பிரம்மோஸ் – ஒரு சிறப்புப் பார்வை
கேப்டன் கணேஷ்
பிரம்மோஸ்……… பெயரைக் கேட்டவுடனே, பல நாட்டு இராணுவத் தளபதிகளும் பனிக்கட்டிக் கத்தியின் கூரிய முனையை பின்னங்கழுத்தில் உணர்வார்கள். இந்தியாவுடன் நல்லுறவு இல்லாத நாடுகளின் தலைவர்கள் உறக்கம் தொலைப்பார்கள். அந்நாட்டு பிற பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் விருப்ப ஓய்வில் சென்றுவிட யோசிப்பார்கள். அப்படி ஒரு மந்திரச் சொல் தான் பிரம்மோஸ்! இதனைப் பற்றிய விவரங்களை காண்போமா?
காலப் பயணத்தில் சற்றே பின்னோக்கிச் செல்வோம். ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சி செலுத்திய காலம். ஆகஸ்டு 2,1990, ஈராக் குவைத்தின் மீது படையெடுத்து இரண்டு நாட்களுக்குள் குவைத்தை முழுவதுமாய் கைப்பற்றியது. ஐந்து மாதங்கள் பொறுமை காத்த பின் ஜனவரி 1991ல், குவைத்தை ஈராக்கின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டி, அமெரிக்கா ஈராக்கின் மீது போர் அறிவித்தது. அமெரிக்காவின் பெரும் சேனை வந்து சூழ்ந்த போதும், ஈராக் அதை மிக எளிதாக எதிர் கொண்டது. அதற்கு காரணம், ஈராக்கிடம் இருந்த ஏவுகணைகள். ‘ஸ்கட்’ (Scud) என்ற ஏவுகணைகளை அமெரிக்கத் துருப்புக்களை நோக்கி சரமாறியாய் ஏவித் தாக்குதல் நடத்தியது.
முதல் மாதப் போரில் அமெரிக்காவே சற்று திணறித்தான் போனது. ஸ்கட் தாக்குதல்களை சமாளிக்க அமெரிக்கா கொண்டு வந்த ஏவுகணை தான் ‘பேட்ரியாட்’ ( Patriot). மற்ற ஏவுகணைகளை வானத்தில் பறக்கும் போதே வழிமறித்துத் தாக்கி வெடிக்கச் செய்வதே பேட்ரியாட்டின் சிறப்பம்சம். ஒரு ஸ்கட் ஏவுகணைக்கு மூன்று பேட்ரியாட் ஏவுகணைகள் என்ற கணக்கில் ஏவப்பட்டது. வானத்திலே வேடிக்கை. மூன்று மாதங்களாயிற்று போர் முடிய. இந்நிழ்ச்சியை இவ்வளவு விரிவாக நான் குறிப்பிடக் காரணம், போர்களில் ஏவுகணைகளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதே. மேலும் சம காலத்தவர்கள் ‘ஸ்கட்’ மற்றும் ‘பேட்ரியாட்’ இவற்றை மறந்திருக்க மாட்டார்கள்.
இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த இந்திய அறிவியாலாளர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்போதே முடிவு செய்து விட்டனர். முக்கியமாக நமது முன்நாள் குடியரசுத்தலைவர் டாக்டர். APJ அப்துல் கலாம். அப்போது டாக்டர் கலாம் ‘இந்தியாவின் ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்’ (Integrated Guided Missile Development Program) என்ற அமைப்பின் தலைவராக இருந்தார். அந்நாட்களில் இவரின் முற்போக்கு சிந்தனையும், கணிக்கும் திறனும் கடும் விமரிசனங்களுக்கு உள்ளானது. தன்னைப் பற்றிய விமரிசனங்களுக்கு செவி கொடாத கலாம், நாட்டின் பாதுகாப்பையே தம் சிந்தையில் முன் நிறுத்தினார்.
ஜுலை 1992ல் இருந்து டிசம்பர் 1999 வரை கலாம் இந்தியாவின் பாதுகாப்புத் துறை செயலராகவும், தலைமை அறிவியல் மற்றும் பாதுகாப்பு அறிவுரையாளராகவும் பணி புரிந்தார். அப்பொழுதே ‘பிரம்மோஸ்’ன் பிள்ளையார் சுழி, ஒரு இஸ்லாமியரால் வரையப்பட்டது. கலாமின் வழிகாட்டுதல்களின் படி ரஷ்யாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் ஒரே குழுவாக இணைந்து பணியாற்ற ஆரம்பித்தனர். இந்த ஒருங்கிணைந்த குழுவின் கனவே ஒலியை விட வேகமாய்ச் சென்று தாக்கும் ஒரு ஏவுகணையை உருவாக்கி அதனைத் தரப்படுத்துவது தான்.
