இறைவா உன் மாளிகையில்!…
கவிஞர் காவிரிமைந்தன்
இறைவா உன் மாளிகையில்…
வியத்தகு நிகழ்வொன்று தமிழகத்தில் நிகழ்ந்தது. அதுவும் திரைப்பாடல் ஒன்றில் எழுதிய வரிகள் மக்களின் பிரார்த்தனை கீதமாக முழங்க ஒரு தலைவனின் உயிருக்காக ஜாதி, மதங்கள் கடந்து மக்கள் ஒருமித்த வகையில் கடவுளிடம் கருணை மனு போட்டனர். இதுவெல்லாம் சாத்தியமா என்று எண்ணிப்பார்த்தால் வாய்ப்பில்லை என்பதுவே அனைவரின் பதிலாகும். ஆனால், நடந்தது தமிழ் நாட்டில்.. ஏழைகளின் பங்காளன், தாய்மார்களின் தலைமகன், எங்கவீட்டுப் பிள்ளை, வாத்தியார்.. மக்கள் திலகம்., பொன்மனச்செம்மல், புரட்சி நடிகர் என்றெல்லாம் புகழினை எட்டியதோடு.. மட்டுமின்றி மக்கள் நெஞ்சிலும் நிலைத்து வாழ்கின்ற பேறு பெற்ற எம்.ஜி.ஆர். அவர்கள் – திரைத் துறையில் தனக்கென்று தனியிடம் பெற்று திகழ்ந்ததோடு.. அரசியலிலும் ஈடுபட்டு தமிழகத்தின் தனிப்பெரும் தலைவனாக உயர்ந்து – முதல் அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் பதவி வகித்தமை உலக வரலாற்றில் ஒரு சகாப்தம்.
எம்.ஜி.ஆர். அவர்களின் 100வது திரைப்படம் ஒளிவிளக்கு.. பாத்திரப்படி கள்வனாக இருந்தாலும் – ஏழைகளுக்கு உதவுகின்றவராக – ஊரில் பரவிய கடும் நோயின் காரணமாய்.. அனைத்து மக்களும் ஊரைவிட்டு ஓடிடும்போது.. உடல்நிலை குன்றிய நிலையில் உள்ள ஒரு விதவையை மட்டும் வெறுத்து ஒதுக்கி.. அவ்வீட்டிலேயே விட்டுச்செல்லும் காட்சியில் கள்வனாக அவ்வீட்டில் திருடவந்த கதாநாயகன் அவளைக் காப்பாற்றி புகலிடம் கொடுக்கிறான்.
பின்னர் ஒரு கட்டத்தில் ஏழைக்குடிசைகள் தீக்கிரையாகையில் – ஒரு குழந்தையைக் காப்பாற்றிடும்போது தன் உடல் முழுவதும் தீயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் உணர்வுமிகுந்த கட்டத்தில் .. அவனால் பயன்பெற்ற அனைத்து மக்களும் ஒருமித்த குரலில் அவனது உயிருக்காக கடவுளிடம் வேண்டுவதை காட்சியமைப்பு.. தனக்கு பாதுகாப்பு தந்து காத்த அந்த நாயகனை எமனின் பிடியிலிருந்து காப்பதற்காக அந்த நாயகி பாடுகின்ற பாடல். வாலி அவர்களின் இந்த வரிகள் தமிழகத்தின் ஒரு வரலாற்றுப் பதிவன்றி வேறென்ன?
வார்த்தைகளை கவிஞர் வாலி அவர்கள் வரைந்தெடுத்தபோது ஒவ்வொரு வரியும்.. ஒவ்வொரு வார்த்தையும் என்னை எடுத்துக் கொள்.. என்னை எடுத்துக் கொள் என்று சொல்லியதோ.. உள்ளம் உருக.. மெல்லிசை மன்னர் அமைத்த இசையில் இது வெறும் பாடல் அல்ல.. பி. சுசீலாவின் குரலில் இழையோடும் சோகம்.. நம் இதயங்களை நனைக்கிறதே!
பிற்கால வரலாற்றின் முன்பதிவு என்பதை சூசகமாய் சொல்லி வைத்தாரோ?
இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
நம்பிக்கையின் ஒளிவிளக்கு
ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா
ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?
ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா
மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு ஆணையிடு
http://www.youtube.com/watch?v=iwh71IiRVLQ
பாடல்: இறைவா உன் மாளிகையில்
திரைப்படம்: ஒளிவிளக்கு
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1968