நான் உன்னை அழைக்கவில்லை
கவிஞர் காவிரி மைந்தன்
நான் உன்னை அழைக்கவில்லை …- கவியரசு கண்ணதாசன்
அன்பின் சங்கமம் – ஆண், பெண் இருவரது உறவில் அடிப்படையானது. தன்னை நேசிக்கும் நெஞ்சமது என்கிறபோது, தாமாக ஊற்றெடுக்கும் கங்கையாகிறது! ஊண், உறக்கம் யாவும் மறந்து உறவை நினைக்கிறது! ஏன்? எதற்கு?? என்கிற கேள்விகள் எழுகின்றன! படபடக்கும் நெஞ்சத்தோடு பார்வை தேடி அலைகிறது! துடிதுடிக்கும் இதயத்தில் தூவானம் போடுகிறது! அவனுக்கு அவளென்பதும் – அவளுக்கு அவனென்பதும் ஆனந்தப் புதையலாகிறது! இந்த நிலை தொடர்கிறதா? பிரிவு வந்து சேர்கிறதா? பாதிப் பாதியென இருவருமே பரிதவிக்கும் நிலைதானே பிரிவு வரும் வேளைதன்னில்.. அழுவது கூட ஆனந்த சுகமென்றே அடிமனம் நினைக்கும்!
காரணம் தெரியாமல் கதறும் நிலைதன்னில்.. கதாநாயகன் பாடுகிறான்! கதையின் ஓட்டத்தில் கதாநாயகி.. அவனைப் பிரிகின்றான்! எங்கிருந்தோ வந்தால் என்கிற திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் மகோன்னத நடிப்பில் – பிரிவுக்கு ஆயிரம் பொருள் சொல்லும் முக பாவனைகளுடன் .. புலம்பலின் வெளிப்பாடுகளுக்கு வார்த்தைகள் வழங்கிய கவியரசு கண்னதாசன்!
தத்தளிக்கும் மனதின் தவிப்புகள் இதுவா? இதயத்தின் வழியை உணர்த்தி நிற்கும் வரிகளா? கண்களிரண்டும் கலங்கித் ததும்பும்! சொல்லும் வார்த்தையில் துயரம் வழியும்! உயிரூட்டியிருக்கிறார்.. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். உணர்வூட்டியிருக்கிறார் டி.எம்.சௌந்தரராஜன்..
திரைப்பாடலில் பாவங்கள் காட்டி நடிக்க.. ஒரு நடிகர் திலகமும்.. பாடி கொடுக்க ஒரு டி.எம்.எஸ்ஸும் மெட்டமைக்க ஒரு எம்.எஸ்.வியும் .. பாடல் வடித்துத் தர .. ஒரு கண்ணதாசனும் – தேவன் தந்த வரங்களா?
இதைப் போன்ற பாடல்கள் எத்தனை தந்தாலும் ரசிப்பதற்கு கோடான கோடி இதயங்களும் – பிரிவு என்கிற கடலில் தள்ளப்படும் ஒவ்வொரு உள்ளத்திலும் அலை மோதும் பாடலிது!
ஒருமுறை டி.எம்.எஸ். அவர்களை சந்திக்கச் சென்றிருந்தபோது.. எனக்காக இந்தப் பாடலை பாட முடியுமா என்று கேட்டேன். எந்த இசைக் கருவிகளும் பக்கம் இல்லாமல் பாவம் மாறாமல் பாடிய அந்த மேதையை நன்றியுடன் இன்றும் நினைக்கிறேன்.
நான் உன்னை அழைக்கவில்லை.. என் உயிரை அழைக்கிறேன்!
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
அம்மா………… விவரம் புரியாதா
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா…
இரக்கம் பிறக்காதா
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
பாடல் : நான் உன்னை அழைக்கவில்லை
பாடியவர் : டி.எம். சௌந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம் : எங்கிருந்தோ வந்தாள்

