போராட்டங்களில் என்னுடன்  ஈடுபடத் தயங்கியதில்லை; படிப்பறிவில்லாதவள்; ஆனால் உண்மையான கல்விக்கு எடுத்துக்காட்டு. உண்மையான வைஷ்ணவி. ஆனால் சாதி வேறுபாட்டைக் களைந்து  அரிஜனக் குழந்தைகளைத் தன் குழந்தைகளைக் காட்டிலும் அதிகமாக நேசித்தவள். நான் மரணத்தின் பிடியில் சிக்கித் தவித்தபோதெல்லாம் மனத் திட்பத்துடன் எனக்கு தைரியம் ஊட்டியவள். எனக்கு சத்தியாக்கிரகத்தைக் கற்பித்த ஆசிரியை.” என்று கூறிய காந்திஜியின் சொற்களிலிருந்து கஸ்தூர்பாவின்  வாழ்க்கை எத்துணை சிறப்பாக இருந்தது என்பதை அறியலாம்.

ரமண மகரிஷி அவர்களூக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதிருந்தது. மகரிஷி அவர்கள் தனக்கு  மருத்துவர் அளிக்கும் சிகிச்சையைப் பார்த்துக் கொண்டு இருந்தார். வலி தெரியவில்லை அதற்கு. காரணம் அவரின் தவ வலிமை; உடலின் மீதுள்ள பற்று அறவே போயிற்று அவருக்கு. ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையிலும் இத்தகையதொரு நிகழ்ச்சி நடந்தது. இம்மகான்களுக்கு ஆன்ம பலம் அவர்களின் கடுந்தவத்தின் பயனால் கிட்டியது. அன்னை கஸ்தூரிபாவின் வாழ்க்கையிலும் இத்தகையதொரு நிகழ்வு நடந்தது என்று அறியும்போது நம் மெய் சிலிர்க்கிறது. புலனடக்கத்தால் வரும் பெரும் பயன் அந்த அம்மையாருக்கு கிட்டியது என்பதை அறிந்து பிரமிப்படைகிறோம்.

கஸ்துர்பா அவர்கள் உடல் நிலை மோசமாக இருந்தது, அவர்களுக்கு மூளையில் இரத்தக் கசிவு இருந்தது. ”அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்; அவர் உடல் மயக்க மருந்தை ஏற்கும் தகுதியற்றதாக இருக்கிறது” என்று மருத்துவர் அண்ணலிடம் தெரிவித்தார். காந்திஜி அன்னையிடம் இதைத் தெரிவித்தார். அவர்கள் உடனே, ’’நான் வலியைத் தாங்கிக் கொள்கிறேன். மயக்க மருந்து தர வேண்டாம்” என்று கஸ்தூர்பா அவர்கள் மருத்துவரிடம் தெரிவித்துவிட்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இந்த அம்மையாருக்கு இத்தகையதொரு ஆன்ம பலம் எவ்வாறு கிட்டியது? அவருடைய கர்மயோகத்தின் வலிமையே காரணம். கணவரின் செயல்களை தன் உள்ளத்தில் ஏற்றி உண்மையாகவே அவற்றை செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்ததன் பயன் தான்  இந்துமதத்தின் அடிபடைக்  கருத்துக்களில் அசையா நம்பிக்கை அவருக்கு. படிப்பறிவோ எழுத்தறிவோ கிடையாது. ஆனால் ஞானம் பெற்ற பெண்மணியாக விளங்கினாள்.

அறுவை சிகிச்சை முடிந்தது. எனினும் அவர்தம் உடல்நிலை தேறவில்லை. அன்னைக்கு மாட்டிறைச்சி தேநீர் கொடுத்தால் உடல் தேறும் என்று மருத்துவர் கூறினார். காந்திஜி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை, இதை அன்னையிடம் தெரிவிக்க, ”நான் அந்தத் தேநீரைக் குடிக்க மாட்டேன். இவ்வுலகில் மனிதனாய்ப் பிறந்தது அரிது. நான் என் உடலை அசுத்தப்படுத்த விரும்பவில்லை. அதைவிட நான் உங்கள் மடியில் உயிரை விட விரும்புகிறேன்” என்று பதிலளித்துவிட்டார். அவர்கள் வாழ்ந்து வந்த பீனிக்ஸ் பண்ணைக்கு வந்த ஸ்வாமி மாட்டிறைச்சி தெநீர் அருந்துவதில் தவறில்லை என்றும் இந்துமத நூல்களும் இதை ஆதரிக்கின்றன என்றும் தெரிவித்தார். ஆனால் அன்னை அவர்கள் மறுத்துவிட்டார். நூல்கள் கூறினாலும் தன் கொள்கையினின்றும் சற்றும் பிறழாத தன்மைதான் காந்தி-கஸ்தூர்பா வாழ்க்கையின் சிறந்த அம்சமாகும். ஏனெனில் காந்திஜி அன்னையிடம் சொல்லுவார், ”நாம் மக்களுக்காக பணியாற்ற வந்திருக்கிறோம், நாம் செய்யும் செயல்கள் பிறருக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்” என்று. அதனால் கஸ்தூர்பா அவர்கள் தான் செய்யும் செயல்கள் தன் கணவரின் நெறிக்கு  ஏதுவாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பார்.

Kasturba Gandhi  Post Cardகஸ்துர்பா  சிறந்த பக்தியுள்ளம் படைத்தவர். தினமும் துளசிச் செடிக்கு நீர் வார்த்து வணங்குவார், ஸ்ரீகிருஷ்ணனுக்கு மலர்தூவி வணங்குவார். இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை முதலிய மத நூல்களை தினமும் பாராயணம் செய்வார். இந்துமத வழக்கப்படி பண்டிகை தினங்களிலும் மற்ற முக்கிய தினங்களிலும் தவறாமல் உண்ணா நோன்பு மேற்கொள்வார். உடல்நிலை மிக மோசமாக இருந்தாலும் உண்ணா விரதத்தை நிறுத்த மாட்டார். சிறையிலிருந்த காலத்திலும் இதை மேற்கொள்வார். தியானத்தில் முழுமையாக ஈடுபட்டுவிடும் திறம் அவரிடம் இருந்தது. காந்திஜி அவர்கள் மரணத்தின் பிடியில் சிக்கிய போதெல்லாம் இவருடைய ஆழ்ந்த தியானம்தான் அவரைக் காப்பாற்றியது. காந்திஜி அவர்கள் உண்ணா விரதம் மேற்கோண்ட போதெல்லாம் தீவிரமாக தியானத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு அவர் விரதம் வெற்றிகரமாக முடிய வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுவார். வாழ்க்கையை ஒரு வேள்வியாக எண்ணி வாழ்ந்தவர் கஸ்தூர்பா அவர்கள்.

அனைவரும் கடவளின் குழந்தைகள் என்ற உயர்ந்த கருத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர் கஸ்தூர்பா அவர்கள். 1869 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர், 13 ஆம் வயதில் மோகன்தாஸைக் கைப்பிடித்த கஸ்தூர்பா அவர்கள் தொடக்கத்தில் கொள்கையளவில் காந்திஜியுடன் ஒத்துப் போகவில்லை. சச்சரவுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் நாளடைவில் பா அவர்களே தானாக உணர்ந்து காந்திஜியின் கொள்கைகளே மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். இத்தம்பதிகளுக்கு நான்கு ஆண்  குழந்தைகள்  பிறந்தன, இரண்டு பிள்ளைகள் இவர்களுடன் வாழ்ந்து வந்தனர். பேரக் குழந்தைகளும் ஆசிரமத்தில் இருந்தனர். முதலில் தன் குழந்தைகளுக்காக அன்பு செலுத்தியும் அவர்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தியும் வந்த   பாவின் அன்பு ஆலமரம்போல் வளர்ந்து அனைவரையும் அரவணைக்கும் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது. ஹரிஜனங்களை முதலில் வெறுத்த பா அவர்கள் ஹரிஜனக் குழந்தைகளைத் தன் குழந்தைகளாக வளர்த்தார்கள். லட்சுமி என்ற ஹரிஜனப் பெண்ணை தன் சொந்த மகளாக வளர்த்துத் தன்  மருமகளாக ஏற்றுக் கொண்டார். சமையலறையில் முதலில் அனுமதிக்காத பா அவர்கள்  பிறகு அவர்களை அனுமதித்தார். எனவே தீண்டாமை என்ற எண்ணம் பாவின் மனத்தினின்று அறவே நீங்கி அனைவர்க்கும் அன்னையாக திகழ்ந்தார்கள்.

அடுத்து பா அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. இது பா வை காந்திஜியின் உற்ற தோழி என்ற நிலைக்கு உயர்த்திற்று. காந்திஜி அவர்கள் பாவிடம் “நாம் பிரம்மச்சரிய விரத்தத்தை மேற்கொள்வோம்“ என்று தெரிவித்தவுடன் சம்மதம் தெரிவித்துவிட்டார் பா அவர்கள். இந்த ஆத்ம தியாகம் ஆண்களைவிட பெண்களுக்கு இயல்பாகவே இருக்கிறது என்று காந்திஜி குறிப்பிடுகிறார். பிரம்மச்சரிய விரதத்திற்குப்பின் அவர்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டதாக காந்திஜி குறிப்பிடுகிறார். “1901 ஆம் ஆண்டிலிருந்தே எனக்காகவே வாழ்ந்தவர். பெண் என்ற முறையிலும் மனைவி என்ற முறையிலும் என்னில் தன்னை இழந்துவிட்டார். இறுதி மூச்சு வரை என்னைக் கவனிப்பதிலிருந்து  சிறிதும் பிறழவில்லை” என்று அண்ணல் எழுதுகிறார். ஞானிகளுக்கு உள்ள உயர்ந்த பண்பு புலனடக்கம் என்பது. அத்தகைய பண்பை தன் வாழ்வில் கடைப்பிடித்து கணவர் மகாத்மாவாக  உருவாவதற்கு  உறுதுணையாக இருந்த உன்னதப் பெண்மணி  பா அவர்கள்.