உலகிலேயே முதன் முறையாக ஒலியை விட வேகமாய் செல்லும் ஏவுகணை இந்தியாவில் தான் தயாரிக்கப் பட்டது. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியின் பெயரும், ரஷ்யாவின் மோஸ்கோ நதியின் பெரும் இணைந்த ‘பிரம்மோஸ்’ என்ற பெயர் இந்த ஏவுகணைக்கு சூட்டப்பட்டது. தற்போது இருக்கும் தரப்படுத்தப்பட்ட பிரம்மோஸ், ஒலியின் வேகத்தை விட 2.8 மடங்கு அதிக வேகத்தில் செல்லும். ஒலியானது வினாடிக்கு 340 மீட்டர் காற்றில் கடந்து செல்லும். அனால் பிரம்மோஸ் ஒரு வினாடியில் 952 மீட்டர்கள் கடக்கும்.
இப்போது உங்களுக்கு மேக் எண் (Mach number) பற்றியும் வெவ்வேறு சோனிக் வேக (Sonic Speed) அளவுகள் பற்றியும் சொல்ல வேண்டும். ஒலியின் வேகமான ஒரு வினாடியில் 340 மீட்டர் என்ற வேகத்தை 1 மேக் (1 Mach) என்று அளவிடப்படும். ஒரு மேக் வேகத்தைவிட குறைவான வேகத்தை சப் சோனிக் (Sub Sonic) என்றும், 1.2 மேக் ல் இருந்து 5 மேக் வரையிலான வேகத்தை சூப்பர் சோனிக் (Super Sonic) என்றும், 5 மேக் ல் இருந்து 10 மேக் வரையிலான வேகத்தை ஹைப்பர் சோனிக்(Hyper Sonic) வேகம் என்றும் அழைப்பார்கள் அறிவியலாளர்கள்.
பிரம்மோஸ்ன் நீளம் 8.4 மீட்டர், விட்டம் 0.6 மீட்டருமாய் ஆஜானுபாகுவாய் காட்சி அளிக்கும் இது, முன்னூறு கிலோகிராம் எடையுடைய வெடிப்பொருட்களை சுமந்து செல்லும். ஒலியை விட அதிக வேகத்தில் 290 கிலோ மீட்டர் வரை பாய்ந்து சென்று இலக்கை துல்லியமாக அழித்து துவம்சம் செய்யும் திறனுடையது. பிரம்மோஸ் ஐ கப்பலில் இருந்து தரை நோக்கியும், கப்பலில் இருந்து மற்ற கப்பலை நோக்கியும், தரையில் இருந்து கடல் நோக்கியும், தரையில் இருந்து தரை நோக்கியும் ஏவ முடியும். ஒரு சில மாறுபாடுகள் செய்யப்பட்ட பிரம்மோஸ் கணைகளை விமானத்தில் இருந்து கடல் நோக்கியும், விமானத்தில் இருந்து தரை நோக்கியும் ஏவ முடியும்.
இப்படி பல சிறப்புப் பண்புகளின் காரணமாக 2006ல் இருந்து இந்திய பாதுகாப்புப் படைகளான இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படைகளில் பிரம்மோஸ் சேர்க்கப்பட்டது.
பிரம்மோஸின் தற்போதைய வேகம் 2.8 மேக். இது ஒரு சூப்பர் சோனிக் வேக ஏவுகணை. இதன் வேகத்தை 5 மேக் வரை உயர்த்துவதற்கு ஆராய்ச்சிப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் நீர் மூழ்கிக் கப்பலில் இருந்தும் பிரம்மோஸ் ஐ ஏவுவதற்கு, பிரம்மோஸ் குழுவினர் ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளனர்.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத தொழில் நுட்ப்பம், இந்தியாவிலேயே தயாரானது, உலகின் தற்போதைய மிக வேகமானது, வேறு எந்த ஏவுகணையாலும் தடுத்து நிறுத்த முடியாதது என்ற பல சிறப்புகளைக் கொண்ட பிரம்மோஸ், பாரதத் தாயின் மணி முடியை அலங்கரிக்கும் மாணிக்கம் என்பதை மறுக்க முடியாது.
படங்களுக்கு நன்றி :
http://www.demo14u.com/Brahmos_Navy.jpg
http://dilipkumar.in/cutenews/fckeditor/userfiles/image/brahmos_airlaunch.jpg
பிரம்மோஸ் குறித்த இந்தக் கட்டுரை, மிக நல்ல அறிமுகத்தைத் தருகிறது. இதனைத் தங்களைப் போன்றவர்களால்தான் தெளிவாகத் தரமுடியும்.
இதைப் போன்ற எந்த ஏவுகணையையும் பயன்படுத்தும் நிலை வரக் கூடாது என்பதே என் விருப்பம்.
simply i can say only a defence and development mind can express this clear .. all the very best Captain
very proud to know these things…… really expressive