சுலோச்சனா

அன்புள்ள மணிமொழிக்கு நட்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய தோழி,

தொலைபேசி வாயிலாக உன்னைத் தொல்லை செய்யாமல் விஷயத்தை ஓரிரண்டு வரிகளில் சொல்லிவிடாமல் – “இதென்ன வள வளவென்று கடிதம் எழுதிக்கொண்டு” என்று நினைக்கின்றாயா?

மணிமொழி வளவள கடிதமல்ல வளமான கடிதம் எழுதுதல் ஒரு கனவு என்பதை நினைவூட்டும் நெகிழ்வான கடிதமாக்கும்.

நேற்று ஓவியக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்குள்ள படங்களை பார்த்துக்கொண்டே வந்தபொழுது ஒரு அழகிய படத்தைப் பார்த்தேன். அது என்ன படம் எனில் “சாகுந்தலம் கதையின் நாயகி சகுந்தலை தன் அன்பிற்குரிய துஷ்யந்தனுக்கு கடிதம் எழுதும் காட்சி அழகிய ஓவியமாக வரையப்பட்டிருந்தது. தன் எண்ணங்களை கடிதத்தில்தான் எளிதாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்த முடியும் என்ற உண்மை சகுந்தலைக்கும் தெரிந்துள்ளது பார்த்தாயா? அரசர்கள்கூட தங்கள் எண்ணத்தை லிகிதமாக எழுதி புறாவின் மூலம் அனுப்பினார்கள். அதுமட்டுமன்றி கடிதம் கொண்டுவரும் தூதுவருக்கு தனி மரியாதை. பகைவனுக்கும் கூட கடிதம் அனுப்பலாம் கொண்டு செல்பவர் எந்த ஆபத்தும் இன்றி திரும்பி வந்துவிடுவர். கடிதத்திற்கும், தூது வருபவருக்கும் அவ்வளவு மரியாதை. ‘புவன சுந்தர’ என கிருஷ்ணனை அழைத்து ருக்மணி எழுதிய காதல் மடல் ருக்மணி தன் சரணாகதியை கடித்தத்தில் அன்றி வேறு எந்த வழியில் கிருஷ்ணன் பகவானிடம் சமர்ப்பிக்க இயலும்?

மனித மனத்தின் பாகங்களை நேசங்களை அறிஞர் பெருமக்களின் அறிவுரைகளை வெளியிட கடிதம் எத்தனை பெரிய, அரிய ஒரு மொழி. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் சிறையில் இருந்தபொழுது தன்னுடைய ஒரே அன்பு மகள் “இந்திராவிற்கு கடிதங்கள் மூலமே தன் அன்பை தெரியப்படுத்தினார். அதில் தந்தையின் ‘பாச’ வெளிப்பாடு மட்டுமன்றி உலக வரலாறும் மகளுக்கு போதிக்கப்பட்டது அல்லவா? மகாத்மா காந்தியும் வினோபாபாவேயும் எழுதிக்கொண்ட கடிதங்களில் ஆன்மீகமும் அரசியலும் எவ்வளவு நகைச்சுவை உணர்வோடு வெளிப்பட்டது எவ்வளவு தூய இலக்கியம்.

தமிழ் அறிஞர் மு. வரதராசனார் அவர்கள் அண்ணனுக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்களுக்கு என்று பல தலைப்பில் எழுதிய கடிதங்களில் அறிவுரைகள் மட்டுமா வெளிப்பட்டன. தமிழ் பண்பாடும் பழக்க வழக்கங்களும் எவ்வளவு துல்லியமாக அறியக் கிடைத்தன.

அன்பு மணிமொழி,

தொலைபேசியில் உன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கலாம் ஆனாலும் ஏனோ ஓரிரு நிமிட அளவளாவளில் திருப்தி இலை. மனதோடு மனம் பேச ஆவலாக இருக்கிறது. அந்த ஆவலைத் தணிப்பதற்கு கடிதம் எழுதுவது ஒரு கருவியாக உள்ளது. உன் வயதில் ஒன்று கூடும்போது அறிவும், அன்பும் பல மடங்கு கூடட்டும். உடல் வளர்ச்சியோடு உயரிய எண்ணங்களும் வளரட்டும்.

புதுமைப் பெண்ணிவள் சொல்லும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்கும் புதிது என்ற பாரதியார் வாக்கிற்கேற்ப நீ வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். வீட்டில் அனைவருக்கும் என் அன்பு, உன் அன்பான பதில் கடிதத்தையே ஆவலோடு எதிர்நோக்கும் அன்புத் தோழி,

உன் தேன்மொழி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க