ஆசிரம நிர்வாகம் இவர் பொறுப்பில் இருந்தது. உழைப்பதில் சளைத்தவர் இல்லை பா அவர்கள். ஆசிரம வாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை சரி வர செய்கிறார்களா  என்று கவனிப்பார்கள். தான் ஆற்ற வேண்டிய பணிக​ளைத்  தவறாமல் செய்துவிடுவார். அவர்தம் குடும்பத்தாரும்  அவர்களுக்கு இட்ட பணிகளைச் செய்ய வேண்டும். காந்திஜிக்குத் தேவையானவற்றை பா அவர்கள் தான் கவனித்துக் கொள்வார். சமையலறை நிர்வாகம் பா அவர்கள் பொறுப்பில் இருந்தது. வேறு யாரும் சமையலறைக்குள் அவருடைய அனுமதியில்லாமல் நுழையக் கூடாது. எந்த நேரத்தில் விருந்தினர்கள் ஆசிரமத்திற்கு வந்தாலும் முகம் சுளிக்காமல் அவர்கள் நலம் விசாரித்து அவர்களுக்கு உணவு சமைத்து விருந்து அளிப்பார். காலம் தவறாமை, தூய்மை, நல்ல பழக்கங்கள், பொறுப்புணர்ச்சி முதலிய நற்பண்புகள் ஆசிரம வாசிகளிடம் இருக்க ​வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் பா அவர்கள். காந்திஜியின் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைவாசம் சென்றிருக்கிறார். காந்திஜி சிறையிலிருந்த போதும் தன் உடல்நிலை மோசமாக இருந்தாலும் அவர்தம் பணிகளைச் செய்வார். பெண்கள் போராட்டங்களில் தலைமையேற்று நடத்துவார். கைராட்டை மூலம் நூல் நூற்பார். ஆகையினால்தான்  காந்திஜி அவர்கள் “பா வினால் தான் நான் என் பணிகளை சரியாக நிறைவேற்ற முடிந்தது “என்று கூறுகிறார்.

ஆகாகான் மாளிகையில் அவர் இறுதிக் காலம் கழிந்தது. அவர்கள்  அங்கே சிறைபடுத்தப்பட்டிருந்தார். அவர் உடல்நிலை மிக மோசமாகிக் கொண்டு வந்தது. பா அவர்கள் காந்திஜியின் மடியில்தான் தன் உயிர் பிரிய வேண்டும் என்று விரும்பினார். தன் உடல் மீது காந்திஜி அவர்கள்  நூற்ற நூலினால் நெய்யப் பட்ட துணியைத்தான் தன் மீது போர்த்த வேண்டும் என்றும் தன் சமாதி மகாதேவ் தேசாயின் சமாதியின் அருகில்தான் இருக்க வேண்டும் எண்றும் ஆசைப்பட்டார். அவர் ஆசை நிறைவேற்றப்பட்டது. பா அவர்கள் உயிர் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் பிரிந்தது. காந்திஜி வேதனையுடன் கூறினார், ”என்னை என் மூத்த ஆனால் என்னிடம் நம்பிக்கையுள்ள உடனுறை தோழியிடமிருந்து எவ்வாறு பிரிக்க முடியும்? அவள் என்னுடன் பின்னிப் பிணைந்து விட்டாள். அவள் பிரிவு நிரப்ப முடியாத ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.” அவருக்கு வந்த அஞ்சலிகளில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்: ”செல்வம் அறியாள்; பகட்டை ஒருபோதும் வெளிக்காட்டியதில்லை; பதவி வகித்ததில்லை; அதிகாரத்தை செலுத்தியதில்லை; ஆனால் அவர்களுடைய வாழ்க்கை முழுமையானதாகவும் வளமாகவும் இருந்தது” பா அவர்கள் உண்மையில் அன்பின் உறைவிடம் தான்.

படங்களுக்கு நன்றி:

http://www.oldindianphotos.in/2011/01/kasturba-gandhi-wife-of-mahatma-gandhi.html

http://commons.wikimedia.org/wiki/File:Gandhi_Kasturba_1942.jpg

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க