தி. சுபாஷிணி

அந்த இளம் காலை நேரத்தில், நெல்லை எக்பிரஸ் தட,தட என திருநெல்வேலி ஜங்ஷன் இரயில் நிலையத்தில் நுழைந்து கடக் என்று நிற்கின்றது. என் நெஞ்சில் ஒரே பட படக்கின்றது. என்னவென்று தெரியவில்லை மெதுவாக ரயிலிலிருந்து இறங்குகின்றேன். ரயில் நிலையத்திலிருந்து வெளிவந்து, ஆட்டோவில் அமர்கின்றேன்.  ஆட்டோ ‘திருநெல்வேலி டவுன் நோக்கிளல செல்கின்றது.  வழியில் சந்திக்கும் ஆட்டோகள ஏதோ ‘போஸ்டர்’ ஒட்டியிருக்கின்றது.  ஒரு ஆட்டோ எங்கள் ஆட்டோவைக் கடக்கும் போது, அது என்னவெனப் பார்த்தேன். ஆச்சர்யப்பட்டுப் போனேன். “ஆம் நம்ம தி.க.சி. அய்யாவின் படம்.  அதன் கீழ் ஒரு கவிதை. ஆனால், படிக்க முடியாது போய்விட்டதே.  இது எப்படி? விடை தெரிய விழையும் போதே. எங்கள் ஆட்டோ சந்திப் பிள்ளையார் கோவில் தாண்டியது.  அதனுள் இருக்கும் பிள்ளையார் வந்துவிட்டாயா எனக் என்னைக் கேட்டது போல் தோன்றியது ஆட்டோவின் சத்தம் கேட்டு, தன் கடையிலிருந்து தலைநிமிர்ந்து பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தார் பொன்னையா அண்ணாச்சி.  தெருவில் இருந்த காந்தி சிலை சற்றே அசைந்து என் வருகையைப் பதிவு செய்தது.  நந்தா டீ ஸ்டாலிலிருந்து, டீக்கடைக்காரர் “அம்மா! நீங்க போங்க? அய்யா சொன்னங்க?  காபியைக் கொடுத்தனுப்புகின்றேன்” என்றார். எனக்கு வியப்போ வியப்பு! இதெல்லாம் எப்படி நடக்குது! இப்போ சுடலைமாடன் கோவில் தெருவில் ஆட்டோ நுழைந்தது. வழியில் வீட்டு வாசலில் நின்றிருந்த ஓவியர் வள்ளி நாயகம் உடனே இறங்கி வாங்க என வரவேர்றார் பின்.  ஆட்டோ ‘21 இ’ எண் வீட்டில் என்னை இறக்கி விட்டு, சென்றுவிட்டது.  படியேறி நுழைகின்றேன்.  திண்னையைத் தாண்டிச் செல்கின்றேன். முற்றத்தில் இறங்கி அய்யா வீட்டினுள் நுழைகின்றேன்.

“அடா! வந்தாச்சா! ம் பிரயாணம் வசதியா இருந்ததா?  களைப்புத் தீர குளித்து விட்டு வா? என்று குரல் கேட்டது.  நானும் வாசிக்காத செய்தித் தாள்களிடையே சென்று குளித்து, ஆடை மாற்றி வந்தேன்.

DSC099561-300x225

“அக்கா? அய்யா சொன்னாங்க! இட்லியும் சட்னியும் வைத்திருக்கேன் சாப்பிட்டுங்க!  மதியம் வள்ளியண்ணன் வீட்டிலிருந்து சாப்பாடு வந்து விடும். நான் வேலைக்கு போறேன்” என்று சுந்தரி சொல்லிக் கொண்டே, போய்விட்டாள்.  “சாயுங்கால விழாவிற்கு வந்து விடுவாயல்லவா? என்று கேட்டது அவள் காதில் விழுந்த மாதிரியும் இருந்தது.  விழாத மாதிரியும் தோன்றியது.

தட்டைக் கழுவி சாப்பிட அமர்ந்தோன். இட்லியும் சட்னியும் பரிமாறிக் கொண்டேன்.. “அத்தனையும் உனக்குத் தான். நிதானமாகச் சாப்பிடு தயார் அந்தக் கவரில் இருக்கு எடுத்துக்கோ” என்று ஒரு குரல் மெல்லியதாக ஒலித்தது காதில் கேட்டது. அக்குரல் சொல்லிக் கொண்டே வெளியேறியது போல் தோன்றியது.

திடீரென்று, வெளியில் அய்யாவின் வெண்காவது குரல் “வாங்க! வாங்க? கமியுனிஸ்ட் கட்சி தனித்து 2016ல் போட்டியிடப் போவது குறித்து மிகவும் சந்தேஷம். சென்னையிலிருந்து சுபாஷிணி அம்மா வந்திருக்காங்க புது எழுத்தாளர்.  நாமதானே அவங்களையெல்லாம் உற்சாகப்படுத்தணும்.

