பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)
அரவணைப்பில்லை
என்பது பல்லவி
அலட்சியம் அனுபல்லவி
கையில்பணமிருந்தால்
கவலையில்லை என்பது சரணம்

இப்போது
எல்லா இடத்திலும்
இதுதான் ஒலிபரப்பாகிறது

சகிப்புத்தன்மை
சற்றுமில்லா மனசு
வற்றிய குளமாய்
ஈரமின்றி

மனதில் ஏந்தி
மனம்கரைய பழகுவது
அத்திபூத்தாலும்
ஆகாது

ஆலமரமெனினும்
காலம் கடந்தால்
விழுதுகள் இல்லையேல்
விழுந்துவிட வேண்டியதுதான்

விழுதுகள் இருந்தும்
விழுந்தால்
பழிதான் மிஞ்சும்

பழுதான விழுதுகளால்
பயன் எப்படிக்கிட்டும்

யாரும் யாருக்காகவும்
விட்டுக்கொடுக்காது
வாழும் காலத்தில் வாழ்கிறோம்

அரவணைப்பு என்பது
இயல்பாய் இருந்துவிட்டால்
கிடைத்துவிட்டால்
அதுதான் பிறவிப்பயன்

இல்லையேல் அதுதான்
எல்லோரும் சொல்லும்
விதிப்பயன்

அரவனைப்பு
இயல்பாய்க் கிடைப்பதற்கு
என்னவழி?

வளர்க்கிறபோது தவறவிட்டால்
வளர்ந்தபின்
வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியதுதான்

அரவணைப்பு என்றும்
இருவழிப்பாதை

யாரும் நம்மை
சுமையாகக் கருதாமல்
யாருக்கும் நாம்
சுமையாக இல்லாமல்
வாழமுடியுமென்றால் வாழலாம்

இதுதான் இப்போது
ஒவ்வொரு
முதுமை உள்ளத்திலும்
முதியோர் வாழும் இல்லத்திலும்
ஒலிபரப்பாகிறது

காலன் இதையெல்லாம்
கவனத்தில் கொண்டால்
பெற்றோர் சுமையும்
பிள்ளைகள் பழியும்
இல்லாதுபோகுமோர்
காலம் கிட்டும்

காலனே
கைகொடு
காப்பாற்று

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *