இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!

ஏப்ரல் 21 , 2014

வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

**************************************************************************************

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. எம்.மணிகண்டன் அவர்கள்

**************************************************************************************

வல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் மதுரையைச் சேர்ந்த, டி.வி.எஸ்., சமுதாயப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்றுனராக (a demonstrator at TVS Educational Research and Development Centre’s Community College) இருக்கும் திரு. எம். மணிகண்டன் ஆவார். மணிகண்டன், கோவில்பட்டியை அடுத்த, நாலாட்டின்புத்தூரைச் சேர்ந்தவர். சென்ற திங்களன்று (ஏப்ரல் 14, 2014) திருநெல்வேலி, சங்கரன்கோவில் அருகில் குத்தாலப்பேரியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஹர்ஷன் என்ற மூன்று வயதுச் சிறுவனை மீட்டதில் இவருக்கு கணிசமான பங்கு இருக்கிறது. இவர் வடிவமைத்த, இவரது கண்டுபிடிப்பான ஆழ்துளைக் கிணற்றுக் கருவியுடன் (‘Borewell Robot’), இவரும் இவரது மீட்புப் பணிக் குழுவினரும் விரைந்து சென்று சிறுவனை மீட்டுள்ளார்கள். இவருடன் காவல்துறை, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தீயணைப்புப் படையினர், ஊர் மக்கள், மாவட்ட ஆட்சியாளர் வரை தளத்தில் இருந்து ஒருங்கிணைந்து பணியாற்றியதில் சிறுவன் உயிருடன் மீட்கப் பட்டிருக்கிறான். அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த மீட்புப் பணியை வெற்றி பெறச் செய்ததில் மணிகண்டனுக்கும் அவரது கண்டுபிடிப்புக்கும் பெரும் பங்கு உண்டு.

http://youtu.be/WAwRcJoKUpU

மீட்புப்பணிக் காணொளி: http://youtu.be/WAwRcJoKUpU

இந்தியாவில் குழந்தைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்வதில் இந்த நூற்றாண்டில் பற்பல புதுமையான நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று சில குழந்தைகள் நிகழ்த்தும் சாகச நிகழ்ச்சியான ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து எழுவதும் ஒன்றாக இடம் பெற ஆரம்பித்துள்ளது. அக்காலம் போல பிள்ளைத்தமிழ் பாடும் வழக்கம் இருந்திருந்தால் பத்து பருவங்களையும் இற்றைப்படுத்தும் பட்டியலில் குழந்தைகளின் இந்த வீர விளையாட்டையும் ஒன்றாகச் சேர்க்கலாம் போலிருக்கிறது.

விவசயாத்திற்கு நீர் பற்றாக்குறையும், தொழில்நுட்ப வளர்ச்சியும் பல விவசாயிகளை ஆழ்துளைக் கிணறு தோண்டச் செய்கிறது. அவ்வாறு தோண்டிய ஆழ்துளைக் கிணறுகளில் நீரில்லாவிட்டால் அதனைக் கையோடு மூட வேண்டியதும் தோண்டிய நிறுவனங்களின் கடமையாக இருக்க வேண்டும் என்பது பொது அறிவுக்கு உட்பட்டது. அதைச் செய்யாத நிறுவனங்களின் தொழில் உரிமம் பறிக்கப்படும் என்பதைச் சட்டம் போட்டு நடவடிக்கை எடுத்ததாக இதுவரை தெரியவில்லை. சிறு குழந்தைகளும் வழக்கம் போல் கண் மூடி கண் திறப்பதற்குள் அங்குமிங்கும் ஓடி எளிதில் விபத்துகளைச் சந்திப்பார்கள்.

இவ்வாறு நேரும் விபத்துகளில் ஏறத்தாழ ஒன்றரை அடி விட்டமுள்ள இதுபோன்று திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து விடுவதும் ஒன்றாகிப் போய் விட்டது. உடனே அவசர நடவடிக்கைகள் துவங்கி, சில நேரங்களில் இராணுவத்தையும் உதவிக்கு அழைக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிடுகிறது. தொலைக்காட்சிகளில் பரபரப்புச் செய்திகளும், நேரடி ஒளிபரப்புகளும் வாடிக்கையாகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நல்லதொரு முடிவாக அனைத்துக் குழந்தைகளும் உயிருடன் மீட்கப்படுவதுமில்லை என்பதைக்  கீழ் வரும் படங்களில் சில காண்பிக்கும்.

borewell accidents

பத்தாண்டுகளுக்கு முன்னர் மணிகண்டனின் மகன் சிறுவனாக இருந்தபொழுது இது போன்ற விபத்து ஒன்று நடக்க இருந்து, தடுத்துக் காப்பாற்றிய மணிகண்டனுக்கு இது போன்ற கருவி ஒன்றினை வடிவமைக்க எண்ணம் எழுந்ததாகவும், தனது சொந்த செலவில் வடிமைத்த பிறகு அதனை மேலும் செம்மைப்படுத்த இவர் பணியாற்றும் டி.வி.எஸ். கல்வி ஆராய்ச்சி மையம் உதவியதாகவும் கூறுகிறார் திரு. மணிகண்டன்.

இனி மணிகண்டனது ஆழ்துளைக் கிணற்றுக் கருவி வேலை செய்யம் விதத்தை அவரே விளக்குவது இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

manikandans borewell robotஆழ்துளைக் கிணற்றில் ஆயிரம் அடி ஆழத்தில் குழந்தைகள் சிக்கி இருந்தாலும் கூட, இக்கருவியின் உதவியால் மீட்க முடியும். `12 வி’ பேட்டரி, டிசி மோட்டார் மூலம் இந்த கருவி இயங்குகிறது. குழந்தைகளைப் பற்றிப்பிடிக்கும் வகையிலான இயந்திர கை தானாக சுருங்கி விரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. மின்சப்ளை இல்லாத இடங்களில் பேட்டரி மூலமும் இதை இயக்க முடியும். குழந்தையை மீட்டு வரும்போது, குழந்தை நழுவி விடாமல் இருக்க மடங்கும் விரல்கள் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 2 அடி உயரம், 5 கிலோ எடை உள்ள இந்த இயந்திரத்தை எங்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். குழிக்குள் சிக்கிய குழந்தையை அழுத்தும்போது ஏற்படுத்தும் அழுத்த அளவை துல்லியமாக அறிந்து கொள்ள, `பிரஸ்ஸர் கேஞ்ச்’ அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

குழிக்குள் தவறி விழுந்த குழந்தையின்மீது மண் சரிவதால் மீட்புப் பணியில் ஏற்படும் சிரமங்களை நீக்க மண் அள்ளும் இயந்திரம், வாக்குவம் பம்ப் ஆகியவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை ஐ.ஐ.டி. இந்த இயந்திரத்துக்கு 2006-ல் விருதும், அங்கீகாரமும் அளித்திருக்கிறது. 2007-ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் குடியரசு தினவிழாவில் நற்சான்றிதழ் அளிக்கப்பட்டது.

இக்கருவியை மாவட்டம்தோறும் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

குறிப்பாக தீயணைப்பு நிலையங்கள் தோறும் இக் கருவியை வைத்துக்கொண்டால், மீட்பு பணிகளுக்குப் பயன்படுத்தி குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.

இக்கருவியை யார் வேண்டு மானாலும இயக்க முடியும். இதைத் தயாரிக்க ரூ. 60,000 வரை தான் செலவாகும்.

இது ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி

அரியதொரு கண்டுபிடிப்பால் உயிர்காக்க உதவிய எம்.மணிகண்டன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************

வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

செய்திகள் வழங்கிய ‘தி இந்து’ நாளிதழுக்கு நன்றி [http://tamil.thehindu.com/tamilnadu/article5913951.ece]

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. அருமையான தேர்வு; பயனுள்ள கண்டுபிடிப்பால் உயிர் காக்க உதவும் மணிகண்டன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

  2. அருமையான கண்டுபிடிப்பை தந்த நீலகண்டனுக்கு வாழ்த்துக்கள்.அதனை தேடிப்பிடித்து பாராட்டியதோடு அல்லாமல் விரிவான செய்தியும் தந்து இணைப்பாக பல தகவல்களையும் தந்த தேமொழி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  3. மெய் சிலிர்க்க வைக்கும் சிசு நேய மீட்புப் பணி நிகழ்ச்சி, தேமொழி.  இதைப் படக்காட்சியுடன் படைத்து வெளியிட்டதற்கு முதலில் உங்களுக்குப் பாராட்டு.

    அடுத்த பாராட்டு அந்த அரிய மீட்புச் சாதனத்தை ஆக்கிய நிபுணர் மணிகண்டன் அவர்களுக்கு.

    மூன்றாம் பாராட்டு அந்த சாதனத்தைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திச் சரியான தருணத்தில் குழந்தையைத் தூக்கிக் காப்பாற்றிய முழுவினருக்கு.

    சி. ஜெயபாரதன்

  4. அன்பு மணிகண்டன் இதைப்பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .இத்தனை உபயோகமான பொருளைக் கண்டுபிடித்ததுமல்லாமல்  அதை சரியான சமயத்தில் உபயோகித்து உயிரும் காத்தது எத்தனை பெரிய விஷயம்!  மிகவும் பெருமையாக இருக்கிறது ,எல்லாவற்றுக்கும் என் பாராட்டுகள்.  அன்புடன் விசாலம்

Leave a Reply

Your email address will not be published.