சிறந்த பதிப்பகம் மற்றும் நூல் – விருது வழங்கும் விழா – செய்திகள்
சென்னை, மணிவாசகர் பதிப்பகத்தின் சார்பில், பதிப்பக நிறுவனர் முனைவர் ச. மெய்யப்பனார் அவர்களின் எழுபத்தொன்பதாவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 21 ஜூன், 2011 அன்று மாலை சென்னை அண்ணாசாலை, தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக அரங்கில் நடை பெற்றது.
விழாவில் திரு. ச. மெ. மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தினார். கலைமாமணி முனைவர். நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் தலைமையேற்றார். தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மாண்புமிகு டி. ஜெயக்குமார் அவர்கள் விருதுகள் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
முனைவர் க. ப. அறவாணன், (முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்) அவர்களுக்கு சிறந்த தமிழறிஞர் விருது வழங்கப்பட்டது. திருவாளர்கள் வே. கா. அப்துல் இரசாக் மற்றும் மா. பொ. வரதராசன் ஆகியோருக்கு, ‘இலக்கியம் காட்டும் நாடக இலக்கணம்‘ என்ற நூலுக்காகவும், திரு. வே. அந்தனி ஜான் அழகரசன் அவர்களுக்கு, ‘வள்ளுவமும் விவிலியமும் – ஓர் ஒப்பாய்வு‘ என்ற நூலுக்காகவும் சிறந்த நூலாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் காந்தளகம் பதிப்பகம் இரண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறந்த பதிப்பகங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில், ஆசிரியர். அறிஞர். ச. வே. சுப்பிரமணியன் எழுதிய ‘ஐம்பெருங்காப்பியங்கள்’ என்ற நூல் முனைவர். பொற்கோ (முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைகழகம்) அவர்களால் வெளியிடப்பட்டது. நூலின் முதற்பிரதியை பேராசியர். கண. சிற்சபேசன் பெற்றுக்கொண்டார். அறிஞர். ச. வே. சுப்பிரமணியன் (இயக்குநர், உலகத் தமிழ்க்கல்வி இயக்கம்), முனைவர். சி. இ. மறைமலை, கவிஞர் பல்லடம் மாணிக்கம்(நிறுவனர், தமிழ் நூல் காப்பகம், விருதாச்சலம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருக்கழுக்குன்றம் புலவர். வ. சிவசங்கரன் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.