Advertisements
இலக்கியம்கவிதைகள்

கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்

பிச்சினிக்காடு இளங்கோ

 

எல்லாரும்images (5)
எல்லா இடத்திலும்
கர்ணனையே வியக்கிறார்கள்
நான் வேறுபடுகிறேன்

உலகத்தோடு
நான்
ஒத்துப்போகவிரும்பவில்லை
எல்லாரையும்போல
ஓபோட
விரும்பவில்லை

துடுக்குத்தனமும்
தோற்றப்பொலிவும்
நடிகர்திலகம்போல்
இருந்திருப்பானோ என்னவோ
தெரியவில்லை

கொடை
கொடுக்கும் இடத்திலும்
குலம்கேட்ட இடத்திலும்
நான்
கர்ணன்பக்கம்தான்

திறன்காட்டவிடாமல்
குலம்கேட்டது கொடுமைதான்
அதற்குமேல்
அவன்மேல்
மரியாதையில்லை
நான்
அவன்பக்கமில்லை

செஞ்சோற்றுக்கடன்
தீர்த்ததிலும் பெருமையில்லை

அங்கதேசத்து
அதிபனாக்கியது
அதைவிடபெருமை

கர்ணனின்
அவமானம் துடைத்தது
பெருமையிலும் பெருமை

எந்தஇடத்திலும்
என்னால் கர்ணனை
ஏற்கமுடியவில்லை
கர்ணன்
அவசரக்காரன்
அலட்சியக்காரன்
பெருமிதக்காரன்
ஏளனக்காரன்
என்பது என்முடிவு

மகேந்திரமலையில்
பரசுராமரிடம் பொய்சொல்லி
வேதமும் வித்தையும் கற்றவன்

பாண்டவர் கெளரவர்
மற்றும் வேடிக்கை
பார்ப்பவர்
நிறைந்த அவையில்
பாஞ்சாலிக்காக
யார்பேசினார்கள் நேர்மையாய்?

பெண்ணெனப்
பார்த்தவர் அதிகம்
பெண்ணென்று
பரிவுகாட்டியவர் யார்?

கொடுமைகண்டு
கொதித்தான் வீமன்
காரணம்
அவள்
அவனுக்கும் மனைவி

பாஞ்சாலியை
அவைக்கு இழுத்துவந்து
துரோகத்தின் வடிவம்
நானென்று
துரியோதனன் நிலைநாட்டினான்

சுதந்தரம் இழந்தவன்
என்னை இழக்க
என் சுதந்தரத்தை இழக்க
என்ன உரிமையுண்டு?

பாஞ்சாலி கேள்விக்கு
அவை ஆண்மையற்று
அன்று ஆமைபோல் இருந்தது

போரென்று வரும்போதும்
போட்டியென்று வரும்போதும்
கர்ணன் கைகொடுத்தால்
அது
கடனென்று கொள்ளலாம்

பாஞ்சாலி பேசுவது
சரியென்று குரல்கொடுத்த
விகர்ணனைக்
கண்டித்த கர்ணனைக்
கண்ணைமூடிக்கொண்டு ஏற்பது
ஏற்புடையதல்ல எனக்கு

விகர்ணன்
அவையில் சின்னவன்
பெண்ணுக்காய்ப்பேசிய
பெரியவன் அவன்தான்

துச்சாதனனைத்
துகிலுரியத் தூண்டியதே
கர்வக்காரன் கர்ணன்தான்

ஒருமுறை அவமானப்பட்டவன்
எந்த இடத்திலும்
எவர்மானமும் காக்கப்
பேசியதாய் இல்லை
பிறர்படும் அவமானம்பற்றி
அலட்டிக்கொண்டதே இல்லை

துவைத வனத்தில்
சித்திரசேனனிடம்
துவைக்கப்பட்டான்
துரியோதனன்
புறம்காட்டி ஓடினான்
கர்ணன்

துரியோதனன்
சித்திரசேன்னிடம் சிக்கியபோது
கர்ணனும் சிக்கியிருக்கவேண்டும்
கந்தர்வனால்
கட்டப்பட்டிருக்கவேண்டும்
அன்று
ஓடியவன் கர்ணன்
அவனா
பாட்டுடைத்தலைவன்?
அதில்
ஒருபோதும்
துரியோதனனுக்குத்
துளியும் உடன்பாடில்லை

அன்றே அந்த
அவலம்கண்டு
உயிர்விடத்துணிந்தான்
துரியோதனன்

அவமானம் நீக்கி
அங்கதேசம் தந்து
தன்மானம் தந்தவனை
தவிக்கவிட்டு
ஓடிப்போனதா?
கர்ணன் தந்த வெகுமானம்?

அங்கத்தையே தர
அங்கே
நின்றிருக்கவேண்டாமா?

நியாத்தின் பக்கம்
நின்றதே இல்லை

எரியும் நெருப்பிற்கு
எண்ணையாய் இருந்திருக்கிறான்

எங்கேயும்
மழைமேகமாய் மாறி
தீயணைத்ததில்லை

கர்ணன்
படம்பார்த்ததால்
கர்ணனாய்
சிவாஜி நடித்ததால்
அப்பாவித்தனமாக
நான்
அவன்பக்கமிருந்தேன்

சக்தி கிருஷ்ணசாமியின்
சக்திமிகு வசனம்
சாய்த்தது என்னை
அவன் பக்கம்

இராஜாஜி
மகாபாரதம் படித்தேன்
இனி எப்போதும்
நான் விகர்ணன் பக்கம்

இராமயணம் என்றால்
நான்
கும்பகர்ணன்  பக்கம்

காரணம்
விகர்ணன்
நியாத்தின் பக்கம்

அவன்
கெளரவர்களுக்கு
கெளரவம் தந்தவன்

அவன்
நூற்றில்  ஒருவனல்ல
ஆயிரத்தில் ஒருவன்

{9.04.2014 ) நள்ளிரவு 1.30க்கும் 2 மணிக்கும் இடையில் அர்ச்சுனன் நாடகம் எழுத இராஜாஜி எழுதிய மகாபாரதம் படித்துக் கொண்டிருந்தபோது கிடைத்த பரிசு இக்கவிதை}

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (2)

  1. Avatar

    அத்தனையும் உண்மை. சிவாஜி தந்த கர்ணன் வேறு. உண்மையான கர்ணன் வேறு. வெகு விவரமான பகிர்வு.

  2. Avatar

    அருமை இளங்கோ அவர்களே! பீஷ்மர், துரோணர், கிருபர் போன்ற பெரியவர்கள் சொல்ல மறந்ததை விகர்ணன் சொன்னான். ‘பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்பதனை புல்லியர்க்கு உணர்த்த முயன்றான். ஆனால் அவனுடைய குரல் அமிழ்த்தப்பட்டது கர்ணனால். விகர்ணன் என்னுடைய ‘ஹீரோ’ கூட.
    வல்லமையாளர்க்கு வாழ்த்துக்கள்.
    ஸம்பத்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க