சுமார் பத்து புத்தகங்கள் வெளியிட்டு இருக்காங்க.  அதிலும் எல்லாம் அவங்க சொந்தச் செலவில் தான்.  ரசிகமணி டி.கே.சியைப் பற்றி எழுதியிருக்காங்க.  என்னுடைய சென்னையின் பிரதிநிதி என்று சொல்லி அறிமுகப்படுத்தும் ஆனந்தக் குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

ஆமாம்!  அய்யா நாற்காலியில் வழக்கமாய் இருக்கும் ‘பிங்க்‘ கலர் நிரத் துண்டு இல்லையே!  நிறைய தபால்கள் வந்திருக்கு.  இதோ! ஆர். வி. சுப்பிரமணியம் கடிதம்  “இன்லண்ட் கவரில்” எழுதியிருக்கிறார்.  பிரிக்கப்படவில்லை.  இன்னும் சரவணன் வரவில்லை போலிருக்கு.  பாரதியின் கண்ணன் போல், அய்யாவில் கண்ணன் சரவணன்.

மனமும் உடலும் ஏதோ சோர்வில் மாட்டிக் கொண்டு தவித்தன.  அவற்றை மதித்துக் கொஞ்சம் கண் அயர ஆயத்தமானேன்.

1475795_446580005472118_1833270357_nமணி ஆகிவிட்டது.  ஒரே பரபரப்பு!  சரவணன் வந்தாச்சு. ஓவியர் வள்ளிநாயகம், வே. முத்துக்குமார் இருவரும் வந்துவிட்டனர்.  இவர்கள் மூவருமே அய்யாவின் அத்யந்த அன்பர்கள்.  தோழர்கள்.  எல்லோரும் கிளம்பி விட்டோம்.  அய்யா விருப்பப்படி மேடையில் எளிய அலங்காரம்.  ‘தி.கா.சி. 90& 30.3.2014’ என்னும் எழுத்துக்கள் தாங்கிய திரை கட்டியிருக்கிறது.  மணி ஆக ஆக ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்.  மேடையில் திரு. நல்ல கண்ணு, திரு. பழநெடுமாறன், அறிவரசன் வை.கோ. காவல்துறை ஆணையாளர், ஐ.ஏ.எஸ். அதிகாரி, சிறிமி, சிறிவி தலைவர்கள் என் முன்னணியில் அமர்ந்திருந்தனர்.  பின்னணியில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன், ரசிகமணி பேரன் தீப. நடராஜன், நெல்லையின் புரவலர் இந்து கல்லூரியின் அறக்கட்டளைத் தலைவர் தளவாய் ராமசாமி கி.த.பச்சையப்பன், கழனியூரான் என இன்னும் பலர் அமர்ந்து இருந்தனர்.  பார்வையாளர் பகுதி பக்கம் கண்களை செலுத்துகின்றேன்.  ஒரு பக்கம் அய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் வண்ணதாசன் இளைய மகன் சேது, அவரது மகள்கள், அவர்களது குடும்பத்தினர், உற்றார் உறவினர் அனைவரும் அமர்ந்து இருந்தனர்.  ஒரு பக்கம் எழுத்தாளர் வண்ண நிலவன், கவிஞர் கலாப்பிரியா, ரவி சுப்ரமணியம் எழுத்தாளர் நாஞ்சில் நாடன், பேரன் எனப் பெருமைப்படக் கூறிக் கொள்ளும் சுகா, கவிஞர் சக்தி ஜோதி என்று இளைய கவிஞர்கள் வட்டம், என்று நிரம்பிக் கொண்டிருந்தது.  பல அமைப்புகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் கூடியிருந்தனர்.  கிட்டத்தட்ட 500, 600 பேருக்கும் மேல் இருக்கலாம்.  தோழர் பால் முகம்மது அனைவருக்கும் தாகத்திற்கு தண்ணீரே பழச்சாரோ கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நான், முத்துக்குமார், ஓவியர், பொன் வள்ளி நாயகம், சரவணன் ஆகிய நால்வரும் மேடையின் பக்கவாட்டில் நின்றிருந்தோம். கவிஞர், தோழர் கிருஷி விரைந்து வந்து, கிட்டத்தட்ட தமிழ் நாடே கூடிவிட்டது.  நாம் விழாவைத் தொடங்கிவிடலாம் என்றார்.

“அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

அகமெலாம் அன்பென்னும் வெள்ளம்

பொறிகள் மீது தனி அரசாணை”

இது பாரதியின் வரிகள் என்று யாரிடமோ சத்தம் போட்டு சொல்லிக் கொண்டிருந்த அய்யாவின் குரல் கேட்டது.

வழக்கம் போல் வே. முத்துக்குமார் மேடையேற மறுத்து விடடார்.  கவிஞர் கிருஷி விழாவைத் தொடங்க மேடையேறினார்.

சந்தியா பதிப்பகம் “நடராஜன்”, மேடையிலுள்ள அனைவருக்கும் அய்யாவின் “நாட்குறிப்பு புத்தகத்தை” வழங்கிக் கொண்டிருந்தார்.

கவிஞர் கிருஷி, விழாவிற்கு வந்த அனைவருக்கும் வணக்கம் கூறி தன் தொடக்கவுரையைத் தொடங்கினார்.

திருநெல்வேலியின் அடையாளம் 21 இ சுடலைமான் கோவில் தெரு தோழர் தி.க.சி. எந்தவித தயக்கமின்றி எந்த நேரமும் அவரைக் காணச்செல்லலாம்.  வெளியில் வரும் போது அன்றைய நாளிதழ்களின் செய்திகள், சிற்றிதழ்களின் இலக்கிய வளர்ச்சி, கதைகளின் மாண்பு எனப் பல வகைப்பட்ட விஷயல்களைப் பெற்று கருத்துக்களின் கனத்துடனும், ஆனந்தத்தால் இலேசான இதயத்துடனும்தான் திரும்பி வருவோம்.  கம்யூனிஸ்ட்கட்சி பிரிந்தபோது மார்க்ஸிஸ்ட் ஆனார்.  சோவியத் யூனியன் தளர்ந்து வீழ்ந்த போது, இவர் தளர்ந்து போய்விடவில்லை.  கலை இலக்கியம் இவரைத் தாங்கி நின்றன. அதுதான் ‘மனிதம் போற்றும்’ என்னும் கொள்கை உடையவர், தி.க.சி. முதலில் கவிதை, கதை, மொழி பெயர்ப்புகள் எனத் தன் இலக்கியப் பாதையை வதித்தபோது, “விமர்சனத் தமிழில்’ நிலைத்து நின்று விட்டார்.  இதற்கு இவர் “தாமரை, சோவியத் லேண்டு” ஆகிய பத்திரிகையிலும் பணிபுரிந்தது உதவியது. இவரது நடுநிலையான விமர்சனத்திற்குத்தான் ‘சாகித்ய விருது’ கிடைத்தது.

ரசிகமணி டி.கே.சி. பாரதி, பாரதிதாசன், வல்லிக்கண்ணன் ஆகியோரை தன் ஆசான்களாக ஏற்றதால், எப்போதும் அவர் ஆனந்தத்தை ஆராதித்தார்.  மலர்ந்த முகமும், அதில் பிறக்கும் சிரிப்பும், சிரிப்பு அளிக்கும் ஒலியின் கனமும் அவரைச் சுற்றி அலை அலையாக சூழ்ந்து கொண்டேயிருக்கும்.  அன்று இவரால் ஊக்குவிக்கப்பட்டு, உற்சாகப்படுத்தப்பட்ட படைப்பாளிகள்தான் இன்று பெரிய ஆளுமைகளாக இருக்கின்றனர்.  இன்னமும் இளைய தலைமுறைகளில் இவரைச் சார்ந்து, இவர் இட்ட உரத்தினாலும், உற்சாக நீர் பாய்ச்சியதாலும் பல படைப்பாளிகள் உயர்ந்து கொண்டு வருகின்றனர்.  விகடனில் படித்த கதைக்கும், கல்கியில் படித்த ‘ஓ‘ பக்கத்திற்கும், சிற்றிதழ்களில் படித்த படைப்புகளுக்கும், உடனே பாராட்டுக்கள் அந்தந்த எழுத்தாளருக்கு தொலைபேசி மூலமாகவோ, கார்டு மூலமாகவோ போய்ப்படும்.  இவர் கடிதம் தாங்கி வரதாத தினமணி நாளிதழ்கள் குறைவே.

இவருக்கு இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகள் இலக்கிய அமைப்புகள், மாணவர்கள் என அனைத்து தளங்களிலும் இவரது மனித நேயத்தால் நண்பர்கள், உண்டு.  பேப்பர் போடும் தோழர் பால் முகம்மது வந்தாலும், ஐ.ஏ.எஸ் அதிகாரி இவரைத் தேடி வந்தாலும் ஒரே மாதிரியான ஆனந்தமான சிரிப்போடுதான் வரவேற்பு.  இவ்வாறு எளியவர்களையும், சிறந்த ஆளுமைகளையும் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டு விளங்கும், விழா நாயகரான, 90ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் தோழர் தி.க.சி. அவர்களுக்கு சிறப்பு செய்ய மூத்த எழுத்தாளர், அய்யாவின் அன்பு நண்பர் திரு. கி. ராஜநாராயணன் அவர்களை அழைக்கின்றேன்.  அவரை நூறாண்டு காலம் வாழ வாழ்த்துமாறு எங்கள் அனைவரின் சார்பாக அழைக்கின்றேன்” என கவிஞர் தன் தொடக்க உரையை முடித்தார்.

திரு. கி. ராஜநாராயணனன்  அவர்கள் எழுந்து வரும் சப்தம் கேட்கிறது.

ஆனால் ‘தி.க.சி.’ அய்யாவை எங்கே காணும்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *