இந்தியத் தேர்தல் வாக்குறுதிகளும் அமெரிக்கத் தேர்தல் வாக்குறுதிகளும்

நாகேஸ்வரி அண்ணாமலை

27-lok-sabha-elections-2014-600-jpg

தினம் தினம் பத்திரிக்கைகளில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பற்றியும் வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் பற்றியும் படிக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது.  வழக்கமாக தேர்தலில் கலந்துகொள்ளும் கட்சிகள் அது வரை ஆட்சியில் இருந்த கட்சிகள் செய்யத் தவறியதைத் தாங்கள் செய்யப்போவதாக மக்களுக்கு வாக்களிப்பார்கள்.  ஆனால் செய்ய முடியாமல் திணறுவார்கள்.  மறுபடி எதிர்க் கட்சியாக இருந்த கட்சி பதவிக்கு வந்தவுடன் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவார்கள்.  இப்படி பதவியில் இருந்தவர்கள் எதிர்க் கட்சியாக மாறுவதும் எதிர்க் கட்சியாக இருந்தவர்கள் பதவி வகிப்பதும் நடந்துகொண்டிருக்க அந்தக் கட்சிகள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பதும் எப்போதும் நடந்துகொண்டிருக்கும்.

இந்த அரவிந்த் கெஜ்ரிவாலைப் பாருங்கள்.  என்னென்னவோ நல்ல திட்டங்கள் வைத்திருந்தார்.  அதை நிறைவேற்றவும் உண்மையாகவே விரும்பினார்.  ஆனால் எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பது அரசியல் அனுபவம் இல்லாத அவருக்குத் தெரியவில்லை.  என்னென்னவோ செய்வேன் என்று கூறிவிட்டு ஒன்றும் முடியாமல் பின் வாங்கிவிட்டார்.  அவர் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று கருவிக்கொண்டிருந்த வழக்கமான அரசியல் கட்சிகளும் அவருக்கு எந்த வித உத்துழைப்பும் அளிக்கவில்லை.  ஊழலிலே பிறந்து ஊழலிலே வளர்ந்து ஊழல் ஆட்சி நடத்திய கட்சிகள் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்பதாகக் கூறிய ஒரு கட்சியை எப்படி வெற்றி பெறவிடும்?

இந்தியாவில் ஒரு வகையாக அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லையென்றால், அமெரிக்காவில் ஜனாதிபதி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவிடாமல் அவருடைய கொள்கைகளுக்குப் புறம்பான கொள்கையுடையவர்கள் – அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே கூட – முட்டுக்கட்டை போடுகிறார்கள்.  ஆனால் இது ஒரு ரூபாய்க்கு இரண்டு கிலோ அரிசி கொடுக்கிறேன் என்று இந்தியாவில் அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுத்துவிட்டுப் பின் அவற்றை நிறைவேற்றாமல் இருப்பதை விட மிகவும் வித்தியாசமானது.  ஒரு ரூபாய்க்கு இரண்டு கிலோ அரிசி கொடுக்கிறேன் என்று சொல்லும் இந்திய அரசியல் கட்சி வேட்பாளர்கள் அதற்குப் பணம் எங்கிருந்து வரும் என்று விளக்கிக் கூறத் தேவையில்லை.  அவர்கள் பாட்டுக்குச் சொல்லிவிட்டுப் போவார்கள்.  அதை நிறைவேற்றாமல் போனால் வாக்காளர்கள் யாரும் கேட்க முடியாது.  அமெரிக்காவில் தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுக்கும்போது ஏதாவது திட்டம் பற்றிக் குறிப்பிட்டால் அதற்குப் பணம் எங்கிருந்து வரும் என்று சொல்ல வேண்டும்.

ஒபாமாவையே எடுத்துக்கொள்ளுங்கள்.  2007-இல் அவர் தேர்தலில் நின்றபோது அமெரிக்காவை எப்படி எப்படியெல்லாமோ திருத்த வேண்டும் என்று நினைத்தார்.  ஆனால் அவருடைய கட்சியிலும் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியிலும் இருந்த பழமைவாதக் கொள்கையுடையவர்கள் அவர் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.  (இந்தியாவில் போல் கட்சித் தலைமையை மீற முடியாது என்பது அமெரிக்காவில் கிடையாது.  இடதுசாரிக் கொள்கை உடையவர்கள் சிலர் குடியரசுக் கட்சியிலும் இருக்கலாம்; வலதுசாரிக் கொள்கை உடையவர்கள் சிலர் ஜனநாயகக் கட்சியிலும் இருக்கலாம்.  கட்சித் தலைவர் சொல்லுவதையோ அல்லது தங்கள் கட்சியைச் சேர்ந்த  ஜனாதிபதி சொல்லுவதையோ அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்ற சட்டம் எதுவும் இல்லை.  பாராளுமன்ற உறுப்பினர் எல்லோருக்கும் அவரவர்க்கென்று கொள்கைகள் உண்டு; அவர்கள் தங்கள் இஷ்டம்போல் எந்த மசோதா ஓட்டெடுப்புக்கு வந்தாலும் தங்கள் சொந்த கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.  (நம் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தாங்களாகச் சிந்திக்கும் திறன் இருக்கிறதா என்பது இன்னொரு விஷயம்.)

தேர்தல் வாக்குறுதிகளில் ஒபாமா இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கும் கொடுமைகள் பற்றியும் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய அமெரிக்காவின் கடமை பற்றியும் கூறினார்.  பதவிக்கு வந்தவுடனேயே எகிப்திற்குச் சென்று அமெரிக்கா முஸ்லீம்களின் எதிரியல்ல என்று கூறி மத்திய கிழக்கில் முஸ்லீம் நாடுகளின் ஆதரவைப் பெற முயன்றார்.  ஆனால் அமெரிக்காவில் இருக்கும் யூதர்களின் அரசியல் சங்கம் கொடுத்த நெருக்கடியால் இஸ்ரேலைக் கண்டிப்பதற்க்குப் பதில் ‘அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் உள்ள பந்தம் நெருக்கமானது.  இது எப்போதும் தொடரும்’ என்று சொல்லும் அளவிற்குப் போனார்.  ஐ.நா.வால் பாலஸ்தீன நாடாக உருவாகப் போகும் நாட்டிற்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் யூதக்குடியிருப்புகளை அமைக்க வேண்டாம் என்று சொன்னதை இஸ்ரேல் மதிக்கவில்லை; அதை நிறுத்த முடியாத சூழ்நிலையில் ஒபாமா இருக்கிறார்.  இப்போது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பது அமெரிக்க யூதர் சங்கம்.

உள்நாட்டு விஷயங்களிலும் ஓபாமா சாதிக்க நினைத்ததைப் பாராளுமன்ற உறுப்பினர்கள்  வெகுவாகக் குறைத்துவிட்டார்கள்.  2014-ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவில் எல்லோருக்கும் மருத்துவக் காப்பீடு இருக்கும் என்று உறுதி அளித்தார்.  அமெரிக்க அரசே நடத்தும் இந்தத் திட்டத்திற்கு ஆகும் செலவை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பணக்காரர்களுக்குக் கொடுத்த வரிச் சலுகையை நீக்குவதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்துச் சரிக்கட்டலாம் என்றார்.  ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.  அதற்குப் பதில் மருத்துவக் காப்பீடு வழங்கும் தனிப்பட்ட கம்பெனிகள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு எடுப்பதற்கு முன் ஏதாவது வியாதி இருந்தால் அவர்களுக்கு மருத்துவ காப்பிடு கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது என்ற நிபந்தனையை மட்டும் கம்பெனிகளிடமிருந்து பெற்றார்.  மேலும் 2014 முடிவில் எல்லோருக்கும் மருத்துவக் காப்பீடு இருக்கும் என்று அவர் வாக்களித்ததற்கு மாறாக இரண்டு கோடி மக்கள் 2014 முடிவிலும் மருத்துவக் காப்பீடு இல்லாமல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குவெண்டநாமோவில் இருக்கும் சிறையை மூடிவிட்டு அங்கிருக்கும் கைதிகளை உரிமையியல் நீதிமன்றத்தில் (civil court) விசாரிக்கப் போவதாக அறிவித்தார்.  ஆனால் பாராளுமன்றத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தது; வழக்கை நடத்தப் பணம் கொடுக்க மறுத்தனர். அதனால் எதுவும் நடக்கவில்லை.

‘அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு, சங்கங்கள் அமைத்து தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் உரிமை என் பதவிக் காலத்தில் மறுக்கப்படுமேயானால் நானும் அவர்களோடு சேர்ந்து போராடுவேன்’ என்று அறைகூவினார்.  இப்போது பல மாநிலங்கள் தொழிலாளர்கள் சங்கங்கள் அமைக்கக் கூடாது என்று சட்டம் இயற்றியிருந்த போதிலும் ஒபாமா எந்த விதப் போராட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.

இந்தியாவில் அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் நிறைவேற்றாவிட்டாலும் தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வார்கள்.  ஆனால் அமெரிக்காவில் அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அது நிரூபிக்கப்பட்டால் (அநேகமாக நிரூபிக்கப்பட்டுவிடும்) சிறைக்குச் செல்வார்கள், தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றினாலும்.

படத்திற்கு நன்றி :

http://tamil.oneindia.in/news/tamilnadu/nomination-filing-begins-on-march-29-lse-196591.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *