தி. சுபாஷிணி 

பிரியமான மகளுக்கு!

மணியின் மொழி அதன் நாதம்!
“ஓம் ” எனும் அந்நாதத்தின் பிறப்பு மணியின் நா அசைவினிலே!
மொழி பிறத்தலும் மனிதரின் நா அசைவில்தான்!
அண்டத்தின் ஆதாரம் ஓங்கார நாதமென்பார்.
ஒளியும், ஒலியும் வாழ்வின் ஆதாரங்கள்!
இரண்டுள்ளும் ஒலியின் சிறப்பு ஒளியைவிட மேலானது!
ஒலியுடன் இணைந்திடாது ஒளிமட்டுமே ஏற்படுத்தும் உணர்வு
பாதிப்புகள் ஒரு பிரம்மாண்டத்தை உண்டாக்குவதில்லை!
“இடி ” தொடரா மின்னல்வெட்டுகள் தங்களின் மிரட்டும் தன்மையை
வெகுவாகவே இழக்கின்றன!

உணர்ச்சிகளின் முழுமையான வெளிப்பாடு ஒலியின்றி சாத்தியமாவதில்லை!
ஆதலால்தான் ஒலியின் பெருமை, ஆதாரத்தன்மை ஒளியினும் விஞ்சுகிறது!!
ஒலிகளே இல்லாத சூழல் வாழ்வினையே சூன்யமாக்கிவிடும்!
தன்னைத்தான் அறிதலே ஒலிவழிதான் நிகழ்கிறது.
தனது பெயர் பிறர் கூறக்கேட்டு, அழைக்கப்படுவது தானேயென அறிந்து,
ஒரு குழந்தை திரும்பிப்பார்ப்பதே ஒலி புரிதலால்தான்!
ஏன்? அதற்கும் முன்பாகவே கர்ப்பத்திலேயே ஒலியறிதல் நிகழ்கிறது!
அபிமன்யு தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே சில போர் உக்திகளைக்
கற்றதாக மகாபாரதத்தில் வருகிறதே!

ஒவ்வொரு நிலையிலும் நம்மிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது ஒலியே!
வாழ்வின் தரமும், நாம் உணரும் வாழ்வின் வண்ணங்களும் ஒலிகளால்
உயர்த்தப்படுகின்றன!

ஒளி, ஒலியைவிட அதிவேகத்தில் சலனிப்பதே;
அதன் காரணமாக, அது அதிசக்தி, பரவல்தன்மை, ஆக்கிரமிப்பு உடையதாய்
காட்சிதந்தாலும், நடைமுறையில் ஒளியின் நிலைவேறு!
ஒளியை முடக்கும், ஒடுக்கும் தடைகள் கணக்கிலாதன; எதிர்ப்புகளால்
எளிதாக முடங்குவது அது; ஆதலால், அதிவேகமிருந்தும் அதன் பரவல்,
வியாபிப்பு கேள்விக்குறியாகிவிடுகிறது! ஆதவனின் கூர்க் கிரணங்களை
பஞ்சு மேகங்கள் முயற்சியின்றி முடக்கிவிடுகின்றனவே!!
ஆனால், ஒலியோ குறைவேகத்தில் ஆமைபோல் ஊர்ந்தாலும், நிதானமாய்,
ஓர்முனைப்பாய் பயணித்துத் தடைகள் தாண்டி, ஊடுருவி, வளைந்து தாவி,
பரவல் செய்கிறது. அதை முற்றிலுமாக முடக்கவல்லது காற்றுமில்லா
வெற்றிடம் ஒன்றே என்று அறிவியல் கூறும்! காற்றே இல்லா இடத்தில்
உயிரினங்கள் வாழ்தல் சாத்தியமில்லையே; எனவே உயிரினங்கள் உள்ள
இடங்களிலெல்லாம் ஒலி இருப்பது சாத்தியமே.

மொழி அதிர்வுகளால் ஜனிப்பது; அதிர்வுகளை ஜனிக்கவும் வைப்பது.
மொழியெனும் கருவியின் வன்மை எத்தகையது என்பதை ” நலனும்
கேடும் நவில்வோர் கையில்” எனும் ஆன்றோர் கூற்று விளக்கும்.
” உதவாதன பேசுபவனை விட ஊமையே தேவலை ” என்பர்.
நலம்பட உரைக்காதோர் தானும் கேடுற்று, பிறர்க்கும் கேடு தருவர்.
நாவினால் ஏற்பட்ட வடுக்கள் என்றும் உள்ளாறுவதில்லை.

இரு எதிர்மறைப் பயன்களைத் தரவல்லது மொழி..கையாளுதளைப்
பொறுத்து ! இதையே வள்ளுவர்
“ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு ” என்பார்.
மலர்களினும் மென்மையானது ..கூர்முனை வாளினும் கூர்மையானது!
நஞ்சினும் கசப்பானது ..தேனினும் இனிக்கவும் செய்வது!
வாடைக்காற்றினும் குளிர்ந்தது…தீயினும் சுட்டெரிப்பது!
உறவுகளை வளர்ப்பது …பகைமையையும் வளர்ப்பது!
உசுப்பிவிடுவது …தாலாட்டாகி உறங்கவும் வைப்பது!
தீராத் துயர்களைத் தீர்க்கவல்லது ..மனவடுக்களை அளிக்கவும் வல்லது!
மொழியறிந்து மட்டும் பயனில்லை; தேர்ந்து சொலல் வன்மை தேவை.
“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது ” எனும் குறள் சொல்வன்மையின்
தேவை, பெருமைகளைக் கூறும்.

இருவகை மாற்றுவிளைவுகளைக் கொணரக்கூடியதெனினும், நல்
விளைவுகளைத் தரும் ஒலிகளும் ,மொழிகளும் மட்டுமே காலம்
கடந்து நிற்கும் திறனுடையன. நல்விளைநிலத்திலிட்ட நல்வித்தாய்
முளைவிட்டு வேரூன்றிப் படர்ந்து வியாபித்து நிற்பன! ஆன்றோர்
வாக்குகள் போல்!

மகளே! எத்தனையோ பெயர்களை அலசித்தேடி மணிமொழிஎனும்
பெயர் சூட்ட முடிவுசெய்தேன்!

மேற்கூறிய ஒலியின் தன்மைகளுடன், எச்சூழலிலும் முடங்கிவிடாது,
நீயும் ஆக்கம் பெற்று, சமூகத்திற்கும் ஆக்கமளித்து, மணி ஓசையாய்,
மணி மொழியாய், விளங்கவேண்டும் நீ! அதற்கான சாத்தியங்கள்
உன்னிடம் இருப்பதைக் காண்கிறேன்; மகிழ்ச்சியே!
மணிகள் அணியாய் கோர்க்கப்பட்ட சரம்போல் உன்மொழி இருத்தல்
வேண்டும்.

தமிழில் உன்பெயர் நான்கு அட்சரங்களைக் கொண்டது . அந்நான்கு
நாற்திசைகளைக் குறிக்கட்டும் . உன் புலமை நான்கு திசைகளிலும்
பரவட்டும்!
பெயர்சொல்லப் பிள்ளைவேண்டும் என்பார்கள்!
நீ உன்பெயர் விளங்கும் பிள்ளையாய் இரு!
சகமனிதர்களின் வாழ்வின் அடிநாதமாய் இரு!!

வாழ்த்துக்களுடன்…
உன் தந்தை.

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பிரியமான மணிமொழிக்கு

 1. மதிப்புக்குரிய திருமதி சுபாஷிணி திருமலை அவர்களுக்கு,

  வணக்கம்.

  உன்னத உங்கள் கட்டுரையில் ஒருசில வரிகள் பற்றி என் கருத்து :-

  உங்கள் கருத்து :- 

  ///அண்டத்தின் ஆதாரம் ஓங்கார நாதமென்பார்.
  ஒளியும், ஒலியும் வாழ்வின் ஆதாரங்கள்!
  இரண்டுள்ளும் ஒலியின் சிறப்பு ஒளியைவிட மேலானது!////

  ///ஒளி, ஒலியைவிட அதிவேகத்தில் சலனிப்பதே;

  அதன் காரணமாக, அது அதிசக்தி, பரவல்தன்மை, ஆக்கிரமிப்பு உடையதாய்
  காட்சிதந்தாலும், நடைமுறையில் ஒளியின் நிலைவேறு!

  ஒளியை முடக்கும், ஒடுக்கும் தடைகள் கணக்கிலாதன; எதிர்ப்புகளால்
  எளிதாக முடங்குவது அது; ஆதலால், அதிவேகமிருந்தும் அதன் பரவல்,
  வியாபிப்பு கேள்விக் குறியாகிவிடுகிறது! ஆதவனின் கூர்க் கிரணங்களை
  பஞ்சு மேகங்கள் முயற்சியின்றி முடக்கிவிடுகின்றனவே!! ///

  என் கருத்து :-

  ஒளி, ஒலி இரண்டும் சக்தியின் இரு தோற்றங்கள்.  சக்தியும், பிண்டமும் ஒன்று. பிரபஞ்சத்தில் ஒளியும், பிண்டமும்தான் பல்வேறு தோற்றங்களில் காட்சி தருகின்றன.  கோடான கோடிப் பரிதிகள், அண்டக் கோள்கள், காலக்ஸி என்னும் ஒளிமந்தைகள் அனைத்தும் ஒளிப் பிண்டத்தில் உதித்த வம்சங்கள், வாரிசுகளே !  

  ஒளிக்கதிர்கள் கதிர் அலைகளாய் [Radio Waves, Micro Waves] எதையும் துளைத்துச் செல்பவை. இரும்பு, மலைப்பாறை, அண்டங்களைக் கடக்க வல்லமை பெற்றவை.  
  செல் பேசி அலைகள் எங்கும் செல்லும் திறமுடையவை.  ஒளியை வளைக்க வல்லது அண்டக் கோள்களின் ஈர்ப்பு விசை [Gravity] ஒன்றே.  ஒளியை மிஞ்சிய ஓர் சக்தியை இதுவரை எவரும் கண்டுபிடிக்க வில்லை.  

  ஒலியே ஒளியின் சேய்தான் !  ஒளிதான் எல்லாவற்றுக்கும் தாய்.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன். 

 2. மற்றும் சில சேர்க்கைகள்.  

  மழை மேகத்தில் மின்னல் ஒளியே இடி ஒலியாய் முடிகிறது !  

  ஒலிச்சக்தி பயணம் செய்ய காற்று போல் ஓர் ஊடகம் [Medium] தேவைப்படும். ஆனால் ஒளிச்சக்தி  சூனியத்திலும் ஊடுருவிச் செல்லும்.

  சி. ஜெயபாரதன்.

 3. When we say light ,it is visible light. Radio waves and micro waves are not in visible spectrum. The visible light is incapable of penetrating even a thick paper leave alone rock and iron. The writer is fully right in her stating that though visible light has been endowed with a high velocity, due to its susceptibility to get stopped easily by ever so many materials, it’s range of coverage is much dependant on the various objects in its path. Also light has rectilinear property which restricts its negotiating a bend or hindrance. Light may pass thro vacuum ..the author also seems to be aware of this. She has clearly and carefully stated that wherever life can exist..to mean that minimum air is there….sound is sure to exist. Overall,there seems to be no flaw in the author’s treatment of the subject. Nice.
  Like · 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *